மூன்று லட்சம் முதலீடு; ஐந்து கோடி ஆண்டுவருவாய்! கண்டெய்னரில் வீடு கட்டித்தரும் இக்பால்!
30-Oct-2024
By சோபியா டேனிஷ்கான்
கோவை
இக்பால் தங்கல் 12ஆம் வகுப்புப் படிக்கும்போது மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்களை தயாரித்து கடை உரிமையாளர்களிடம் விற்றார். அவரின் தயாரிப்புகளை கடைக்காரர்கள் வாங்கிக் கொண்டனர். ஆனால், அவரின் பொருட்களுக்கு அவர்கள் பணமே தரவில்லை. இளம் வயதில் அவருக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் தொடங்கிய சிறுவணிகத்தில் அவர் சேமித்த பணம் முழுவதையும் இழந்தார்.
எனினும், எதிர்பாரதவிதமாக
அனுபவம் எனும் பாடம் அவரது தொழில்முனைவு என்ற நெருப்பை அவருக்குள் அணையாமல் வைத்திருந்தது. ஒரு தொழில்முனைவோராக
மாறவேண்டும் என்ற கனவை தொடர்ந்து அவர் வளர்த்தெடுத்தார்.
2009ஆம் ஆண்டு கோவையில் டெக்னோ
கேப் எக்ப்யூப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (Techno Cap Equipment
Private Limited ) என்ற கண்டெய்னர் ஹோம்/அலுவலகம்
வசதி அளிக்கும் நிறுவனத்தை இக்பால் தங்கல் தொடங்கினார்
|
உபயோகித்து பழசான சரக்கு கண்டெய்னர்களில் வாழ்விடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றையும் உருவாக்கும் அசாதாரணமான நிறுவனத்தை ரூ.3 லட்சம் முதலீட்டில் 27வது வயதில் இக்பால் தொடங்கினார். தமிழ்நாட்டில் கோவையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. “எங்களுக்கு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்,” என்றார் இக்பால். “தொழிலாளர்களுக்கான வாழ்விடங்கள், தற்காலிக அலுவலகம் அல்லது பண்ணைகளில் தற்காலிக வீடு போன்றவற்றைக் கட்டமைக்க விரும்பும் தனிநபர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர்.” 2009ஆம் ஆண்டு நிறுவனம் தொடங்கியதில் இருந்து இதுவரை அவர்கள் 300 அலுவலகங்கள், 100 பண்ணை இல்லங்கள், 100 கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் 20 நீச்சல் குளங்களை கட்டமைத்திருக்கின்றனர். “தற்காலிக கண்டெய்னர் வீடுகளுக்கு என்று சில சாதகங்கள் உள்ளன. இது தற்காலிக கட்டமைப்பாக இருக்கும் வரை இதற்காக அனுமதி வாங்கத் தேவையில்லை. இது ஒரு சாதகமான அம்சம். உங்கள் வீடு அல்லது கடையை நீங்கள் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றால், உங்கள் தளத்தின் இடத்தை மட்டும் மாற்றிக் கொண்டால் போதுமானது,” என்றார் இக்பால். 40 வயதான இக்பால், கேரளமாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர். அங்கு அவர் தமது மூன்று உடன்பிறந்தோருக்கு மத்தியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ஒரு இஸ்லாமிய அறிஞர் மற்றும் ஆலோசகராக இருக்கிறார். பிள்ளைகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அவரது தாய் தீவிர அக்கறை கொண்டவர்.
இக்பால் குழுவினர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் |
“எங்களுடைய தந்தை எப்போது பார்த்தாலும் மக்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டே இருப்பதை நாங்கள் தொடர்ந்து பார்த்து வந்திருக்கின்றோம். எனவே தாயுடன்தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுவோம். அம்மா மிகவும் கோபக்காரர். பிள்ளைகள் நல்லொழுக்கமாக இருக்க வேண்டும் என்று எங்களை அடிக்கடி திட்டுவார். சரியான பாதையில் உறுதியாக நடைபோடுவதற்கு அந்த திட்டுகள்தான் எங்களுக்கு உதவின என்பதை இப்போது நான் உணர்கின்றேன்.” பள்ளியில் ஒரு சராசரி மாணவராகத்தான் அவர் இருந்தார். 10ஆம் வகுப்பில் குறைந்தபட்ச தேர்ச்சிக்கான மதிப்பெண்களை மட்டும் பெற்று தேர்ச்சி பெற்றார். திருச்சூர் மாவட்டம் எடக்கழியூரில் உள்ள எஸ்.எஸ்.எம்.வி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார். கோவையில் உள்ள டெக்ஸ்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2002-2005) கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் ஐசிஎஃப்ஏஐ(ICFAI )திருச்சூர் வளாகத்தில் (2005-07) எம்பிஏ படித்தார். “12ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, ஏதேனும் சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. ஓய்வு நேரங்களில் என்னுடைய தந்தையின் ஓட்டுநர் உதவியுடன் வாசனைத்திரவியங்கள், மெழுகுவர்த்திகள் தயாரிக்கத் தொடங்கினேன்.” “நான் தயாரித்த பொருட்களை கோயில்கள், கடைகளில் விநியோகித்தேன். ஆனால், அதற்கு பணம் வசூலிக்கச் சென்றபோது, கடைக்காரர்கள் பணம் தருவதற்கு பல முறை இழுத்தடித்தனர்,” என்று சிரிக்கிறார் இக்பால். “ஆறுமாதத்தில், என் தந்தை கொடுத்த பணம் அனைத்தையும் இழந்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் இது பெரும் படிப்பினையாக இருந்தது.” எம்பிஏ படித்தபோது இக்பால் மீண்டும் ஒருமுறை தொழில்முனைவோர் ஆகும் முயற்சி செய்ய தயங்கவில்லை. எம்பிஏ முதல் ஆண்டு முடித்த பின்னர் கொச்சினில்(இப்போது கொச்சி என்று அழைக்கப்படுகிறது) உள்ள மனித மேம்பாட்டு நிறுவனமான மா போஃய் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் மூன்று மாதம் பயிற்சியாளராக இருந்தார். .
புதிதாக கட்டமைக்கப்பட்ட கண்டெய்னர் கடை அருகே இக்பால் |
அவருடைய பயிற்சிக்காலம் முடிவடைந்த தருணத்தில் அதிக உற்சாகத்துடன், உடன் படித்த இதர இரண்டு நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ஒரு ஆலோசனை நிறுவனம் தொடங்கலாம் என்று தீர்மானித்தார். வகுப்புகளுக்கான வருகைப் பதிவேட்டில் இருந்து கல்லூரி முதல்வரிடம், மூவரும் விலக்குப் பெற்றனர். எனினும் 2008ஆம் ஆண்டில் இக்பால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். “அந்த நிறுவனத்துக்கு நல்ல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஆனால் நிதி நிலைமை நன்றாக இல்லை. வங்கியில் வாங்கிய கடன்கள் திருப்பி செலுத்த வேண்டிய சுமை அதிகரித்தது,” என்றார். அதன் பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அப்போது துறைமுக நகரமான கொச்சியில் தங்கியிருக்க நேர்ந்தபோது, சரக்கு கண்டெய்னர்கள் இயக்கத்தை கண்காணித்தார். அப்போதுதான் கண்டெய்னர் வீடுகள் என்ற யோசனை அவருக்குள் உதித்தது. “அப்போது துபாயில் உற்பத்தியாளராக இருந்த உம்மர் என்ற என்னுடைய தாய்மாமாவிடம் இது குறித்து ஆலோசனை செய்தேன்,” என, தன்னுடைய வணிக யோசனை எப்படி செயல்வடிவம் பெற்றது என்பதை விவரித்தார் இக்பால். அவர் தன்னுடைய தொழில் இடத்தை கோவைக்கு மாற்றினார். தான் பட்டப்படிப்பு முடித்தபோது பழக்கமாக இருந்த கோவையில் 2009ஆம் ஆண்டு டெக்னோ கேப் எக்ப்யூமெண்ட் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால், அவருடைய வேலை மிகவும் கடினமாக இருந்தது. அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டார். இந்த பணிக்கு தொழில்நுட்ப அறிவு தேவைப்பட்டது. அவரிடம் அந்த திறன் இல்லாததால் ஆரம்பத்தில் சிக்கல்களை சந்தித்தார். “நான் பொறியியல் பட்டதாரி இல்லை. எனவே இந்த வேலையில் ஒவ்வொன்றும் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது,” என்றார். “ஆலோசனை நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலையில் இருந்த எனக்கு இது மாறுதலாக இருந்தது. இந்த வணிகத்தில் அனைத்து நேரங்களிலும் களத்தை உற்றுக்கவனிக்க வேண்டிய தேவை இருந்தது.” “இது கட்டுமானத் தொழிலைப் போன்றதுதான். பெரும்பாலான பணிகள் களத்தைச் சார்ந்தே இருக்கின்றன. ஆரம்ப கால கட்டங்களில் சிறிய கட்டுருவாக்கப் பணிகளில் ஈடுபட்டேன்.”
ஒரு கண்டெய்னரை வாழ்விடமாக மாற்றும் பணியில் தமது குழுவினருடன் இக்பால் |
கோவையில் உள்ள தனது கண்டெய்னர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் குழுவுடன் இக்பால் உள்ளார் |
கப்பல் நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நல்ல நிலையில் உள்ள கண்டெய்னர்களை உபயோகித்து இக்பால் கட்டுமானங்களை மேற்கொள்கிறார். இப்போது விலை அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார். இப்போது 20 அடி கண்டெய்னர் விலையானது ரூ.2 லட்சமாக இருக்கிறது. 40 அடி கண்டெய்னரானது ரூ.4.5 லட்சமாக இருக்கிறது. இக்பாலின் கண்டெய்னர் நிறுவனத்தில் 23 பேர் பணியாற்றுகின்றனர். இது தவிர கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள அவரது கண்டெய்னர் அலுவலகத்தில் மேலும் 8 பேர் பணியாற்றுகின்றனர். அவருடைய அலுவலகத்தின் கீழ் தளத்தில் வாடிக்கையாளர்கள் வரவேற்பு அறை, சந்திப்பு அறைகள் உள்ளன. மேல் தளத்திலும் அவரது அலுவலகம் செயல்படுகிறது. இக்பாலுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி மூன்று குழந்தைகளின் ஆன்லைன் கல்வியை கவனித்துக் கொள்கிறார். நான்காவது குழந்தையானது, மற்ற மூன்று குழந்தையையும் தொந்தரவு செய்யக்ககூடிய சுட்டிக்குழந்தையாக இருக்கிறது.
அதிகம் படித்தவை
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்
புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...
-
கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!
கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்
-
சவாலே சமாளி!
கல்லூரியில் நண்பர்கள் இல்லை என்ற சவாலை சந்தித்தவர் விக்ரம் மேத்தா. இப்போது நிகழ்வுகளை மேலாண்மை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருமண விழாக்களை ஒருங்கிணைப்பதில் பல சவால்களை சந்தித்து வெற்றிகரமான முன்னேறி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை