பிரீலான்சராக வேலை பார்த்தவர், இப்போது 130 கோடி ரூபாய் ஈட்டும் தன் சொந்த நிறுவனத்தில் மூவாயிரம் பேருக்கு வேலை தருகிறார்!
24-Jan-2025
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
நீலம் மோகன் ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணி. ஒரு வணிக சாம்ராஜ்யத்தை ஒற்றை மனுஷியாக உருவாக்கியவர். அவர் எப்போதுமே தன் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்.
நான்கு டெய்லர்களுடன் 1993-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கினார். கீழ் நிலையில் இருந்து தொடங்கிய தம்முடைய வர்த்தகத்தை, மக்னோலியா மார்ட்டினிக்யூ கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் (Magnolia Martnique Clothing Private Limited) ஆக வளர்த்தெடுத்திருக்கிறார். இப்போது இந்த நிறுவனத்தில் 3000 பேர் பணியாற்றுகின்றனர். ஆண்டு வருவாய் 130 கோடி ரூபாயாக இருக்கிறது.
|
நீலம் மோகன் டெல்லியில் ப்ரீலேன்ஸ் டிசைனராக வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 3000 பேர் பணியாற்றும், 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். (புகைப்படங்கள்: நவ்நிதா)
|
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவர் பி.ஏ., படிக்கும் போது, விருப்பப் பாடமாக ஓவியக்கலையை எடுத்துப் படித்தார். அவருடைய தந்தை ஒரு ரயில்வே ஊழியர். அடிக்கடி இடமாற்றம் செய்யப்படக்கூடிய வேலையில் இருந்தார். இதனால், தந்தை எங்கெங்கெல்லாம் மாற்றப்பட்டாரோ, அங்கெல்லாம் - டெல்லி, பஞ்சாப், பனாரஸ்- தம்முடைய குழந்தைப் பருவத்தில் நீலம் வசித்தார்.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, ஐஐடி-எம்.பி.ஏ படித்த அமித் மோகன் என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 21 வயது.
”என் கணவருடன் நான், டெல்லிக்குச் சென்றேன். ஒரு டிசைனராக எனக்கு அங்கு வாய்ப்புகள் கிடைத்தன,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நீலம். இப்போது அவருக்கு வயது 62.
“டெல்லி வந்த பின்னர் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் உத்தரபிரதேசத்தின் ஏற்றுமதி கழகத்தின் சார்பில், ஆண்களுக்கான ஆடைகளை ப்ரிலேன்ஸ் டிசைனராக வடிவமைத்துக் கொடுத்தேன். எனக்கு மாதம் 3000 ரூபாய் கிடைத்தது.”
அதிலிருந்து, அவர் நன்றாகச் சம்பாதிக்க ஆரம்பித்தார். கலை நயமிக்க வடிவமைப்புகள் உருவாவதற்கு உண்மையிலேயே இது அவருக்கு உதவிகரமாக இருந்த து. விரைவிலேயே, நரைனாவில் உள்ள கனி ஃபேஷன்ஸ் நிறுவனத்தில் முழு நேர ஊழியராகச் சேர்ந்தார். அங்கு அவர் 1977-ம் ஆண்டு பணியாற்ற ஆரம்பித்தார்.
“அப்போது எனக்கு 22 வயதுதான். அந்த நிறுவனத்தின் சாம்ப்ளிங் பிரிவுக்கு தலைவராக இருந்தேன்,” என்கிறார் நீலம்.
1978-ம் ஆண்டு முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கருவுற்றிருந்தார். ஏழாவது மாதம் வரை வேலைக்குச் சென்றார். பேருந்தில் பயணம் செய்து அவரால் வேலைக்குப் போக முடியவில்லை. அவர் வேலை பார்த்த ஏற்றுமதி நிறுவனம், அவரை நம்பி இருந்தது. எனவே, அந்த நிறுவனத்தின் தலைவர், தமது காரை அனுப்பி அவரை வேலைக்கு அழைத்து வந்தார். வேலை முடிந்ததும் அவரை காரில் கொண்டு போய் வீட்டில் விடச் சொன்னார். கருவுற்றிருந்தபோது 9-ம் மாதம் வரை அவர் இப்படித்தான் வேலைக்குச் சென்று வந்தார்.
“சித்தார்த் பிறந்த உடன், என் முழுநேரத்தையும் அவனுக்காகவே அர்ப்பணிக்க விரும்பினேன்,” என்கிறார் நீலம். “ஆனால், ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் என்னுடைய தோழி, அவருக்காக நான் தினமும் அரை நாள் பணியாற்ற வேண்டும் என்றும், நான் விருப்பப் பட்டால், என்னுடன் என் மகனையும் அழைத்து வரலாம் என்று சொன்னார்.”
|
குழந்தைகளுக்கான உடைகளில் இருந்து பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பது, ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்க சந்தைக்கு மாறியது ஆகியவை மக்னோலியாவுக்கு நல்ல முடிவுகளாக அமைந்தன.
|
ஸ்டைல்மேன் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனத்தினர், அவரின் டிசைன்கள் நன்றாக இருப்பதாகப் பாராட்டினர். ஸ்டைல்ஸ் ஆர்டரை முதன் முறையாக ஒரு இந்திய நிறுவனத்துக்கு தருவதாக அவர்கள் கூறினர்.
“தொடர்ந்து நான் ப்ரிலேன்சராக பணியாற்றினேன். ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார் நீலம். “ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலைஸ் என்ற இறக்குமதியாளர், நான் ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தார். நான் அங்கிருந்து விலகியதும், அந்த நிறுவனத்துடனான வர்த்தகத்தில் அவர் திருப்தியாக இல்லை. எனவே, அவர் என்னைத் தேடிப்பிடித்து, எனக்கு ஆர்டர் கொடுத்தார். மேலும் 50 சதவிகிதம் அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். எனவே, உடனடியாக அவர்களுக்காக நான் பணியாற்றத் தொடங்கினேன்.”
அலைஸின் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகையைக்கொண்டு, கார்மண்ட் உற்பத்தி பிரிவு நடத்தி வந்த அவரது நண்பர்களில் ஒருவரான ஹர்மிந்தர் சால்தியுடன் இணைந்து செயல்பட்டார். 1983-ம் ஆண்டு ஹர்மிந்தர் சால்தி மற்றும் தம்முடன் முன்பு பணியாற்றியவர்களில் ஒருவரான சுஷில் குமார் ஆகியோருடன் ஒபேரா ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நீலம் தொடங்கினார். ஆஸ்திரேலிய நிறுவனத்துக்காக உற்பத்தியை தொடங்கினர்.
முதல் ஆண்டில், 15 லட்சம் ஆண்டு வருவாய் இருந்தது. அப்போதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இருமடங்கானது. 1991-ம் ஆண்டு வரை எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது நீலமும், அவரது கணவரும் பிரிந்து விட்டனர். தனித்தனியாக வாழ்ந்தனர்.
அடுத்த ஆண்டு, ஹர்மிந்தர் மற்றும் சுஷிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நிறுவனத்தில் இருந்து நீலம் விலகினார். தம்முடைய பங்குகளை 3 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தார்.
“எந்த ஒரு வெறுப்புடனும் நான் நிறுவனத்தை விட்டு விலக நினைக்கவில்லை. ஆகையால், நிறுவனத்தை விட்டு விலகும்முன்பு, என்னுடைய சிறந்த கலெக்ஷன்களை டிசைன் செய்தேன்,” எனும் நீலம், தமது பழைய நாட்களை நினைவுகூறுகிறார்.
|
தொழிலாளர்கள் சிலருடன் நீலம்
|
1993-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி, மக்னோலியா ப்ளூஸம் என்ற நிறுவனத்தை நான்கு டெய்லர்கள் மற்றும் சில ஊழியர்களுடன் தொடங்கினார். 1992-ம் ஆண்டு பஞ்சசீல் பார்க் பகுதியில் 1.40 கோடி ரூபாயில் வாங்கிய வீட்டை தொழிற்சாலையாக மாற்றினார். தொழிலாளர்கள் அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே தூங்கினர்.
“ஆரம்ப காலகட்டத்தில் மாதம் தோறும் 20,000 ரூபாய் தொழிலாளருக்கு சம்பளமாகக் மட்டும் கொடுத்தேன்,”என்று பகிர்ந்து கொள்கிறார். “முதல் ஒரு ஆண்டுக்குள் 1.25 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி சாதனை படைத்தோம். நான் உலகம் முழுவதும் பயணம் செய்து, ஏற்றுமதிக்காக மேலும் பல வாடிக்கையாளர்களை பெற்றேன். கியாபி என்ற பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தேன்.”
மக்னோலியா ப்ளூஸம், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை சந்தையில் கவனம் செலுத்தியது.
எனினும், பின்னாளில் மக்னோலியா, குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளில் இருந்து பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கத் தொடங்கியது. மேலும் ஐரோப்பிய சந்தையில் இருந்து, அமெரிக்க சந்தைக்கு மாறியது. நாளடைவில் இது நல்ல முடிவு என்று நிரூபணம் ஆனது.
பல ஆண்டுகளாக, நீலம் பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். முன்னா மாஸ்டர் என்பவர் குறித்து நேசத்துடன் நினைவு கூறுகிறார். ”மக்னோலியாவில் நான் பேட்டர்ன் மேக்கிங் கற்றுக்கொடுத்தவர்களில் அவரும் ஒருவர். சாதாரண டெய்லராக இருந்த அவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினார். இப்போது அவருக்கு சொந்தமாக ஒரு கார் இருக்கிறது.”
நீலம், அவருடைய வாழ்க்கையில் வசதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதிக செலவினங்கள் காரணமாக, அவரது நிறுவனம் இழப்பைச்சந்தித்தது. 2002-ம் ஆண்டு கிட்டத்தட்ட திவால் நிலையை அடைந்தனர்.
அப்போது, ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஒரு நண்பர், உதவிக்கு வந்தார். நிறுவனத்தின் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் செய்யும்படி யோசனை கூறினார்.
“என்னுடைய உற்பத்தியை அவுட்சோர்சிங் முறையில் செய்தேன். படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தேன்,” என்று விவரிக்கிறார் நீலம். “மக்னோலியா ப்ளூஸம் நல்ல நிலையில் இருந்தபோது 650 ஊழியர்கள் பணியாற்றினர். அதில் இருந்து ஊழியர்கள் எண்ணிக்கையை 100 ஆக குறைத்தேன்.”
இழப்பில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு ஆண்டு பிடித்தது. மோசமான வர்த்தக ஆண்டில் இருந்து வெற்றிகரமாக அவர் வெளியே வந்தார். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் சித்தார்த், 2002-ம் ஆண்டு நாடு திரும்பினார். தம்முடைய தாய் அதிகாலை 3 மணி வரை பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.
|
நொய்டாவில் உள்ள மக்னோலியா பிரிவின் முன்பு நீலம்.
|
நீலத்தின் மகன் 2007-ம் ஆண்டு நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்குக் கொண்டு வந்தார். அவருடைய திறமை, நவீன பார்வைஆகியவை கடந்த பத்தாண்டுகளில் நிறுவனத்தை 30 கோடி ரூபாயில் இருந்து 130 கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றது.
“என்னுடைய மகன், குழந்தைகள் ஆடைகள் உற்பத்தி செய்வதில் இருந்து பெண்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் வகையில் நிறுவனத்தை மாற்றினார். அதே போல சந்தையின் வாய்ப்புகளை ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு விரிவு செய்தார். இந்த முக்கியமான முடிவுகளை அவர் எடுத்தார்,” என்கிறார் நீலம்.
நீலம், சித்தார்த், அவரது மனைவி பல்லவி ஆகியோர் மக்னோலியா மார்டினிக்யூ கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய அலுவலகம் நொய்டாவில் இருக்கிறது. இன்னொரு தொழிற்சாலை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
“இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என் மகனின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும்,” என்று புன்னகைக்கிறார் நீலம். உண்மைதான். உறவுகள் மற்றும் தொழில் இரண்டிலும் அவர் சிறப்பாகவே முதலீடு செய்திருக்கிறார் அல்லவா?
அதிகம் படித்தவை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
தேநீர் கடை தந்த வெற்றி!
மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
போராடி வெற்றி!
டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
இரவுக் கடை
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.