Milky Mist

Thursday, 10 July 2025

சிறுநகர் காபி ஷாப் ஒன்று, இந்தியாவின் மிகவேகமாக வளரும் காபி ஷாப் நிறுவனமாக மாறி இருக்கும் வெற்றிக்கதை!

10-Jul-2025 By கவிதா கனன் சந்திரா
வடோதரா

Posted 16 Mar 2017

குஜராத்தில் உள்ள வடோதராவில் 2008-ல் ஒற்றை காபி ஷாப் ஆக தொடங்கிய ஒரு நிறுவனம் இன்று 110 கடைகளுடன் (50 கபேக்கள், 60 ஸ்நாக் பார்கள்) இந்தியாவில் 70 நகரங்களில் விரிந்து பரந்துள்ளது. ப்ரூபெரி என்ற அந்த நிறுவனத்தின் வெற்றியின் ரகசியத்தை அதன் இணை நிறுவனர்களான அங்கூர் குப்தா மற்றும் ரொோனக் கபடேலிடம் கேட்கலாம். இருவருமே 36 வயது இளைஞர்கள்.

எதைச் செய்தாலும் விருப்பத்துடன் செய்யவேண்டும். இல்லையென்றால் செய்யக்கூடாது என்பது அங்கூரின் கொள்கை. இதனுடன் சிறப்பான தொழில் திட்டங்களைப் பயன்படுத்தி ப்ரூபெரியை நாட்டில் மிகவேகமாக வளரும் காபி செயின்களில் ஒன்றாக மாற்றி உள்ளனர். ஆண்டுக்கு ஒருகோடிப் பேர் இவர்களின் கடைகளுக்கு வந்துசெல்கிறார்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffee1(1).jpg

அங்கூர் (இடது) மற்றும் ரோனக் இருவரும் ப்ரூபெரியின் இணை நிறுவனர்கள். ராஜ்கோட்டிலுள்ள விவேகானந்தா ஓட்டல் மற்றும் சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் படித்த நாட்களில் இருந்தே இருவரும் நண்பர்கள்.

தங்கள் சேமிப்பு மற்றும் கொஞ்சம் பெற்றோர்களிடமிருந்து என்று பெற்று மொத்தம் 12 லட்ச ரூபாய் போட்டு ஆரம்பிக்கப்பட்ட ப்ரூபெரி இப்போது 8.3 கோடி வர்த்தகம் செய்கிறது.

வடோதராவின் புறநகர்ப்பகுதியில் மகர்புரா சாலையில் தொடங்கப்பட்டது ப்ரூபெரியின் முதல் காபிஷாப். இதுதான் ராஜ்கோட்டிலுள்ள விவேகானந்தா ஓட்டல் மற்றும் சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் படித்த நாட்களில் இருந்தே நண்பர்களான இருவரும் தங்கள் முதல் அடியைத் தொடங்கிய இடம்.

புதிய காபியின் மணத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இது புதிதாக செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், புத்தகங்கள், போர்ட் கேம்கள், வைபை தொடர்பு ஆகியவற்றை அளிக்கிறது.

பளிச்சென்ற வண்ணத்துடன் கூடிய சுவர், டிஸ்பிளேவுக்கு வைத்திருக்கும் டீ ஷர்ட்கள், சோபாக்களில் எழுதப்பட்டிருக்கும் சுவாரசியமானவரிகள், ஆகியவற்றுடன் பல நகரங்களில் உங்களுக்கு நெருக்கத்தில் உள்ள காபி ஷாப்பாக மிளிர்கிறது ப்ரூபெரி.

மாணவப்பருவத்தில் இருந்தே அங்கூரும் ரோனக்கும் நண்பர்கள். உணவு தயாரிப்பை ரோனக் விரும்பினார். அங்கூர் பரிமாறுதல் துறையை விரும்பினார். கல்லூரி முடிந்ததும் எழுத்தாளர் அயன்ராண்டின் பௌண்டெய்ன்ஹெட் புத்தகத்தை அங்கூர் படித்தார். அதில் வரும் ஹோவார்ட் ரோர்க்கின் தனித்துவம் அவரைக் கவர்ந்தது.

 அங்கூர் முன்னாள் தேசிய பேஸ்பால் விளையாட்டுக்காரரும் ஆவார். 28 வயதில் அவருக்குத் தொழில் தொடங்க ஆர்வம் இருந்தது. தன் பெற்றோரை சம்மதிக்க வைத்தார். அதேபோல் ஆர்வத்துடன் இருந்த ரோனக்கையும் இணைத்துக்கொண்டார்.

ஒரு ஓட்டல் தொடங்கலாம் என்று முதலில் நினைத்தார்கள். ஆனால் அதற்கு முதலீடு அதிகம் தேவைப்பட்டது. ‘’ ஓட்டல் நிர்வாகப்படிப்பின்போது அங்கூரும் நானும் காபி பற்றி ஒரு ப்ராஜெக்ட் செய்தோம். எனவே காபி ஷாப் ஆரம்பிக்கும் எண்ணம் வலுப்பெற்றது,’’ என்று நினைவு கூர்கிறார் ரோனக்.

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffeecounter(1).jpg

அங்கூரும் ரோனக்கும் தங்கள் கடைகளின் தினசரி பணிகளைக் கண்காணிக்கின்றனர்


2005-ல் படிப்பை முடித்த நிலையில் அங்கூர், கபே காபி டேயில்(மும்பையில் ஹையாத் ரெசிடென்சி பின்புறம்) பயிற்சி பெற்றார்.  ரோனக் அமெரிக்காவில் மேரியட் பால்டிமோரில் வேலை பார்த்த நிலையில் ஸ்டார்பக்ஸ் கடையிலும் பணிபுரிந்தார். காபி இவர்கள் இருவரையும் ஈர்த்துக்கொண்டே இருந்திருக்கிறது.

ஹையாத் ஹோட்டலில் நிர்வாகவியல் பயிற்சி பெறுபவராக இருந்தபோது அங்கூர் தன் சக மாணவர்கள் 4-5 பேருடன் ஓர் வாடகை அபார்ட்பெண்டை பகிர்துகொண்டார். தினமும் 17-18 மணி நேரம் வேலை. நன்றாக பணம் சேமித்தார். அமெரிக்காவிலும் இங்கிலாந்தில் மேரியட் செஷண்டிலும் வேலை பார்த்தபோது ரோனக்கும் பணத்தை சேமித்தார்.

இந்த சேமிப்பையும் தங்கள் பெற்றோரிடம் பெற்ற பணத்தையும் சேர்த்துத்தான் 12 லட்சரூபாய் முதலீடு தயார் செய்தார்கள்.

ப்ரூபெரிஸ் ஹாஸ்பிட்டாலிட்டி ப்ரைவேட் லிமிட்டட் செப் 17, 2008-ல் உருவானது. அங்கூரும் ரோனக்கும் தான் காபி தயாரித்து, சாண்ட்விச் பரிமாறிய முதல் பணியாளர்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffeeteam(1).jpg


அங்கூர் மற்றும் ரோனக்குடன் ப்ரூபெரி நிறுவன ஊழியர்கள்

எப்படி வடோதராவைத் தேர்வு செய்தார்கள்? இருவருமே வடோதராவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அங்கூர் சண்டிகாரையும் ரோனக் குஜராத்தில் கேடாவையும் சேர்ந்தவர்கள்.

ஆனால் குஜராத்தில் படித்தவர்கள் என்பதால் இந்த நகரை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பாதுகாப்பானது. உள்கட்டமைப்பு வசதி கொண்டது. தொழில்தொடங்க ஏற்ற இடம்.

‘’வாடகை அதிகமாக இருந்தது எங்களுக்கு சவால். எங்களிடம் நிறைய முதலீடு இல்லை. எனவே இரண்டாம் அடுக்கு நகரங்களில் தொடங்கி, அதே போன்ற சிறுநகரங்களில் விரிவடைவது சரியாகத் தோன்றியது. வடோதரா எல்லாவிதத்திலும் சரியான இடமாகத் தோன்றியது’’ என்கிறார் ரோனக்.

ப்ரூபரியை விலை மலிவானதாக அங்கூர் வடிவமைத்தார். உங்கள் இல்லத்துக்கு அருகில் நண்பர்களுடமும் குடும்ப உறுப்பினர்களுடனும் காபியுடன் பேசி மகிழ  ஓர் இடம்.

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffeecup(1).jpg


முதலீடு இல்லாத நிலையிலும் அங்கூர் அடுத்த ஆண்டே பிரான்சைஸ் முறையில் விரிவாக்கத்தைத் திட்டமிட்டார். நாடு முழுக்க பயணம் செய்து ப்ரான்சைஸ் தருவதற்கு 3.5 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்து பலரை சந்தித்தார்.

 முதல் கடை ஜெய்பூரில் அமைந்தது. சூரத்,அகமதாபாத் தொடர்ந்தன. ப்ரூபெரீஸ் 2010ல் லாபம் ஈட்டத்தொடங்கியது. 2012-ல் அவர்களுக்கு சொந்தமாக ஒரு கடையும் 25 நகரங்களில் 25 பிரான்சைஸி கிளைகளும் அமைந்தன.
அப்போது வந்த ஓர் அழைப்பு ஒரு சவாலையும் அதில் ஒரு வாய்ப்பையும் முன்வைத்தது.

அவர்கள் டாடா கன்ஸல்டன்சி சர்வீஸின் மென்பொருளை பில் போடப் பயன்படுத்தினர். டிசிஎஸ் காரர்கள் பாஸ்போர்ட் அலுவலகப்பணிகளை மேற்கோண்டு வந்தனர். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் ஒரு காபி செயினுக்கு வாய்ப்பு தரவிரும்பியபோது டிசிஎஸ் மூலமாக அந்த வாய்ப்பு ப்ரூபெரிஸுக்குக் கிடைத்தது. பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளே டிசிஎஸ் வாடகைக்கு இடம் அளித்தது.

 “நாங்கள் நான்கே மாதங்களில் ஐம்பது நகரங்களில் 63 கபேக்களை அமைத்தோம். அப்போது நாங்கள் வடோதராவில் ஆறு பேர் கொண்ட குழுவாகத்தான் இருந்தோம்,’’ என்கிறார் அங்கூர். மேலும் ஆறுபேரை வேலைக்கு எடுத்துக்கொண்டு இந்திய வரைபடத்தின் முன்னால் அமர்ந்து திட்டம் தீட்டினர்.
 

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffeeduo.jpg

2015-ல் 100 கடைகளை ப்ரூபெரிஸ் தாண்டியது

அவர்கள் பிரிந்து பயணம் செய்தனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் ஒரு கடையைத் திறந்தனர். உள்ளூர் ஆட்களை வேலைக்குச் சேர்த்தனர். பிப்ரவரி கடைசியில் தொடங்கி மே மாதம் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்தனர்.

இப்போது அவர்களிடம் 16 முக்கியக் குழு உறுப்பினர்களும் 120 நேரடி பணியாளர்களும் உள்ளனர். ஒரே நிதியாண்டில் அவர்கள் விற்பனை 75 லட்சத்தில் இருந்து 4.5 கோடியாக உயர்ந்தது.

 “இதன் பிறகு எங்கள் தொழில் முறையை மாற்றிக்கொண்டோம். பிரான்சைஸ் கொடுக்க 6 லட்சரூபாய் கட்டணம் மற்றும் 6 சதவீதம் விற்பனையில் ராயல்டி என்று மாறினோம்,’’ என்கிறார் அங்கூர். 2015-ல் 100 கடைகளைத் தாண்டிச் சென்றனர்.

இந்திய காபி வாரியம் இவர்களின் வளர்ச்சியை நாட்டின் இரண்டாவது வேகமாக வளரும் காபி செயின் என்று அங்கீகரித்துள்ளது. 2015-2016ல் அவர்களின் விற்பனை 8.3 கோடி ஆகி உள்ளது.

தற்போதைக்கு ப்ரூபெரிஸ் கடைகள் 63 பாஸ்போர்ட் அலுவலங்களில் உள்ளன. மேலும்  மைண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களில் தலா ஒவ்வொரு கடையும் மேலும் 45 பிரான்சைஸ் முறை கடைகளும் உள்ளன. கடந்த ஆண்டு ஹைதராபாத் மெட்ரோவுடன் 20 கடைகள் திறக்க ஒப்பந்தம் செய்தனர். குஜராத்தில் உள்ள எஸ்ஸார் டவுன்ஷிப் கட்டுமானப்பகுதியில் 20 கடைகள் திறக்கும் ஒப்பந்தமும் உள்ளது.

https://www.theweekendleader.com/admin/upload/dec28-16-coffeeteam1.jpg

இந்தியா முழுக்க 120 நேரடிப் பணியாளர்கள் உள்ளனர்

பக்கவாட்டு விரிவாக்கமும் இருக்கிறது:  கடந்த ஆண்டு ப்ரூபெரி  ‘கேக் ஸ்டூடியோ’ என்ற ஒன்றை ஆரம்பித்தது. எங்கிருந்துவேண்டுமானாலும் கேக் ஆர்டர் செய்யலாம். இந்தியாவின் ஐம்பது நகரங்களில் அது டெலிவரி செய்யப்படும். மாதத்துக்கு 4 லட்சம் இதில் விற்பனை போய்க்கொண்டிருக்கிறது.

காபியும் கேக்கும் நல்ல கூட்டணி. ப்ரூபெரி இதை முழுமையாக்குகிறது!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • He invested Rs 20,000, but today earns in crores

    மாற்று யோசனை தந்த வெற்றி

    ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை

  • How the poultry business that was started with just Rs 5,000 became successful

    உழைப்பின் உயரம்

    தளராத மன உறுதியும், உழைப்பும், போராட்ட குணமும் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனை மாபெரும் உயரங்களை எட்டவைத்துள்ளன. கோழித்தொழிலில் சுமார் 5500 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அவரைச் சந்திக்கிறார் பி சி வினோஜ் குமார்

  • Beauty as Business

    எடை, தடை, அதை உடை!

    தீக்‌ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • The logistics of Winning

    என் வழி தனி வழி!

    ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா. ஆனால் அவர் தனியாக லாஜிஸ்டிக் துறையில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். இன்றைக்கு அவரது நிறுவனம் 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை...

  • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

    உழைப்பால் உயர்ந்த நாயகன்

    பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Former mill worker came close to starting a private airlines

    உயரங்களை எட்டியவர்

    ராஜ்குமார் குப்தாவின் கதை அசாதாரணமானது. ஆலைத் தொழிலாளியாக ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ச்சிபெற்றவர். சின்னதாக ஒரு குடியிருப்பைக் கட்டுவதில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை