25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்
08-Oct-2024
By பார்தோ பர்மான்
புதுடெல்லி
சிறுவனாக இருந்தபோது அவர் துணிப்பைகள் தைப்பார். ஒரு பை தைத்தால் 25 பைசா கிடைக்கும். இன்று அவருக்கு வயது 73. ஸ்டீல் பேர்ட் ஹைடெக் இந்தியா (Steelbird Hi-Tech India) என்ற தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர். ஆண்டு வருவாய் 200 கோடி.
அவர் சுபாஷ் கபூர். பல தொழில்களை செய்த அனுபவம் உடையவர். துணிப்பைகள், எண்ணெய் வடிகட்டிகள் போன்றவற்றை செய்தவர் பின்னாளில் தலைக்கவசங்கள் மற்றும் உபபொருட்கள் தயாரித்தார். அவர் பைபர் கிளாஸ் கவச உடைகள் கூட தயாரித்திருக்கிறார்.
சாதாரண ஆளாக இருந்து நீண்டதூரம் பயணித்துள்ளார் சுபாஷ் கபூர். டெல்லியில் உள்ள ஸ்டீல் பேர்ட் ஹைடெக் நிறுவனத்தின் தலைவரான அவரிடம் 1700 பேர் வேலை செய்கிறார்கள் ( படங்கள்: பார்த்தோ பர்மன்) |
1976-ல் தொடங்கி கடந்த நாற்பது ஆண்டுகளில் எட்டு தலைக்கவசம் தயாரிக்கும் தொழிலகங்களை உருவாக்கி உள்ளார் ஸ்டீல்பேர்ட் நிறுவனத் தலைவரான சுபாஷ். ஹிமாசால பிரதேச மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் 3 இடங்களிலும் டெல்லியில் 3 இடங்களிலும் நோய்டாவில் இரண்டு இடங்களிலும் இந்த தொழிலகங்கள் அமைந்துள்ளன. 1700 பணியாளர்கள் உள்ளனர். தினமும் 9000-10000 தலைக்கவசங்களை தயாரிக்கிறார்கள்.
இவற்றின் விலை 900 ரூ முதல் 15000 ரூ வரை உள்ளது. இத்தாலியின் பெரிய தலைக்கவசத் தயாரிப்பாளரான பீஃப் என்ற நிறுவனத்துடன் 1996 முதல் ஒப்பந்தம் செய்து இணைந்து செயல்படுகிறார் சுபாஷ் கபூர்.
இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பிரேசில், மொரிசியஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு 4000 வகைகளில் தலைக்கவசங்களைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.
பள்ளியில் படிக்கும்போது 33%ஐ விட அதிகம் மதிப்பெண் பெற்றதில்லை. தன் நோக்கத்தில் உறுதியாக இருக்கும் எளிமையான ஆள் என தன்னைப்பற்றிச் சொல்கிறார் சுபாஷ்.
"பல நேரங்களில் பசியுடன் உறங்கி இருக்கிறோம். ஒரு காலத்தில் இப்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் முக்கியக் குடும்பமாக நாங்கள் இருந்தோம். ஆனால் நாட்டுப் பிரிவினை எங்களைச் சிதைத்துவிட்டது.”
சுபாஷின் புகழ்வாய்ந்த குடும்பத்தினருக்கு 26 தொழில்கள் இருந்தன. பாத்திரம், துணி, நகை, விவசாயம் போன்றவை அதில் அடங்கும். 13 கிணறுகள் அவர்களுக்கு இருந்தன. காஷ்மீரில் முதல் பெட்ரோல் பங்க் அவரது தாத்தா 1903-ல் உருவாக்கியதுதான்.
தேசப்பிரிவினை இந்த குடும்பத்தை வறுமைக்குள் தள்ளிவிட்டது.
|
தினமும் 9000-10,000 தலைக்கவசங்கள், அதன் உபகரணங்களை ஸ்டீல்பேர்ட் தயாரிப்பதுடன் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பிரேசில், மொரீசியஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது
|
1947 ஆகஸ்டில் அவரது அம்மா லீலாவந்தி தன் நான்கு மகன்கள் சராஜ், ஜக்தீஷ், கைலாஷ், ஒன்றரை வயதே ஆன சுபாஷ் ஆகியோருடன் ஹரித்வாரில் புனிதப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது நாட்டுப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டது. அவரது அம்மாவுக்கு வேறு வழியில்லை. இந்தியாவிலேயே தங்கினார். அவரது கணவர் திலக் ரஜ் கபூர் அப்போது பாகிஸ்தானில் இருந்தார்.
அவர் இந்தியாவுக்கு வரும் வழியில், கொல்லப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பினார். நூற்றுக்கணக்கான பிற பயணிகளுடன் வாகனம் ஒன்றில் ஏறி வருகையில் தாக்குதல் நடந்தது. பெரும்பாலானோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவரும் ஒரு சிலருமே தப்பினர்.
அவர் எல்லையைக் கடந்தபோது மிக மோசமான நிலையில் இருந்தார். ஆடையே இல்லை. “அவரது உறவினர்கள் அவருக்கு இறந்துபோன ஒரு பெண்ணின் பாவாடையைக் கொடுத்து உடலை மூடிக்கொள்ள சொன்னார்கள்,” நினைவு கூர்கிறார் சுபாஷ். “குடும்பம் ஒன்றாக இணைந்தது. சின்ன சின்ன வேலைகள் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தது.”
ஹரித்வாரில் நான்கு கடினமான ஆண்டுகளைக் கழித்தபின் 1951ல் டெல்லிக்குச் சென்றனர். 1956 வரை போராட்டம்தான். ஆனால் அவர்கள் தொழில் செய்து பழகிய குடும்பத்தினர் என்பதால் எதாவது செய்ய முடிவெடுத்தனர்.
சுபாஷின் அப்பா தன் மனைவியின் நகைகளை விற்று சிறுதொழில் ஒன்று தொடங்கினார். உப்பு விற்பதற்காக துணிப்பைகள் செய்யும் தொழில். “அவர் தைலி ஹவுஸ் என்று நிறுவனத்துக்குப் பெயரிட்டார். 1 கிலோ, 2.5 கிலோ பிடிக்கும் பைகளைத் தயாரித்தோம். 100 பைகளை 4 ரூபாய்க்கு விற்றோம். வெற்றிகரமாக தொழில் மாறியது,” என்கிறார் சுபாஷ்.
சுபாஷ் துணியை நறுக்குவார். அவரது சகோதரர்கள் அதைத் தைத்தல் அச்சிடுதல் போன்ற பணிகளைச் செய்வர். 1959-60 ஆம் ஆண்டு தன் மெட்ரிகுலேஷன் தேர்வுக்குச் சென்ற நாள் அவருக்கு இன்னும் நினைவில் உள்ளது.
|
1976-ல் சுபாஷ் தலைக்கவசங்கள் தயாரிக்க ஆரம்பித்தார்
|
“தேர்வு அறைக்குச் செல்லுமுன் துணிகளை நறுக்கி வைக்கவேண்டி இருந்தது. அந்நாட்களில் கல்வியைவிட வாழ்க்கையை நடத்துவது முக்கியமானதாக இருந்தது,” என்கிற சுபாஷ் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்.
அவர்களின் குடும்ப தொழிலில் ஒரு பைக்கு 25 பைசா லாபம் கிடைத்தது. அவர்கள் 1961-62ல் 6000 ரூபாய் சேமித்திருந்தனர். அப்போது சுபாஷின் சகோதரரின் நண்பர் சுரிந்தர் அரோரா, எண்ணை வடிகட்டிகள் செய்யும் யோசனையைத் தந்தார்.
ஆரம்பத்தில் சுமார் 12 வடிகட்டிகளைச் செய்து கரோல் பாக்கில் உள்ள ஓரியண்டல் ஆட்டோ சேல்ஸ் கடைக்குக் கொடுத்தனர். 12 ரூபாய்க்குச் செய்து 18 ரூபாய்க்கு விற்றனர். 6 ரூபாய் லாபம்.
சுரிந்தர் அரோராவை தொழில் பங்குதாரர் ஆக அழைத்தார் சுபாஷ் அவர் மறுத்தார். பதிலுக்கு தன் எந்திரங்களை 3500 -4000 ரூபாய்க்குத் தருவதாகச் சொன்னார். ஒப்புக்கொண்ட சுபாஷ் 3000 ரூ தந்தார்.
“அது என் ஆரம்ப முதலீடு. ஆனால் துணிப்பைகளா வடிகட்டிகளா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ஏனெனில் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை,” அவர் சொல்கிறார்
அவர் டெல்லியில் உள்ள கஷ்மீரி கேட்டில் இருக்கும் ஹன்ஸ் ஆட்டோ ஏஜென்சிக்குச் சென்று எண்ணெய் வடிகட்டிகளுக்கு ஆர்டர் வாங்க முனைந்தார். அந்த கடை உரிமையாளர் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு கடுமையாக நடந்துகொண்டார்.
.
|
தன் மைத்துனருடன் சுபாஷ்
|
“நான் அப்போதுதான் துணிப்பைகள் செய்யும் தொழிலை விட்டு எண்ணெய் வடிகட்டிகள் செய்ய முனைந்திருந்தேன் என்பதால் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை,” ஒப்புக்கொள்கிறார் சுபாஷ். அவர் அழுகிற நிலைக்குச் சென்றதைப் பார்த்து அந்த கடை உரிமையாளர் மனம் இரங்கினார். சில பாடங்களைச் சொல்லித் தரவும் செய்தார்.
1963ல் சுபாஷ் ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தை தன் குடும்பத்தினரை பங்கு தாரராகக் கொண்டு உருவாக்கினார். “அடுத்த இரு ஆண்டுகளில் ட்ராக்டர்களுக்குத் தேவையான 280 வகை எண்ணெய் வடிகட்டிகளைத் தயாரித்தேன்.”
சில ஆண்டுகளிலேயே அவர் வெற்றிகரமாக ஆனார். நண்பர்கள் அவரிடம் தொழில் ஆலோசனைகளுக்கு வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு தலைக்கவசங்கள் செய்யும் தொழில் தொடங்குமாறு அவர் கூறுவார். ஏனெனில் அரசு தலைக்கவசங்களை கட்டாயம் ஆக்க திட்டமிட்டது. ஒரு நாள் திடீரென ஏன் நாமே அவற்றைச் செய்யக்கூடாது என்று அவருக்குத்தோன்றியது
அது ஜூன் 1976-ல் ஒரு தினம். “இன்றிலிருந்து தலைக்கவசம் செய்யப்போகிறோம்,” என அறிவித்தார் சுபாஷ்.
70களுக்கு முன்னால் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை. 1976-ல்தான் அதைக் கட்டாயம் என டெல்லி அரசு அறிவித்தது. அதே சமயம் சுபாஷும் உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்.
|
பிரிவினைக்குப் பின் தன் பெற்றோர் எதிர்கொண்ட போராட்டத்தை சுபாஷ் மறக்கவில்லை
|
டெல்லியில் சில கடைகளில் தலைக்கவசத்தை விற்பனைக்கு வைத்தார். 65 ரூபாய் விலை. சில கடைக்காரர்கள் அதை 60 ஆக குறைக்கச் சொன்னார்கள்.
“நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வழி இல்லை என்னிடம்தான் வாங்கவேண்டும். தேவை அதிகரித்ததும் கடைக்காரர்கள் என்னிடம் வந்தனர். ஒரே நாளில் எனக்கு 2.5 லட்ச ரூபாய் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,” என்கிறார் சுபாஷ்.
புத்திசாலியான தொழிலதிபரான சுபாஷ் அந்த 2.5 லட்சத்தையும் செய்தித்தாள், தூர்தர்ஷன் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தினார். அதனால் ஸ்டீல்பேர்ட் தலைக்கவசங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது. 65 ரூபாயிலிருந்து 70.40 ரூ ஆக விலையை அதிகரித்தார்.
“என் ஜண்டேவாலான் பகுதி அலுவலக வாயிலில் 1000 வாடிக்கையாளர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நாளில் காத்திருந்தது நினைவில் உள்ளது. உடைந்த கவசங்கள் கூட விற்கப்பட்டன. முன்கூட்டியே பணம் கிடைக்க ஆரம்பித்தது. எங்கள் விற்பனை கூடியது,” என்கிறார் சுபாஷ்
1980-ல் மாயாபுரியில் ஒரு ஏக்கர் நிலத்தில் தொழிலகம் ஒன்று அமைத்தார். இருப்பினும் இந்த வெற்றிக்கதையில் சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
அவர் 1984-ல் வேறு சில பொருட்களை தயாரிக்க முடிவுசெய்து களமிறங்கினார், ஆனால் அவை வெற்றிபெறவில்லை. “நிறைய பணம் இழந்தேன்,” சுபாஷ் வருந்துகிறார்.
1999-ல் அவரது தம்பி ரமேஷ் தொழிலில் இருந்து பிரிந்துபோனார். 2002-ல் அவரது மாயாபுரி தொழிலகம் எரிந்துபோனது. 20-22 கோடி நஷ்டம். வங்கியில் கடன்பெற்று அதைச் சமாளித்தார் சுபாஷ்.
இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக வேலை செய்ய நேர்ந்து அக்காலகட்டத்தை இழந்ததில் அவருக்கு வருத்தம். “இப்போது என் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதன் மூலம் அதை சரிசெய்ய விழைகிறேன்,” என்கிறார் அவர்.
|
உறுதியுடன் இருந்தால் தடைகள் தயங்கி நிற்கும் என்கிறார் சுபாஷ்
|
சுபாஷ் மே 3, 1971-ல் லலிதா என்பவரை மணம் புரிந்தார். ராஜிவ், அனாமிகா என இரு வாரிசுகள்.
அவரது திருமண கதையைக் கேட்டால் அவர் முகம் மலர்கிறது. “அது கண்டதும் காதல். லலிதா டைப்பிங் செண்டர்க்கு குனிந்த தலையுடன் செல்வார். அவருக்கு 19 வயது. எனக்கு 24 வயது. தினமும் மாலை ஐந்துமணிக்கு டைப்பிங் செண்டர் வாசலில் நான் அவருக்காக நிற்பேன். அவருடைய சகோதரர்கள் முரடர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. நான் பின்வாங்கவில்லை. அவரது இல்லத்துக்கு திருமணம் பேச நண்பர்களை அனுப்பினேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
“வாழ்க்கை முழுவதும் சவால்களை எதிர்கொண்டு நின்றுள்ளேன். உறுதியுடன் இருந்தால் தடைகள் தயங்கி விலகும்,” என்கிறார் சுபாஷ்.
தலைக்கவச மனிதரின் வாழ்க்கைப் பாடம் இது.
அதிகம் படித்தவை
-
பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்
பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மாற்று யோசனை தந்த வெற்றி
ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
பள்ளத்தில் இருந்து சிகரத்துக்கு!
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
ருசியின் பாதையில் வெற்றி!
சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை
-
வெற்றிக் கோடுகள்
நீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை
-
அடையாற்றின் கரையில்..
விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை