சாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்!
04-Feb-2025
By பி சி வினோஜ் குமார்
சென்னை
கொஞ்சநாள் முன் வரை சென்னையின் தெருக்களில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர்தான் ஜே ஹாஜா ஃபுனியாமின். ஆனால் இப்போது இந்த 36 வயதான மனிதர் 1.5 கோடி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருக்கிறார். அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்கிற அவரது நிறுவனத்தில் 45 பேர் வேலை செய்கிறார்கள். ‘பொறிக்கத் தயார்’ நிலையில் இருக்கும் சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உணவகங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், விமானத்தின் சமையலறைகள் ஆகியவற்றுக்கு அளிக்கிறார்கள்.
|
சாதாரண நிலையில் இருந்து வந்திருக்கும் ஹாஜா ஃபுனியாமின், உற்பத்தியை அதிகரிப்பதிலும் பெரிய இடத்துக்கு தயாரிப்பை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறார். (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)
|
சென்னைக்கு வெளியே செங்குன்றத்தில் அவரது அலுவலகம் மற்றும் தயாரிப்பு இடம். அங்கே நமக்கு சூடான சமோசாவும் வெஜ் ரோலும் அளித்துவிட்டு ஹாஜா தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். சென்னையில் ஆட்டோமொபைல் பாகங்களுக்குப் புகழ்பெற்ற புதுப்பேட்டையில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர் அவர்.
அவரது வெற்றிக்கதை மேடு பள்ளங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்தது..
ஹாஜாவின் குடும்பம் புதுப்பேட்டையில் வசித்தது. அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவர் படித்தார்.
”நாங்கள் ஐந்து குழந்தைகள், நான் மூன்றாவது. குடும்பச் சூழல் காரணமாக நான் ஆறாம் வகுப்புப் படிக்கையில் இருந்து சமோசா விற்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். விற்பனைக்கான சமோசாக்களை அம்மா செய்வார். ரம்ஜான் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் சமோசா விற்பேன். அப்போது சமோசாவுக்கு தேவை அதிகமாக இருக்கும்.
“ஆறாம் வகுப்பில் மூன்று முறை பெயில் ஆனேன். அதனால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.” என்கிறார் ஹாஜா.
ஆனால் அவர் இதுவரை பகுதி நேரமாகச் செய்துவந்த சமோசா விற்பனையில் மிகுந்த மன உறுதியுடன் முழு நேரமாக ஈடுபட முடிவு செய்தார்.
ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் சின்ன சின்ன வேலைகள் பலவற்றைச் செய்ய நேர்ந்தது. இருசக்கரவாகன பழுதுபார்க்கும் கடையில் உதவியாளர், உணவகமொன்றில் பரிமாறுபவர், புகைப்படம் எடுக்கும் நிலையத்தில் உதவியாளர் என குறைந்த சம்பள வேலைகளில் ஈடுபட்டார்.
20 வயதில் அவர் சொந்தமாக புதுப்பேட்டையில் கோழி பக்கோடா கடை போட்டார். அதற்கு எவ்வளவு செலவானது?
|
ஹாஜா 20 வகையான சமைக்கத் தயார் நிலை சைவ அசைவ உணவுகளை செய்கிறார்
|
“செலவெல்லாம் ஒன்றுமில்லை. சாலையோரக் கடை. எனவே பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு அடுப்பும் சில பாத்திரங்களுமே தேவை. கோழிக்கறி கூட கடனில் வாங்கி மாலை விற்பனை முடிந்ததும் கொடுத்துவிடலாம்,” என்கிறார்.
அடுத்த இரு ஆண்டுகளுக்கு விற்பனை நன்றாக இருந்தது, மாதம் 8000 ரூபாய் வருமானம் கிடைத்தது. 2001-ல் பறவைக்காய்ச்சல் பிரச்னை வந்தது. கோழிக்கறி விற்பனை சென்னை முழுக்கப் படுத்தது. இவர் கடையிலும் பக்கோடா வாங்க ஆளில்லை. மசாலா தடவிய கோழி, வறுப்பதற்காகக் காத்திருந்தே வீணாகப் போனது.
இரு மாதங்களுக்கு இதுவே நிலை. அவருக்கு 40,000 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அவர் கடையை மூட முடிவு செய்தார்.
எட்டு மாதம் கழித்து புதுப்பேட்டை காய்கறி சந்தையில் சமோசா கடை ஒன்றை தன் புதுமனைவி ஃபரிஷாவுடன் இணைந்து திறந்தார். ஃபரிஷா ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்.
”அந்த கடைக்கு வாடகை இல்லை. 7000 ரூபாய் செலவழித்து கடையை அமைத்தேன். 400 ரூ சம்பளத்துக்கு ஓர் ஆளை அமர்த்தினேன்,” என்கிறார் ஹாஜா.
மாலை 4 -10 மணி வரை கடை திறந்திருக்கும். காலையில் அவர் சமோசாக்களை எடுத்துக்கொண்டு பல டீ கடைகளுக்கு விற்றுவருவார். விரைவில் மாதம்தோறும் 50,000 ரூ அளவுக்கு சமோசாக்களை விற்க ஆரம்பித்தார்.
2006-ல் அவருக்கு குளிரூட்டப்பட்ட உணவுகள் விற்கும் நிறுவனம் ஒன்றின் ஆர்டர் கிடைத்தது. அது அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சமோசாக்களைச் செய்துதரும் வேலையை இவருக்கு அளித்தார். அந்நிறுவனமே சமோசா செய்வதற்குத் தேவையான பொருட்களையும் ( மாவு உறை, உள்ளே வைக்கும் மசாலா) அளித்தது.
”நாங்கள் மசாலாவை உள்ளே வைத்து சமோசா மாவு உறையை மடிக்கவேண்டும். அதற்கு ஒரு சமோசாவுக்கு 23 பைசா கிடைத்தது. பெரிய தொழிலதிபருடன் ஒரு பைசா இரண்டு பைசா அளவில் பேரம் பேசும் அனுபவம் எனக்கு புதியதாகவும் மகத்தானவாய்ப்பாகவும் இருந்தது,” என்று ஹாஜா கூறுகிறார், அதே தொழிலதிபர் இன்று ஹாஜாவுக்குப் போட்டியாளராகத் தொடர்கிறார்.
அந்த சமோசா குளிரூட்டப்பட்டு, பேக் செய்யப்பட்டு ’பொறிக்க தயார்’ நிலையில் ஏற்றுமதி ஆகும்.
|
ஹாஜாவின் மனைவி ஃபரிஷா தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறார்
|
ஒப்பந்தம் முடிவானதும் ஹாஜா சில மகளிரை வேலைக்குச் சேர்த்து வீட்டிலிருந்து வேலையைத் தொடங்கினார். புதுப்பேட்டை சந்தையிலிருந்து கடையும் இயங்கியது.
ஓராண்டு கழித்து அதே நிறுவனம் ஹாஜாவிடம் சமோசாவுக்காக மாவு உறைகள், மசாலாவையும் அவர்களே தயாரித்துக்கொண்டு ’பொறிக்கத் தயாரான’ நிலையில் அளிக்குமாறு கூறியது. ஒரு மாதத்துக்கு 2 லட்சம் சமோசாக்கள் தேவை.
இது மிகப்பெரிய ஆர்டர். இதற்கு எந்திரங்களும் பெரிய இடமும் தேவை. பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படுகிறது. அது இவருக்கு 1 லட்சரூபாய் வங்கிக்கடன் ஏற்பாடு செய்தது. ஹாஜா மேலும் 1 லட்சம் தயார் செய்து, எந்திரங்கள் வாங்கி பெரிய இடமாக வாடகைக்குப் பிடித்தார். 10 பேரை வேலைக்கு அமர்த்தினார்.
|
அனுப்பத் தயார் நிலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் உள்ள குளிரூட்டும் அறையில் ஹாஜா
|
ஓராண்டாவது இந்த ஒப்பந்தம் தொடரும் என்று ஹாஜா எதிர்பார்த்தார். ஆனால் ஆறு மாதத்தில் அந்நிறுவனம் ஆர்டரை நிறுத்தியது. ஹாஜாவுக்கு நெருக்கடி. அந்நிறுவனம் மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சமோசா போன்ற குறைந்த விலையுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்திவிட முடிவு செய்ததால் இந்நிலை.
இந்நிலையை சமாளிக்க ஹாஜா உறுதிபூண்டார். ஆனால் தன் ’பொறிக்கத் தயார் நிலை’ சமோசாவை எங்கே விற்பது என்று அவருக்குப் புரியவில்லை.
திடீரென அவருக்கு சென்னை ஓட்டல் ஒன்று அழைப்பு விடுத்து சமோசா தர முடியுமா என்று கேட்டது.
”அவர்கள் வேறொரு நிறுவனத்திடம் இருந்து சமோசா வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சப்ளையை நிறுத்தியதும் என்னிடம் வந்தனர். சென்னையின் சந்தையை இந்த ஆர்டர் எனக்குக் காட்டியது. நகரில் பல ஓட்டல்களைக் கண்டறிந்து சப்ளை செய்ய ஆரம்பித்தேன்,” என்கிறார் ஹாஜா.
|
ஹாஜாவிடம் 45 பேர் இப்போது வேலை செய்கிறார்கள்
|
2007ல் செங்குன்றத்தில் இப்போதிருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்கே கோழி சமோசா, ப்ரெட் பன்னீர் ரோல், வெஜ் ரோல், சமோசா, கோழி கட்லெட் போன்ற 20 சமைக்கத் தயார்நிலை பொருட்களைத்தயாரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஆந்திராவில் விஜயவாடா திருப்பதியிலும் இவை விற்பனை ஆகின்றன.
”2011ல் 50 லட்ச ரூபாய் விற்பனை. இந்த ஆண்டு 1.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்,” என்கிறார் ஹாஜா. அவர் பெரிய தொழிற்கூடம் ஒன்றை இதற்காக அமைக்கும் திட்டத்தில் உள்ளார்.
ஹாஜாவுக்கு இரண்டு குழந்தைகள். 12 வயது மகள், 9வயது மகன். மனைவி ஃபரிஷா உற்பத்தியையும் கணக்குகளைப் பார்த்துக்கொள்கிறார்.
அதிகம் படித்தவை
-
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு அவருக்கு 16 வயதில் திருமணம். தினக்கூலி 5 ரூபாய்க்கு வேலை பார்த்தார். வளர்ந்ததோ அனாதை இல்லத்தில். இன்று அந்த பெண் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அஜுலி துல்சியான் இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார்
-
மணக்கும் வெற்றி!
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
பள்ளத்தில் இருந்து சிகரத்துக்கு!
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.
-
வெற்றி மந்திரம்
ராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
வேர்களால் கிடைக்கும் வெற்றி
அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை