Milky Mist

Saturday, 27 July 2024

தொடர் தோல்விகளில் துவளாமல் கோடிகளை குவித்த நேச்சுரல்ஸ் உரிமையாளர் குமாரவேல்

27-Jul-2024 By பி.சி.வினோஜ் குமார்
சென்னை

Posted 29 Jun 2018

1970-களில் சாஷே வடிவில் இந்தியாவில் முதன் முறையாக வெல்வெட் என்ற ஷாம்பூ அறிமுகம் செய்த குடும்பத்தில் பிறந்தார்.  தந்தையின் மரணத்துக்குப் பின்னர் குடும்பத்தொழிலை கவனித்துக் கொண்ட மூத்த சகோதரர் சி.கே.ராஜ்குமார், 1991-ம் ஆண்டு சொந்தமாக ஷாம்பூ பிராண்ட்டை   தொடங்கிய மற்றொரு சகோதரர் சி.கே.ரங்கநாதன் ஆகியோருடன் சி.கே.குமாரவேல் பணியாற்றினார். “நான் ரங்கநாதனின் நிழலா அல்லது ராஜ்குமாரின் நிழலா? எனக்கு என சொந்தத் திறமைகள் உள்ளதா?” என ஒரு நாள் அவருக்குள் ஒரு கேள்வி எழும்பியது.

இப்படி அவர் தமக்குத் தாமே கேள்வி கேட்டுக் கொண்ட சமயத்தில், ரங்கநாதனுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். ரங்கநாதன் இப்போது, 1100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர்.

தொழிலில் நானும் என் சகோதரரரும் வெவ்வேறுவிதமான அணுகுமுறைகளைக்  கொண்டிருந்தோம், என்கிறார் நேச்சுரல்ஸ் ப்யூட்டி சலூன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரான குமாரவேல்.

https://www.theweekendleader.com/admin/upload/aug8-14-naturals1.jpg

குமாரவேல் மற்றும் வீணா இருவரும் வெறுமனே வாழ்க்கை துணைவர்கள் மட்டும் அல்ல. வேலையிலும் இருவரும் பங்குதாரர்கள்தான்.

 

2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேச்சுரல்ஸ் இப்போது 390 ப்யூட்டி சலூன்களை கொண்டு இயக்குகிறது. அதில் 220 சலூன்கள் தமிழகத்தில் இருக்கின்றன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தலா 50 சலூன்கள் இருக்கின்றன. இதர சலூன்கள் நாட்டின் இதர பகுதிகளில் இருக்கின்றன.

நான்காவது ஆண்டில் இருந்து நிறுவனம் லாபகரமாகச் செயல்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு 270 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது.

“3000 சலூன்கள் தொடங்க வேண்டும், 1000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும், 2020-க்குள் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் இப்போது என்னுடைய இலக்காக இருக்கிறது,” என்கிறார் குமாரவேல். 54-வது சலூனை அவர்கள் தொடங்கிய பின்னர், பிரான்சைஸ் முறையில் தொழிலில் ஈடுபட்டனர்.

பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அவரது நிறுவனம் 189 பெண்களுக்கு பிரான்சைஸ் கொடுத்திருக்கிறது. மேலும் இதுவரை 5500 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.

நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் குமாரவேலின் மனைவி வீணா,  முதலில் ஆரம்பிக்கப்பட்ட சில சலூன்களை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 1993-ம் ஆண்டு ரங்கநாதனிடம் இருந்து விலகி வந்த குமாரவேல், நேச்சுரல் கேர் புரடெக்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அது நஷ்டம் அடைந்ததால் அதனை மூடுவதற்கான பணிகளில் இருந்தார்.

நேச்சர் கேர் நிறுவனத்தில் இருந்து ராகா ஹெர்பல் பவுடர் என்ற பிராண்ட்டை உருவாக்கினர். நல்ல லாபத்தை நோக்கி நிறுவனம் நடைபோட்டது. தென் பகுதியைத் கடந்து பிற இடங்களில் விரிவாக்கம் செய்து மேலும் பல பொருட்களை தயாரிக்கத் தொடங்கியபோது, நஷ்டத்தைச் சந்தித்தது.

நஷ்டம் அடைந்த நிறுவனம் குறித்து தெரிவித்த குமாரவேல், “நிதி, சந்தை, விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவைதான் தொழிலின் நான்கு சர்க்கரங்கள். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் நான் கவனம் செலுத்தினேன். நிதி தொடர்பான சர்க்கரம் யாராலும் கவனிக்கப்படவில்லை. அந்த சர்க்கரத்தை சரி செய்வதற்கு பதில், அது இல்லாமலேயே பயணித்தோம். எனவே அந்த கார் நகரவில்லை.”

எனினும், குமாரவேல் அந்த நிறுவனத்தை தமது சகோதரர் ரங்கநாதனிடம் விற்று விட்டார்.

நேச்சர் கேர் நிறுவனம் முடங்கியபோது, குமராவேல் தமது சொத்துகள், சேமிப்புகள் அனைத்தையும் இழந்தார். 5 கோடி ரூபாய் கடனில் இருந்தார்.

பிரச்னைகளை நேர் செய்ய அவர் முயற்சித்தபோது, மனைவி வீணாவை தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்தார். இருவரும் இணைந்து தொழில் செய்வது என்றும் திட்டமிட்டார். வீணா மூன்றாம் தலைமுறை தொழில் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரை 1991-ம் ஆண்டு குமாரவேல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் வீணாவை அழைத்துக் கொள்வது நல்ல தருணமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். “ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதுமே என் மனைவி நினைத்துக் கொண்டிருப்பார். இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன்,” என்கிறார் குமாரவேல்.

அழகு மற்றும் சுத்தமாக இருந்தல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் வீணா. சென்னை எத்திராஜ் கல்லூரியில் வணிகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். வீணாவின் இயல்பின் காரணமாக பியூட்டி சலூன் தொடங்குவது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

உடனே அந்த நிறுவனத்தைத் தொடங்கி விட்டோம் என்கிறார் குமாரவேல். சந்தை குறித்து ஆய்வோ அல்லது வேறு எந்தவித ஆய்வோ அவர்கள் மேற்கொள்ளவில்லை.

“ஐந்து நட்சத்திர சலூன் மற்றும் உள்ளூர் அளவில் இருக்கும் முடி வெட்டும் கடை இரண்டுக்கும் இடையே ஒரு தேவை இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். நல்ல தரம், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கட்டணத்தில் ப்யூட்டி சலூனுக்கு வாய்ப்புகள் இருந்தன. இதை  நாங்கள் ஒரு வாய்ப்பாகப் பார்த்தோம்,” என்கிறார் அவர்.

சென்னை காதர் நவாஸ்கான் சாலையில் 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவர்கள் முதல் சலூன் கடையைத் தொடங்கினர். அந்தத் தொகையில் குறிப்பிட்ட பகுதியை இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் வாங்குவதற்கும் சலூனை தொடங்குவதற்கும் பயன்படுத்தினர். 

எங்கிருந்து அவர்களுக்குப் பணம் கிடைத்தது? “நண்பர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் மற்றும் சேமிப்பில் இருந்தும் அந்தத் தொகையைத் திரட்டினோம்,” என்று சிரிக்கிறார் 49 வயதாகும் தொழில் முனைவோரான குமாரவேல். ஒவ்வொருவரும் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கடன்கள் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.

“யாரும், எங்கள் தொழிலில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களுக்கு உதவ வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.”

அவரது முந்தைய நிறுவனத்தில் முதல் ஆண்டில் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்று அவர் இலக்கு நிர்ணயித்திருந்தார். “இப்போது, மாதம் தோறும் குடும்பத்தை நடத்துவதற்கு 60 ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால் போதும் என்று விரும்பினேன்,” என்று நினைவுகூறுகிறார்.

முதல் சில ஆண்டுகள் மிகவும் கடினமான சூழல் நிலவியது. நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 5 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் என இழப்பு ஏற்பட்டது.


“என்னிடம் முற்றிலும் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. என் ஆடிட்டர் உட்பட எல்லோரும் தொழிலை மூடிவிடும்படி என்னிடம் கூறினர். இது குறித்து ரங்கநாதனிடம் என் தாய் பேசி விட்டார். ரங்கநாதன் என்னுடைய கடன்களை தீர்க்கத் தயாரானார். தவிர எனக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தரவும் தயாராக இருந்தார்,” என்கிறார் குமாரவேல்.

https://www.theweekendleader.com/admin/upload/aug8-14-naturals2.jpg

இந்த தம்பதியினர் ஆரம்ப கட்ட பின்னடைவுகளில் இருந்து வெளியே வந்து விட்டனர்.


எனினும், குமாரவேல், வீணா இருவரும், இழப்புக்கான உண்மை நிலை என்ன என்பதைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இழப்பு குறைந்து வந்தது. அவர்கள் தங்களுடைய பிராண்ட்டை முன்னெடுக்க புரமோஷன்களிலும், சந்தைப்படுத்துதலிலும் கவனம் செலுத்தினர்.
 

உள்ளூர் நாளிதழ்களில் அவர்கள் விளம்பரங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். “கடைகளில் கிஃப்ட் வவுச்சர்கள் கொடுத்தோம். வாடிக்கையாளர்கள் அதை எங்கள் சலூனுக்கு கொண்டு வரும்படி செய்தோம்,” என்கிறார் குமாரவேல். 

நான்காம் ஆண்டில் இருந்து அவர்கள் நிறுவனம் லாபத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அந்த ஆண்டில் அவர்கள் சென்னையில் இரண்டாவது சலூனைத் தொடங்கினர். தொடர்ந்து மேலும் பல சலூன்களைத் தொடங்கினர். 6வது ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.

ஆறாவது சலூனை அவர்கள் திறந்த உடன், மேலும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வகையில் 50-க்கு 50 சதவீதம் என்ற பங்குதாரர் முறைப்படி சலூன் தொடங்கும் முறையை அவர்கள் அறிமுகம் செய்தனர்.

முதலீட்டாளர்கள் புதிய திட்டங்களில் 50 சதவிகிதம் செலவுகளைச் செய்தனர்.  மீதியை நேச்சுரல்ஸ் நிறுவனம் செலவழித்தது. புரமோஷன் செய்வதற்கும், ஆட்களை நியமிக்கவும் உதவிகள் செய்தது. லாபத்தில் தலா 50 சதவிகிதத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

நேச்சுரல்ஸ் நிறுவனத்துடன் பல பங்குதாரர்கள் இணைந்தனர். 2009-ம் ஆண்டு, நேச்சுரல்ஸ் தொழில் யுக்தியை மாற்றியது. அதில் இருந்து பங்குதாரர்கள் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து  பிரான்சைஸ் முறையை அறிமுகப்படுத்தினர். அதில் இருந்து அவர்களின் வளர்ச்சி சீராக இருந்தது. ஒரு ஆண்டுக்குள் 54 சலூன் கடைகளில் இருந்து 108 சலூன்கடைகளாக உயர்ந்தன. இன்றுவரைக்கும் அவர்களது விரிவாக்கம் தொடர்கிறது. இப்போது அவர்களுக்கு 390 சலூன்கள் இருக்கின்றன.

நேச்சுரல்ஸ் லான்ஞ்ச்(20),  பெண்களுக்கு மட்டுமான நேச்சுரல்ஸ் டபிள்யூ, என்ற சலூன்கள் (20), பேஜ்-3 சலூன்கள் எனப்படும் சொகுசு பிராண்ட் சலூன்கள் (4)  இதில் அடக்கம்.

சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் பியூட்டிஷியன்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 4 பயிற்சி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். “வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பலர் வருகின்றனர். இங்கு பயிற்சி பெறும் அவர்கள், எங்களுடைய கடையில் நல்ல வேலையில் சேருகின்றனர்,” என்கிறார் குமாரவேல். இந்த தொழிலில் நல்ல பயிற்சி பெற்ற ஆட்கள் கிடைப்பதுதான் பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார்.

தென் மண்டலங்களைத் தவிர்த்து பிற பகுதிகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்து அங்கெல்லாம் சலூன்கள் திறக்கும் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் என்ற சிறுநகரில் குமாரவேல் பிறந்து வளர்ந்தார். திருமணத்துக்குப் பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தார். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் நியூட்ரிஷனில் பட்டம் பெற்றார்.

ஏன் இந்தப் படிப்பை எடுத்துப் படித்தீர்கள் என்று கேட்டபோது, “ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று என் தாய் விரும்பினார். அதே போல, நியூட்ரிஷனில் அழகான பெண்கள் இருப்பார்கள் என்று சிலர் கூறினர். அதனால், அங்கு சேர்ந்தேன்.”


பார்ப்பதற்கு இளகிய மனம் படைத்தவர் போல தோற்றம் அளிக்கிறார். ஆனால், முந்தைய நிறுவனத்தின் பெரும் இழப்பில் இருந்து எப்படி சமாளித்து வெளியே வந்தார் என்பதை மனம் விட்டு நினைவு கூறுகிறார்.

வாழ்க்கையின் அந்த காலக்கட்டத்தைப் பற்றி பேசும் அவர், “எனக்கு கடன் கொடுத்தவர்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவர்கள் என் வீட்டுக்கு வந்து கடனை திருப்பித் தரும்படி கேட்பார்கள். நீதிமன்ற வழக்குகள், கைது வாரண்ட்கள், மற்றும் குண்டர்களைக் கூட சந்திக்க வேண்டி இருந்தது. அந்த நாட்கள் தூக்கம் தொலைத்த நாட்களாக இருந்தன. ஒரு முறை உண்மையில் நான் உடைந்து அழுதுவிட்டேன்.”

ஆனால், ராபர்ட் ஷுல்லர்  என்ற எழுத்தாளரின் புத்தகத்தில் இந்த வரிகளை அவர் விரும்புகிறார். “கடினமான சூழல்கள் ஒருபோதும்  நிலைத்திருப்பதில்லை. ஆனால், வலிமையான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுகட்டமைத்து கொள்வார்கள்.”

“என்னிடம் இருக்கும் 1000 ஆடியோ சி.டிக்கள்தான் என்னுடைய மிகப்பெரிய சொத்தாகும். ஒரு காலத்தில் இதனை நான் தேடித்தேடி சேர்த்து வைத்தேன். ஒவ்வொரு முறை நான் பிரச்னையில் இருக்கும்போதும், அதில் ஒரு சிடியைப் போட்டுக் கேட்டு, என்னை நான் ஆறுதல்படுத்திக் கொள்வேன், என்று சொல்லி முடிக்கிறார் குமாரவேல்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • வறுமையில் இருந்து செழிப்புக்கு

    இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்

  • A Rs 1500 crore turnover brand is headed by a communist

    கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!

    கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்

  • A cup full of success

    தேநீர் கடை தந்த வெற்றி!

    மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.

  • fulfilling the dream of his grandfather

    தாத்தா சொல்லை தட்டாதே

    ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • A hot sale

    புதுமையான உணவு

    குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.

  • Girl from Mountain

    மலைக்க வைக்கும் வளர்ச்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை