பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த்தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்!
23-Nov-2024
By ப்ராச்சி பாரி
புனே
பதின்வயதில் கால்குலேட்டர்கள் ரிப்பேர் செய்ததிலிருந்து இன்று சர்வதேச மென்பொருள் தொழில் செய்யும் அளவுக்கு வந்திருக்கும் கைலாஷ் கட்கர், 50, நிச்சயமாக வெற்றியின் சூத்திரம் அறிந்தவர்தான்.
அவரது அலுவலகத்துக்கு வெளியே இந்த சூத்திரத்தை அறிய காத்திருக்கிறேன். புனேவில் உள்ள பிரபலமான மார்வால் எட்ஜ் காம்ப்ளக்ஸில் ஏழாவது, எட்டாவது தளங்களில் இவரது க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமையகம் செயல்படுகிறது.
|
சகோதரர்கள் ஆன கைலாஷ் மற்றும் சஞ்சய் சாஹேப்ராவ் கட்கர் இருவரும் 350 கோடி வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனத்தைக் கட்டி எழுப்பி உள்ளனர். (படங்கள்: எம். ஃபாஹிம்) |
சகோதரர்கள் ஆன கைலாஷ் மற்றும் சஞ்சய் சாஹேப்ராவ் கட்கர் இருவரும் மால்வேர் எனப்படும் வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக பல இரவுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் குழுவினர் இந்த அபாயத்தை முன்கூட்டியே அறிய, கண்டறிய, அழிக்க ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.
கேகே என்று அழைக்கப்படும் கைலாஷ் கட்கர் இன்று பிசியாக இருக்கிறார் அவரது அறைக்குள் ஆட்கள் பரப்பாகப் போய்வந்துகொண்டிருக்கிறார்கள். சற்று காத்திருந்த பின்னர் நான் சகோதரர்கள் இருவரையும் சந்திக்க அழைக்கப்படுகிறேன்.
கேகே மூத்தவர். சீரியசாகவும் நிதானமாகவும் தோற்றமளிக்கிறார். சஞ்சயை விட அதிகமாகப் பேசுகிறார். சஞ்சய் நவீன தொழில்நுட்ப நிபுணரைப்போல் இருக்கிறார். அழகான நவீன ஆடைகளை அணிந்து இயல்பாக இருக்கிறார். இருவருமே மிகவும் இயல்பாகவும் நட்புணர்வுடனும் இருப்பதை உணர்ந்தேன்.
கேகே பணத்தையையும் வெற்றியையும் ஒப்பிடுவதில்லை. “வெற்றி என்பது பணம் இல்லை. எல்லோரும் எங்கள் தயாரிப்பைத் தாமாகவே முன்வந்து தேர்வு செய்யும்போதே நாம் நிஜமாகவே வென்றுள்ளோம் என்று உணரமுடியும்.”
சதாரா அருகே லால்குன் கிராமத்தில் பிறந்த கேகேவின் குடும்பம் விரைவில் புனேவுக்கு இடம்பெயர்ந்தது. அவரது தந்தை பிலிப்ஸ் நிறுவனத்தில் மெஷின் செட்டராக வேலை பார்த்தார். கேகே பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டார். தான் தேர்வில் தோற்றுப்போவோம் என்று நினைத்தாலும் பத்தாம் வகுப்பில் அவர் பாஸ் செய்துவிட்டார்.
“மூன்று மாதங்களில் மாத சம்பளம் 400 ரூபாய்க்கு கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைக்கு சென்றுவிட்டேன். ரேடியோ, டேப் ரிக்கார்டர் ரிப்பேர் செய்வது ஏற்கெனவே எனக்குத் தெரியும். என் அப்பா வீட்டில் அவற்றை ரிப்பேர் செய்வதைப் பார்த்து நான் கற்றுக்கொண்டிருந்தேன்.”
அன்று சிவாஜிநகரில் தானாஜிவாடியில் சாதாரணமான ஒரு குடியிருப்பில் அவரது குடும்பம் வசித்தது. அவருக்கு சொந்தமாக தொழில் நடத்தவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு நாள் மென்பொருள் நிறுவனம் நடத்துவோம் என்று நினைத்திருக்கவில்லை.
“1980களில் கால்குலேட்டர் தொழில்நுட்பம் புதிது. புதியவற்றைக் கற்றுக்கொள்ள எனக்கு ஆசை, எனவே நான் அதைச் செய்ய ஆரம்பித்தேன். நான் கால்குலேட்டர் டெக்னிசியனாக இருந்தாலும்கூட வாடிக்கையாளர்களிடம் பேசுவது, கணக்குகளை எழுதுவது போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன்.”
கேகே கால்குலேட்டர்களைப் பழுதுபார்க்க ஒரு வங்கிக்குச் சென்றபோது முதன்முதலாக கணிப்பொறியைக் கண்டார். அப்போது அவருக்கு 22 வயது. “கண்ணாடி அறையில் டிவி போல் ஒரு கருவியைக் கண்டு என்னவென்று கேட்டேன். கணிபொறி என்றனர்,” கேகே நினைவுகூர்கிறார்.
|
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கைலாஷ் 400 ரூ சம்பளத்தில் கால்குலேட்டர் பழுதுநீக்கும் வேலைக்குச் சென்றார் |
எதிர்காலம் அந்த ’டிவி’தான் என்று விரைவில் அவர் உணர்ந்தார். வங்கி ஊழியர்களிடமும் தங்கள் வேலைக்கு ஆபத்து என்று அச்சம் இருந்தது. அவர்களும் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.
ஆனால் கேகேவுக்கு அச்சம் இல்லை. “அவர்களின் எதிர்வினை என்னை கணிப்பொறி பற்றி அறிந்துகொள்ளத் தூண்டியது. புதியவற்றைக் கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் அதிகம்.” அவர் கணிப்பொறி பற்றிய நூல்களை வாங்கிப் படித்தார்.
தான் கற்றுக்கொண்டவற்றைப் பரிசோதித்துப்பார்க்க அந்த வங்கியையே அணுகினார். ஒருமுறை கணிப்பொறி பழுதடைந்தபோது அதைப் பழுதுநீக்கித் தருவதாகக் கூறினார்.
“பலமுறை கேட்டபின் மேலாளர் என்னை அனுமதித்தார். அதைச் சரிசெய்து இயங்க வைத்தேன்.”
மேலாளருக்குத் திருப்தி. எப்போது பழுது ஏற்பட்டாலும் கேகேயை அழைக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில் டிவி போன்ற பிற கருவிகளையும் பழுது நீக்கியதால் அவரது சம்பளம் மாதம் ரூ 2000 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் அவரது தம்பி சஞ்சயும் படிப்பை 12 வதுடன் நிறுத்திவிட்டு வர விரும்பினார். ஆனால் கேகே அவரைப் படிக்குமாறு அறிவுரை கூறினார்.
“எலெக்ட்ரானிக்ஸ் படிக்க விரும்பினேன். கேகேவைப் போல் வன்பொருள் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால் கேகே மென்பொருள் படிக்கச் சொன்னார். அது இன்றைக்கு மிகவும் உதவுகிறது,” நினைவுகூர்கிறார் சஞ்சய்.
கணிப்பொறி படிக்க ரூ 5000 கட்டணம். அது அவர்களின் குடும்பத்துக்குப் பெரிய தொகை. ஆனால் கைலாஷ் தன் சம்பள உயர்வில் இருந்து கொடுத்து உதவினார். மங்கள்வார் பேத் என்ற இடத்தில் சின்ன கடை தொடங்கினார் கேகே.
|
பணியிடத்தில் கேகேவும் சஞ்சயும் சகோதரர்களைவிட நண்பர்கள் போல் இருக்கிறார்கள் |
“என் பழுதுபார்க்கும் வேலையில் புதிய எந்திரங்களை வாங்க போதுமான அளவுக்குச் சம்பாதித்தேன். என் அம்மா புதிய வீடு வாங்குமாறு சொல்லிக்கொண்டிருந்தாலும் 2002 வரை நான் வாங்கவில்லை. எனக்கு என் வேலைதான் முதல் விஷயம். என் முதல் கணிப்பொறியை 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதைப் பார்க்கவே பலர் என் கடைக்கு வந்தனர்!”
சஞ்சய் கடையில் அமர்ந்து கணிப்பொறியில் விளையாடிக்கொண்டிருப்பார். அவர் மாடர்ன் கல்லூரியில் மென்பொருள் படித்துக் கொண்டிருந்தார். வைரஸ்களை சமாளிப்பது பற்றி அவர் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தார். இங்கே கணிப்பொறியில் சில சமயம் ஏற்படும் வைரஸ்களுடன் போராடுவது அவர் வழக்கம்.
கல்லூரியில் இருந்த 10 கணிப்பொறிகளில் எப்போது 4,5 வைரஸ் தாக்குதலால் செயலிழந்தே இருக்கும். எனவே அவருக்கு இதில் நிறைய பயிற்சி கிடைத்தது. “சஞ்சயும் நானும் வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டிலும் நிறையக் கற்றுக்கொண்டோம்,” கேகே சொல்கிறார்.
“வைரஸ்களைக் கையாண்டது புதிய டாஸ் மென்பொருளை உருவாக்க எனக்கு உதவியது. வைரசை நேரடியாக நானே க்ளீன் செய்வேன். அச்சமயம் இணையம் இல்லை என்பதால் வைரஸ்களும் குறைவாகவே இருந்தன,” என்கிறார் சஞ்சய்.
அச்சமயம் கேகே சஞ்சயிடம் வைரஸ்களுக்கு எதிரான மென்பொருளை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு கூறினார். முதுகலைப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சஞ்சய் தன் முதல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உருவாக்கினார்.
அடுத்த சில ஆண்டுகளில் அவர் மேலும் சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை உருவாக்கினார். இவற்றை கணிப்பொறி பழுதுபார்க்கும் வேலைகளில் கேகே பயன்படுத்தினார். 1995-ல் இந்த மென்பொருட்களை சந்தைப்படுத்த கேகே முடிவு செய்தார்.
|
சர்வதேச அளவில் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதால் சஞ்சய் க்விக் ஹீல் என்ற பெயரைத் தேர்வு செய்தார். |
அவர் பல்வேறு வைரஸ்களையும் எதிர்க்கக்கூடிய மென்பொருளைத் தயாரிக்குமாறு தன் சகோதரரிடம் கூறினார். அந்த ஆண்டின் இறுதியில் க்விக் ஹீல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் உருவானது.
“சஞ்சய் விருப்பப்படி அதற்கு க்விக் ஹீல் என்று பெயரிட்டோம். சமஸ்கிருத பெயர் வைக்க நான் விரும்பினேன் ஆனால் சஞ்சய் இந்த மென்பொருளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல விரும்பி க்விக்ஹீல் என்ற பெயரையே வைக்க விரும்பினார்,” என்கிறார் கேகே.
இந்த மென்பொருள் வைரசைத் தடுப்பதுடன் கணிப்பொறியையும் க்ளீன் செய்வதாக அமைந்தது. எனவே சந்தையில் வரவேற்பைப் பெற்றது
“அதாவது பெயருக்கேற்ப இது கணிப்பொறியைக் குணப்படுத்தியது,” என்கிறார் சஞ்சய். அவர்கள் தங்கள் நிறுவனத்தை கேட் கம்ப்யூட்டர் சர்வீசஸ் என்று அழைத்தனர். ஓசைப்படாமல் பிரச்னைகளைத்தீர்ப்பதால் இந்த சகோதர்களின் செல்லப்பெயர் கேட் (CAT -பூனை). அத்துடன் இது அவர்களின் குடும்பப்பெயரான கட்கர் என்பதுடன் ஒத்துப்போனது. 1995-ல் தங்கள் முதல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை டாஸ் கணிப்பொறிகளுக்காக இந்த நிறுவனம் சார்பில்தான்வெளியிட்டனர்.
2007ல்தான் நிறுவனத்தின் பெயர் அதிகாரபூர்வமாக க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிடட் என்று மாற்றப்பட்டது.
இன்று க்விக் ஹீல் இந்தியச் சந்தையில் முன்னணியில் உள்ளது. இச்சந்தையில் 30 சதவீத பங்கை இது பெற்றுள்ளது. சிமாண்டிக், நார்ட்டன், மெக்காபே, காஸ்பெஸ்கீ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளிப்பதுடன் அவற்றின் நாடுகளுக்கே சென்றும் இன்று போட்டியிடுகிறது.
1995-ல் ரூ 500க்கு முதல் க்விக்ஹீல் மென்பொருளை வெளியிட்டதிலிருந்து இன்றுவரை நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். சஞ்சய் ஆரம்பத்திலிருந்தே மென்பொருள் மேம்பாடு, தொழில்நுட்ப அம்சங்களைக் கவனித்துவருகிறார்.. சந்தைப்படுத்தலை கேகே பார்த்துக்கொள்கிறார்.
“நாங்கள் எங்கள் பணிகளை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு செயல்படுகிறோம். ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்போம். விவாதிப்போம். ஆனால் குரல் உயர்த்திக் கத்தியதே இல்லை,” என்கிறார் கேகே.
இந்தியாவில் இன்னும் நேரடியாகத்தான் விற்பனை செய்யவேண்டி இருக்கிறது. எனவே கேகே நாட்டில் நம்பகமான விநியோக அமைப்பை உருவாக்குவதில் தன் உழைப்பைச் செலுத்தினார். தன் பங்குதாரர்களை மதிப்புடன் நடத்துகிறார். தொழிலில் வெளிப்படையாக இருக்கிறார்..
|
சஞ்சய்(இடது) மேம்பாடு, தொழில்நுட்ப அம்சங்களைக் கவனிக்க, கேகே சந்தைபடுத்துதல், கணக்குகள், வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்கிறார் |
அவர் வாடிக்கையாளர் சேவையை முக்கியமாகக் கருதுகிறார். தன் பொறியாளர்களை வாடிக்கையாளர் இல்லங்களுக்கும் அனுப்புகிறார். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் துறையில் இது கேள்விப்படாத ஒன்று. சிறு நகரங்களில் இந்த அணுகுமுறை மிகவும் உதவிகரமாக உள்ளது.
சிகோயா நிதி நிறுவனம் 2010த்தில் 60கோடி ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது. இரண்டு ஆண்டுகளில் இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டிலும் ஜப்பான், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளிலும் அலுவலகங்கள் திறக்கபட்டன.
எண்பதுநாடுகளுக்கும் மேல் தன் சந்தையை க்விக்ஹீல் விரிவுபடுத்தி உள்ளது. 2011ல் தொழில்துறையினருக்கும் பாதுகாப்பு மென்பொருளை உருவாக்க ஆரம்பித்து 2013-ல் அதையும் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
அதிகம் படித்தவை
-
சுவையான வெற்றி
மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை
-
சமையல் ராணி
நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது
-
கார் கழுவியவர், இன்று கோடீஸ்வரர்
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கார் கழுவும் வேலையில் தொடங்கி, இப்போது குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. 20 கோடி வர்த்தகத்துடன் நாட்டின் முதல் 20 ஆர்.ஓ தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இவரது நிறுவனம். எஸ்.சாய்நாத் எழுதும் கட்டுரை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்