தள்ளுவண்டியில் எட்டு லட்ச ரூபாய் லாபம் பார்க்கும் முன்னாள் பள்ளி ஆசிரியை!
18-Sep-2025
By சோபியா டேனிஷ் கான்
குர்கான்
அடிக்கடி காணும் காட்சியல்ல இது. குர்கான், என்.சி.ஆரில் செக்டார் 14-ல் ஆரஞ்ச் நிற உணவு வண்டியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண், வட இந்தியாவின் தெருவோர உணவான சோலே குல்சே(chholekulche.)-வை விற்பனை செய்கிறார்.
ஆண்கள் அதிகம் புழங்கும் இந்தப் பகுதியில் இருக்கும் பல உணவு வண்டிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக அவரும் நின்றிருக்கிறார். 35 வயதான அவர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். நன்றாக ஆடை உடுத்தி இருக்கிறார். குர்கானின் அதிகாரப்பூர்வமற்ற உணவு சாலையில் ஒரு தனித்தன்மையோடு அவர் இருக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது.
|
ஊர்வசி யாதவ், உணவு வண்டிக்கடையை திறந்தது அவரது குடும்பத்தின் செலவுகளை சமாளிப்பதற்காகத்தான். அவர் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசிக்கிறார். (புகைப்படங்கள்: நவநிதா)
|
அவருடைய வாழ்க்கை சூழல்தான் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு இந்த தொழிலுக்கு அவரைத் தள்ளியது. அவர் மிக மன உறுதியுடன் இதை எதிர்கொண்டிருக்கிறார்.
தெருவில் வண்டியில் வைத்து உணவு வியாபாரம் செய்வதைப் பார்த்து பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து அவர் நினைக்காமல் இல்லை. ஏனெனில் இப்போது அவர் வசதியுள்ளவர்கள் வாழும் பகுதியில் இருக்கும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசிக்கிறார். அவரது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு எஸ்.யு.வி காரும் இருக்கிறது.
“என்னுடைய கணவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் அவரது கால்விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. அதில் இருந்து அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார்,” என்று விவரிக்கிறார் 14 மற்றும் 8 வயது குழந்தைகளைக் கொண்ட தாயான ஊர்வசி. “அவர் ஓரிஸ் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். நான், கிட்ஜீ பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அவரால் வருவாய் ஈட்ட முடியாமல் போனதால், குடும்பத்துக்காக நான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி வீட்டை விட்டு வெளியே வந்தேன்.”
மாதம் 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்த ஆசிரியர் பணியில் இருந்து ஊர்வசி விலகினார். 25,000 ரூபாய் முதலீட்டில் உணவு வண்டி கடையைத் தொடங்கினார். இப்போது ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
முன்பு ஒரு நாள், இதே தெருவில் உணவு கிடைக்குமா என்று ஊர்வசி தேடி அலைந்தார். அப்போதுதான் வண்டியில் உணவுக் கடை தொடங்கலாம் என்ற யோசனை அவருக்கு வந்தது.
“என் கணவருக்கு விபத்து நடந்த சில நாட்கள் கழித்து, மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது மதியம் 12.30 மணி. எனக்கு பயங்கரமான பசி வேறு. அப்போது, சோலே குல்சே சாப்பிட உணவு கடைக்குப் போனேன்,” என்று நினைவு கூர்கிறார் ஊர்வசி. “அரை மணி நேரம் நான் அங்கு இருந்தேன். பெரும் கூட்டம் அங்கே நின்றிருந்தது. அப்போது உணவு வண்டி உரிமையாளரிடம் நீண்ட நேரம் நான் பேசினேன். அப்போதுதான் எனக்குள் இந்த ஐடியா உதித்தது.”
|
ஊர்வசி காலை 10 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பணியாற்றுகிறார். அவர் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் அந்த நேரத்தில் அவரும் வீட்டுக்கு வருவார்.
|
இது ஒரு குறைந்த முதலீடு கொண்ட தொழில். 2016-ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, 25 ஆயிரம் ரூபாயில் உணவு வண்டியை வாங்கி அதில் கடையை நடத்தத் தொடங்கினார். அவரது தொழில் நன்றாக செயல்படத் தொடங்கியது.
இப்போது அவரது தினசரி நடவடிக்கைகள் என்பது, காலை ஏழு மணிக்குத் தொடங்குகிறது. சோலே (chickpeas curry) உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்து வைக்கிறார். அவரது வண்டிக் கடையின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரைதான். குடும்பத்துடன் செலவிடுவதற்கும் அவருக்குப் போதுமான நேரம் கிடைக்கிறது.
“என்னுடைய சக்தியை திரும்பப் பெற, சிறு தூக்கம் தூங்கி எழுகிறேன். அதன் பின்னர், குழந்தைகளுடனும், எனக்காகவும் நேரத்தைச் செலவிடுகிறேன்,” என அவரின் ஒரு நாள் வாழ்க்கை குறித்து நமக்கு விவரிக்கிறார்.
ஊர்வசியின் தினசரிச் செலவு ரூ500-600 ஆக இருக்கிறது. இந்த செலவில் சோலே வாங்கி சமைக்கிறார். பின்னர் குர்கானில் உள்ள சாதார் பஜாரில் இருந்து ரெடிமேட் குல்சே வாங்குகிறார். அவருக்கு இதில் இருந்து தினமும் 2000-2500 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. நல்ல வருவாய் தரும் தொழிலாக இது இருக்கிறது.
ஊர்வசி இதற்கு முன்பு குறைந்த காலத்துக்கு, ஒரு தொழில் முனைவோராக இருந்தபோது, பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். நண்பர்களின் யோசனையுடன், ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கினார். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறு மாதத்துக்குள் அதனை மூடி விட்டார்.
|
ஊர்வசியின் சோலே குல்சே, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
|
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு உணவு வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்று வியாபாரம் செய்த அவர், அண்மையில், குர்கான் மாநகராட்சியில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் செலுத்தி உணவு வண்டிக்கு லைசென்ஸ் பெற்றிருகிறார்.
“இப்போதைக்கு நான் இந்த இடத்தில் இருந்து தள்ளிக்கொண்டு செல்ல வேண்டியதில்லை. தேவைப்படும் அனைத்து அனுமதியையும் பெற்று விட்டேன்,” என்கிறார் ஊர்வசி. விசுவாசம் உள்ள வாடிக்கையாளர்களையும் அவர் பெற்றிருக்கிறார்.
குடும்ப வருவாயில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, உணவு வண்டி விற்பனையில் கிடைக்கும் கூடுதல் வருவாய், அவருடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நிர்வகிக்கப் போதுமானதாக இருக்கிறது. அவருடைய குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கின்றனர். அவர்களின் கனவுகளை நிறைவேற்றவே ஊர்வசி விரும்புகிறார்.
அவருடைய கணவர் அமித் யாதவ், இப்போது குணம் அடைந்து விட்டார். திரும்பவும் கார் ஓட்டத்தொடங்கி இருக்கிறார். இப்போது ஊர்வசியின் தொழிலுக்கும் அவர் உதவி செய்து வருகிறார். சந்தையில் இருந்து சமையல் பொருட்கள் வாங்கி வந்து கொடுக்கிறார்.
ஊர்வசி டெல்லியில் பிறந்தவர். ஜானக்புரியில் உள்ள கேந்திர வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், தொலைநிலை கல்வி மூலம் பட்டப்படிப்பு முடித்தார். மான்டிசோரி கல்வியியலில் டிப்ளமோ பெற்றிருக்கிறார். 2004-ம் ஆண்டு அமித்தை திருமணம் செய்து கொண்டார். அமித்தின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றார்.
|
ஆண்களிடம் இருந்து வரும் வழக்கமான விமர்சனத்தை புறந்தள்ளிவிட்டு, ஊர்வசி தன்கையில் உள்ள வேலையில் கவனம் செலுத்துகிறார்
|
“என் கணவர், மாமனார் இருவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர். இந்த உலகம் என்ன சொல்லும் என்றோ, பிறர் என்ற சொல்வார்கள் என்றோ நான் பொருட்படுத்துவது இல்லை. என் உணவு வண்டிக்கடையின் வழியாக பள்ளிப் பேருந்து செல்லும் போது, என்னைப் பார்த்து என் குழந்தைகள் மகிழ்ச்சியோடு கை அசைக்கின்றனர்.”
பெண் எனப்படுபவள், இந்தியாவில் தெருவில் இறங்கி வேலை செய்வது எளிதல்ல. ஆண்களிடம் இருந்து வரும் வழக்கமான விமர்சனத்தை புறந்தள்ளிவிட்டு, ஊர்வசி தன்கையில் உள்ள வேலையில்தான் கவனம் செலுத்துகிறார்.
அவருடைய எதிர்காலத் திட்டத்தில், ஒரு ஸ்பிளிட் லெவல் ரெஸ்டாரெண்ட் எனப்படும் மாடி அடுக்குகள் கொண்ட ஓட்டல் தொடங்க வேண்டும் என்பதும் அடங்கி இருக்கிறது. அதே போல தேவைப்படும் நபர்களுக்கு நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இப்போதைக்கு சோலே குல்சே உணவு வண்டியை நிர்வகிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்.
அதிகம் படித்தவை
-
தலைக்கவச மனிதர்!
நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்
-
பர்பிள் படை
கூடைப்பந்து விளையாட்டில் இந்திய அணியில் இடம்பெற்றவர். ஆனால் ஒரு காயம் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாமல் போக, தனது தந்தையுடன் இணைந்து, அவரது கார் வாடகை வியாபாரத்தை ரூ.300 கோடி வருவாய் பெறும் நிறுவனமாக மாற்றினார். தேவன் லாட் சொல்லும் வெற்றி கதை.
-
மணக்கும் வெற்றி!
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்
புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...
-
மண்ணில்லா விவசாயம்
ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை