Milky Mist

Thursday, 22 May 2025

பத்து லட்சத்தில் தொடங்கி, ஆயிரம் கோடியைத் தாண்டி... உ.பி.யின் எண்ணெய் அரசர்!!

22-May-2025 By சோபியா டேனிஷ்கான்
பரேலி

Posted 18 Jun 2021

1980-களில் சிறிய நகராக இருந்த உத்தரபிரதேசத்தின் பரேலி போன்ற இடத்தில் இருந்து 2500 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அதிகம் விற்பனையாகும் நுகர்வு பிராண்ட்டை கட்டமைத்து எடுத்துச் செல்வதற்கு இந்த மனிதரின் தொலைநோக்கு கொண்ட வணிக மனமே துணைபுரிந்தது.

கன்ஷ்யாம் கண்டேல்வால்  தமது 29வது வயதில் தமது சகோதரர் உதவியுடன் 1985ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் முதலீட்டில் பங்குதாரர் நிறுவனமாக வணிகத்தைத் தொடங்கினார். பெயில் கொல்ஹு(Bail Kolhu) என்ற பிராண்ட் பெயரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கடுகு எண்ணெயை இந்த நிறுவனம் விற்பனை செய்தது.

 கன்ஷ்யாம் கண்டேல்வால், எம்.டி, பிஎல் அக்ரோ, 1986 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் முதலீட்டில்  கடுகு எண்ணெய் ஆலையை தொடங்கினார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

முதல் ஆண்டில் ரூ.80  லட்சமாக ஆண்டு வருவாயை பதிவு செய்ததுடன் ஆண்டுதோறும் வணிகம் வளர்ச்சியடைந்து 1998ஆம் ஆண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது. 2007ஆம் ஆண்டு இன்னும் கூடுதலாக பப்ளிக் லிமிடெட் நிறுவனமானது.  

2000ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் ரூ.100 கோடி  ஆண்டு வருவாய் என்ற இலக்கைத் தாண்டியது. 2010த்தில் ஆண்டு வருவாய் ரூ.1,000 கோடியைத் தொட்டது.   2018ஆம் ஆண்டு நோவ்ரீஸ்(Nourish) என்ற பிராண்ட் பெயரில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை இந்த நிறுவனம் தொடங்கியது. மேலும் இந்த நிறுவனம் நோவ்ரிஸ் பொருட்களை மட்டும் விற்கும் 12 சில்லரை விற்பனைக் கடைகளை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் சில கடைகளை இந்த நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

கன்ஷ்யாம்,  அறிவியல் பட்டதாரி. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்து கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபடும்  வணிக குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவராவார்.    “என் தாத்தா இந்த வணிகத்தை தொடங்கினார். எனவே, என் தந்தை இந்த தொழிலை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். அவருக்குப் பின்னர் அவரது சகோதரர் முன்னெடுத்துச் சென்றார்,” என்று கூறும் கன்ஷ்யாம் (64), பிஎல் அக்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.    

கன்ஷ்யாம் தமது ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வளர்ந்தார். நைனிடாலில் உள்ள பிர்லா வித்யா மந்திரில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் எட்டாவாவில் உள்ள பிரதாப்கரில் இருக்கும் கே.பி இன்டர் கல்லூரியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்தார்.

   “பரேலியில் உள்ள விஷ்ணு இன்டர் கல்லூரியில் 12ஆம் வகுப்பு முடித்தேன். பரேலி கல்லூரியில் இருந்து பிஎஸ்சி(பொது) படித்தேன். நான் படிப்பில் சுமார்தான் என்றாலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்,” என்கிறார். 

 பிஎல் அக்ரோவின் செயல் இயக்குநரும் தமது மகனுமான ஆஷிஷுடன் கன்ஷ்யாம்


 “1975ஆம் ஆண்டு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. என்னுடைய சகோதரியும், அவரது கணவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.”    “எனவே அவர்களின் ஊரான பிரதாப்கருக்குச் சென்றேன். அவர்களின் ஜெய் பாரத் ஜெனரல் ஸ்டோர் என்ற உள்ளாடை வணிகத்தை ஆறுமாதத்துக்கு நான் நடத்தினேன். என்னுடைய முதல் வணிக முயற்சி இதுதான்.”  

அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், கன்ஷ்யாம் வீட்டுக்குத் திரும்பினார், பட்டப்படிப்பை முடித்தார்.   இதன் பின்னர், தமது தந்தையும், அவரது சகோதரரும் தொடங்கிய இன்னொரு வணிக நிறுவனமான லால்டா பிரசாத் கிஷன்லால் கெமிஸ்ட் கடையை நடத்த ஆரம்பித்தார்.

   “என் தந்தை உடல்நலக்குறைவாக இருந்தார். எனவே அந்தக் கடையை நான் நடத்தினேன்,” என்றார் அவர்.   அவரது அறிவியல் படிப்பின் பின்னணியுடன் வணிகமும் இணைந்திருந்ததால், குடும்ப வணிகமான கடுகு எண்ணெய் தொழிலில் அவருக்கு மேலும் ஆர்வம் ஏற்பட்டது.  “என்னுடைய குடும்பத்தினர், நான் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தனர். ஆனால், என்னுடைய மனதெல்லாம் குடும்ப வணிகத்திலேயே நிலைத்திருந்தது,” என்றார் அவர்.    “எண்ணெய் வணிகம் குறித்து நான் மிகவும் கவனமாக ஆய்வு செய்தேன். கலப்படம் குறித்த புகார்கள் காரணமாக இந்த வணிகத்துக்கு நல்ல பெயர் இல்லை என்பது தெரிந்தது.”   

தரமான எண்ணெய் என்பதை பாதிக்கும் வகையில் சில விஷயங்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார். கடுகு விதைகளில் இருந்த ஒரு வித கொழுப்புகளின்  கலவையை சார்ந்தே எண்ணெயின் தரம் இருப்பதை கண்டுபிடித்தார். எனவே அவர் செக்கில் ஆட்டிய எண்ணெய் வணிகத்துடன் தமது சொந்த நிறுவனத்தை 1986ஆம் ஆண்டு தொடங்கினார்.

   “செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயில், பிசுபிசுப்பு தன்மையை உருவாக்கும் ஒருவித கொழுப்புகளைப் பிரித்தெடுக்கமுடியும். எனவே எண்ணையின் தரம் கட்டுப்படுத்தப்பட்டது,” என்று விவரிக்கிறார்.

  கன்ஷ்யாம் தந்தை 1981ஆம் ஆண்டு காலமானார். 1985ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் சகோதரர் வணிகத்தை கவனித்துக் கொண்டார். இவருக்குப் பங்காக ரூ.10 லட்சம் கொடுத்தார்.

கன்ஷ்யாமின் மகள்  ரிச்சா கண்டேல்வால் பிஎல் அக்ரோ பிராண்ட் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.


 “நான் அந்தப் பணத்தைக் கொண்டு பெயில் கொல்ஹுவை 1986ஆம் ஆண்டு தொடங்கினேன்,” என்றார் கன்ஷ்யாம். தமது சகோதரர் திலீப் உடன் இணைந்து இந்த வணிகத்தை தொடங்கினார். 1990ஆம் ஆண்டு அக்மார்க் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அந்த நாட்களில் தரமான பொருட்களை அடையாளம் காண்பதற்கு அக்மார்க் பதிவு அவசியமாக குறிப்பிடப்பட்டது.     

மனித உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்ற வதந்தி பரவல் காரணமாக கடுகு எண்ணெய்க்கு அரசு தடை விதித்ததால் இந்த நிறுவனம் 1998ஆம் ஆண்டு சிக்கலை சந்தித்தது.

  “கடுகு எண்ணெய் எந்தவித தீங்கும் விளைவிக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்தேன். எனவே எங்களது விற்பனை அதிகரித்தது. இந்த நேரத்தில்தான் நான் உபியின் எண்ணெய் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தேன்,” என்று கடந்த காலங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

இந்த நிறுவனம், 1991ஆம் ஆண்டு முதல் வாயு க்ரோமாடோகிராபியை உபயோகித்து எண்ணெயின் சுத்தத்தை சரிபார்க்கும் முறையை கடைபிடித்து வந்தது என்று சொல்கிறார். அரசாங்கம் இதே முறையை இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக பாட்டிலில் அடைக்கப்பட்ட கடுகு எண்ணெயை பிஎல்அக்ரோ நிறுவனம்தான் அறிமுகம் செய்தது என்கிறார்.

 “நான் சிங்கப்பூர் சென்றபோது அங்கு பார்த்ததை வைத்து பாதி  தானியங்கி முறையிலான பேக்கேஜ் மெஷின்களை உபயோகிக்கின்றோம்.”  

 “2002ஆம் ஆண்டு எண்ணெயை சில்லறையில் அளந்து விற்பனை செய்யக்கூடாது என்று அரசு தடைவிதித்தது. ஆனால், இது 2009ஆம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. ஆனால், நாங்கள் எப்போதுமே ஒரு அடி முன்னால் இருக்கின்றோம் என்பதை நான் தாழ்மையுடன் நம்புகின்றேன்,” என்படி சிரிக்கின்றார் கன்ஷ்யாம்.  

ஐரோப்பாவுக்கு சென்றபோது,  சில வகையான கலவை எண்ணெய்களை கண்டதாகவும், அது கலவை எண்ணெய் என்ற பெயரில் விற்கப்படுதையும் கண்டார்  கன்ஷ்யாம் . அதை இந்தியாவில் செய்தால் கலப்படம் எனக் கூறப்பட்டது.

 தொழிற்சாலையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட பெயில் கொல்ஹு கடுகு எண்ணெய்  

“ “நான் இந்தியா திரும்பி வந்ததும், கலவை எண்ணெய் தயாரித்து விற்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்தியாவில் கலவை எண்ணெய் விற்பதற்கான முதல் அனுமதியை எங்கள் நிறுவனம் பெற்றது,” என்று நம்மிடம் பகிர்கிறார்.

பாரம்பர்ய வணிகத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததில் முன்னோடியாக திகழ்கிறார்.   1990-2003 வரை பரேலியில் மாதவ் வாடியா தொழிலக பகுதியில் அவர்கள் ஆலை செயல்பட்டது. பின்னர் பார்சா கெடா தொழிலகப் பகுதிக்கு அவர்கள் மாறினர்.  

2006ஆம் ஆண்டில் பார்சா கெடாவில் தினமும் 50 டன்கள் பேக்கேஜிங் உற்பத்தி திறன் கொண்ட முதல் சுத்திகரிப்பு ஆலையை தொடங்கினர். இப்போது இந்தப் பிரிவில் தினமும் 550 டன்களாக உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  

2011ஆம் ஆண்டு தினமும் 250 டன்கள் பேக்கேஜிங் திறன் கொண்ட இன்னொரு ஆலையை  ஜோகர்பூர் தொழிலக பகுதியில் தொடங்கினர்.  இந்த நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு முழுவதும் தானியங்கி ஆலையை உருவாக்கியது. இந்த ஆலையில் சுத்திகரிப்பு திறன் நாள் ஒன்றுக்கு 600 டன்களாக அதிகரித்தது. தினமும் பேக்கேஜிங் திறன் என்பது 1100 டன்களாக அதிகரித்தது.  

கன்ஷ்யாம் 1977ஆம் ஆண்டு ராகிணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆஷிஷ் காண்டேல்வால்(43) நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருக்கிறார். அவரது மகள் ரிச்சா காண்டேல்வால் (40) பிராண்டின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

ஆலையின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவதில் ஆஷிஷ் கவனம் செலுத்தி வருகிறார். ”பாதி தானியங்கி முறையில் இருந்து முழுமையாக தானியங்கி முறையில் பேக்கேஜ் செய்யும் வகையில் ஆலையை முன்னெடுத்தோம். எங்கள் தொழிலில்,நாங்கள் நாட்டிலேயே சிறந்ததாக விளங்குவதை அது சாத்தியப்படுத்தியது,” என்கிறார் ஆசிஷ்

.    “நான்  சிறுவனாக இருந்து வளர்ந்த காலங்களில், எப்படி என் தந்தை வணிகத்தை அதன் தொடக்கத்தில் இருந்து கட்டமைத்தார் என்பதையும், இவ்வளவு பெரிய உயரத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன். அவருடைய இந்த பயணம் எப்போதுமே என்னை ஈர்க்கிறது. அதே நேரத்தில், எங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று மேலும் விரிவாக்கம் செய்வது என்பது ஒரு சவாலாகத்தான் இருக்கும்.”

கன்ஷ்யாம் தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன்.

ரிச்சா, எம்பிஏ படிப்பை முடித்த உடன் அப்படியே பிஎல் அக்ரோவில் இணைந்தார். “டெல்லியில் பிஎல்அக்ரோவுக்கு சந்தையை ஏற்படுத்தும் முதல் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் இருந்து என்னுடைய பணி என்பது புதிய சந்தையை கண்டுபிடிப்பதிலும், எங்களுடைய பிராண்ட்டை இன்னும் அதிகம் பேருக்கு கொண்டு செல்வதுமாகத்தான் இருக்கிறது.'' 

 “அண்மையில் நாங்கள், விளம்பரத்துக்கு செலவழிக்கும் தொகையை அதிகரித்திருக்கின்றோம். பெரும் அளவிலான தனித்தன்மையான பிராண்ட் கடைகளை திறந்திருக்கின்றோம். தவிர எங்களுடைய வணிகத்துக்கு இ-வணிகத்தை முன்னெடுப்பதற்கான உற்சாகமான பணியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்று நம்பிக்கையோடு அவர் சொல்கிறார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Success through low price

    குறைந்த விலையில் நிறைந்த லாபம்!

    ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.

  • A Sweet Success

    அடையாற்றின் கரையில்..

    விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • The success story of a hair stylist who owns a car rental business with 68 luxury cars

    வெற்றிக்கலைஞன்

    பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்

  • The Young Hotelier

    வேர் ஈஸ் த பார்ட்டி?

    வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • On the banks of River Vaigai existed a great Tamil civilization

    கீழடி: உரக்கக்கூவும் உண்மை

    மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.