Milky Mist

Tuesday, 28 October 2025

போர்வைகள் விற்பனையில் 9.25 கோடி வருவாய்! அசத்தும் இளைஞர்!

28-Oct-2025 By உஷா பிரசாத்

Posted 05 Jun 2021

நீங்கள் எதையும் தீவிரமாக விரும்பினீர்கள் என்றால், இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும், சதி செய்து அதை அடைய உங்களுக்கு உதவும் என்று சொல்லப்படுவதுண்டு. அப்போதுதான் கல்லூரியில் படிப்பை முடித்து வெளியேறிய புனித் பட்னி எனும் 22 வயது இளைஞர் தொழிற்சாலை ஒன்றில் பெட்ஷீட்களைப் பார்த்து அவற்றின் மீது விருப்பம் கொள்ள ஆரம்பித்தார்.

பெட்ஷீட்கள் மீதான தம் விருப்பத்தை வாய்ப்பாக மாற்றி, பெட்ஷீட்கள், கம்பளி போர்வைகள் , பெட்ஷீட் உறைகள் மற்றும் வீட்டு மரசாமான்கள் ஆகியவற்றை விற்பதன் வாயிலாக ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் ரூ.9.25 கோடி ஈட்டும் இரண்டு நிறுவனங்களை எப்படி கட்டமைத்தார் என்பது ஒரு அருமையான கதையாகும்.

புனித் பட்னி,  புனிட் என்டர்பிரைசைஸ் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு தொடங்கி பெட்ஷீட்களை விற்கத் தொடங்கினார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

2008ஆம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள ஷாகீத் பகத் சிங் கல்லூரியில் வணிகத்தில் பட்டப்படிப்பு முடித்தார். அதன் பின்னர் தமது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு திரும்பினார். அவருடைய தந்தை பரேஷ் பட்னி நடத்தி வந்த ஜவுளித் தொழிலில் உபயோகப் படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் வண்ண மைகளுக்கான முகமை நிறுவனத்துக்கு உதவியாக இருந்தார்.  

அந்த தருணங்களில் அவர் தந்தையுடன், ஜவுளி ஆலைகள், ஏற்றுமதி ஆலைகளுக்கு செல்வதுண்டு. “இது போன்று ஒரு இடத்துக்கு போயிருந்தபோது, அந்த இடத்தில் பார்த்த பெட்ஷீட்களைக் கண்டு அவற்றின் மீது விருப்பம் கொண்டேன்,” என்றார் புனித். 

“பெட்ஷீட்  மீது அழகாக அச்சிடப்பட்டிருந்த டிசைன் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் சில பெட்ஷீட்களை எனது சொந்த உபயோகத்திற்காக வாங்கினேன்.”   “என்னுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த பெட்ஷீட்கள் நன்றாக இருப்பதாகவும், எங்கே வாங்கினீர்கள் என்று கேட்க ஆரம்பித்தனர். அவர்களும் அதை வாங்க விரும்பினர். அப்போதுதான் அந்த பெட்ஷீட்களை வாங்கி விற்கலாமே என்று எனக்குள் எண்ணம் தோன்றியது.”  

அந்த தருணத்தில், அவருடைய தந்தையின் வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய வணிகத்தில் பெரும் இழப்பை சந்தித்தார். அதனால் பிறருக்கு தர வேண்டிய தொகையை  அவரால் தர முடியவில்லை. அவர் தர வேண்டிய நிலுவைத் தொகைக்குப் பதிலாக அவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பெட்ஷீட்களை வாங்கிக் கொள்வது என்று புனித் மற்றும் அவரது தந்தை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

  திவால் ஆகும் நிலையில் இருந்த நிறுவனத்தில் இருந்து வாங்கிய பெட்ஷீட்களைக் கொண்டு அவரும், அவரது தந்தையும் இணைந்து ஒரு பங்குதாரர் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு பட்னி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் தொடங்கினர்.
பெட்ஷீட்கள் மற்றும் இதர பொருட்களை சதர்வாலாஸ் என்ற பெயரில் பல்வேறு இணைய சந்தைப்படுத்துதல் பக்கங்களில் புனித் விற்பனை செய்தார்


வாங்கி பயன்படுத்தியவர்களின் பரிந்துரை அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களை தாண்டி மொத்த விற்பனையை நோக்கி வணிகம் சீராக வளர்ச்சியடையத் தொடங்கியது. இ-வணிக சில்லறை விற்பனையில் கவனம் செலுத்துவதற்காக ஆரோஹி கிரியேஷன்ஸ் என்ற தனி உரிமையாளர் நிறுவனத்தை 2018ஆம் ஆண்டு தொடங்கினார்.

  பட்னியின் தற்போதைய ஆண்டு வருவாய் ரூ.8 கோடி, ஆரோஹியின் ஆண்டு வருவாய் ரூ.1.25 கோடி.   பட்னி மொத்த விற்பனையாளர்களுக்கு பெட்ஷீட்களை விநியோகித்தது. ஆரோஹி நிறுவனம் சதர்வாலாஸ்  என்ற பிராண்ட் பெயரில், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய தளங்கள், முகநூல், மீஷோ, உதான் போன்ற பி2பி தளங்கள் வாயிலாகவும் விற்பனையில் ஈடுபட்டது.   பெட்ஷீட்கள் வாயிலாக 65 சதவிகித வணிகம் நடைபெற்றது.

அவர்கள் பெட்ஷீட் கவர்கள், திரைகள், குஷன் கவர்கள், டேபிள் துணிகள், நாப்கின்கள் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்தனர்.   ஜெய்ப்பூர் அருகில் அச்சு மற்றும் கைவினை திறன் மிகுந்த சங்கனர் புறநகர் பகுதியில் திறமை வாய்ந்த கலைஞர்களை கொண்ட மூன்று அச்சு பிரிவுகளில் பட்னியின் வண்ணமயமான பெட்ஷீட்கள் கைகளால் உற்சாகமாக அச்சிடப்படுகின்றன.  

கல்லூரியில் இருந்து வெளியே வந்த உடன் தொடங்கிய தொழில் முனைவு பயணத்தைத் திரும்பி பார்க்கும் பட்னி, “முதலில் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தேன். பின்னர் மும்பை, புனே மற்றும் டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு சந்தையை விரிவுபடுத்த தீர்மானித்தேன். “

  “சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு சென்று அங்குள்ள சில்லறை விற்பனையாளர்களை சந்தித்தேன். மும்பை, புனேயில் எனக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.” ஆரம்ப காலகட்டத்தில் மூன்றாம் நபர்களிடம் இருந்து அச்சிடப்பட்ட பெட்ஷீட்களை வாங்கி விற்பனை செய்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு, கையால் இயக்கும் பிரிண்டிங் இயந்திரம், ஸ்கிரீன் பிரிண்டிங் பிரிவுகளை அவர் சொந்தமாக அமைத்தார்.

அவர் இரண்டாவது பிரிவை 2014ஆம் ஆண்டும், மூன்றாவது பிரிவை 2017ஆம் ஆண்டும் தொடங்கினார்.   18,000 ச.அடி, 10,000 ச.அடி கொண்ட இரண்டு பிரிவுகளை பட்னி சொந்தமாக வைத்திருக்கிறார். 10,000 ச.அடி கொண்ட மூன்றாவது பிரிவு வாடகை இடத்தில் செயல்படுகிறது. இந்த மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 55 பேர் பணியாற்றுகின்றனர்.
கல்லூரியில் இருந்து வெளியே வந்த உடன் 22 வயதில் பட்னி வணிகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்


104 நூல் எண்ணிக்கையில் இருந்து 300 எண்ணிக்கை நூல் வரை பல்வேறு வித்தியாசமான தரங்களில் 100 சதவிகிதம் அளவுக்கு பருத்தியை தன்னுடைய பொருட்களுக்கு பயன்படுத்துகிறார்.

  “ நாங்கள் மேற்கொள்ளும் கவனமான அச்சு வடிவங்கள் ஒவ்வொரு பெட்ஷீட்டையும் தனித்துவம் வாய்ந்ததாக தனிவகையாக உருவாக்குகின்றன,” என்றார் புனித்.   பெட்ஷீட்கள், படுக்கை உறைகள், கம்பளி போர்வைகள் ஆகியவை பல வண்ணங்களில் மயக்கும் வடிவமைப்புகளில் வருகின்றன. இண்டிகோ நீல நிற இயற்கையான வடிவமைப்பு, முகலாய சர்பாக் கை-அச்சால் அச்சிடப்பட்ட கலெக்ஷன்கள், முகலாய மலர் உருவங்கள், மற்றும் மலர்-ஜால் படுக்கை உறைகள் ஆகியவையும் உள்ளன.  

ஆரோஹி கிரியேஷன்ஸ் விற்பனை செய்யும் படுக்கை விரிப்புகள் ரூ.949 முதல் ரூ.2400 வரை உள்ளன. பட்டுத் துணியால் ஆன படுக்கை விரிப்புகள், படுக்கை உறைகள் ரூ.3000 முதல் ரூ.3,600 வரை விற்கப்படுகின்றன.  

இப்போது பட்னி இந்திய சந்தையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய முக்கிய சந்தைகளிலும், தொடர்ந்து பெங்களூரு, கேரளா ஆகிய தென் பகுதிகளில் விற்பனையில் ஈடுபடுகிறது.   தமிழ்நாட்டின் திருப்பூர், பல்லடம் மற்றும் ஈரோடு போன்ற ஜவுளி தொழில் மையங்களில் இருந்தும் மற்றும் ஜெய்ப்பூர் அருகில் உள்ள கிஷன்கார்க் பகுதியில் இருந்தும்  பருத்தித் துணிகளை புனித் வாங்குகிறார்.

  பொருட்களை துவைத்தல், சாயம் பூசுதல், அச்சிடுதல், தைத்தல் மற்றும் பேக்கிங் செய்தல், தரம் சோதித்தல் ஆகியவை அவருடைய ஆலையில் மேற்கொள்ளப்படுகிறது.   பெட்ஷீட்களை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் பணத்தை மீண்டும் வணிகத்தில் புனித் முதலீடு செய்கிறார். எனவே, இதுவரை வெளியில் இருந்து எந்த ஒரு நிதியையும் அவர் பெறவில்லை.  

முதல் ஆண்டில் புனித் என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.8 லட்சம் என்ற ஆண்டு வருவாயை பதிவு செய்தது. இரண்டாம் ஆண்டில் ரூ.19 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டியது. அதில் இருந்து இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 100 சதவிகிதம் அளவுக்கு அதிகமாக வளர்ச்சி பெற்றது.   2020ஆம் ஆண்டில் பெருந்தொற்று தாக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது.

“ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் எந்த விற்பனையும் நடக்கவில்லை,” எனும் அவர், “எங்களுக்கு மூலப் பொருட்கள் கொடுத்தவர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எங்களின் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் எந்தவித பணமும் வரவில்லை. அவர்களும் கஷ்டத்தில் இருந்தனர்.

  ”தீபாவளி சீசன்தான் எங்களுக்கான கவுகளை திறந்தது. பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கத் தொடங்கியது. வணிகம் முன்னேற்றம் அடையத் தொடங்கியது’’
  கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பெரும் அளவில் பாதிப்பு அடைந்தது, பட்னி என்டர்பிரைசஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு பலன் தருவதாக இருந்தது

வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் சீன நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவல் காரணமாக பெரும் சரிவை எதிர்கொண்டதாக புனித் கூறுகிறார்.

  “எங்களுடைய (சில்லறை) வணிகர்கள் சீனாவில் இருந்து வாங்குவதை நிறுத்தினர். முக்கியமாக ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்தில் எங்களை போன்றோருக்கு இது உதவியது,” என்கிறார் அவர்.   புனித்தின் தந்தை, பட்னி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறார்.

இப்போதும் அவர் தனது வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஜெர்மனி நிறுவனத்தின் விநியோகஸ்தராக இருக்கிறார். புனித்தும் அவரது வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கிறார்.   புனித் மனைவி மனிலா, மனிலா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் மரகதங்கள், வைரங்கள் மற்றும் மாணிக்க கற்களில் இருந்து நகைகளை வடிவமைக்கும் நகை உற்பத்தியாளராக இருக்கிறார்.   இந்த தம்பதிக்கு மூன்று வயதான ஆரோஹி என்ற மகள் உள்ளார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The success story of a hair stylist who owns a car rental business with 68 luxury cars

    வெற்றிக்கலைஞன்

    பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்

  • Success from the campus

    வென்றது கல்லூரிக் கனவு!

      கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும்  கட்டுரை.

  • A cup full of success

    தேநீர் கடை தந்த வெற்றி!

    மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.

  • standing out of the crowd, he achieved Success

    வெற்றி மந்திரம்

    ராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • rags to riches builder

    தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Tea maker

    தேநீர் காதலர்!

    தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஜோசப் ராஜேஷ் ஒரு தேநீர் காதலர். வங்கியில் வேலை பார்த்து பின்னர் அதை விட்டுவிட்டு தேநீர் கடையைத் தொடங்கினார். இப்போது சங்கிலித் தொடர் தேநீர்க் கடைகளைத் தொடங்கி ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிலால் கான் எழுதும் கட்டுரை