Milky Mist

Thursday, 22 May 2025

இரண்டுமுறை இழப்பைச் சந்தித்தார்! இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட்டிப்பிடித்த தொழிலதிபர்!

22-May-2025 By ஜி சிங்
கட்டாக்

Posted 19 Nov 2017

வறுமையோ, அதி தீவிர புயலால் ஏற்பட்ட 10 கோடி ரூபாய் நஷ்டமோ, எதுவும் சரத் குமார் சாகுவை முடக்கி விடவில்லை. ஒரு சிறிய உணவகத்தில் இருந்து தொழிலைத் தொடங்கிய அவர்,  இன்றைக்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு வர்த்தகம் செய்யக் கூடிய ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார்.

ஓம் ஆயில் மாவுஅரவை மில்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் குமார் சாகு என்ற  தொழிலதிபர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை எளிதானது அல்ல என்பது அவரது கடின உழைப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

https://www.theweekendleader.com/admin/upload/apr24-17-ruchi1.JPG

ஓம் ஆயில் மாவு அரவை மில்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் குமார் சாகு, ஆரம்ப கால கட்டங்களில் தம்முடைய நிறுவனத்தின் பொருட்களை மாட்டு வண்டியில்  ஏற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களை தேடிச்சென்றார் (புகைப்படங்கள்: டிக்கன் மிஸ்ரா)

கட்டாக்கில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த சரத்துக்கு இப்போது 66 வயது ஆகிறது. அவருடைய தந்தை 5 பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் வாழ்வாதாரத்துக்கும் அது ஓரளவே போதுமானதாக இருந்தது. கட்டாக்கின் ராணிஹட்டில் வீட்டுக்கு அருகில் தொடக்கப் பள்ளியில் படித்ததை சரத் நினைவு கூறுகிறார், “ஒரு மரத்தின் கீழே தற்காலிக ஏற்பாடாக வகுப்பு நடந்தது,” என்கிறார்.

மேல்நிலைப் பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததும், கட்டாக்கில் உள்ள கிறிஸ்ட் (Christ College) கல்லூரியில் சரத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், அவருடைய சகோதரர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பதற்காக சென்னை சென்று விட்டார். எனவே அவருடைய தந்தைக்கு உதவும் பணி அவரது தலையில் விழுந்தது.

தந்தைக்கு உதவியாக சரத் இருந்தார். உதவியாளர் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்வதற்கான செலவைக் குறைத்தார். அது குறித்து நினைவு கூறும் சரத், “பாத்திரங்களை கழுவுவேன், உணவு பரிமாறுவேன் அல்லது உணவு வகைகளை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுப்பேன்.”

இது தவிர, கபடி விளையாட்டில் அவர் ஒரு வெற்றியாளராகத் திகழ்ந்தார். “1968 முதல் 1972-ம் ஆண்டு வரை ஒடிஷா கபடி டீமின் கேப்டனாக நான் இருந்தேன்,” என்று நம்முடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், "1973-ல் மாநில கபடி அசோசியேஷன் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். நான் என்ன செய்தாலும், அதில் முதலிடம் பெறுவேன். அந்த வகையில் விளையாட்டு என்னைக் கவர்ந்த ஒன்று.”

1974-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், அவர்களுடைய சிறிய உணவகத்தை இடித்துத் தள்ளியபோது, சரத் சோகத்தில் ஆழ்ந்தார். “சில நிமிடங்களில் நாங்கள் ஏதும் அற்ற திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்தோம்,”என்கிறார் சரத்

பல ஆண்டுகள் கழித்து 1999-ல், தொழில் தொடங்கி வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் ஒடிஷாவைத் தாக்கிய அதி தீவிர புயலால் சரத் பாதிக்கப்பட்டார்.

“பத்துக் கோடி ரூபாய் மதிப்புள்ள மெஷின்கள் புயலால் பாதிக்கப்பட்டன,”என்று கூறும் அவர், “நான் உடைந்து போய்விட்டேன். மீண்டும் எழ வேண்டும் என்று உறுதி பூண்டேன். விரைவிலேயே எனது தொழில் நிறுவனத்தை மீட்டெடுத்து விட்டேன்.”

எந்த ஒரு பின்னடைவும் நிரந்தரமாக அவரை முடக்கி விடவில்லை. 1974-ல் அவரது சிறிய உணவகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், உடனடியாக, ஒடிஷா சிறுதொழில் கழகம் வழங்கிய தொழிற் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். பயிற்சிக்காக அங்கு மாதம் 750 ரூபாய் உதவித் தொகை தரப்பட்டது.

“மூன்று மாதப் பயிற்சி வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதே போல உதவி தொகையும், அந்த சமயத்தில் அவசியத் தேவையாக இருந்தது.”

இதற்கிடையில், அவரது தந்தை நகரத்தில் ஒரு சிறிய டீ கடை ஒன்றைத் தொடங்கினார். “என்னுடைய சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான எண்ணம் என்மனதில் உதித்தது,”என்றவர், “ஆனால், என்னிடம் பணம் இல்லை. எனவே, கொல்கத்தாவில் நறுமணத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். நிறுமணப் பொருட்கள் குறித்த தொழில் அனுபவம் பெறும் நோக்கத்துடன், அங்கு கட்டாக் திரும்புவதற்கு சில மாதங்கள் வரை  பணியாற்றினேன்.”

https://www.theweekendleader.com/admin/upload/apr24-17-ruchiproducts.JPG

ஓம் ஆயில் மாவுஅரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ருசி ஃபுட்லைன்  மாவு வகைகள், நூடூல்ஸ் உள்ளிட்ட 300 தயாரிப்புகள், 48 வகையான நறுமணப் பொருட்களை தயாரிக்கிறது.

 


சரத், 1976-ம் ஆண்டு 26-வது வயதில், தொழிலதிபர் ஆவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். கட்டாக்கில் உள்ள மதுபட்னா பகுதியில் 450 ரூபாய்மாத வாடகை (இப்போது இந்த இடம் அவரது நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக இருக்கிறது) கொடுத்து 1600 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்தார்.

“நான் தொழில் தொடங்கிய இடத்தில், போதுமான மாவு அரவை மில்கள் இல்லை. எனவே,அந்தத் தொழிலில் முதலீடு செய்தேன்,” என்கிறார் சரத். ஒம் சக்தி ஆயில்ஸ் மற்றும் மாவு  அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். தனிநபர் உரிமை நிறுவனமாக, 5000 ரூபாய் முதலீட்டுடன் நிறுவனத்தைத் தொடங்கினார்.

“என்னுடைய சேமிப்பில் இருந்து பாதிப்பணமும், என் தந்தையின் டீ ஸ்டால் வருமானத்தில் இருந்தும் பணம் பெற்று தொழிலைத் தொடங்கினேன்,”என்று ஆரம்ப போராட்டகாலங்களை நினைவு கூர்கிறார்.

“மாவு அரவை மில்லுக்கான, இயந்திரம் வாங்குவதற்காக வங்கியில் இருந்து 9,500 ரூபாய் கடன் பெற்றேன். என்னைத் தவிர, என் தந்தை மற்றும் ஒரு உதவியாளரும் இருந்தனர். மூவரும் இணைந்து மாவு அரவை மில்லை நடத்தினோம். பெரும்பாலான வேலைகளை நானே பார்த்தேன். மெக்கானிக் ஆக, விற்பனையாளராக, கணக்காளராக இரு மடங்கு வேலைகளைப் பார்த்தேன். ருசி ஆட்டா (Ruchi atta கோதுமை மாவு) தயாரிக்கத் தொடங்கினோம்.

“அந்த நாட்கள் மிகவும் கடினமானவை,” எனத் நம்மிடம் கூறும் அவர், “நான் பல்வேறு கடைகளுக்கு நேரில் செல்வேன். எங்களுடைய தயாரிப்புகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு, புவனேஸ்வர், பூரி, மற்றும் அருகில் உள்ள இதர மாவட்டங்களுக்கும் வாங்குபவர்களைத் தேடிச் சென்றேன்.”

மன உறுதி, கடின உழைப்பு இரண்டும் பலன் கொடுக்க ஆரம்பித்தது. கட்டாக் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் ருசி மாவு வகைகள் பிரபலம் ஆகத் தொடங்கின.

ருசி நிறுவனம், தயாரிப்பு வகைகளை விரிவாக்கம் செய்தது. ஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ருசி ஃபுட்லைன் (Ruchi Foodline) தொடங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு ருசி நிறுவனம் சேமியா விற்பனையைத் தொடங்கியது. 1979-ல் பாஸ்தா விற்பனையும் தொடங்கினர்.

https://www.theweekendleader.com/admin/upload/apr24-17-ruchisofa.JPG

ஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனம் 1997-ம் ஆண்டு ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக ஆனது.

 

1980-ம் ஆண்டு ருசி நிறுவனம் மசாலா பாக்கெட்கள் விற்பனையைத் தொடங்கியது. மஞ்சள் தூள், மல்லித் தூள், கரு மிளகு முதலியவற்றை பாக்கெட்களில் விற்றனர். இதன் விளைவாக 1985-ல் ருசி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 25 லட்சம் ரூபாயாக இருந்தது.

“விற்பனை அதிகரித்த போதிலும், என்னுடைய சந்தைப்படுத்தல் உத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும்,நான் கடைகளுக்குச் சென்று எங்களின் தயாரிப்புகள் பற்றிய கருத்துகளைக் கேட்பேன். அதன்படி எங்கள் தயாரிப்புகளில் தேவையான மாற்றங்களைச் செய்வேன்,” என்கிறார் சரத். 

1995-ம் ஆண்டு சரத்தின் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 80 லட்சம் ரூபாயைத் தாண்டியது. “தரமும், கடின உழைப்பும்தான் எங்களின் வெற்றிக்கான ரகசியம்,” என்கிறார் சரத். நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்ற நிலையில், தயாரிப்பின் தன்மையை உயர்த்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தை சரத் புகுத்தினார். இத்தாலியில் இருந்து பாஸ்தா செய்யும் இயந்திரத்தை வாங்கினார்.

2013-ம் ஆண்டு சரத்தின் நிறுவனம், ‘ஃப்ரோசிட் ரெடி டூ ஈட்’ (Frozit ready-to-heat-and-eat) என்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது. ரோஸ்ட ட் வெஜ் பாஸ்தா, சிக்கனுடன் கூடிய பாஸ்தா, காளானுடன் கூடிய பாஸ்தா, பாஸ்தா உடன் ரசமலாய், மற்றும் ஒடிஷாவின் பாரம்பர்ய உணவான போடா பித்தா ஆகிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தினர். வேலைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஆகியோரை இலக்காக வைத்து இந்தப் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தினர்.

இப்போது, ருசி நிறுவனம் மாவு வகைகள், நூடுல்ஸ் வகைகள் என 300 பொருட்களை தயாரிக்கிறது. இது தவிர 48 வகைகளில் நறுமணப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் ஒடிசாவில் உள்ள 200 டீலர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40  சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனம், ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக 1997-ல் மாறியது. எனினும், பொதுவாக அதன் பெயர் ருசி என்றே இருந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/apr24-17-ruchiproducts1.JPG

ருசி தயாரிப்புகள், ஒடிசாவில் 200 டீலர்கள் மூலமும், நாடு முழுவதும் 40 சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.


சரத் எங்கிருந்து வந்தார் என்பதை யாரும் மறந்து விட முடியாது. ருசி ப்ரதிவா பவுண்டேசன் என்ற அறக்கட்டளை மூலம், பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுபவர் முதல் இதர துறைகளில் சாதனை பதிப்பவர்கள் வரை பல தகுதியானவர்களைத் தேர்வு செய்து கடந்த 1996-ம் ஆண்டு முதல் விருது வழங்கி வருகின்றனர்.

சரத்தின் வாரிசுகளான அரபிந்த் சாகு(38), ராஷ்மி சாகு(35) இருவரும் இப்போது நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர். தந்தையின் வெற்றி மந்திரமான கடின உழைப்பு, நேர்மை, தரத்தில் சமரசம் இன்மை ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். “எந்த ஒரு தருணத்திலும் தரமில்லாத உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில்லை என்று உறுதியோடு இருக்கிறேன். இளம் தலைமுறையினரும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் சரத்

ருசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓய்வு எடுப்பதற்கு தயாராக இல்லை. “குளிர்பான சந்தையில் கால்பதிக்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்,” என நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றிக் கூறுகிறார் சரத். “ஒடிஷாவில் இருந்து, இந்த நாட்டை கவுரவப்படுத்தும் வகையில் மேலும் அதிகமான தொழில் முனைவோர்கள் வருவதைப் பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம்.”


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Dream come true

    நனவான தொழில் கனவு

    பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • How two college friends started a successful business

    மீண்டும் மீண்டும் வெற்றி!

    பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • He slept in the railway platform. Today he owns Rs 100 crore turnover company

    பயணங்கள் முடிவதில்லை!

    அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Master of cookery books

    சமையல் ராணி

    நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை

  • Hardwork pays

    பள்ளத்தில் இருந்து சிகரத்துக்கு!

    ஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? தேவன் லாட் எழுதும் கட்டுரை