மணக்கும் தோசை; நிறையும் கல்லா! டெல்லியில் கலக்கும் கேசவன் குட்டி!
23-Nov-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
புகழ் பெற்ற ஒரு பிராண்ட்டை சொந்தமாக டெல்லியில் கட்டமைத்து விட்டார் சி. கேசவன் குட்டி. இளம் வயதில் ஒரு பள்ளிக் கேன்டீனில் பணியைத் தொடங்கிய அவர், வாழ்க்கையில் பெரிய இடத்தைத் தொட்டிருக்கிறார். நாள் ஒன்றுக்கு 60,000 ரூபாய் சம்பாதிப்பவராக வசதியான மயூர் விஹாரில் வசித்த போதிலும் கூட எப்போதுமே அவர் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை.
எனினும், குட்டியின் வாழ்க்கை எளிதானதில்லை. கடந்த 47 ஆண்டுகளாக நாட்டின் தலைநகரத்தில் இருக்கும் அவர், வாழ்க்கையில் மற்றும் தொழிலில் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பாரம்பரியமான தென்னிந்திய உணவு வகைகளை தமது விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
|
கேசவன் குட்டி, ஜந்தர் மந்தரில் ரூ.5000 முதலீட்டில் குட்டீஸ் கஃபே-யைத் தொடங்கினார். இன்றைக்கு வி3எஸ் மாலில் சொந்தமாக ஒரு ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார் (புகைப்படங்கள்: சரிகா ஜா)
|
குட்டீஸ் கஃபே, புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்குச் சொந்தமான ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கடையில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5,000 ரூபாய் முதலீட்டில், சமையல் பாத்திரங்கள், குறைந்த அளவிலான டைனிங் டேபிள் போன்றவற்றுடன் 36 ச.அடி இடத்தில் தொடங்கப்பட்டது.
“நாங்கள் கடையைத் தொடங்கியகாலத்தில் ஒரு தோசை ரூ.2.50க்கு விற்றோம்,” என்று நினைவுகூறுகிறார் குர்தா பைஜமா உடையிலிருக்கும் குட்டி. அவரது கவர்ந்திழுக்கும் புன்னகை, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இன்றைக்கு ஒரு சாதா தோசையின் குறைந்த பட்ச விலை ரூ.50 ஆக இருக்கிறது. விலையேற்றத்தின் விளைவாக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 500 தோசைகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது.
இங்கே அடிக்கடி போராட்டங்கள் நடக்கும் பகுதி ஒருபுறம், மறுபுறம் அரசு அலுவலகங்கள் அதிக அளவுக்கு இருக்கின்றன. தவிர சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் இங்கு இருப்பதால் மக்கள் இந்த பரபரப்பான பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் அவசர, அவசரமாக ஏதாவது கொறிப்பதற்கும் அல்லது முழு சாப்பாடு உண்பதற்கும் குட்டீஸ் உணவகத்தின் விதவிதமான சுவையான உணவுகளான ஆவி பறக்கும் இட்லி, வடைகள், மொறு, மொறு தோசைகள், நெய் சொட்ட, சொட்ட இனிக்கும் ரவா கேசரி உள்ளிட்டவற்றை சாப்பிடவும் வர ஆரம்பித்தனர்.
தொடக்கத்தில் அது குட்டியின் ஒன்மேன் ஷோ. அவரே சமையல்காரர், அவரே சப்ளை செய்பவர், அவரே கேஷியர், பாத்திரங்கள் கழுவ உதவிக்காக ஒரே ஒரு நபரை மட்டுமே வைத்தார்.
பல வேலைகளைச் செய்யும் திறமை , குறிப்பாக நோட்பேட் (அல்லது, இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஐபேட்) உதவி ஏதும் இல்லாமல் பல்வேறு ஆர்டர்களை நினைவில் வைத்திருக்கும் திறன் குட்டிக்கு நிலைபெற்றிருக்கிறது. கோல் மார்கெட்டில் (Gole Market) உள்ள ஒரு கடை, லக்ஷ்மி நகரில் உள்ள விகாஸ் மார்க்கில் இருக்கும் மாலில் உள்ள கடை உள்ளிட்டவற்றில் அவரிடம் 30 பேர் பணியாற்றி வருகின்றனர்.
பணிவு மற்றும் நன்றி உணர்வை என்றைக்குமே அவர் மறந்ததில்லை. இவைதான் அவருக்கு வெற்றியின் உயரத்தை எட்ட உதவி இருக்கின்றன. 2012-ம் ஆண்டு வி3எஸ் மாலில் 600 ச.அடி-யில் தென்னிய கஃபேயைத் தொடங்கினார். இந்த ரெஸ்டாரெண்ட்டை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான தாஜ்தார் பாபர் திறந்து வைத்தார்.
|
குட்டி ஒரு வாடிக்கையாளருக்கு தோசை பரிமாறுகிறார்.
|
குட்டி 1982-ம் ஆண்டு பாபரை சந்தித்தார். இதுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இப்போதைய நிலைக்கு அவர் உயர்வதற்கு காரணமாகவும் அமைந்தது. லக்ஷ்மி பாய் நகரில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் தன் மூத்த சகோதரர் நடத்தி வந்த கேன்டீனில் அவர் வேலை பார்த்தார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து வந்த அரசியல்வாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் அடிக்கடி சென்று வந்தார். அப்போதுதான் அரசியல்பெண்மணியான பாபரை அவர் சந்தித்தார். அப்போது பாபர் டெல்லி மெட்ரோபாலிடன் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
குட்டி அவரை எப்போதும் அம்மா என்றுதான் அழைக்கிறார்.”ஒரு நாள்கூட அவரை சந்திக்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு நாள் போகாவிட்டால், என்னை அவர் போனில் அழைத்து, எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்பார். நான் நன்றாக உருது மொழியில் உரையாடுபவர்களில் அவரும் ஒருவர். அவர் வெறுமனே ஒரு அம்மா மட்டுமல்ல. அவர் ஒரு காட் மதர். அவர்தான் டெல்லி முனிசபல் கவுன்சில் வாடகைக் கடைகளுக்கு விண்ணப்பிக்கும் படி எனக்கு யோசனை கூறினார். அப்படி விண்ணப்பித்த பின்னர்தான் 1987-ல் என்னுடைய வியாபாரத்தைத் தொடங்கினேன்,” என்று நினைவு கூறுகிறார் குட்டி. தொழிலில் உயர் நிலைக்கு வந்த போதிலும், அவரது ஆசி எப்போதும் தேவை என்று நினைக்கிறார். மாலில் ரெஸ்டாரெண்ட் தொடங்கும்படியும் அவர்தான் குட்டியை வற்புறுத்தினார்.
“அம்மா ரெஸ்டாரெண்ட்டை தொடங்கி வைத்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான நாள். இந்த இடம் எனக்குச் சொந்தமான இடம். க்யிக் ரெஸ்டாரெண்ட் சர்வீஸ் (QSR) முறையில் இது இயங்குகிறது. அங்கு ஒரு மேலாளர் இருக்கிறார். சமையலர்கள் இருக்கின்றனர். ஜந்தர் மந்தர் உணவகத்தோடு ஒப்பிடும் போது இங்கு விலை அதிகம்,” என்கிறார் அவர்.
கோல் மார்க்கெட்டில் உள்ள இன்னொரு கடை 600 ச.அடியில் ஒரு பயிற்சி முகாம் ஆகவும், ரெஸ்டாரெண்ட் ஆகவும் இருக்கிறது. “கரி பாவோலியில் இருந்து வாங்கி வரப்பட்ட நல்ல தரமான எம்.டி.எச் (MDH) வாசனைப் பொருட்களைக் கொண்டு சாம்பார் வைப்பதற்கு தேவையான புதிய மசாலாப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு 800 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் தரம் குறைந்த வாசனைப் பொருட்களை 200 ரூபாய்க்குக் கூட வாங்க முடியும்.”
“லாபம் குறைவாக இருந்தபோதிலும், நான் எப்போதுமே தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. சில நாட்கள் நாங்கள் ரவாகேசரி செய்யமாட்டோம். ஏனெனில் அன்று நெய் குறைவாக இருக்கும். குறைந்த நெய்யில் செய்து தரத்தையும் குறைக்க விரும்புவது இல்லை. நான் என்ன சம்பாதிக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாக இருப்பேன். தரத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.’’
தொழிலிலும் வாழ்க்கையிலும் இந்த நிலையை அடைவதற்கு அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார். ஜந்தர் மந்தரில் உணவகம் தொடங்கியபோது, அவரது சகோதரரின் கேன்டீனில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு உரிய சில திறமைகளைக் கற்றுக் கொண்டு வந்தார்.
“தோசையை நாங்கள் ரூ.2.50-க்கும், வடை ரூ.2-க்கும் விற்றோம். நாள் ஒன்றுக்கு நான் 100 ரூபாய் சம்பாதிப்பேன். ஆண்டுக்கு 36,000 ரூபாய் சம்பாதித்தேன். அந்த சமயத்தில் அது நல்ல தொகை,” என்று நினைவுகூறுகிறார்.
|
தம்முடைய கடைகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை எப்போதுமே ஆய்வு செய்வார் குட்டி. தமது மூன்று கடைகளில் ஏதாவது ஒன்றில்தான் அவர் மதிய உணவு சாப்பிடுவார்.
|
“மக்கள் புதிதாகத் தயாரித்துத் தரப்படும் உணவு வகைகளையே விரும்புகின்றனர். தோசைதான் வயிற்றுக்கு ஏற்றது என்று அவர்கள் நினைக்கின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கிறது. அரசு ஊழியர்கள் இங்கு இருக்கின்றனர். அவர்களும் இங்கு சாப்பிட வருகின்றனர். இங்கு சாப்பிடுபவர்கள் பிறரிடம் சொல்வதை வைத்து மெதுவாக வளர்ச்சி பெற்று இந்த கடை பிரபலமானது.”
“கல்லூரி மாணவர்களும் இங்கு வருகின்றனர். இங்கு சில காதல் கதைகளும் மலர்ந்திருக்கின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வருவார்கள். அவர்களின் பழைய நாட்கள் பற்றி பேசுவார்கள்.”
அவரது வாடிக்கையாளர்களை அவர் முதன்மையானவர்களாக மதிப்பதால், அவர்களிடம் இருந்து மரியாதையையும், அன்பையும் தொடர்ந்து பெறுகிறார். ஜந்தர் மந்தர் உணவகத்தில் 7-8 பேர்தான் அமரமுடியும். அதற்கு அதிகமாக வருபவர்கள், நின்று கொண்டேதான் சாப்பிட முடியும். அவரது கடைக்கு காரில் வருபவர்கள், தோசையை வாங்கிக் கொண்டு சென்று அவர்கள் வசதிப்படி காரில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
அங்கு வரும் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், பணக்காரர்கள் காரில் அமர்ந்து கொண்டே, தமது கார் டிரைவர்களை அனுப்பி தோசை வாங்கிச் சென்று காரில் அமர்ந்து உண்பார்கள். பின்னர், குட்டியை போனில் அழைத்து, உணவு நன்றாக இருந்தது என்றும், எப்படி அனுபவித்து சாப்பிட்டோம் என்றும் அவரிடம் சொல்வார்கள்.
வாடிக்கையாளர்களில் ஒருவரான, ஜா விரிவாக நம்மிடம் பேசுகிறார்; “நான் இங்கு பக்கத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறேன். தினமும் ஒருமுறையாவது இங்கு சாப்பிடுவேன். ஒரே நேரத்தில் 10 பேரிடம் ஆர்டர் எடுத்து அவர்களுக்கு ஞாபகத்துடன் உணவு பரிமாறுகின்றனர். ஒருவரையும் விட்டு விடாமல் சரியாக அவர்கள் கேட்ட உணவைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.”
மூன்று உணவகங்களும் குட்டீஸ் சவுத் இந்தியன் கஃபே என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குட்டிதான் அதன் உரிமையாளர். இப்போது சராசரியாக மூன்று ரெஸ்டாரெண்ட்களிலும் தினமும் 60,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால், தினமும் எவ்வளவு கிடைக்கிறது என்று எண்ணிப்பார்ப்பதில்லை. அவர் அவரது ஊழியர்கள் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.
“பண விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எனது ஊழியர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன். யாராவது ஒரு வாடிக்கையாளர் 50 ரூபாய் பாக்கி வாங்காமல் சென்று விட்டு, திரும்பி ஒருவாரம் கழித்து வந்து கேட்டால்கூட கொடுத்து விடுவார்கள்,” என்று விவரிக்கிறார் குட்டி.
கபில், ராஜிவ் எனும் அவரது இரண்டு மகன்களில் முதலாமவர் டான்ஸ் கற்கிறார். அடுத்தவர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். தந்தை பெருமைப்படும்படி அவர்களுடைய துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
|
குட்டி, க்ரெட்டா எஸ்யூவி (Creta SUV) ஓட்டுகிறார். ஆனால், எப்போதுமே காரில் உள்ள ஏசியை அவர் போட்டுக் கொள்வதில்லை. கார் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டுவிட்டுத்தான் கார் ஓட்டுகிறார்.
|
ஆனால், குட்டி குழந்தையாக இருந்தபோது, அவருக்கு அது போன்ற சவுகரியம் கிடைக்கவில்லை. கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம் செல்கார் கிராமத்தில், 5 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவர் அவர். அவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். வாழ்க்கை எப்போதுமே அவருக்குக் கடினமானதாகத்தான் இருந்திருக்கிறது.
குட்டி பிறந்து 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை இறந்து விட்டார். அவரது தாயும், சகோதரர்களும், சகோதரிகளும் அவர்களின் நிலத்தில் கடினமாக உழைத்து இரண்டு வேளை உணவாவது சாப்பிட முடிந்தது. போராட்டமான காலத்தைப் பற்றிச் சொல்லும் போது சிரிக்கிறார். “ஒவ்வொருவரும் அந்த காலகட்டத்தில் கடினமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தோம். அதில் இருந்து என் கதையும் வித்தியாசமான ஒன்றல்ல.”
அவர் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்தபோதுதான், கிராமத்தில் பணம் சம்பாதிப்பது அவ்வளவாக சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார். அவரது மூத்த சகோதரர் டெல்லி ரான்பாக்சியில்(Ranbaxy) பணியாற்றிக் கொண்டிருந்தார். இன்னொரு சகோதரர் தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி தமிழ் பள்ளியில் கேன்டீன் தொடங்கி இட்லி, தோசைகள் விற்றார். அவருடன் 1972-ல் குட்டியும் இணைந்தார்.
அவருக்கு 1992-ம் ஆண்டு பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. “நிதி ரீதியாக வலுவான நிலைக்கு வந்ததும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எல்லா வழியிலும் என் மனைவி எனக்கு ஆதரவாக இருக்கிறார். 1995-ம் ஆண்டு டெல்லியில் மயூர் விஹாரில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினேன்.”
அவர் ஒரு எளிமையான மனிதர். க்ரெட்டா எஸ்யூவி கார் ஓட்டுகிறார். ஆனால், ஏசி போட்டுக் கொள்ளாமல் கார் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டு விட்டு, இயற்கையான காற்றை உள்வாங்கியபடி ஓட்டுகிறார். தமது எந்த ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குச் செல்கிறாரோ அங்கேயே மதிய உணவு சாப்பிடுகிறார்.
அதே நேரத்தில் அவர், தாம் பிறந்து வளர்ந்த ஊரை மறந்துவிடவில்லை. டெல்லி மலையாளிகள் அசோசியேஷனில் துணைத்தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஒருமாதம், கேரளாவுக்குச் சென்று 2-3 நாட்கள் தங்கியிருந்து, தனது குடும்பத்தினரையும், விவசாய நிலங்களையும் பார்த்து விட்டு வருகிறார்.
அதிகம் படித்தவை
-
மாற்றி யோசித்தவர்!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
கீழடி: உரக்கக்கூவும் உண்மை
மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை
-
சேலைகள் தந்த கோடிகள்
கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்
-
கொடுத்துச் சிவந்த கரங்கள்
இளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...
-
எளிமையான கோடீசுவரர்
திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்