Milky Mist

Thursday, 18 December 2025

கழிவு மேலாண்மை முதல் கண்ணகி நகர் சுவரோவியங்கள் வரை… ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் அசத்தலான பயணம் !

18-Dec-2025
சென்னை

Posted 23 Mar 2021

இளம் வயதில் வினாடிவினா போட்டிகளில் பங்கு பெறுவதில் அல்பி ஜானுக்கு ஆர்வம் அதிகம். பிறகு மருத்துவம் படித்த அவர்,  முதல் முயற்சியிலேயே கடினமான குடிமைப் பணித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.  2013வது ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் அல்பி ஜான், பணியாற்றும் இடங்களில் எல்லாம் தம்முடைய தடத்தை பதிக்க‍த்  தவறுவது இல்லை.

தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்தது முதல் பல புதுமையான திட்ட‍ங்களை அவர் அறிமுகம் செய்துள்ளார். இது பொதுமக்க‍ளிடத்திலும் சக அதிகாரிகள் இடத்திலும் அவருக்கு உயர்ந்த மரியாதையைப் பெற்றுத் தந்தது.

டாக்டர் அல்பி ஜானின் திட்ட‍ங்கள் மக்க‍ளிடம் இருந்தும், சக அதிகாரிகளிடம் இருந்தும் உயர்ந்த மரியாதையைப் பெற்றுத் தந்தது. (புகைப்ப‍டங்கள்: சிறப்பு ஏற்பாடு

சிவகங்கை மாவட்ட‍ம் தேவகோட்டையில் திருநங்கையர்கள் மறுவாழ்வுகளுக்கான ஒருங்கிணைந்த திட்ட‍த்தை உருவாக்கியது, தூத்துக்குடியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த‍ப்ப‍ட்ட‍ லட்சக்கணக்கான நெகிழிப் பைகளை உற்பத்தியாளர்களுக்கே திருப்பி அனுப்பும் விரிவாக்க‍ப்ப‍ட்ட தயாரிப்பாளர் பொறுப்புடைமை கொள்கைகளை அமல்படுத்தியது. இந்தியாவில் ஒரு பெரிய மறு குடியமர்வு கட்ட‍டப் பகுதியான சென்னை கண்ண‍கி நகரை ஒரு கலை பிரதேசமாக மாற்றியது ஆகியவை அவரது பங்களிப்புப் பட்டியலில் அடக்க‍மாகும்.

சென்னை மாநகராட்சியில் தற்போது மண்டல துணை ஆணையர்(தெற்கு) ஆக பணியாற்றும் அவர் ஐந்து நுண்காடுகளை(மியாவாகி காடுகள்)  திட்ட‍மிட்டு உருவாக்கினார். நகரின் பசுமைப் பரப்ப‍ளவை அதிகரிக்கும் நோக்க‍த்துடன் இது போன்ற மேலும் ஐந்து காடுகளை உருவாக்குவதற்கான இடங்களை அவர் கண்டறிந்தார். இந்த மியாவாகி முறையில், இயற்கையான காடுகளுடன் நிலத்தை மீட்டெடுக்கும் முறையை நடைமுறைப்ப‍டுத்த‍ முடியும். இது ஜப்பானின் தாவரவியல் வல்லுநர் அகிரா மியாவாகி என்பவரால் கருத்தாக்கம் செய்ய‍ப்ப‍ட்டு முன்னெடுக்க‍ப்ப‍ட்ட‍தாகும்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் சென்னையில் முதலாவது மியாவாகி காடுகள் கோட்டூர் புரத்தில் அடையாறு ஆற்ற‍ங்கரையில் 23,000 ச.அடி பரப்பில் பல்வேறு வகையான மரங்கள், புதர்கள் மற்றும் கொடி வகைகளைக் கொண்டு உருவாக்க‍ப்ப‍ட்ட‍து. “ குப்பை கொட்டும் ஓரிடத்தை வெற்றிகரமாக மியாவாகி காடாக  மாற்ற‍ முடிந்தது,” என்கிறார் 32 வயதான அல்பி.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட‍த்தில் பிரவோமில் உள்ள‍ நடுத்த‍ர குடும்பத்தைச் சேர்ந்த ஜான் வர்கீஸ்-சலோமி வர்கீஸ் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் அல்பி. இளம் வயதிலேயே குடிமைப்பணித் தேர்வுகளை நோக்கி அல்பி ஈர்க்க‍ப்ப‍ட்டார்.

அவருடைய தந்தை  சிறிய அளவில் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர். அவர் இப்போதும் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். அவரது தாய் மாநில சுகாதாரத்துறையில் நர்சிங் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். 
தேவகோட்டையில் துணை ஆட்சியராக முதல் முதலில் அல்பி நியமிக்கப்பட்டார்


அவரது பெற்றோர் இருவருமே 10ம் வகுப்பு வரைதான் படித்திருந்தனர். தங்களது குழந்தைகளுக்கே அனைத்து கல்வியையும் அளித்தனர். அல்பியின் இளம் சகோதரர் அதுல் கோழிக்கோட்டில் உள்ள என்ஐடியில் பொறியியல் முடித்திருக்கிறார்.

அல்பி தமது எம்பிபிஎஸ் படிப்பை திருச்சூரில் உள்ள ஜூப்ளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் முடித்தார். அவரது கல்வியில் பெற்றோர் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. எனவே அவரது வெற்றிக்கு பெற்றோருக்கே அவர் நன்றிக் கடன் செலுத்துகிறார்.

“நான் பல தடைகளைத் தாண்டி இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன். எனக்கு ஆதரவளித்த பெற்றோரால்தான் இது சாத்தியமானது” என்றார். அல்பி தமது தந்தையை முன்னுதாரணமாக கொண்டிருக்கிறார். கடின உழைப்பும், ஈடுபாடுமே எப்போதும் வெற்றியைத் தரும் என்று அவருக்கு அவரது தந்தை அறிவுறுத்தியிருக்கிறார்.

குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த போது ஊடகங்களில்  பெட்டிக்கடை உரிமையாளரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று வெளியானதை  அவர் நினைவு கூர்கிறார். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது  மிகவும் கடினம் என்று அல்பி நினைத்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் வினாடி வினா குழுவில் இடம்பெற்றிருந்த அவருக்கு முன்பு படித்த மூத்த மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதினர், அதனால் அவரது தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

“எனக்குத் தெரிந்த மூத்த மாணவர்கள் நன்றாக குடிமைப்பணித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றனர். எனவே அது அடையக் கூடிய லட்சியம்தான் என்று நானும் கூட உணர ஆரம்பித்தேன். எனவே ஒரு முறை எழுதிப் பார்ப்பது என்று முடிவு எடுத்தேன்,” என்றார் அல்பி. முதல் முயற்சியிலேயே குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, அகில இந்திய தரவரிசையில் நான்காவது இடத்தையும் பெற்றார். மருத்துவ பயிற்சியை முடித்த பின்னர், அல்பி, 2012ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராகப் பணியாற்றியபடி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தயாரானார்.

அவர் தமது முதன்மைத் தேர்வை 2012ஆம் ஆண்டு நவம்பரில் எழுதினார். பின்னர் 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டு பயிற்சிக்குப் பின்னர், 2015ஆம் ஆண்டு டிசம்பரில் தேவகோட்டையில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தேவகோட்டையில் திடக்கழிவு மேலாண்மை துறையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். தமது பகுதியில் இருந்த திருநங்கையரை சமுதாயத்துக்குள் ஒருங்கிணைத்தார்
தூத்துக்குடியில் பணியில் இருந்தபோது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி அட்டைகளை உற்பத்தியாளருக்கே திருப்பி அனுப்பினார்


15 திருநங்கையர்களுக்கு அவர் நிலம், வீடு, கறவை மாடுகள் கொடுத்தார். “அங்கு நான் பணியாற்றியது எனக்கு நல்ல பெரிய கற்றல் அனுபவத்தைக் கொடுத்தது,” என்று நினைவு கூர்ந்தார்.

2017ஆம் ஆண்டு அல்பி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கே அவர் திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தினார். “நான் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றியபோது, தினசரி 240 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு குப்பை கொட்டும் இடத்துக்கு அனுப்பப்படும். இப்போது அது 50 மெட்ரிக் டன் ஆக குறைந்து விட்டது. 190 டன் கழிவுகள் தினமும் குறைந்து விட்டன,” என்று பகிர்ந்து கொண்டார்.

“வீடு தோறும் 100 சதவிகிதம் அளவுக்கு குப்பைகளைப் பெறுதல், அங்கேயே குப்பைகளைப் பிரித்தல் ஆகியவற்றால் இதைச் செய்யமுடிந்தது.”
சென்னையில் கண்ணகி நகரின் சுவர்களில் வரையப்பட்ட அழகான சுவரோவியங்கள், சுற்றுப்புறங்களில் உள்ள பார்வையாளர்களை ஈர்த்துள்ளன

மறு சுழற்சி கழிவுப் பொருட்களைக் கொண்டு  பூங்கா ஒன்றை உருவாக்கினார். விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புணர்வு என்ற கொள்கையின்படி  சுமார் 2 லட்சம் நெகிழி உறைகளை உற்பத்தியாளர்களிடம் திரும்ப அளிக்கும் திட்டத்தை அவர் மேற்கொண்டார்.

நாட்டிலேயே முதன் முறையாக விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புணர்வு என்ற திட்டத்தை அமல்படுத்திய முதல் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றது. அல்பி இப்போது சென்னையில் திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தி வருகிறார்.

“2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னைக்கு நான் வந்தபோது, குப்பைகளை சேகரித்தல், எடுத்துச் செல்லுதல், செயல்படுத்துதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என உணர்ந்தேன்,” என்றார்.

“ நான் பதவி ஏற்ற சமயம்தான் எங்கள் மாநகராட்சி ஆணையரும் பதவி ஏற்றிருந்தார்.  அவருக்கும் சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளையும் அதன் முடிவு வரை நிர்வகிக்கும் வகையில் பிரித்தல், எடுத்துச் செல்லல், செயல்படுத்துதல் என்பதை உறுதி செய்யும் தொலைநோக்கு இருந்தது.

”இந்த குழுவில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். சென்னையில் கழிவு மேலாண்மை செய்யப்படும் விதம் இப்போது மாறி உள்ளது,” 24,000 குடியிருப்புகளில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்களைக் கொண்ட கண்ணகி  நகரில் குடிசை புனரமைப்புத் திட்டத்தை சிறப்பாகவும் அவர் செயல்படுத்தி இருக்கிறார்.

“சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். பல்வேறு பொதுப் பிரச்னைகளை இந்தப் பகுதி சந்தித்துவந்தது. கூடுதலாக, குற்றசெயல்களுக்கான பகுதியாகவும் மாறி வந்தது,” என்று விவரிக்கிறார் அல்பி.
கண்ணகி நகரில் உள்ள ஒரு சுவரோவியம்

இன்றைக்கு அல்பியின் முயற்சிகளுடன், நகரின் முதலாவது கலை மாவட்டமாக கண்ணகி நகர் மாற்றம் அடைந்திருக்கிறது. பொது இடங்களில் கலைப்படைப்புகளை செயல்படுத்தும் எஸ்டி+ஆர்ட் இந்தியா எனும் தன்னார்வ அறக்கட்டளையின் ஆதரவுடன் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

“கண்ணகி நகரின் பிம்பத்தை மாற்ற நினைத்தோம்,” என்ற அல்பி, “இந்த திட்டம் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 15 கலைஞர்களின் படைப்புகளுடன் தொடங்கப்பட்டது. இந்த காலனியில் உயரமான கட்டடங்களின் முகப்பில் வியக்க வைக்கும் சுவரோவியங்கள் தினமும் பல்வேறு பார்வையாளர்களை ஈர்த்தது. கலைகளுடன் மக்களை ஈடுபடுத்தும்போது சமூக மாற்றத்தை கொண்டு வரும் என்பதை எங்களால் நிரூபிக்கமுடிந்தது.”

கண்ணகி நகர் என்ற பெயரைக் கேட்டாலே சென்னை மக்களிடையே அச்சம் பயம் ஏற்பட்டது. விரிவான கனவு திட்டமாக கண்ணகி நகரை கலை மாவட்டமாக மாற்றியபோது  அதன் பிம்பமும் மாறியது.   “இந்த திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமாக இருந்தது. மேலும் நான் மிகவும் ஆர்வமாக வேலை செய்ய விரும்பினேன். கலை வடிவம் கொடுத்த மாற்றம் வாயிலாக, தங்கள் பகுதி குறித்து அவர்கள் மனதில் இருந்த எண்ணம் மாறியது. எங்களுடைய ஆய்வில், குற்ற சதவிகிதம் கூட குறைந்திருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்,” என்றார் அல்பி.

“தவிர உள்ளூர் மக்களுக்கு திறன் மேம்பாடு, கல்வி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்த விரும்பினோம். ஆனால், எதிர்பாரதவிதமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக எங்கள் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் இப்போது வண்ணம் தீட்டும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளோம். வேறு பல விஷயங்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் செயல்படுத்துவோம்.”

அல்பியின் இன்னொரு முயற்சியாக அவர் முன் வைத்த, ஸ்வாப் ஷாப் என்று அழைக்கப்பட்ட  ஒரு நிகழ்வின் மூலம் திரும்ப உபயோகித்தல் என்ற கருத்தாக்கமும் சென்னை மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  
மனைவி கோபிகா, மகன் சித்தார்த்துடன் அல்பி.

இணையதளத்தில் படித்த ஸ்வாப் ஷாப் தொடர்பான ஒரு கட்டுரை வாயிலாக அல்பி இந்த யோசனையைப் பெற்றார்.  சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரிடம் இது பற்றி ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து  2020ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை பெருநகர மாநகராட்சியின் இரண்டு நாள் ஸ்வாப் ஷாப் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

மறு சுழற்சி செய்யக் கூடிய வீட்டு துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் , சிறிய மரசாமான்கள், செருப்பு, பைகள், பொம்பைகள், பர்ஸ்கள் மற்றும் செயற்கை நகைகள் என மக்கள் என்னவெல்லாம் மாற்றமுடியுமோ அதையெல்லாம் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

அல்பியின் சிறிய குடும்பமானது மனைவி கோபிகா ராஜிவ்,( அல்பி பயின்ற கல்லூரியில் ஜூனியராவார்) மற்றும் மூன்றரை வயதான மகன் சித்தார்த் ஆகியோரைக் கொண்டதாகும். கோபிகா இப்போது கதிர்வீச்சு புற்றுநோய் இயலில் முதுகலை படித்து வருகிறார். அவர் இப்போது அடையாறு புற்றுநோய் மையத்தில் பணியாற்றி வருகிறார்.    

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Man who worked in salon owns Rs 11 crore turnover company

    அழகான வெற்றி

    கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை

  • Girl Power

    கலக்குங்க கரோலின்!

    பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Flying top

    பீனிக்ஸ் பறவை!

    போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • Man who was booking bus tickets is now owner of a bus company

    வெற்றிப்பயணம்

    ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்

  • Food for night

    இரவுக் கடை

    கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.