1500 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகும் செருப்பு பிராண்டின் தலைவர் ஒரு கம்யூனிஸ்ட்!
21-Nov-2024
By ரெனிதா ரவீந்திரன்
கோழிக்கோடு
தொழில் துறையில் ஆச்சரியங்கள் தீருவதே இல்லை. விகேசி மம்மது கோயா நிகழ்த்தியிருப்பதும் அப்படி ஒரு ஆச்சரியமே. விகேசி என்ற புகழ்பெற்ற காலணி பிராண்டின் தலைவராக இருக்கும் 79 வயதான இவர் ஒரு தீவிரமான கம்யூனிஸ்டும் கூட. விகேசி ஆண்டுக்கு 1500 கோடி விற்பனையாகும் பிராண்ட்!
சமீபத்தில்தான் கோழிக்கோடு முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயராக தேர்வு ஆகியுள்ளார் கோயா. எளிமையான நிலையிலிருந்து தொடங்கி பெரும் உச்சியைத் தொட்ட இவரது வளர்ச்சிக்கதை அதி்சயங்கள் நிரம்பியது.
|
சிபிஎம் கட்சியைச் சேர்ந்த விகேசி மம்மது கோயா, கோழிக்கோடு மேயர். அத்துடன் 1500 கோடி விற்பனை செய்யும் விகேசி காலணி நிறுவன தலைவர். |
உறுதியான கம்யூனிஸ்ட், ஒரு தொழிலதிபராகவும் இருப்பது அரிதிலும் அரிதுதானே. ஆனால் தனக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் தான் தொழில்துறையில் ஜொலிக்க உதவி செய்வதாக கோயா கருதுகிறார்.
டீ விற்பவராகவும் ஒப்பந்தத் தொழிலாளியாகவும் பல ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு உண்டு. அதனால் கோயா தன் நிறுவனத்தில் நிறைய தொழிலாளர் சார்பான கொள்கைகளை வகுத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த கோயாவுக்கு குழந்தைப்பருவம் ஏழ்மையில் கழிந்தது. ஏழாம் வகுப்போடு பள்ளி செல்வது நின்றது.
கோழிக்கோட்டில் ஒரு தீக்குச்சி தொழில்சாலையில் வேலை பார்த்தார். அங்கே தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பாடுபட்டதாலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனதாலும் அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டார். அறுபதுகளில் அவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாக்குமரிக்கு வந்தார். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்தார். பின்னர் டீக்கடை வைத்தார்.
ஆனால் அவர் சின்னதாகத் தொடங்கினாலும் கூட பெரிதாக வருவதற்கான கூறுகளை தன்னுள்ளே கொண்டிருந்தார். 1967-ல் கேரளா திரும்பியதும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தீக்குச்சிகளுக்கு கச்சாப்பொருட்களை அளிக்கும் தொழிலைத் தொடங்கினார்.
இந்த மூன்று நண்பர்களின் முதலெழுத்தே விகேசி என்ற பிராண்ட் ஆனது. அவர்கள்: வி மம்மது கோயா, கே செய்தலவி, சி செய்தாலிகுட்டி. எண்பதுகளில் இதே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் அங்கே அதிகரிக்கும் வரை தொழில் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. கச்சாப்பொருள் தேவை குறைந்ததாலும் தீக்குச்சிக்கான மரம் கிடைப்பது கஷ்டமாக இருந்ததாலும் 84-ல் இந்த தொழிலை மூடவேண்டி வந்தது.
|
தேர்தலின் போது பிரச்சாரத்தில் கோயா |
ஆனால் கோயா மனம் தளரவில்லை. வேறு வாய்ப்புகளைத் தேடி, ஹவாய் ஷீட்கள் தயாரிக்க முடிவு செய்தார். அப்போது அதற்குத் தேவை அதிகமாக இருந்தது. கேரளாவில் ஹவாய் செருப்பு செய்யும் நிறுவனங்கள் நிறைய இருந்தன. அவை செருப்புகளின் அடிப்பாகத்துக்கு ஹவாய் ஷீட்டுகளைப் பயனடுத்தின.
தீக்குச்சித் தொழில் செய்த இடத்திலேயே புதிய தொழிலையும் தொடங்கினார். வங்கிக் கடன், உள்ளூர் சிட்பண்ட் ஆகியவை மூலம் மூலதனம் தயார் செய்து ஆரம்பித்தார். தொழில் சூடுபிடித்தது.
கோழிக்கோட்டில் நல்லம் என்ற இடத்தில் அவர் தொடங்கிய தொழிலில் 30 லட்சம் முதலீடு. 20 பேர் வேலை செய்தனர்.
1985-ல் விகேசி சொந்தமாக ஹவாய் செருப்புகளைத் தயார் செய்தபோது வரவேற்பு அதிகரித்தது.
இந்த காலணி நன்றாக உழைக்கும். தரமாகவும் வசதியாகவும் விலை குறைவாக இருந்ததாலும் தொழிலாளர்களின் வரவேற்பைப் பெற்று இருந்தது. கோயாவின் கம்யூனிஸ்ட் தத்துவத்துக்கும் இது ஒத்துப்போனது. குறைந்த விலையில் பொதுமக்களுக்கான செருப்பு என்பது கம்யூனிச தத்துவத்துடன் பொருந்துவதாகத் தோன்றியது. இந்த ஹவாய் செருப்புதான் விகேசியை மாநில எல்லைகளைத் தாண்டி விரிவடைய உதவி செய்தது.
|
கோயா கோழிக்கோடு மேயராக பதவி ஏற்றுக்கொண்டார் |
“கேரளாவுக்கு வேலைக்கு வரும் தமிழ் தொழிலாளர்கள், ஹவாய் செருப்புகளை தங்கள் ஊரிலும் பிரபலமாக்கினார்கள். எனவே அந்த சந்தையிலும் நாங்கள் மெல்ல நுழைந்தோம்,” என்கிறார் கோயா.
இப்போது விகேசிக்கு கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. கேரளாவில் நான்கு இடங்களில் உற்பத்தி அலகுகள் உள்ளன.
அவருக்கு தொழில்நுட்பம் பற்றி ஏதும் தெரியாத போதிலும் அவர் ஐரோப்பாவில் இருந்து நவீன கருவிகளை வாங்கி, சந்தையில் புதிய போக்குகளை அறிமுகம் செய்துள்ளார்.
ஆனால் 90களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஹவாய் செருப்புகளுக்குப் போட்டியாக பிவிசி செருப்புகள் வந்தன. தாய்லாந்து, தைவானில் இருந்து அவை இறக்குமதி ஆயின. கோயா யோசித்தார். அவரே கேரளாவில் பிவிசி செருப்புகளைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
“எங்களுக்கு தொழில்நுட்ப அனுபவம் இல்லாவிட்டாலும் நாங்கள் பரிசோதனை செய்துபார்க்க முடிவு செய்தோம். அதுதான் எங்களுக்கு வளர்ச்சி அடைய உதவி செய்தது என்று நினைக்கிறேன்,” என்கிறார் கோயா.
பின்னர் மெதுவாக பிவிசி காலணிகள் வரவேற்பை இழந்து 2006-7 வாக்கில் பாலியூரத்தேன் காலணிகள் அவற்றின் இடத்தைப் பிடித்தன. இந்த வகைக் காலணிகளிலும் விகேசி சந்தையின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆனது.
விகேசியின் அடுத்த திருப்பம், இளைய தலைமுறையின் பங்கேற்பால் வந்தது.
கோயாவின் மகன்கள் ரசாக் (எம்பிஏ), நௌஷத் (எம்டெக், பாலிமர் சையன்ஸ் அண்ட் ரப்பர் டெக்னலாஜி) ஆகிய இருவரும் இந்த குழுமத்துக்கு தலைமை வகிக்கின்றனர். இயக்குநர்களாக சிறந்த நபர்களை நியமித்து, வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளனர்.
|
கோயா மேயராகப் பதவிப் பிரமாணம் ஏற்கிறார் |
கோயாவின் மனைவியும் மகளும் இல்லத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள். ரசாக்கின் மனைவி சமீபகாலமாக விகேசிக்கு காலணிகளை வடிவமைக்க ஆரம்பித்துள்ளார். விகேசி குழுமத்தில் இப்போது 17 தனியார் நிறுவனங்கள் உள்ளன. 30 இயக்குநர்கள் அவற்றைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
இந்த முன்னேற்றப் பாதை தனி மனிதரின் வாழ்க்கையைப் பற்றிய கதை மட்டும் அல்ல. ஒரு பிராந்தியமே முன்னேறிய கதை. இன்று கேரளாவில் ஒரு காலத்தில் ஓடுகள், மரம் ஆகிய தொழில்களால் நிரம்பி இருந்த கோழிக்கோடு தொழில் பிராந்தியம் காலணித் தொழிலில் வளர்ந்துகொண்டு இருக்கிறது. இது காயாவின் முயற்சியால் உருவானதாகும்.
அப்பிராந்தியத்தில் மட்டும் சுமார் 150 சிறு மற்றும் பெரிய காலணி நிறுவனங்களும் 50 காலணி உபப்பொருட்கள் செய்யும் நிறுவனங்களும் உள்ளன. “எங்களிடம் தொழில்நுட்பமும் திறனும் உருவான பின்னர் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து காலணி தயாரிக்கும் நிறுவனங்களை அமைக்கத்தூண்டினோம்,” என்கிறார் கோயா.
கோழிக்கோட்டில் கேரள மாநில சிறுதொழில் சங்கம் பல காலணி கண்காட்சிகளை விகேசி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது.
இருப்பினும் ஒவ்வொரு செயலுமே தொழிலாளர் நல கொள்கைகளுடன் செய்யப்படுகின்றன. காலணி கிராமம் என்ற பெயரில் குடும்பத்தலைவிகளுக்கு காலணி உப பொருட்களைச் செய்ய பயிற்சி அளிக்கிறது கோயாவின் தலைமையில் இயங்கும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம்.
இதுவரை 1600 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பலருக்கு வேலைஅளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். நிறுவனங்கள் அவர்கள் இல்லத்துக்கே மூலப்பொருட்களை அளித்து, செய்து முடித்தபின் பொருட்களை வாங்கிக்கொள்கின்றன. இந்த பிராண்டின் வெற்றிக்கு தொழிலாளர் நலக் கொள்கைகளே முக்கிய காரணம் என்று கோயா நம்புகிறார்.
|
1985-ல் கோழிக்கோட்டில் ஒரு நிறுவனத் திறப்பு விழாவில் உரையாற்றுகிறார் இளைஞரான கோயா. |
நிறுவனத் தொழிலாளிகளுக்கு வசதியான தங்குமிடங்களை விகேசி அளிக்கிறது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் இதுபோன்ற ப்ளாட்கள் உள்ளன. தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
விகேசி அறக்கட்டளை, பெய்போர் வளர்ச்சித்திட்ட அறக்கட்டளை ஆகியவையும் பள்ளிகளைத் தத்தெடுத்தல், மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டித்தருதல், மருத்துவ உதவிகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.
நீங்கள் முதன்மையாக ஒரு தொழிலதிபரா? கம்யூனிஸ்டா என்று கேட்டால் கோயா கம்யூனிஸ்ட் என்கிறார்.
“நான் தொழிலதிபர் ஆவதற்கு மிகவும் முன்பாகவே சிபிஎம் செயல்பாட்டாளராக இருந்தேன்,” என்கிற கோயா சினிமாக்களில்தான் தொழிலதிபர்கள் கட்சிக்கு எதிரிகளாகக் காண்பிக்கப்படுகிறார்கள் என்றும் சொல்கிறார். “இந்த பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் கட்சிக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் எங்கள் தொழிலாளர்கள், யூனியன்களுடன் நல்லுறவு கொண்டுள்ளோம். பிரச்னை வந்தால் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். தொழிலாளர்களின் நலனில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்,” என்கிறார்.
|
மகிழ்ச்சியான குடும்பம்: கோயா தன் மனைவி மகன்கள், மருமகள்களுடன் |
சிங்கப்பூர், மலேசியா, ஜிசிசி நாடுகளில் வெற்றிகரமாக கால்வைத்தபின்னர் ஐரோப்பாவில் நுழையவும் விகேசி திட்டமிட்டு வருகிறது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெய்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2001- 2006 வரை இருந்தார் கோயா. அத்துடன் கிராம பஞ்சாயத்து, மாவட்ட கவுன்சில், மாவட்ட பஞ்சாயத்து, கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றிலும் பதவி வகித்துள்ளார். அவர் சமீபத்தில் கோழிக்கோடு மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிபிஎம்மின் உள்ளூர் குழுவின் உறுப்பினராக இருக்கும் அவர் அதன் விவசாயிகள் சங்கத்திலும் மாவட்ட உறுப்பினராக இருக்கிறார். இப்போது நகருக்குச் செய்ய பல திட்டங்கள் வைத்துள்ளார். குப்பை மேலாண்மை, சிறப்பான போக்குவரத்து, தெருவிளக்குகள், சிறந்த அலுவலர்களின் சேவை, மக்களின் தேவைகளை உடனே நிறைவேற்றல் போன்றவற்றில் அவர் கவனம் செலுத்த விரும்புகிறார்.
இது அவர் முன் இருக்கும் இன்னொரு சவால். ஆனால் சவால்களை எதிர்கொள்வதையே அவர் தன் வாழ்க்கையாகக் கொண்டுள்ளார் என்பதற்கு அவரது கடந்த கால வெற்றிக்கதையே சாட்சி.
அதிகம் படித்தவை
-
சிறிய கடையில் பெரிய கனவு
அரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை
-
ஷாம்பூ மனிதர்!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பத்து ரூபாய் பழரசம்!
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
அவங்க ஏழு பேரு…
சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை