பஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்!
23-Nov-2024
By ஜி சிங்
ராஞ்சி
ராஞ்சியில் சின்ன பேருந்துநிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்யும் வேலையில் இருந்தவர் கிருஷ்ண மோகன் சிங்(51). தன்னுடைய கடின உழைப்பில் முன்னுக்குவந்திருக்கிறார். இன்று அவர் பல பேருந்துகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். அவரது போக்குவரத்து நிறுவனம் சந்திரலோக் ஆண்டுக்கு 30 கோடி வருவாய் பெறுகிறது.
வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. கடின உழைப்புதான் வெற்றி தேடித்தந்தது. 24 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 1993-ல் அவர் முதல் பேருந்தை வாங்கினார். அதன்பின்னர் ஒவ்வொரு பேருந்தாக வாங்கித் தொழிலை விரிவுபடுத்தினார்.
|
பயணச்சீட்டு முன்பதிவு செய்பவராக இருந்த கிருஷ்ன மோகன் சிங், இப்போது 15 பேருந்துகளும், ராஞ்சியில் ஒரு பெட்ரோல் நிலையமும் வைத்துள்ளார் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
இப்போது அவர் 15 பேருந்துகளை அம்மாநிலத்தில் ஓட்டுகிறார். ராஞ்சியில் பெட்ரோல் பம்ப் வைத்துள்ளார். கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளார். 60 பேர் அவரிடம் வேலை பார்க்கிறார்கள்.
ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இது எதுவும் அவரிடம் இல்லை.
ராஞ்சியில் பிப்ரவரி 3, 1966ல் கிருஷ்ண மோகன் ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார். ராஞ்சியில் மத்திய அரசு நிறுவனத்தில் அவரது அப்பா சாதாரண ஊழியர்.
“அவரது சம்பளம் 200 ரூ. அது போதுமானதாக இல்லை. அவர் உணவுக்காகவே கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன்.
மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசதியான வீட்டில் இப்போது வசிக்கும் அவர் தன் கடினமான காலகட்டத்தை நினைவுகூர்கிறார். கிருஷ்ண மோகன் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
“பள்ளிச் சீருடைகள் கூட அப்பாவால் வாங்கித்தர முடியாது. பள்ளிக்கட்டணம் குறைவு. அப்பா மத்திய அரசு ஊழியர் என்பதால் கட்டணச்சலுகை கிடைத்தது. எனவே என்னால் அதிக செலவின்றி படிக்கமுடிந்தது.”
இரண்டு பசுக்கள் இருந்தன. அது உதவியாக இருந்தது. “ பால் கறந்து வீடுகளுக்கு விற்போம்,” நினைவுகூர்கிறார் கிருஷ்ண மோகன்.
1988-ல் முதுகலைப் பட்டம் பெற்றபின்னரும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது அண்ணன் பவன்குமார் சிங், வீட்டருகே இருந்த பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவுசெய்பவராக வேலை பார்த்தார். அவருக்கு கிருஷ்ண மோகன் உதவி செய்தார்.
“குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இல்லை. எனவே அண்ணனுக்கு உதவிகரமாக அந்த வேலைக்குப் போனேன். எனக்கு கமிஷன் கிடைக்கும்.”
|
1993ல் கிருஷ்ண மோகன் ராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்து சேவையைத் தொடங்கினார்
|
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கிருஷ்ண மோகனும் அவரது அண்ணாவும் பேருந்து பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொண்டிருந்தனர். அதில் அவர்கள் 2.4 லட்சரூபாய் சேமித்தனர்.
“இந்த சமயத்தில் எனக்கு போக்குவரத்துத் துறையில் நல்ல அனுபவம் கிடைத்தது. என்னுடைய சொந்த பயணச் சேவையைத் தொடங்கும்போது இது உதவியாக இருந்தது.” என்கிறார் அவர்.
1993 ல் அவர் சுமன் தேவியை மணந்தார். அவர் கிருஷ்ணமோகனின் சொந்த ஊரான வைஷாலியைச் சேர்ந்தவர்.
அதிகம் சம்பாதிக்கத் தொடங்கவேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். சகோதரர்கள் பேருந்து வாங்க திட்டமிட்டனர். பேருந்தின் சேசிஸ் விலையே 4 லட்சம். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. “ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதி வெளியே 12 சதவீத வட்டிக்கு வாங்கினோம். பேருந்தின் வெளிப்பாகத்தைக் கட்ட 2.3 லட்சரூபாய் தேவை. ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதியைப் பேருந்தை ஓட்டிக் கிடைத்த லாபத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டினோம்.”
ராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்தை ஓட்டினார்கள். நியூ சந்திரலோக் என்பது பேருந்து நிறுவனப் பெயர்.
|
தனக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் கிருஷ்ண மோகன்
|
மார்ச் 1994ல் அவர் இரண்டாவது பேருந்தை வாங்கினார். “கடன் கொடுத்தவர், பேருந்தின் வெளிப்புறத்தைக் கட்டியவர் இருவரின் நம்பிக்கையையும் சரியான நேரத்தில் கடனைத்திருப்பிக் கட்டியதின் மூலம் பெற்றேன். அவர்கள் கூடுதலாக கடன் அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இரண்டாவது பேருந்துக்கு 8 லட்ச ரூபாய் முழுவதும் கடன். சம்பாதித்து அந்தக் கடனையும் அடைத்தேன்.”
1997ல் அவரிடம் மூன்று பேருந்துகள் இருந்தன. 12 லட்ச ரூபாய் ஆண்டுக்கு வருவாய் இருந்தது. 1998-ல் 16 லட்ச ரூபாய்க்கு இரண்டு பேருந்துகள் வாங்கினார். அதற்கும் 12% வட்டிக்கு கடன் வாங்கினார். ராஞ்சியிலிருந்து சிவானுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
“எமது நியூ சந்திரலோக் நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருந்தது. எனவே கடன் வாங்குவது சிரமமாக இல்லை,” விளக்குகிறார் கிருஷ்ண மோகன்.
2000 வது ஆண்டில் அவர் மேலும் இரு பேருந்துகளை 19 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். இந்த பேருந்துகள் ராஞ்சி – சிவான் தடத்திலேயே இயக்கப்பட்டன. அவரிடம் அப்போது ஏழு பேருந்துகள் இருந்தன. ஆண்டு வருவாய் 50 லட்ச ரூபாய்!
2003-ல் அவரது பேருந்துகள் எண்ணிக்கை பத்து ஆக அதிகரித்தது. புதிய தடங்களில் அவற்றை ஓட்டினார். ஜார்க்கண்ட் மாநில தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவராகவும் அவர் ஆனார்.
|
நிதி நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து இப்போது வளமான வாழ்க்கை
|
“எங்கள் தொழில் 10 பேருந்துகள் வந்தபின்னர் மேலும் உயர ஆரம்பித்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன். ஆண்டு வருவாய் 80 லட்சத்தைத் தாண்டியது.
“பழையவற்றுக்கு ரிப்பேர் செலவே மாதாந்திர கடன் தொகையை விட அதிகம். எனவே நாங்கள் பேருந்துகளை புதிதாக மாற்ற ஆரம்பித்தோம். புதிய பேருந்துகளாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் விரும்பினர்,” என்று சொல்கிறார் அவரது சகோதரர் பவன்.
உட்காரும் வசதியிலிருந்து, படுக்கும் வசதியாக பேருந்துகள் மாற்றப்பட்டன. இருக்கைகள் 60 ஆக உயர்த்தப்பட்டன. இதுவும் வருமானம் உயர வழிவகுத்தது.
2015-ல் 13 பேருந்துகள் இருந்தன. பீஹார், ஜார்க்கண்டில் வேறுபட்ட வழித்தடங்களில் அவை ஓடின. ஆண்டு வருவாய் 10 கோடியை எட்டியது.
"தற்போது எங்கள் ஆண்டு வருவாய் 30 கோடியாக உள்ளது. வைஷாலி மாவட்டத்தில் 8 கோடி மதிப்புள்ள 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். கடந்த ஆண்டு நான் வாங்கிய பெட்ரோல் நிலையம் மூலம் மாதம் 1 லட்சம் வருமானம் கிடைக்கிறது,” என்கிறார் கிருஷ்ணமோகன்.
|
தன் சகோதரர் பவன்குமார் சிங்குடன் கிருஷ்ண மோகன்
|
எதிர்காலத்தில் மேலும் ஆறு பேருந்துகளை வாங்கிக் கிராமப்புறங்களில் ஓடவிட இருப்பதாக அவர் கூறுகிறார். “எங்களுக்கு நல்ல சேவை செய்யும் நிறுவனம் என்ற பெயர் உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன்,” என்று பெருமையுடன் கூறுகிறார்.
கிருஷ்ணமோகன் பலருக்கும் நலத்திட்ட உதவிகளும் செய்கிறார். அறுவை சிகிச்சைக்காக ஏழைகளுக்கு உதவியும் செய்கிறார்.
“நேர்மை, கடின உழைப்பு, வேலையில் உறுதி ஆகியவை கனவுகளை நனவாக்கும்,” என்பதே அவர் இளம் தொழில் முனைவோருக்குத் தரும் செய்தி.
அதிகம் படித்தவை
-
சுவையான வெற்றி
மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.
-
கேட்டரிங்கில் சிகரம் தொட்டவர்
மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் தேப்நாத். அவர் பிறந்த சமயம் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் டெல்லிக்கு வந்து கடின உழைப்பால் கேட்டரிங் தொழிலில் வெற்றியைப் பெற்று இன்றைக்கு 200 கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
உயர வைத்த உழைப்பு!
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு மாதம் ரூ.1500 வேலைக்கு சென்றவர் சந்தோஷ் மஞ்சளா. சுயமாக மேற்படிப்பு முடித்து அமெரிக்கா வரை சென்று ரூ.1 கோடி ஆண்டு சம்பளம் பெற்றவர், இப்போது இந்தியா திரும்பி எடைகுறைப்புக்கு டயட் உணவு அளித்து வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
உயரப் பறத்தல்
விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை
-
அடையாற்றின் கரையில்..
விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை