அன்று கார் கழுவியவர், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்
09-Sep-2024
By எஸ்.சாய்நாத்
ஹைதராபாத்
மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் கார் கழுவும் வேலையில் தொடங்கி, தொடர்ச்சியாக சில நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய ஹைதராபாத்தைச் சேர்ந்த பாட்டாலா முனுசாமி பாலகிருஷ்ணா, இப்போது தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் அக்வாபாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வீடுகளுக்கான மற்றும் வணிகத் தேவைகளுக்கு என்று தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ-க்களை தயாரித்து விற்கும் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 20 கோடி ரூபாய்.
ஒரு ரூபாயைக் கூட எண்ணி, எண்ணிச் செலவழிக்கும் நிலையில் இருந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் 34 வயதான பாலகிருஷ்ணா. “நான் 10 ரூபாயை செலவழித்தேன் என்றால், அது என் பெற்றோர் மூன்று லிட்டர் பால் விற்று கிடைக்கும் பணத்தில் இருந்துதான்,” என்று தமது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறார்.
|
பாலகிருஷ்ணா முதன் முதலில் பெங்களூரில் மாருதி கார் ஷோரூம் ஒன்றில் கார் கழுவுபவராகப் பணியாற்றினார்.
|
பால்விற்றுச் சம்பாதித்த அதே பெற்றோர், இப்போது பாலகிருஷ்ணா பரிசாகக் கொடுத்த 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயோட்டா பார்ச்சூன் கார் வைத்திருக்கின்றனர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சங்கராயாலாபேட்டாவில் உள்ள ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் பாலகிருஷ்ணா, கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தவர். அவரது தந்தை ஒரு சிறுவிவசாயி. அவர்கள் குடும்பத்தினர் பால் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.
பாலமநேரு அருகில் உள்ள அரசு கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் (தொழில்நுட்பம்) தொழிற்படிப்பை 1998-99-ல் பாலகிருஷ்ணா முடித்தார். அதன் பின்னர், பெங்களூர் சென்று வேலை தேடுவதற்காக அவருடைய தாய் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பத்து, பத்து ரூபாய்களாக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை அவருக்குக் கொடுத்தார்.
பெங்களூரில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் ஷோரூமாக அவர் ஏறி, ஏறி இறங்கினார் ஆனால், யாரும் அவரை மெக்கானிக் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளவில்லை.
கடைசியாக அவர் 2001-ம் ஆண்டில் மாருதி கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மார்க்கதரிசி மோட்டார்ஸ் என்ற ஷோரூமில் கார் கழுவும் வேலையில் சேர்ந்தார். அங்கு இருந்த 15 வயது பையன்தான் பாலகிருஷ்ணாவை வேலை வாங்கும் பாஸ் ஆக இருந்தான்.
ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்தபோது, சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகிப் பணிக்கு பாலகிருஷ்ணா விண்ணப்பித்தார். வீடு, விவசாயம், கட்டடம், குடிநீர் விநியோகம், சுரங்கங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பம்புகளை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அடுத்த மூன்று வருடங்களுக்கும் பாலகிருஷ்ணாவை கடினமான வாழ்க்கைதான் சூழ்ந்திருந்தது. எனினும், அதுதான் அவரின் வளர்ச்சி சார்ந்த வாழ்க்கையாகவும் இருந்தது. திறந்த வெளி ஜீப்கள், ஓட்டை உடைசல் பேருந்துகளில் ஆபத்தான பயணம் என பம்ப்புகளை விற்பனை செய்வதற்கும், வர்த்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு விளம்பர மேலாளராகவும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்த்தார். பாலகிருஷ்ணாவும், அவருடன் பணியாற்றியவர்களும் நெல்லூர், கடப்பா, சித்தூர் மற்றும் ஆனந்தபூர் மாவட்டங்களில் உள்ள ஊர்களின் நீள, அகலங்களையெல்லாம் தெரிந்து கொள்ளும் வகையில், பம்புகள் விற்பனைக்காக ஊர், ஊராக அலைந்து திரிந்தனர்.
“அந்த சமயத்தில் எங்களுக்கு ஓய்வு நேரம் எல்லாம் இல்லை. பயணிக்கும் வாகனங்களிலேயே நாங்கள் தூங்குவோம். சிறிய விடுதிகளில் காலையில் குளிப்பதற்காக 50 ரூபாய் கொடுத்து குளிப்போம்,” என்று சொல்லும் பாலகிருஷ்ணாவின் மாத சம்பளம் அப்போது வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான். மூன்று ஆண்டுகள் கழித்து சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் போது, அவருடைய மாதச்சம்பளம் 4,800 ரூபாயாக இருந்தது.
பாயிண்ட் பம்ப்ஸ் எனும் கோயம்புத்தூர் நிறுவனத்தில் மீண்டும் ஒரு பம்ப் விற்பனையாளராக மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த 6 வருடங்கள் அங்கு பணியாற்றினார். அடுத்ததாக மும்பையைச் சேர்ந்த அடோர் வெல்டிங் லிமிடெட் என்ற வெல்டிங் தயாரிப்பு நிறுவனத்தில், ஆந்திர மாநிலம் முழுவதும் நடக்கும் விற்பனையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் பணியில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாலகிருஷ்ணா பணியாற்றினார்.
|
ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வணிக நிறுவனத்துக்கான சுத்திகரிப்பு ஆர்.ஓ டெலிவரிக்கு தயாராக இருக்கிறது.
|
ஒரு விற்பனைப் பிரதிநிதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பேசியதில் இருந்து, 2008-ம் ஆண்டில் அனுபவம் எனும் பெரிய சொத்தை பாலகிருஷ்ணா தன்னகத்தே கொண்டிருந்தார்.
இதன் பின்னர், ஹைதராபாத்தைச் சேர்ந்த, தொழிலக காற்று மாசுக் கருவி தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தரான ரிக்கோ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் பாலகிருஷ்ணா சேர்ந்தார். ஆந்திர மாநிலம் முழுவதுக்குமான விற்பனையை கண்காணிக்கும் பொறுப்பை வகித்து வந்தார். கோடிரூபாய் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபடுவார். ஆனால், அதற்கான நற்பெயரை, ஏசி ரூமில் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரி தட்டிப் பறித்துக் கொள்வார்.
இந்த ஏமாற்றம் காரணமாக, 2011-ம் ஆண்டு இதுபோன்ற அனுபவங்கள் போதுமானது என்று முடிவு செய்தார். அப்போது பாலகிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு முடிந்திருந்தது.
அந்த நேரத்தில் அவர் பக்குவப்பட்ட விற்பனையாளராக இருந்தார். ஒரு தயாரிப்பை எப்படி விற்க வேண்டும் என்ற உத்திகள் தெரிந்த முழுமையான தொழில்முறை நபராக இருந்தார். தாமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி துணிந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தார். தாம் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் அவர் இருந்தார்.
ஒரு உந்துதலின் பேரில், தமது சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொண்டு, பாலகிருஷ்ணா செக்கந்திராபாத் சென்றார். அங்கு உள்ள ஹைதர்பாஸ்தி என்ற இடத்தில் சொந்த அலுவலகம் ஒன்றை அவர் வாடகைக்கு எடுத்தார். அதற்கு 1.3லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்தார். அந்த அலுவலகத்துக்கு மாதம் தோறும் 14 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டி இருந்தது.
ஒரு வழியாக அலுவலகத்துக்கு இடம் பார்த்து விட்டார். ஆனால், அடுத்து இந்த பூமியில் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று தன்னைத்தானே அவர் கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கு எந்த ஒரு யோசனையும் தோன்றவில்லை.
“எதையாவது தொடங்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்று சொல்லும் அவர், “எளிதான ஒரு வாய்ப்பு என்பது இருந்தால், ஒரு மனிதனால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பது எனக்குத் தெரியும். எனவே, பானிபூரி விற்பதற்கு கூட தயாராக இருந்தேன்,” என்றார்.
குடிநீர் சுத்திகரிப்பில், ஆர்.ஓ எனப்படும் சவ்வூடு பரவல் முறை(reverse osmosis) தயாரிப்பு தொழிலில் ஈடுபடலாம் என்பது குறித்து பாலகிருஷ்ணாவின் சிறுவயது நண்பரான நவீன் என்பவர், ஆலோசனை சொல்லி இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அந்தத் தொழில் வாய்ப்புகள் குறித்துத் தெரிந்து கொள்ள, சென்னையில் நடந்த ஒரு ‘வாட்டர் எஸ்போ’வுக்குச் சென்றார்.
சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனத்தில் பணியாற்றியபோது தம்முடன் பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அவரது சொந்த ஊரில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ-வை தயாரித்து வந்தார் என்பதை அறிந்தார். இதையடுத்து பாலகிருஷ்ணா சேலம் சென்று அந்த நண்பரைச் சந்தித்தார்.
தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ கருவி குறித்து சேலத்தில் நண்பரிடம் மூன்று நாள் சுயமாக பயிற்சி மேற்கொண்ட பிறகு, 20 ஆர்.ஓ கருவிகளுடன் பாலகிருஷ்ணா ஹைதராபாத் திரும்பினார்.
|
சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தபின்னர், பானிபூரி விற்பதற்கு கூட பாலகிருஷ்ணா தயாராகிவிட்டார்
|
பொருட்களை விற்பது, வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவது என பாலகிருஷ்ணனுக்குள் இயல்பாகவே திறமைகள் இருந்தன. ஒரு மாதத்துக்குள் 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆர்.ஓ யூனிட்களை விற்பனை செய்தார். இனி இந்தத் தொழில்தான் சந்தையில் நல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்றும், லாபகரமானது என்றும் அவர் அந்தத் தருணத்தில் உணர்ந்தார்.
அலுவலக அறை வாடகைக்குப் பிடித்ததில் இருந்து இரண்டு மாதங்கள் கழித்து, தம்முடைய தலைமையின் கீழ் அக்வாபாட் ஆர்.ஓ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை பாலகிருஷ்ணா தொடங்கினார்.
இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆர்.ஓ கருவிகள் தயாரிப்பைத் தொடங்கினார். இன்றைக்கு அவரது ஊழியர்கள் ஹைதராபாத்தின் மூன்று இடங்களில் உள்ளூர் அளவில் ஆர்.ஓ-வை தயாரித்து வருகின்றனர். அவரது டீமில் இருப்பவர்கள், வணிக ரீதியான ஆர்.ஓ-க்களை வாடிக்கையாளர்களின் இடங்களுக்குச் சென்று அமைத்துத் தருகின்றனர்.
அவரது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 25-50 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு காரணங்கள் இருக்கின்றன. ஆர்.ஓ தயாரிப்பு தரத்தில் பாலகிருஷ்ணா, உறுதியாக இருக்கிறார். ஆக்வாபாட் நிறுவனத்தின் ஆர்.ஓ கருவியில் உள்ள 46 உதிரிபாகங்களும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர் உறுதியுடன் இருக்கிறார்.
அக்வாபாட் தயாரிப்புகள் தமிழகத்தில் சென்னை, மதுரையில் விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நான்டெட், கர்நாடகாவில் ஹூப்ளி, பெங்களூர், ஆந்திராவில் திருப்பதி மற்றும் விஜயவாடா, தெலுங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் விற்கப்படுகின்றன.
அக்வாபாட் நிறுவனம் ஐந்து மாநிலங்களில் 54 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு ஸ்மார்ட்போன், உணவு உள்ளிட்ட வசதிகள், இரவில் பணி முடிய தாமதம் ஆகிவிட்டால் கார் வசதி ஆகியவை அளிக்கப்படுகின்றன. நிறுவனத்தில் பணியாற்றும் நான்கில் மூன்று பேர் நிறுவனம் தொடங்கிய முதல் நாளில் இருந்து பாலகிருஷ்ணா உடன் பணியாற்றுகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் அவர்களின் சம்பளம் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
|
அக்வாபாட்டில் 54 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். புகைப்படத்தில்; ஒரு ஊழியர், வீடுகளுக்கான |
அக்வாபாட் நிறுவனத்துக்கு 20 விருதுகள் கிடைத்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று விருதை வாங்குவதற்காக தமது நிறுவனத்தின் சார்பில் இரண்டு ஊழியர்களை அனுப்பி வைத்தார். அந்த இரண்டு ஊழியர்களுக்கும் பாலகிருஷ்ணா புதிய உடைகள் வாங்கிக் கொடுத்தார். இருவரும் டெல்லிக்கு விமானத்தில் சென்று விருது வாங்கிக் கொண்டு திரும்பினர்.
“அக்வாபாட் நிறுவனத்தில், ஊழியர்களின் முயற்சிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எங்களின் வெற்றியில் அவர்களும் ஒரு அங்கமாக இருக்கின்றனர்,” என ஊழியர்களும் உள்ளடக்கியதுதான் வெற்றி என்ற தத்துவத்தை பாலகிருஷ்ணா விவரித்தார்.
வெற்றியின் இன்னொரு பக்கத்தில், வாடிக்கையாளர்களும் அக்வாபாட் நிறுவனத்துக்குச் சாதகமான அலைவரிசையில் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த பாலகிருஷ்ணா எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. 30 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாடிக்கையாளர் எடுத்துச் செல்ல மறந்து விட்டபோது, அவர் யோசிக்காமல், உடனே ஒரு ஊழியரிடம் அதைக் கொடுத்து அனுப்பினார். வாடிக்கையாளரிடம் அந்தப் பொருளைக் கொண்டு சேர்க்க போக்குவரத்துக்கு 250 ரூபாய் செலவு ஆனது.
இந்தியாவில் 1,500 ஆர்.ஓ நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. இப்போதைக்கு இந்த சந்தையில் அக்வாபாட் முதல் 20 இடத்தில் ஒரு நிறுவனமாக உள்ளது.
“தயாரிப்பின் தரம் மற்றும் நல்ல வாடிக்கையாளர் சேவையின் காரணமாக, நிறுவனத்தின் சீரான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது,” என பாலகிருஷ்ணா சொல்கிறார்.
சிறிய விஷயம் என்றாலும், பெரிய வேலை என்றாலும், எது ஒன்றையும் செய்து விட முடியும் என்ற அவரது அணுகுமுறையில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.
“என்னைவிட வேறு யாரும் நன்றாக காரைக் கழுவமுடியாது.காரில் ஏற்படும் சிறிய சேதாரம் கூட என்னிடம் இருந்து தப்ப முடியாது,” என உத்தரவாதம் அளிக்கும் அவர், ரஹோண்டா பைர்னி எழுதிய தி சீக்ரெட் (The Secret by Rhonda Byrne) போன்ற ஆளுமை முன்னேற்றம் குறித்த புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறார்.
அக்வாபாட் நிறுவனம் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடுகிறது. நெருங்கிய நண்பரும், வியாபாரத்தில் இணைந்திருப்பவருமான நசீர் அஜீஸ் உடன் சேர்ந்து சூரிய சக்தி குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ-வுக்கு பாலகிருஷ்ணா காப்புரிமை பெற்றிருக்கிறார்.
|
இந்த நிதி ஆண்டில், தம் நிறுவனத்தின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று பாலகிருஷ்ணா முடிவு செய்திருக்கிறார்.
|
சி.எஸ்.ஆர் எனப்படும் பெருநிறுவன சமூக சேவையின் ஒரு அங்கமாக அக்வாபாட் நிறுவனம், மணிக்கு 60 லிட்டர் குடிநீரை ஆர்.ஓ செய்யும் 5 கருவிகளை ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சித்தூர், நல்கொண்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாயை இரண்டு மடங்காக அதாவது 45 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அவர் நிர்ணயித்திருக்கிறார்.
இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி என்ற இடத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வைப்பதற்காக கிடங்கு ஒன்றை பாலகிருஷ்ணா விலைக்கு வாங்கி உள்ளார்.
இப்போது வரை, அவரது வாழ்க்கை நீண்ட கடினமான சாலையாகத்தான் இருந்திருக்கிறது. எனினும், அவர் தன் பயணத்தை நிறுத்தப்போவதில்லை.
அதிகம் படித்தவை
-
மின்னும் வெற்றி!
ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் அம்மாவுக்கு உதவியாக பக்கோடா கடையில் சின்னவயதில் இருந்தே வேலை செய்தவர் சந்த் பிஹாரி அகர்வால். பள்ளிக்குப் போய் படிக்க வசதி இல்லை. அவர் இன்று பாட்னாவில் 20 கோடி புரளும் நகைக்கடையை நடத்துகிறார். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை
-
பள்ளிக் கனவுகள்
பள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
மாம்பழ மனிதர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை
-
தேடி வந்த வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
காற்றிலிருந்து குடிநீர்!
தலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா? இது உண்மைதான்! ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
சேலைகள் தந்த கோடிகள்
கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை