முடிதிருத்தும் கடையில் வேலை பார்த்தவர் இப்போது 11 கோடி ரூபாய் நிறுவனத்தின் தலைவர்!
30-Oct-2024
By பிலால் ஹாண்டூ
புது டெல்லி
ஒரு காலத்தில் சாணி வறட்டி தட்டிக்கொண்டிருந்த பையன், இன்று காலிப்ஸோ என்ற அழகு சேவை நிறுவனத்தின் சிஇஓ. 2015-16-ல் இந்நிறுவனம் 11 கோடிகள் அளவுக்குத் தொழில் செய்துள்ளது.
தான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது தன் குடும்பம் எப்படி வசதியில் இருந்து வறுமைக்கு வீழ்ந்தது என்பதை இப்போது 24 வயதாகும் கௌரவ் ரானா, நினைவில் வைத்துள்ளார்.
|
24 வயதாகும் கௌரவ் ரானா, 2015-ல் 5 சலூன்களை இணைத்து காலிப்ஸோவைத் தொடங்கினார்
|
டெல்லி – ஹரியானா எல்லையில் பஹதுர்கார் என்கிற சிறுநகரில் வளர்ந்தார் கௌரவ். அவர் மிகவும் சிறுவனாக இருக்கும்போதே அவரது தந்தை பங்குதாரர்களால் ஏமாற்றப்பட்டார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவரது பீங்கான் பாத்திரங்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலைப் பிடுங்கிக்கொண்டார்கள்.
கடன் அதிகரிக்க, கௌரவின் பெற்றோர் தங்கள் பூர்வீக ஊரான ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சோன்ஃப் என்ற கிராமத்துக்குத் திரும்பினார்கள்.
இந்த சம்பவம் கௌரவின் தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் தொழில் ஆர்வத்தை அவர் ஆறாம் வகுப்பில் இருக்கும்போதே தூண்டிவிட்டது.
“நான் நன்றாகப் படம் வரைவேன். நண்பர்களுக்குப் படம் வரைந்துகொடுத்து ஒரு படத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன்.” அவர் இப்படி ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார்.
தன் தாத்தாவிடம் சுமார் 50 ஷூக்களை வாங்கி விற்கலாம் என்று கூறினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
|
சிறுவயதிலிருந்தே பல முயற்சிகளில் ஈடுபட்ட கௌரவை அவரது கிராம மக்கள் பாராட்டினர்
|
வீட்டில் சாதாரண விறகு அடுப்பு எரிவதே சிரமம் ஆகிவிட்டது. கிராமம் முழுக்க சுற்றி சாணி பொறுக்கி வந்து அடுப்பு எரிக்க வறட்டிகளைத் தயார் செய்வார் கௌரவ்.
சதா பேசிக்கொண்டே இருக்கும் இந்த சிறுவனை ’காகு’ என்று ஊர்க்காரர்கள் அழைத்தனர். எல்லா வேலையும் செய்யக்கூடிய அவனைப் பாராட்டினர்.
படிப்பில் சிறந்தவனாக இருந்த அவன் தேசிய அளவில் கோகோ விளையாடினான். மாவட்ட அளவில் கூடைப்பந்து, நீச்சல்போட்டிகளில் கலந்துகொண்டான். அதே சமயம் வருமானம் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் தேடிக்கொண்டே இருந்தான்.
“நான் எட்டாம் வகுப்புப் படிக்கையில் தாத்தாவின் மளிகைக்கடைக்கு அருகே இருந்த முடிதிருத்தும் கடைக்குச் சென்று முடிவெட்டக் கற்றுக் கொண்டேன்,” அவர் சொல்கிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் முடி திருத்தும் தொழிலைச் செய்தார். ஒவ்வொரு நாளும் கடையில் சம்பாதிப்பதில் அவருக்கு 30 சதவீதம் கிடைக்கும் சராசரியாக 300 ரூபாய்.
பக்கத்துக் கிராமத்தில் இருந்த பாரமவுண்ட் ஆங்கிலப் பள்ளிக்கு அவ்வப்போது சென்று வகுப்புகளில் அமர்வார். கட்டணம் ஏதும் இல்லை. “என் சகோதரி மற்றும் நான் எடுக்கும் நல்ல மதிபெண்களைப் பார்த்து மற்ற பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள்,”
2008-ல் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதல்வரிசையில் வந்தார். ஆனாலும் கௌரவ் வழக்கமான 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குச் செல்லாமல் டிப்ளமோ படித்து, வேலைக்குச் சென்று நான்கு ஆண்டுகளில் சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்று திட்டமிட்டார்.
|
காலிப்ஸோவில் கௌரவ் தன் குழுவினருடன்
|
ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தயாள்பாக் கல்வி நிலையத்தில் ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் டிப்ளமோ படிக்கச் சேர்ந்தார். இங்கு 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
வீட்டை விட்டு வெளியே தங்கி இருப்பதில் சில பிரச்னைகள் உண்டு. “நான் அங்கு இருந்தபோது படிப்பை விட சர்ச்சைகளில் அதிகம் ஈடுபட்டேன்,” ஒப்புக்கொள்கிறார் கௌரவ். அதே சமயம் அவர் தோட்டம் போடுதல், சமையல், நடனம் ஆகியவற்றையும் அங்கே கற்றுக்கொண்டார்.
அவர் 2011-ல் ஊருக்குத் திரும்பினார். தாத்தாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். அவருக்கு 1.8 லட்சரூபாய் கடன் இருப்பதை அறிந்தார்.
தன் இறுதி செமஸ்டருக்கு 12,000 ரூபாய் இன்னும் கட்டவேண்டி இருந்தது. இது மிகப்பெரிய தொகை. யாரும் உதவி செய்யத் தயாராக இல்லை. கடைசியில் நண்பன் ஒருவனின் அம்மா 9,500 ரூபாய் கடனாகக் கொடுத்தார்.
டிப்ளமோ முடித்தவுடன் இந்தூரில் பன்னாட்டு நிறுவனமான விஈ கமர்சியல் வெஹிக்கில்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்குத் சேர்ந்தார். அப்போது அவருக்கு 18 வயது.
அவர் விரைவில் ஜூனியர் மேலாளர் ஆனார். அந்நிறுவனம் வேலைக்கு ஆட்களைச் சேர்த்தால் தலைக்கு 20,000 ரூபாய் தருவதாகக் கூறியது.
|
கௌரவ் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனமும் நடத்தினார். ஆனால் ஒரு புத்தாண்டு நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டதால் பிரச்னையைச் சந்தித்தார்
|
இந்த விஷயத்தில் நமது ஆள் கில்லியாகச் செயல்பட்டார். ஆட்களை வேலைக்குச் சேர்த்துவிட்டு தாத்தாவின் கடனை அடைக்கும் அளவுக்குச் சம்பாதித்தார்.
நிர்வாகத்தின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் கௌரவ் இரண்டு ஆண்டுகளில் வேலை சலிப்பூட்டுவதை உணர்ந்தார். சொந்தத் தொழில் தொடங்க விரும்பினார்.
தொழில்முறை நடனக்காரராக ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது அந்த யோசனை அவருக்குத் தோன்றியது. அவர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனம் ஒன்றை வோகானோ ஈவண்ட்ஸ் என்ற பெயரில் 2012-ல் இந்தூரில் தொடங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் கார்ப்பரேட் நிறுவன நிகழ்வுகள், பேஷன் ஷோக்கள், ஆண்டு விழாக்கள் போன்றவற்றை நடத்திக்கொடுத்தார். சின்ன நிகழ்ச்சியாக இருந்தால் 10,000 ரூபாயும் பெரிய நிகழ்ச்சியாக இருந்தால் 1 லட்ச ரூபாயும் சம்பாதிக்க முடிந்தது.
2015-ல் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தத்திட்டமிட்டார். வி -15 என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாட்டம். உள்ளூரில் இருந்த ரேடிசன் ஹோட்டலுக்குப் போட்டியாக அதை நடத்த முயன்றார்.
ஆனால் மழை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. நிகழ்ச்சி ரத்தானது ஆனால் அங்கு வந்திருந்த 3000 பேர் கொண்ட கூட்டம் அங்கிருந்த எல்லாவற்றையும் கோபத்தில் அடித்து உடைத்துவிட்டது.
அடுத்த நாள் காலை பொருட்களை சப்ளை செய்திருந்தவர்கள் இழப்பீடாக 18 லட்சரூபாய் கேட்டு கௌரவைப் பிடித்துக்கொண்டார்கள். “என்னிடம் அப்போது பணமே இல்லை,” என்கிறார் அவர்.
ஒரு வழியாக சமாளித்து ஊருக்கு வந்தவர் தன் அம்மா அழகுசாதன நிலையம் நடத்தி சம்பாதிப்பதைப் பார்த்தார். அவருக்குள் மின்னல் அடித்தது தன் பாட்டியிடம் 20,000 ரூபாய் பணம் வாங்கி காலிப்ஸோ என்ற அழகுநிலைய நிறுவனம் ஒன்றை ஜூன் 2015ல் தொடங்கினார். அவர் முன்பு வேலை பார்த்த விஈ கமர்சியல் வெஹிக்கில்ஸ் நிறுவனத் துணைத்தலைவரின் மனைவி ஷுபா ஸ்ரீவஸ்தவா என்பவர் இதில் பங்குதாரராகச் சேர்ந்துகொண்டார்.
அவர் பத்து லட்சரூபாய் பணம் அளித்தார். ப்ரைவேட் லிமிடட் நிறுவனம் ஒன்றை 50-50 பங்குகள் என்ற முறையில் உருவாக்கினர். பின்னர் இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து கௌரவ் முழு பங்குகளையும் தானே பெற்றுக்கொண்டார். அத்துடன் முன்பு அவர் கொடுக்கவேண்டியிருந்த 18 லட்சத்தையும் மெல்லத் திருப்பிக்கொடுத்துவிட்டார்.
டிசம்பர் 2015-ல் அழகுச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக கேலிப்ஸோ ஐந்து சலூன்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தொடங்கியது. அழகுச் சேவைகளுக்காக ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட் வழங்கும் தளமாக இது செயல்படத்தொடங்கியது.
தங்களிடம் சேவைக்கு அணுகும் வாடிக்கையாளர்களை ஒரு அழகு நிலையத்துக்கோ தனியார் அழகுக்கலை நிபுணரிடமோ கேலிப்ஸோ அனுப்பும். வருமானத்தில் ஒரு பங்கை அது பெற்றுக்கொள்ளும்.
“வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அழகுக்கலை வல்லுநர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்பினோம்,” அவர் சொல்கிறார். இதற்காக 25 பேர் கொண்ட அழகுக் கலைஞர்கள் கொண்ட குழுவை உயர்மட்ட சேவைகளுக்காகவும் அவசரச் சேவைகளுக்காகவும் உருவாக்கி வைத்திருந்தனர்.
கைகள் மற்றும் கால் அழகூட்டுதல், தோல் மற்றும் முடி அழகூட்டல், மேக் அப் மற்றும் ஸ்பா போன்றவை உண்டு. மிக உயர் ரகமான சூழலில் இந்த சேவைகள் அளிக்கப்பட்டன. அதுவே இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக முன்வைக்கப்பட்டது. இந்த காரணத்தால் காலிப்ஸோவின் வாடிக்கையாளர்களில் 70-80 சதவீதம் பேர் நிலைத்த வருகையாளர்கள் ஆயினர்.
|
தன் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் காதுகேளாமை மற்றும் பேச்சுக் குறைபாடுள்ளவர்களாக அமர்த்தவேண்டும் என கௌரவ் திட்டமிடுகிறார்
|
காலிப்ஸோ, இதற்குள் 5000த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திருப்பதாகவும் 500 முதல் 2000 வரை சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் கௌரவ் கூறுகிறார். இந்தூரை அடுத்து லக்னோவில் காலிப்ஸோவைத் தொடங்கியிருக்கும் இவர், டெல்லியில் தொடங்க ஆலோசித்துவருகிறார்.
வாரந்தோறும் முதியோர் இல்லங்களுக்கு தன் குழுவினரை அனுப்பி இலவச மசாஜ், அழகுச் சேவைகளைச் செய்து தரும் கௌரவ், தன் பணியாளர் குழுவில் 50 சதவீதம் அளவுக்கு காதுகேளாமை, வாய்பேசாமை குறை உள்ளவர்களைச் சேர்க்க விரும்புகிறார்.
அவரது தந்தை இப்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விட்டார். கௌரவ் தன் இளம்பருவ கனவான, ‘பிச்சைக்காரர்கள் கௌரவமாக வாழ்வதற்கு ஒரு கிராமத்தை’ உருவாக்கும் பணியில் இருக்கிறார்.
“நூறு சிங்கங்களின் தலைவன் ஒரு நாயாக இருந்தால் அவை அனைத்துமே நாய் போலத்தான் நடந்துகொள்ளும். அதே சமயம் நூறு நாய்களின் தலைவன் ஒரு சிங்கமாக இருந்தால் அனைத்து நாய்களும் சிங்கம்போல நடந்துகொள்ளும். நான் ஏமாற்றத்தை விட மாற்றத்தையே நாடுகிறேன். அதையே பெறுகிறேன். இதுவே என் வாழ்க்கைப் பாடம்,” என்கிறார் கௌரவ்.
அதிகம் படித்தவை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
குளிர்ச்சியான வெற்றி
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.
-
பத்து ரூபாய் பழரசம்!
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது