இருபது ரூபாயில் டீ ஷர்ட்! ஐம்பது கோடி வருவாய்! ஆடைகள் விற்று அசத்தும் இளம் தொழிலதிபர்!
21-Nov-2024
By பி சி வினோஜ்குமார்
சென்னை
“ஒரு தேநீர் வாங்கி அருந்தும் விலையில் எங்கள் கடைகளில் ஒரு டீஷர்ட் வாங்க முடியும்,” என்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. இவர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சக்ஸஸ்(Suxus) என்ற ஆண்களுக்கான ஆயத்த ஆடை பிராண்டின் நிறுவனர். இந்த நிறுவனமானது தமிழகத்தின் ஆயத்த ஆடைக்கான சில்லரை வி்ற்பனை சந்தையை ஒரு புயல் வேகத்தில் கைப்பற்றி இருக்கிறது.
புதிய நகரங்களில் அவர்கள் கடைகள் திறக்கும்போது, வாடிக்கையாளர்கள் ஆடைகள் வாங்கக் கூட்டம் கூட்டமாகக் குவிகின்றனர், ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்ட க்யூவில் நின்று வாங்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை அண்ணா நகரில் இந்த நிறுவனத்தின் புதிய கிளைத் திறப்பு விழாவின்போதும் இந்த காட்சியைக் காண முடிந்தது.
|
ஃபைசல் அகமது, தமது சக்ஸஸ் நிறுவனத்தை ஏழு தையல் இயந்திரங்களுடன் மூன்று தையல்காரர்களுடன் மதுரையில் 2006-ம் ஆண்டு தொடங்கினார். படங்கள்: ரவிகுமார்
|
இந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தின் வீடியோக்களை அகமது, சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுகிறார். இதனால், மேலும் அதிக கூட்டம் அவரது கடைக்குத் திரண்டு வருகிறது. இதனால், அவர்களுக்கு மேலும் அதிக வியாபாரம் நடைபெறுகிறது. “திறப்பு விழா நாளில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும், எங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம்அலைமோதுகிறது,” என்கிறார் இந்த 32 வயது இளம் தொழில்அதிபர்.
“ரூ.30 முதல் ரூ.399 வரை டி-சர்ட், சட்டைகள், பேண்ட்கள் மற்றும் டெனிம் ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்கின்றோம். எங்களது விற்பனை அளவு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 55,000 ரூபாயாக இருக்கிறது. சதுர அடிக்கு 7000 ரூபாய் என்பதுதான் இந்த தொழிலின் சராசரியான நிலை. தொழிலின் அதிக பட்ச விற்பனை என்பது ரூ.13,000 ஆகும் (டி-மார்ட்). எங்களது விற்பனை இதையெல்லாம் விட அதிகம்.’’
அகமது கல்லூரியில் படிக்கும்போது, ஆயத்த ஆடை பிரிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஏழு தையல் இயந்திரங்கள், மூன்று தையல்காரர்களுடன், தமிழ்நாட்டின் வரலாற்று நகரமான மதுரையில் இதைத் தொடங்கினார். செய்த முதலீடு 5 லட்சம் ரூபாய்.
இப்போது சக்ஸஸ் நிறுவனத்தை 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் பிராண்ட் ஆக கட்டமைத்திருக்கிறார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பயணத்திலேயே அதை சரி செய்து கொண்டு, கடைசியாக குறைந்த விலை உத்தியைப் பிடித்து உயர்ந்திருக்கிறார். இதுதான் இவரது வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தது. எதிர்காலத்தில் இது மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பாடமாக இருக்கக் கூடும்.
இரண்டு தலைமுறைகளாக ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் அகமது. அகமதுவின் தந்தை 65 லட்சம் ரூபாய் கடனில் சிக்கித் தவித்ததால், அவர்களது குடும்பச் சொத்தை விற்றுக் கடனை அடைத்தனர். இதனால், அகமது தந்தைக்கு உதவ இந்தத் தொழிலுக்குள் இறங்க நேர்ந்தது.
“என்னுடைய தாத்தா இந்தியன் கிளாத் டெப்போ (Indian Cloth Depot (ICD)) என்ற நிறுவனத்தை 1940-களில் அவரது இரண்டு சகோதரர்களுடன் மதுரை விளக்குத் தூண் பகுதியில் தொடங்கினார். 1970-கள், 1980-களில் அவரது தொழில் நன்றாக செழித்தது,” என்கிறார் அகமது, “ஐசிடி நிறுவனம், பின்னி, மஃப்தலால், மற்றும் பிரிமியர் மில்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த டீலராக இருந்தது. நாங்கள் சட்டைகள், பேண்ட்கள், சேலைகள், பெண்களுக்கான ப்ளவுஸ் பிட்கள் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் உள்ள சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்தோம்.”
எனினும், அடுத்த தலைமுறையினர் இந்த நிறுவனத்தை முறையோடு நடத்தவில்லை. இதனால்,தொழில் பாதிக்கப்பட்டது. “அந்த நேரத்தில் நான் 10ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் மோசமான நிலையில் இருந்தோம். கீழ் நடுத்தர குடும்பத்தினர்போல இருந்தோம். வாடகை வீட்டில் குடியிருந்தோம். என் தந்தை பெரும் கடன் சுமையில் மூழ்கினார். நான் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருந்தபோது குடும்பத்தின் இந்த சூழல் இன்னும் தத்ரூபமாக எனக்கு நினைவில் இருக்கிறது,“ என்று அகமது நினைவு கூறுகிறார்.
|
சென்னையில் உள்ள சக்ஸஸ் கடையில் ஆடைகள் வாங்க காத்திருக்கும் மக்கள் கூட்டம்
|
“கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக எங்களுடைய குடும்பத்தின் சொத்துகளை விற்பனை செய்தோம். உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்ற என் கனவைத் துறந்து விட்டேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தேன்.”
விரைவில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கி, அகமது குடும்பத்தின் சொத்துகளை மீட்டெடுத்தார். 17வயதாக இருந்தபோது, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை அகமதுவை அழைத்துக் கொண்டு போத்தீஸ்( சங்கிலித் தொடர் ஜவுளி நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குனரான போத்திராஜை சந்தித்தார். அவர் இந்த இருவரிடமும், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரித்து, தங்கள் கடைகளுக்கு வழங்கும்படி கூறினார்.
அவரது அறிவுரையை ஏற்று, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஒரு பிரிவை அகமது தொடங்கினார். நூலிழைகள் குறித்த குடும்பத்தின் பாரம்பர்ய அறிவை மேம்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஜவுளி சில்லறை வர்த்தகத் தொடர்புகளின் வழியே வலுவாக வளர்ந்தது.
“எங்கள் இன்டிகா காரை ரூ.3 லட்சத்துக்கு விற்றோம். தொழிலுக்காக ரூ.2 லட்சம் கடனாக வாங்கினோம்,” என்கிறார் அகமது. மதுரை தெற்கு மாசி வீதியில்உள்ள ஒரு வாடகை இடத்தில் தொழிலைத் தொடங்கினார். தொடக்கத்தில் சக்ஸஸ் என்ற பிராண்ட் பெயரில் தினமும் 100 சட்டைகள் தயாரித்தார்.
போத்தீஸ் நிறுவனத்துக்கு மட்டும் ஒரு சட்டை ரூ.250 என்ற விலையில் கொடுத்து வந்தனர். ஒரு சட்டைக்கு ரூ.15 வீதம் அவர்களுக்கு லாபம் கிடைத்தது. தொடக்கத்தில் இருந்தே, கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்தினார் அகமது. தமது கணக்கியல், வர்த்தக அறிவை சரியாக உபயோகித்தார்.
“மாதம் தோறும் 2000 சட்டைகளை நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான், சராசரியாக 20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்,” என்கிறார் அவர். “சட்டை பட்டன்கள், நூலிழை ஆகியவற்றின் செலவுகளை நான் கணக்கிட்டேன். துணியை வெட்டும்போதும், தைக்கும் போதும் ஏற்படும் கழிவுகளைக் குறைத்து, எங்களுக்கான லாபத்தை அதிகரித்தோம். விரைவிலேயே நாங்கள் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் ஈட்டினோம்.”
|
அகமதுவின் ஜவுளி குடும்பத்தின் பின்னணி, சக்ஸஸ் பிராண்ட் தயாரிப்புகளுக்கான செலவுகளைக் குறைக்க உதவியது
|
தமது குடும்பம் இழந்த செல்வாக்கு மற்றும் பொருளாதார அந்தஸ்தை மீட்டெடுக்க அகமது கடுமையாக உழைத்தார். “தொழில் அதிபர்களின் குழந்தைகளைப் பார்த்து நான் ஊக்கம் பெற்றேன். சிறுவயதில் இருந்து அவர்களைப் நன்கு அறிந்த்திருந்தேன். அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்தனர். எனது குடும்பத்தையும் அந்த நிலைக்கு உயர்த்த விரும்பினேன். எனது கனவு இலக்கை அடைய இரவும், பகலும் உழைத்தேன்.”
டி.வி.எஸ்-எக்ஸ்.எல் வண்டியிலும், சில நேரங்களில் பேருந்து போன்ற வாகனங்களிலும் பயணித்து வெற்றிகரமாக கல்லூரி, வேலை இரண்டுக்கும் சென்று வந்தார்.
“தினம் தோறும் கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை இருப்பேன். அதன் பின்னர், நேரடியாக ஆடை தயாரிப்புப் பிரிவுக்குச் செல்வேன். அங்கு நள்ளிரவு கடந்தும் இருப்பேன். நாங்கள் தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்தோம்,” என்று நினைவு கூறுகிறார். “மூன்றாவது ஆண்டில், ஒரு மாருதி ஸ்விப்ட் கார் வாங்கினேன். அந்த நேரத்தில்தான் நான் கல்லூரி முடித்திருந்தேன். அப்போது எங்களிடம் 110 பணியாளர்கள் இருந்தனர், தினமும் 800 சட்டைகள் தயாரித்தோம். போத்தீஸ் உட்பட 30 கடைகளுக்கு விநியோகித்தோம்,”
2010-ம் ஆண்டு 23-வது வயதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜவுளி தொழில் பின்னணியைக் கொண்ட நஸியா என்ற பி.பி.ஏ பட்டதாரியை திருமணம் செய்து கொண்டார்.
அடுத்த ஆண்டு, மதுரையில் தனிப்பட்ட பிராண்ட் கடையை அகமது தொடங்கினார். ஆறுமாதங்கள் கழித்து ஈரோட்டில் ஒரு கடையைத் தொடங்கினார். 2013—ம் ஆண்டுக்குள் ஐந்து கடைகள் தொடங்கினர். ஆனால், கடைகளில் எதிர்பார்த்தபடி விற்பனை நடக்கவில்லை. நிறுவனம் பாதிப்படையத் தொடங்கியது.
“நாங்கள் பெரும் அளவு முதலீடு செய்திருந்தோம். ஆனால், லாபம் கிடைப்பது மிகவும் குறைவாக இருந்தது,” என்கிறார் அகமது. “ஈரோட்டில் வாடகை மட்டும் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால்,தினமும் விற்பனை என்பது ரூ.800 முதல் ரூ.1000 வரைதான் இருந்தது. நான் தவறுகள் செய்ததை உணர்ந்தேன். பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள தவறி விட்டேன். இருப்பு சுழற்சி, மீண்டும் பொருட்களை இருப்பு வைத்தல் போன்ற பிரச்னைகள் தோல்வியை ஏற்படுத்தின. பணப்புழக்கம் மற்றும் கடந்த ஆண்டுகளில் கிடைத்த லாபம் ஆகியவற்றை இழந்தோம். எனவே, அனைத்துக் கடைகளையும் மூடுவது என்று முடிவு செய்தேன்.”
|
சக்ஸஸ் கடைகளில் துணிகள் விரைவாக விற்பனை ஆகின்றன. ஒரு துணியின் அதிகபட்ச இருப்பு என்பது பத்து நாட்கள்தான்
|
ஒருதள்ளுபடி விலை அறிவிப்பின் மூலம், ஈரோடு கடையில் உள்ள துணி இருப்புகளை வி்ற்பனை செய்யத் திட்டமிட்டனர். ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்ற யோசனையை அகமது நிராகரித்தார். கடை மேலாளரிடம் ஏழு சட்டைகள் ரூ 1000, என்ற சலுகை விலையில் விற்கும்படியும், வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பும்படியும் கூறினார். 3000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அத்தனை பேருக்கும் இந்த சலுகை குறித்து தெரிவிக்கப்பட்டது.
“விற்பனையாகாத சரக்குகளைத் திரும்ப எடுத்துக் கொள்வதன் மூலம் மேலும் பணம் செலவு செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், சலுகை விலை அறிவிப்புக்கு, ஆட்டத்தை மாற்றும் வகையில் வரவேற்பு இருந்தது, “ என்கிறார் அகமது. 2015-ம்ஆண்டு டிசம்பர் 22ம் தேதி முதல் நாளில் கடையின் விற்பனை 3.5 லட்சம் ரூபாயாக இருந்தது. இருப்பு மொத்தமும் தீரும் வரையில் அதே வேகத்தில் விற்பனை தொடர்ந்தது. எனவே, மீண்டும் இருப்பு வைக்கும்படி மேலாளர் கேட்டுக் கொண்டார்.
தொழிலின் செலவினங்கள், ஆதார முறைகள் ஆகியவற்றில் அகமது மறுசீரமைப்பு செய்தார் . லாபத்தைக் குறைத்தார். எதிர்மறைத் தாக்கத்தை குறைக்க பின்னோக்கிய ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தினார். மதுரை மற்றும் இதர இடங்களில் இதை அமல்படுத்தும் முன்பு அடுத்த ஒரு ஆண்டுக்கு, ஈரோட்டில் குறைந்த விலை உத்தியை பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தினர்.
“எதிர்மறை மூலதனத்தில் நாங்கள் செயல்பட்டோம். உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை கடனில் வாங்கினோம். விற்பனைக்குப் பின்னர் அவர்களுக்குப் பணம் கொடுத்தோம். உற்பத்தி முதல் விற்பனை வரையிலான செயல்பாடுகள் மிகவும் விரைவாக நடைபெற்றன. பத்து நாட்களுக்குள் இருப்பில் இருந்த ஆடைகள் விற்பனை ஆயின,” என்கிறார் அகமது. குறைந்த முதலீட்டு மூலதன முறையை அவர்கள் பின்பற்றினர். தினசரி அனுபவங்களுக்கு ஏற்ப நடைமுறைகளைப் பின்பற்றினர்.
சந்தைமதிப்பில் 60 சதவிகிதம் அளவுக்கு தங்கள் கடைகளை வாடகைக்கு எடுத்தனர். 6 மாத வாடகை மட்டும் அட்வான்ஸ் ஆகக் கொடுத்தனர்.
“இடத்தின் உரிமையாளர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதிக வாடைக்கு எடுத்த வாடகைதாரர்கள் சில மாதங்களிலேயே தங்கள் தொழிலை மூடிவிட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அவர்கள் பிரச்னைகளைச் சந்தித்து வந்தனர். பின்னர், அடுத்த வாடகைதாரர் வரும் வரை அவர்கள் இடம் காலியாக கிடந்தது. எங்களுடையது.பாதகத்தை குறைக்கும் நடைமுறையாகும்,” என்று விவரிக்கிறார் அகமது. குறைந்த லாபத்துக்காக அவர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு விதிமுறையாக உள்கட்டமைப்பை எளிமையாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்கின்றனர்.
“இப்படித்தான் நாங்கள் செலவுகளைக் குறைக்கின்றோம். இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றோம்,” என்கிறார் அகமது. அடுத்த சில மாதங்களில் மேலும் சில கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் கடைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கிறது.
|
சக்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கியபோது, அகமது டி.வி.எஸ்-எக்ஸ் எல் மொபட் ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவர் பி.எம்.டபிள்யூ ஓட்டுகிறார்.
|
அவர்களின் தயாரிப்புகளின் தரம் எப்படி இருக்கிறது. குறிப்பாக 20 ரூபாய்க்கு அவர்கள் விற்கும் டீ ஷர்ட்டின் தரம்... எவ்வளவு காலத்துக்கு அது உழைக்கும்?
“அதிக விலை கொடுத்து வாங்குவது தரமானதாக இருக்கும். குறைவான விலை கொடுத்து வாங்கினால், தரம் குறைவாக இருக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களிடம் நிலவும் இந்த மனப்பான்மையை உடைக்க நாங்கள் பிரச்சாரம் செய்தோம். 20 ரூபாய் டிசர்ட்டைப் பொறுத்தவரை, ஆறுமாதங்கள் வரை உழைக்கும். இந்த காலகட்டத்தில் எத்தனை முறை நீங்கள் துவைத்தாலும், அப்படியே இருக்கும்,” என்கிறார்.
ஜாரிப் எனும் 8 வயது மகன் இவருக்கு உண்டு. அகமது, ஞாயிறு விடுமுறை தினத்தை தமது குடும்பத்துடன் செலவழிக்கிறார். யெங்க் இந்தியன்ஸ், யெங்க் என்டர்ப்ரனர் ஸ்கூல் போன்ற தொழில் முனைவோர் அமைப்புகளில் தீவிர உறுப்பினராக இருக்கிறார்.
இவர் சிவ் கெரா, ராபின் சர்மா போன்ற பேச்சாளர்கள், நிதி நிர்வாக வல்லுநர் அனில் லம்பா போன்றோரைத் தீவிரமாக பின்பற்றுபவர். முன்னணி நிறுவனங்கள் வழங்கும் தலைமைப் பண்பு குறித்த வகுப்புகளிலும் விருப்பத்துடன் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் 10 நாள் வகுப்பில் பங்கேற்றிருக்கிறார். ஸ்டான்ஃபோர்டில் இந்த ஆண்டு டிசம்பரில் நடக்க உள்ள இன்னொரு வகுப்பில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ளார்.
அதிகம் படித்தவை
-
ஆடைகள் தொழிலில் ஆஹாவென வெற்றி!
அவர் ஐஏஎஸ் ஆகியிருக்கவேண்டியவர். அத்தேர்வில் தோற்றதால் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அது 80 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். திருப்பூர் தொழில் அதிபர் ராஜா சண்முகத்தின் வெற்றிக்கதையை எழுதுகிறார் பி.சி.வினோஜ் குமார்
-
சேலையில் வீடு கட்டுபவர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில் வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
அழகான வெற்றி
கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை
-
கடலுணவில் கொட்டும் கோடிகள்
இரண்டு லட்சம் ரூபாய் கடனில் மீன்பிடிப்படகுகள் வாங்கி தொழில் தொடங்கிய தாரா ரஞ்சன் முன் அனுபவம் இல்லாததால் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இன்று ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
தேநீர் கடை தந்த வெற்றி!
மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.
-
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு
கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை