வெற்றி என்றால் இனிக்கவேண்டும்! எப்படி? முதல் தலைமுறைத் தொழிலதிபரான சாயா தயாரித்து வென்றிருக்கும் தேன் போல்!
01-Feb-2025
By ப்ரீத்தி நாகராஜ்
பெங்களூரு
ஒரு வழிகாட்டியோ அல்லது ஆலோசகரோ உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு சுறுசுறுப்பான தேனீயைப் பின்பற்றினால் யாரும் தேவையில்லை. நெக்டார் ஃபிரஷ் (Nectar fresh) என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரரான சாயா நஞ்சப்பா, இதற்கு வாழும் உதாரணம். அவரது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 10 கோடி ரூபாயாக இருக்கிறது.
அவரது நிறுவனம் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கும் மைசூருக்கும் இடையே பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
|
100க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் சாயா பணியாற்றுகிறார். இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான பல்வேறு வகையான தேனை உற்பத்தி செய்கிறார்(புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)
|
நாட்டின் முன்னணியில் உள்ள ஹோட்டல்கலள், இப்போது தேன், ஜாம்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழ வகைகள் உள்ளிட்ட சாயாவின் நெக்டார் ஃப்ரெஷ் தயாரிப்புகளை உபயோகப்படுத்துகின்றன. 2007-ம் ஆண்டில் இருந்து சாயாவின் சுறுசுறுப்பால் நெக்டார் ஃபிரஷ் வளர்ந்திருக்கிறது.
சாயாவை முதன் முதலில் பார்க்கும்போது, சாந்தமானவராகத் தோன்றுகிறார். அவரிடம் பேச்சுக்கொடுக்கும்போதுதான் அவரது சக்தியும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதனைக் கடந்து செல்லும் தன்மையும் வாய்ந்த ஒரு தொழில்முனைவோராக, அவர் இருப்பதும் புரிகிறது.
ஒரு பெண், தொழில்முனைவோராக இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. “முதல் தலைமுறை தொழில் முனைவோராக ஆனதில் இருந்து, எனக்கென்று வழிகாட்டியோ அல்லது ஆலோசனை சொல்பவரோ யாரும் இல்லை,” என்கிறார் 43 வயதாகும் சாயா. “ஒவ்வொன்றையும் நான் சோதனை முயற்சியிலும், தவறுகளில் இருந்தும்தான் கற்றுக் கொண்டேன். இதனால் எனக்கு நேரமும், பணமும் அதிகம் செலவானது. ஆனால், உரிய பாடம் படித்துக் கொண்டேன்.”
உண்மையில் அது, சகிப்புத் தன்மை மற்றும் உறுதியுடன் கூடிய பயணமாகத்தான் இருந்தது. குடகு பகுதியில் உள்ள நல்கேரியில், ஒரு காஃபி விவசாயியின் மகளாக சாயா பிறந்தார். அவரது தாய் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை. அப்போதைய சூழல்கள் சாயாவை 12-ம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதிக்கவில்லை.
அடுத்த சில ஆண்டுகளில், அவர் பெங்களூருக்குச் சென்றார். திசை தெரியாத அந்த நகரில், சாயாவின் குடகுப் பகுதிக்கே உரிய தனிச்சிறப்பான இயல்புகளால் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஃப்ரண்ட் ஆபீஸ் பணி கிடைத்தது. ஒரு ஆண்டு கழித்து, தாமே சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு நினைவில் வந்தது தேன்!
ஒரு குடகுப் பெண்ணாக நறுமணப் பொருட்கள், காஃபி, தேன் போன்றவைகள் பற்றிய சொந்த அனுபவத்தில்தான் அவர் வளர்ந்தார். தேன் ஒரு எளிதில் பெறக்கூடியதாக, எளிதில் பயிற்சி பெறக்கூடியதாக இருந்தது. தேன் எளிதில் கெட்டுப்போகாது. உயர்வானது.
2006-07-ல் புனேவில் உள்ள மத்தியத் தேன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் கற்றுத்தரப்படும் ஒரு படிப்புதான், அவரை, தேனை பதப்படுத்துதல், செயல்படுத்துதல் குறித்த திறன்களையும், அறிவையும் கொண்டவராக மாற்றியது. அவரது நிறுவனமான நெக்டார் ஃபிரஷ் பிறந்தது.
ஃபிரஷ் ஆன தன்மை நிலைத்திருக்கும்படி, தேனை பதப்படுத்தி பாட்டில் அடைக்கும் ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். இதற்கு ஆரம்ப கட்ட முதலீடாக 10 லட்சம் ரூபாயை அவரது தாயிடம் இருந்து பெற்றார். அவரது சொந்த நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வங்கி மூலம் 10 லட்சம் ரூபாய் கடனும் வாங்கினார்.
|
நெக்டார் ஃபிரஷ் நிறுவனம், வளர்ப்பு தேனீயில் இருந்து கிடைக்கும் தேன், வனங்களில் கிடைக்கும் தேன் ஆகியவற்றுடன் இமாசல் தேன், லிட்சி (litchi)தேன், மற்றும் க்ளோவர்(clover) தேன் ஆகிய தேன்களையும் தயாரிக்கிறது.
|
பெங்களூரு அருகில் உள்ள போமன்னஹள்ளியில் 2007-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கிய சாயாவின் தேன் தயாரிப்புப் பிரிவை, காதி மற்றும் கிராமிய தொழில்கள் கழகம் ஆதரிக்கிறது. குடகு பகுதியில் உள்ள விவசாயிகள், பழங்குடியினர் ஆகியோரிடம் இருந்து, சாயா தேன் கொள்முதல் செய்தார். பின்னர், அதனை தம்முடைய பிரிவில் பதப்படுத்தி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார். இதில் ஒரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது.
எனினும், சுவையான குடகுத் தேனுக்கு சந்தையில் அதிக தேவை இருக்கிறது என்று சாயா நம்பினார். நல்ல முறையில் விநியோகத் தொடர்புகள் கட்டமைக்கப்பட்டால், தினமும், உயர்தரமான உணவுப் பொருட்கள் தேவைப்படும், விருந்தோம்பல் தொழிலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்.
“அப்போது என்ன நினைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை,” எனும் அவர், தமது தொடக்க காலங்கள் குறித்து மீண்டும் நினைவு கொள்கிறார். “என்னுடைய அனைத்துப் போட்டியாளர்களும், சர்வதேச பிராண்ட்கள். என்னைவிட கூடுதல் வசதி கொண்டவர்கள். எனவே, அவர்களை விட சிறந்ததாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.”
உலகின் பெரிய முன்னணி நிறுவனங்களான பீரென்பெர்க், டர்போ மற்றும் போனீ மாமன் (Beerenberg, Darbo, Bonne Maman) உள்ளிட்ட போட்டியாளர்களை அவர் எதிர்கொண்டார். இந்த நிறுவனங்கள், சிறிய ஸ்மார்ட் ஆன தேன் பாக்கெட்கள், ஜாம் வகைகள்மற்றும் ஹோட்டல்களில் பஃபெட் முறையிலான காலை உணவுக்குப் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் ஆகியவற்றில் (சாயா பிறப்பதற்கு முன்பிருந்து) நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
சாயாவின் தொழில், கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. சொந்த சூழல்கள் காரணமாக, அவருடைய தொழிற்சாலையை மூன்று முறை இடம் மாற்றினார். “முதலில் போமனஹள்ளியில் இருந்து, மைசூரு அருகில் உள்ள நஞ்சன்கூடு என்ற இடத்துக்கு மாற்றினேன்,”என்று நினைவு கூறுகிறார். “அங்கிருந்தும், 2010-ம் ஆண்டு, இப்போதைய இடத்துக்கு மாற்றினோம்.”
ஒவ்வொரு முறை இடம்மாற்றும்போதும், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. உடைகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமின்றி, திறன் வாய்ந்த தொழிலாளர்களையும் இழக்க நேரிட்டது. புதிய தொழிலாளர்களுக்கு மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டி இருந்தது. ஆனாலும் சாயா, எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறார். “ஒவ்வொரு முறையும், நாங்கள் புதியவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். அவர்களுடன் நல்லுறவு ஏற்படுகிறது.”
நல்கேரி, பசுமைப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்த துணிச்சலான பெண், தம்முடைய பிராண்ட்டை, அதிகம் பேர் விரும்பும் பொருளாக மாற்றும் வரையில் ஓயவில்லை.
|
தம்முடைய பங்குதார ர் ராஜப்பாவுடன் சாயா.
|
பெண் தொழில்முனைவோருக்கான வசதிகள் குறித்து எங்கும் நிறைந்திருக்கிற கோஷங்களுக்கு இடையே, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான அமைச்சகத்தில் இருந்தோ அல்லது வேறு எந்த நிறுவனத்தில் இருந்தோ நிதி, தொழில்நுட்ப உதவி, மானியம் உள்ளிட்ட எந்த வித உதவியையும் அவர் பெறவில்லை. ஒவ்வொரு முறையும் தமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும்போதும், அவர் வங்கிகளில் இருந்துதான் கடன் பெறுகிறார்.
உள்ளூர் சந்தையில், சங்கிலித்தொடர் ஹோட்டல்களான ஐடிசி., லீ மெரிடியன் மற்றும் இதர முன்னணி நிறுவனங்கள் இப்போது சாயாவின் தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.
“இன்றைக்கு, நாங்கள் சர்வதேச பிராண்ட்களின் பிறப்பிடமான ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் நுழையத் திட்டமிட்டிருக்கிறோம்,” எனும் சாயா உள்ளுக்குள் மெதுவாக சிரித்தபடி, “இந்த போட்டியானது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது,” என்கிறார்.
சாயாவின் மனது, தொழிலுக்கு ஏற்றவாறு மாறி இருக்கிறது. ஆனால்,அவரின் இதயம் சரியான இடத்தில் இருக்கிறது. “நான் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்,” என்று சொல்கிறார். சாயா தம்மால் முடிந்ததைச் செய்கிறார். அவருடைய தொழிற்சாலையைச் சுற்றி கிராமப் பகுதிகளில் இருக்கும் பெண்கள்தான், அவருடைய வலுவான 45 பேர் கொண்ட ஊழியர் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். சுய உதவிக் குழுக்கள் மற்றும் சங்க மீட்டிங்குகள் மூலம், கிராமத்துப் பெண்களிடம் அவர் உரையாற்றுகிறார். பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் வகையில் அவர்களை ஈர்க்கிறார். இதுவரை, பல்வேறு தளங்களைச் சார்ந்த 2000 பெண்களுக்கும் அதிகமானோரிடம் அவர் உரையாடி இருக்கிறார்.
இப்போது சாயா, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் பணியாற்றுகிறார். அவர்கள் எல்லோரும் ஒரே வகையிலான பயிரை வளர்கின்றனர். யுனிஃப்லோரா வகை தேன் தயாரிப்பதற்கு அவர்களை சாயா ஒருங்கிணைத்திருக்கிறார்.
“அவர்களுடைய பண்ணையில் தேனீ வளர்க்கும் பெட்டிகள் வைப்போம். அவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் அளவுக்கு ஏற்ப அந்தப் பெட்டிகளுக்கு வாடகையும் கொடுப்போம்,” என்கிறார் சாயா.
நெக்டார் ஃபிரஷ் நிறுவனத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும், 20 மொபைல் தேனீ வேன்கள் இருக்கின்றன. தேனீ பெட்டியில் சேகரிக்கப்பட்ட தேன், வனத்தேன் ஆகியவற்றுக்கிடையே யுனிஃப்லோரா வகைகளான இமாசல் தேன், லிச்சி தேன், க்ளோவர் தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான தேன்கள் அவர்களிடம் இருக்கின்றன.
அவர்களின் தனித்தன்மை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பள்ளத்தாக்குகள், வனங்களில் இருந்து கிடைத்த தேன் என்பதாகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தேனீ பாதுகாப்பு முறைகள் மற்றும் இயற்கையான மகரந்தத்தைப் பாதுகாத்தல், மற்றும் தேனின் நுண்சத்துகளைப் பாதுகாத்தல் ஆகிய முறைகளையும் கொண்டிருக்கின்றனர்.
5-8 கிராம் அளவுள்ள சிறிய பாக்கெட்கள், 100 கிராம் முதல் ஒரு லிட்டர் வரை கொண்ட ஜாடிகள், அதே போல, பெருநிறுவனங்களின் உயர்ந்த புதுமையான பரிசளிப்புப் பொருட்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலகட்டங்களில் மாதம் தோறும் ஒரு டன் அளவுக்கு தேன் தயாரித்தனர். இப்போது சாயாவின் நெக்டார் ஃபிரஷ் நிறுவனம், மாதம் தோறும் 200 டன் தேன் தயாரிக்கின்றது.
|
நெக்டார் ஃபிரஷ், தேன் தயாரிப்பு தொழிலில் ஒரு பிராண்ட் ஆக வளர்ந்து வருகிறது.
|
மைசூரில் உள்ள மத்திய உணவு மற்றும் பதப்படுத்தல் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்களை சாயா, சந்தித்துப் பேசினார். 2010-ம் ஆண்டில், பழங்களைப் பதப்படுத்தும் பிரிவை விரிவாக்கம் செய்ய இந்தச் சந்திப்பு உதவியாக இருந்தது.
“நான் அவர்களுக்குப் போதுமான அளவு நன்றி சொல்ல முடியும்,” என்கிறார் சாயா, “அவர்கள் என் குரு-க்கள்.” சாயாவுடன் கூடவே இருக்கும் தொழில் பங்குதாரர் மற்றும் நெருங்கிய உறவினரான ராஜப்பா, பெரிய தூண்போல சாயாவுக்கு ஆதரவு தருகிறார். மைசூருவில் உள்ள மைஸ்டோர் எனும் சங்கிலித் தொடர் சூப்பர் ஸ்டோரின் உரிமையாளரான ராஜப்பா, சில்லரை விற்பனைத் துறையில் பெரும் அனுபவம் கொண்டவர்.
எனினும், அண்மை காலங்களில், முழுவதுமாக நெக்டார் ஃபிரஷ் உணவுப் பொருட்கள் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான பலன்களை, எல்லோரும் பார்க்க முடிகிறது. நெக்டார் ஃபிரஷ் நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறது. தேன், காஃபி, ஜாம் வகைகள், சாஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் உள்ளிட்டவற்றுடன் பிராண்ட் ஆகப் புகழ்பெற்றிருக்கிறது.
நெக்டார் ஃபிரஷ் இணையதளத்தில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது: ஒரு தேனீ, 20 லட்சம் மலர்களில் இருந்து 50 மி.கிராம் தேனை சேகரிக்கின்றது. இதனோடு ஒப்பிடும்போது, நமது பணிச்சுமை ஒன்றும் பெரிதல்ல. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தொடர்ந்து பணியாற்றுங்கள்!
அதிகம் படித்தவை
-
கணினியில் கனிந்த வெற்றி
கொல்கத்தாவில் அபிஷேக் ருங்டா என்னும் இளைஞர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஐடி தொழிலை வெறும் 3000 ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் என்கிற அந்த நிறுவனம் இன்று 55 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
கார் காதலன்
புதுடெல்லியைச் சேர்ந்த ஜதின் அகுஜா, கார்களின் காதலனாக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். புதிய காரைப்போலவே தரசோதனைகளைச் செய்து விற்கும் அவர் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டுகிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை
-
தேநீர் கடை தந்த வெற்றி!
மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வெற்றிப் படிக்கட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை