Milky Mist

Saturday, 9 December 2023

12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தமிழ் இளைஞர், இன்றைக்கு வர்ஜீனியாவில் 18 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்!

09-Dec-2023 By உஷா பிரசாத்
சென்னை

Posted 19 Nov 2020

முப்பத்து ஆறு வயது இளைஞரான சரவணன் நாகராஜ் 12-ஆம் வகுப்பைக் கூட முடிக்காதவர். இவர்  தமிழ்நாட்டின் சிறிய நகரான விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு இப்போது அமெரிக்காவின் வர்ஜினியாவில்,  வானன் ஆன்லைன் சேவைகள் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2.5 மில்லியன் டாலர்(தோராயமாக ரூ.18.5 கோடி)!

அவரது இந்த நிறுவனம் மொழிபெயர்ப்பு, டிரான்ஸ்கிரிப்ஷன், குரல் பதிவு, மொழிமாற்றப்படங்களுக்கு சப்-டைட்டில் பணிகள், கேப்ஷனிங் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. சென்னையிலும் வர்ஜினியாவிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் தங்களது புராஜெக்ட்களை அவுட்சோர்சிங் கொடுத்தும், சர்வதேச திறனாளர்களுடனும் பணியாற்றி வருகிறது.  

  சரவணன் நாகராஜ் 2016-ஆம் ஆண்டு தமது நிறுவனத்தை அமெரிக்காவில் உருவாக்கினார். வணிகத்தில் தோள்கொடுக்கும் மனைவி ஸ்ரீவித்யாவுடன். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)  


சரவணனின் வாழ்க்கை பல்வேறு உணர்வுகளுடன் கூடிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகும். அவரது குழந்தைப் பருவகாலத்தில் நல்ல கல்வி அனுபவத்தைப் பெற்றார். பின்னர் அரசுப் பள்ளிக்கு இடம் மாறினார். 12ஆம்  வகுப்பில் தோல்வியடைந்தார். 18 வயதில் வேலை தேடி சென்னை சென்றார். இறுதியில் ஓர் நிறுவனத்தை அமைத்தார். இப்போது அந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  

சரவணனின் தந்தை  வாடகைக் சைக்கிள் கடையும் ட்ராவல்ஸ் நிறுவனத்தையும் விருதாசலத்தில் நடத்தி வந்தார். தந்தையின் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பம் கடினமான சூழல்களை எதிர்கொண்டது. “என் தந்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார். தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அதே போல சிட்பண்ட் தொழிலிலும் கால் பதித்தார்,” என்றார் சரவணன். அடுத்தடுத்து டிராவல் நிறுவனத்தின் கார்கள் விபத்தைச் சந்தித்தன. சிட்பண்டில் பணியாற்றிய  இரண்டு ஊழியர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

“எனது தந்தை தண்ணீர் ஆலையை விற்பனை செய்து விட்டார். கடன்களை அடைப்பதற்காக இதர சொத்துகளையும் விற்றுவிட்டார்,” என்றார் சரவணன். அப்போது சரவணன், விருத்தாசலம் அருகில் உள்ள கடலூரில் ஓர் உறைவிடப் பள்ளியில் தங்கி 8-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக அப்பள்ளியில் அவரால் படிக்க முடியவில்லை. மீண்டும் விருத்தாசலத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவர் ஒரு கிறித்துவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  

இந்நிலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் சரவணன் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 12ஆம் வகுப்பில் அதுதான் அவருக்குப் பிடித்தமான பாடமாக இருந்தது. இதையடுத்து அவர் என்ஐஐடி கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க ஆரம்பித்தார்.
சரவணன், அவரது 18-வது வயதில் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார்


இதன் விளைவாக அவர் 12ஆம் வகுப்புக் கணிதப்பாடத்தில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டு முறை முயற்சி செய்தபோதும் அவரால் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே படிப்பில் இருந்து வெளியேறுவது என்றும் வேலை தேடுவது என்றும் முடிவு செய்தார்.

“கம்ப்யூட்டர் குறித்த எனது அறிவு காரணமாக, உள்ளூர் கம்ப்யூட்டர் மையத்தில் எனக்கு பயிற்சியாளராக வேலை கிடைத்தது,” என்றார் அவர். சரவணனுக்கு அப்போது 18வயதுதான் ஆகியிருந்தது. பொறியியல், எம்.சி.ஏ.,மற்றும் இளநிலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். பின்னர், விருத்தாசலத்தில் உள்ள என்ஐஐடி பயிற்சி மையத்தில் ஒரு பயிற்சியாளராக ரூ.2500 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 

என்ஐஐடி-யில் ஓர் ஆண்டு பணியாற்றிய பின்னர், ஒரு புரோக்கிராமராக ஆவதற்காக சரவணன் சென்னைக்குச் சென்றார். சென்னையில் ஆங்கிலத்தில் பேசுதல் குறித்த இரண்டு மாத பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டார்.

இதன் வாயிலாக அவருக்கு மொபைலிங் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் ரூ.1,700 சம்பளத்தில் வேலை கிடைத்தது. பின்னர் ஏர் டெல் நிறுவனத்தில் புகார்களுக்கு தீர்வு காணும் குழுவில் ரூ.4500 சம்பளத்தில் வேலை கிடைத்தது.

“என்னுடைய கம்ப்யூட்டர் அறிவு காரணமாக ஏர்டெல்(தமிழ்நாடு) நிறுவனத்தில் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நேரத்தை 36மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாகக் குறைத்தேன். பின்னர் அதனை வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைத்தேன்,” என்றார் பெருமையுடன்.
2010-ஆம் ஆண்டு சரவணன் முதன் முறையாக  அமெரிக்காவுக்கு பயணம் சென்றார்.  அப்போது  சதர்லேண்ட் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார்


இது ஒரு பலன் அளிக்கும் அனுபவமாக இருந்தபோதிலும், ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து விலகி , ஓர் சர்வதேச கால் சென்டர் மையத்தில் சேர்ந்தார். நீண்டகாலம் அங்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். ஆனால், அங்கு பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் மோசமான உச்சரிப்பு காரணமாக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.  

மீண்டும் ஏர்டெல் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தின் சந்தைப் பிரிவில், ஆறு  மாதங்கள் சிம் கார்டுகள் விற்பனை செய்தார். பிறகு சதர்லேண்ட் நிறுவனத்தில்(வாடிக்கையாளர் சேவையில் ) 2004-ஆம் ஆண்டு ரூ.13,000 சம்பளத்தில் ஒரு பெரிய வாய்ப்புக் கிடைத்தது. சதர்லேண்ட்டில் சரவணன் குழுவின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து 15 நாட்கள் வர்ஜீனியாவில் உள்ள ஃபிரடெரிக்ஸ்ஸ்பர்க் என்ற இடத்துக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.

அங்கு அவர் சதர்லேண்ட்டின் வேறு பிரிவைச் சேர்ந்த மேலாளர்களில் ஒருவரான கிறிஸ்டியானா பியர்ட் என்பவரை சந்தித்தார். அவர்தான் சரவணனுக்குள் தொழில் முனைவோருக்கான விதையை விதைத்தார்.

“அவர் என்னை நியூயார்க் நகருக்கு காரில் அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை கேட்டறிந்தார். எனவே, அமெரிக்காவில் தொழில் தொடங்கும்படி எனக்கு அவர் அறிவுறுத்தினார்,” என்றார் அவர்.

  சென்னை திரும்பிய பின்னரும், கிறிஸ்டியானாவின் வார்த்தைகள் தொடர்ந்து சரவணன் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. சதர்லேண்ட் நிறுவனத்தில் 2010-ஆம் ஆண்டு ரூ.55,000 சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தபோது தமது வேலையில் இருந்து விலகுவது என்று உறுதியான முடிவை அவர் எடுத்தார்.

26-வது வயதில் சென்னையில் ஒரு டேட்டா டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனத்தை வானன் இன்னோவேட்டிவ் சர்வீஸ்ஸ்(விஐஎஸ்) என்ற பெயரில் தொடங்கினார். பின்னர் அமெரிக்காவில் இருந்து தமது நிறுவனத்துக்கு புராஜெக்ட்கள் கொண்டு வர முடியும் என்ற தமது நம்பிக்கை மற்றும் வெறும் கனவுடன் தம் பொருட்களுடன் அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் இயல்பாக ஒரு புகைப்படம்

நியூயார்க் நகரில் ஒரு மனிதவள ஆலோசனை நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலையில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு முன்பாக, ஒரு ஹாஸ்டலில் இருந்து இன்னொருவருடன் பகிர்தல் அடிப்படையில் தங்கும் இடத்துக்கு மாறுவதற்காக தமது உயர் அதிகாரியிடம் ஒரு நாள் சற்று சீக்கிரம் செல்ல அனுமதி கேட்டார்.  ஆனால், அனுமதிக்குப் பதில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

“இங்கு நான்(அமெரிக்காவில்) ஒவ்வொன்றிலும் அபாயமான சூழலில் இருந்தேன் என்பது அந்த பெண் அதிகாரிக்குத் தெரியும். ஆனால், அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். நான் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறியபோது கண்ணீர் என் கன்னங்களில் உருண்டோடியது,” என்று நினைவு கூர்ந்தார்.  

வெளிநாட்டில் யார் ஒருவரையும் தெரியாத நிலையில் சரவணன் வேலை தேடத் தொடங்கினார். அலுவலகங்களுக்குச்சென்று பலரை சந்தித்தார். மன்ஹாட்டனில் ஏழாவது அவென்யூவில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஃபிரடெரிகோ என்பவரைச் சந்தித்தார். அவர் ஓர் இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்து தரும் வேலையை இவருக்குக் கொடுத்தார். 

“பிரட் இப்போது என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர். நான் மிகவும் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு வாய்ப்பை வழங்கினார். அந்தப் பணியை தொடங்குவதற்கு 250 டாலர் காசோலையையும் எனக்குக் கொடுத்தார்,” என்று நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

“பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி மன்ஹாட்டன் செல்லும்போது, ஃபிரடெரிகோவைச் சந்திப்பேன். ஒருமுறை அவரைச் சந்தித்தபோது, மன்ஹாட்டனில் இருந்து வேலை பார்க்க ஒரு இடத்தை தேர்வு செய்யும்படி ஆலோசனை சொன்னார். ஆனால், என்னிடம் அதற்கு பணம் இல்லை என்பதைத் தெரிந்து, அவருடைய அலுவலகத்திலேயே எனக்கு ஒரு மேஜையை இலவசமாக ஒதுக்கிக் கொடுத்தார்,” என்றார் அவர்.

சரவணனுக்கு மேலும் சில புராஜெக்ட்கள் கிடைத்தன. தம்முடைய உதவிக்காக மேலும் இரண்டு நபர்களை  வேலைக்கு எடுத்தார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய தங்கை பாரதி பிரியா சென்னை அலுவலகத்தை கவனித்துக் கொண்டார். தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது,

2013-ஆம் ஆண்டு சரவணன் தமது அலுவலகத்தை கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை அண்ணாநகருக்கு மாற்றினார். இப்போது அங்கு 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2015-ஆம் ஆண்டு அம்பத்தூர் தொழில் வளாகத்தில் இந்தியாபுல்ஸ் பார்க்கில் 7000 ச.அடி அளவு பெரிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றினார்.  வானன் ஆன்லைன் சேவைகள் நிறுவனத்தை வர்ஜீனியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு 12 பேருடன் தொடங்கினார்.

தவிர வானன் ஹெல்த்கேர் எனும் சிறு அளவிலான மருத்துவமனைகளுக்கு மெடிக்கல் பில்லிங் சேவைகள் வழங்கும் நிறுவனத்தையும் தொடங்கினார். 
மனைவி ஸ்ரீவித்யா மற்றும் மகள்கள் சமந்தாஸ்ரீ, தியா ஆகியோருடன்

சரவணன், மென்பொருள் பொறியாளர் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் இப்போது சரவணனின் தொழிலுக்கு உதவி செய்கிறார். இந்த தம்பதிக்கு சமந்தா ஸ்ரீ(4), தியா(3) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரவணன், வானன் ஆன்லைன் சேவைகளை  அமேசான் சேவைகளைப் போல நிலை நிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார். “நான் மக்களை இணைக்க விரும்புகின்றேன். சர்வதேச  அளவில் மேலும் பல சேவைகளைக் கொடுக்க விரும்புகின்றேன்.  ஏதேனும் டிஜிட்டல் ஆக பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் போது, நீங்கள் வானன் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே, பொது அறிவு, வரலாறு மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் சிறிய யூடியூப் வீடியோக்கள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் திட்டமிட்டிருக்கிறார். 

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How a grocer's son started a biscuit factory and became a crorepati

    பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!

    அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்

  • Best seller

    கூச்சத்தை வென்றவர்

    டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • The colour of success is green

    ஏற்றம் தந்த பசுமை

    ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Smooth sailing

    நினைத்ததை முடிப்பவர்

    ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்

  • Jute entrepreneur

    சணலில் ஒரு சாதனை

    பிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Leading jeweller in Patna once sold pakoras on a pushcart

    மின்னும் வெற்றி!

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் அம்மாவுக்கு உதவியாக பக்கோடா கடையில் சின்னவயதில் இருந்தே வேலை செய்தவர் சந்த் பிஹாரி அகர்வால். பள்ளிக்குப் போய் படிக்க வசதி இல்லை. அவர் இன்று பாட்னாவில் 20 கோடி புரளும் நகைக்கடையை நடத்துகிறார். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை