Milky Mist

Friday, 19 April 2024

அன்று 5000 ரூபாய் முதலீட்டில் பொக்கே விற்பனை தொடங்கிய விகாஸ், இன்று 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்

19-Apr-2024 By பிலால் ஹாண்டு
புதுடெல்லி

Posted 24 Sep 2017

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு, காதல் வயப்பட்ட அவரது மனதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொடுத்தது. அன்று டெல்லியில் நடைபாதை கடையில் பொக்கே  விற்பனையைத் தொடங்கியவர், இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய பொக்கே மலர்கள் மற்றும் பரிசு பொருட்கள் விற்கும் நிறுவனமாக அதை  உயர்த்தி இருக்கிறார். அவரது நிறுவனம் உலகளாவிய பிராண்ட் ஆக உருவெடுத்திருக்கிறது. நிறுவனத்தின் இப்போதைய ஆண்டு வருவாய் 200 கோடி ரூபாயாக இருக்கிறது.

48 வயதாகும் விகாஸ் குத்குத்யா.  ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் (Ferns N Petals) எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கோவை, ஆக்ரா, அலகாபாத் உள்ளிட்ட 93 நகரங்களில் 240 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் இன்றைக்கு பொக்கே மலர்கள் விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/mar1-17-vikaas1.jpg

1994-ல், குத்குத்யா டெல்லியில் உள்ள பொக்கே மலர் விற்பனையாளர்களுக்கு மலர்கள் சப்ளை செய்வதற்காக சௌத் எக்ஸ்டென்ஷன் பகுதி இரண்டில் 200 ச.அடி கொண்ட ஒரு கடையை நடைபாதையில் தொடங்கினார். (புகைப்படங்கள்: நவிநிதா)


“குழந்தைப் பருவத்தில் இருந்தே, இந்தச் சமூகத்தில் சாதாரணமான ஒரு நபராக இருந்து விடவேண்டும் என்று எப்போதுமே நான் கருதியதில்லை,” என்கிறார் குத்குத்யா.

இந்தியாவின் முன்னணி சி.ஏ-வான கே.என்.குத்குத்யா-வின் கொள்ளுப்பேரனான விகாஸ் குத்குத்யா, தமது குடும்பத்தின் பரம்பரைத்தொழிலில் ஈடுபடுவதற்கு பதில், தாமே சொந்தமாக ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார்.

அவர் பீகாரின் கிழக்குப் பகுதியைத் சேர்ந்த வித்யாசாகர் கிராமத்தில்  உள்ள ஒரு நடுத்தர மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர்.  அவரது தந்தை அரசாங்கத்தில் ஒரு நடுத்தரப்பதவியை வகித்து வந்தவர். நடுத்தர வர்க்கம் என்பதால் இந்த ராஜபாட்டையை அடைவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தது.

குத்குத்யா ஒரு சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார். குடும்பம் மற்றும் குடும்பத் தேவைகளுக்கான நெருக்கடி ஆகியவற்றால், வாழ்க்கையில் கொண்டாட்டம் என்பதே இல்லாமல் இருந்தது. “இந்த வாழ்க்கையில் ஒரு போதும் நான் மகிழ்ச்சியாக இல்லை” எனும் அவர், “என் குடும்பத்தின் பரம்பரை பற்றி எனக்குத் தெரியும். எனவே, வழக்கமான வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து மேலே வரவேண்டும் என்றும், எப்படியேனும் உயிர்த்தெழ வேண்டும் என்றும் நான் நினைத்தேன்.”

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவுடன், நிறையக் கனவுகளுடன் , மேலும் படிப்பதற்காக கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு, குத்குத்யா தமது மாமாவின் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். பள்ளி முடித்த பின்னும், கல்லூரி சென்ற நேரம் போகவும், மாமாவின் பொக்கே மலர்கள் விற்கும் கடையில், தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

விற்பனை உத்திகளை கற்றுக்கொள்ளும் ஒரு  பள்ளியாக அவருக்கு அது விளங்கியது. அது 1990-களின் ஆரம்பகால கட்டம், “நேர்மையாகச் சொன்னால் தினமும் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது எனக்கு உற்சாகத்தைத் தரவில்லை. அதை விடவும் அதிகமாகச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன்,” என்கிறார்.

கொல்கத்தாவில் வணிகத்தில் பட்டப் படிப்பை முடித்த உடன், தமது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலான ஒரு வாய்ப்பைத் தேடி குத்குத்யா மும்பைக்குப் பயணம் ஆனார்.

கல்லூரியில் படிக்கும் போது பழகிய மீட்டா என்ற பெண் தோழியின்  பிறந்த நாளன்று வாழ்த்துச் சொல்வதற்காக 1994-ம் ஆண்டு சமயத்தில் டெல்லி சென்றார். பூங்கொத்து ஒன்றை வாங்கி, அதன் விற்பனையாளர் வழியாகவே மீட்டாவுக்கு அதை அனுப்பியிருந்தார்.

மீட்டாவின் பிறந்தநாள் விருந்தின் போது, தாம் அனுப்பிய மலர் கொத்தைப் பார்த்தார். அது மிகவும் தரம் குறைந்த மலர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. அவருக்குள் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்னொருபுறம் புத்திசாலித் தனமான அவரது வணிக மூளை, அதை ஒரு வாய்ப்பாக யோசித்தது. டெல்லியில் பூங்கொத்துக்கள் வியாபாரத்துக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/mar1-17-flowershop.jpg

டெல்லியில் உள்ள ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் அங்காடி.


டெல்லியில் அப்போது பொக்கே மலர் விற்பனையாளர்கள்  ஆறு பேர் மட்டுமே இருந்தனர். தரம் குறைந்த மலர்களை விற்பவர்களாக இருந்த அவர்கள், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை அளிக்கவில்லை. மலர்கள் வாடாமல் இருக்க கடைகளில் குளிர்சாதன வசதிகள் செய்யப்படவில்லை. கொல்கத்தாவில் உள்ள கடைகள் போல உன்னதமான, தொழில்முறையான வாடிக்கையாளர்களை கவரும் விதமான  நுணுக்கங்களை அவர்கள் கையாளவில்லை.

எனவே, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தரமான ஒரு பொக்கே கடை அமைக்கும் வாய்ப்பு தமக்கு இருப்பதாக குத்குத்யா நினைத்தார். ஆனால், அப்போது அவரிடம் இருந்தது வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். அந்த சமயத்தில்,கொல்கத்தாவில் இருந்து வந்து டெல்லியில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்கச்  சென்றார்.

“என்னுடைய திட்டம் குறித்தும், அதற்கு போதுமான பணம் இல்லை என்றும் என் நண்பரிடம் தெரிவித்தேன்,” என்று குத்குத்யா நினைவு கூர்கிறார். அவருடைய நிறுவனத்தில் அவரது நண்பர் 2.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். மீட்டாவின் பிறந்த நாள் விழா முடிவடைந்த ஒரு மாதத்துக்குள் குத்குத்யா, சவுத் எக்ஸ்டென்ஷன் பகுதி இரண்டில், நடைபாதையில் 200 ச. அடி இடத்தில் பொக்கே மலர் கடையைத் தொடங்கினார். அவரது ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் நிறுவனம் பிறந்தது இப்படித்தான்.

“என்னுடைய நிறுவனத்தை நடைபாதையில் இருந்துதான் தொடங்கினேன்,”என்று சொல்லும் அவர், “இந்த ஒரே ஒரு கடையில் இருந்து மட்டும், டெல்லியில் உள்ள 12-க்கும் மேற்பட்ட பொக்கே மலர் கடைகளுக்கு மலர்களை வினியோகம் செய்து வந்தேன்.”

பெரும் லட்சியங்களைச் சுமந்து திரிந்த அவரும், அவரது நண்பரும் (ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுமுகமான முறையில் பிரிந்து சென்றார்) டெல்லியில் உள்ள கடைகளுக்கு மலர்களை விநியோகிக்கத் தொடங்கினர்.

விதைகள் தேர்வு, பயிரிடுதல், கிளைகள், இருப்பு வைத்தல், விற்பனையகங்கள், வினியோகம் செய்தல் என்று குத்குத்யா எப்போதுமே பிஸியாக இருந்தார். டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்த அவர்,  அவர்களுக்கு நல்ல தரமான விதைகளையும் கொடுத்து வந்தார்.

இதற்கிடையே, அவரது காதலி மீட்டாவின் பெற்றோர், அவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள தயங்கினர். எனினும், குத்குத்யா தம்முடைய கடின உழைப்பின் மூலம் அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றினார். இறுதியில் மீட்டாவை திருமணம் செய்தார்.

தொழில்ரீதியாக முதன்மை இடத்தில் இருந்தபோதிலும், சில பிரச்னைகளை அவர் சந்திக்க நேர்ந்தது. வாடகை கட்டணம் அதிகரித்தது. பணத்துக்காக சில நேரம் போராடினார். எனினும், “இதில் இருந்து விலகுவது என்ற கேள்வியே என்னுள் எழவில்லை,” என்று சொல்கிறார்.

விதைகளை வினியோகம் செய்வது, பொக்கே மலர்களைச் சந்தைப்படுத்துவது என ஒன்மேன் ஆர்மியாகவே செயல்பட்டு வந்தார். சில நேரங்களில் பொக்கே மலர்களை கடைகளுக்கு எடுத்துச் செல்லும் வேன்களையும் ஓட்டிச் செல்வார்.

அவருடைய இந்த வாழ்க்கையில் இதயத்தை நெகிழச் செய்யும் சில சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு முறை ஒரு வாடிக்கையாளர், அவருடைய கடைக்கு வந்து, அங்கிருந்த அனைத்து மலர்களையும் தம்முடைய பெண் தோழிக்காக 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். “இது போன்ற தருணங்கள், வேலையை காதலிக்கும் என்னுடைய நம்பிக்கைக்குக் கூடுதல் வலுவூட்டுவதாக இருந்தது,” என்கிறார் புன்னகைத்தபடி. ஆனால், மாதத்துக்கு 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவது அவரது கனவுகளுக்குப் போதுமானதாக இல்லை.

https://www.theweekendleader.com/admin/upload/mar1-17-vikaasv.jpg

2003-ம் ஆண்டு குத்குத்யா, பேஷன் டிசைனர் தருண் தஹிலானியுடன் இணைந்து ஆடம்பரமான பொக்கே மலர்கள் ஷோரூம் தொடங்கினார்.

 

1997-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக அந்த ஹோட்டலை அலங்கரிக்கும் வாய்ப்பு குத்குத்யாவுக்குக் கிடைத்தது. இந்தத் திருப்புமுனை அவருக்கு ஏறக்குறைய அரைக்கோடி ரூபாய் அளவுக்கு வருவாயையும் கொடுத்தது. வருவாய் மட்டுமின்றி, அவரது தொழில் நேர்த்தியின் விளைவாக பல்வேறு நபர்களின் பரிந்துரைகளின் பேரில் பெரும் செல்வந்தர்களும்அவருக்கு வாடிக்கையாளர்களாக் கிடைத்தார்கள். 

இதுதான் அவரது தொழில்நேர்த்தியில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. பாரம்பர்யமான மாலை அடிப்படையிலான அலங்காரங்களை மாற்றி, கட் ப்ளவர்களைக் கொண்டு அலங்காரம் செய்யும் புதிய முறையைக் கொண்டு வந்தார். இந்தத் தொழிலில்  புதுமையான புரட்சியை ஏற்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் அவரது நிறுவனம் ஒரு பிரைவேட் லிமிடெட்  ஆக மாறியது.

1990-களின் இறுதியில், மொத்த ஆர்டர்கள் குவியத் தொடங்கின. அதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கு வங்கமாநிலம் மிட்னாபூரில் இருந்து மலர் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார். இது தவிர டெல்லியில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் ஃப்ளோரல் டிசைன்ஸ் என்ற பள்ளியைத் தொடங்கினார். இங்கு பட்டம் முடித்தவர்களை தமது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

இதன் பின்னர்குத்குத்யா வாழ்க்கையில் 2002-ம் ஆண்டு ஒரு முக்கியமான தருணம் வந்தது. அப்போது,ஆன்லைனில் தமது ஸ்டோரைத் தொடங்கினார். இந்தியாவில் இருந்து, வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொக்கே மலர்கள் ஆன்லைன் புக்கிங் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது.

பொக்கே விற்பனையில் பல்வேறு புதிய முறைகளை அமல்படுத்தினார். வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ், சூப்பர்ஃபாஸ்ட், நள்ளிரவு, சர்வ தேசம் என பல்வேறு சேவைகளை அளித்து வந்தார்.

பேஷன் டிசைனர் தருண் தஹிலானி உடன் இணைந்து  2003-ம் ஆண்டு ஃஎப்.என்.பி தஹிலானி என்ற பிராண்ட்டின் கீழ் ஆடம்பர பொக்கே மலர்கள் விற்பனையைத் தொடங்கினார். இது தவிர இன்னொரு டிசைனர் நண்பரான ஜெ.ஜெ.வாலய்யா உடன் இணைந்து ஃஎப்.என்.பி வெட்டிங் என்ற பெயரின் கீழ் ஆடம்பர திருமணங்களில் அலங்காரப் பணிகளை மேற்கொண்டார்.

2006-ல் சாடாக் சாட் என்ற பெயரில் உணவகம் ஒன்றை குத்குத்யா தொடங்கினார். தொடங்கிய வேகத்திலேயே இந்தத் தொழில் நஷ்டத்தைச் சந்தித்தது.

“என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தை நான் கற்றுக் கொண்டேன். எந்த ஒரு புதிய நிறுவனமும் தொடங்கும் முன்பு, தலைமை செயல் அதிகாரி என்ற ஒரு டிரைவரை கண்டுபிடித்தாக வேண்டும் என்று தொழில் முனைவோருக்கு இப்போது நான் அறிவுரை சொல்கிறேன்,” என்று சொல்கிறார். நஷ்டம் அடைந்த அந்த நிறுவனத்தை 2009-ம் ஆண்டு மூடினார். இதனால் அவருக்கு 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

மீண்டும் பொக்கே மலர்கள் விற்பனைக்கு திருப்பிய குத்குத்யா, தான் உருவாக்கிய பிராண்டை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். அவரது நிறுவனம், பொக்கே மலர்கள் விற்பனை, மணவிழா அலங்காரம் ஆகியவற்றில் இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனமாக உருவானது.

https://www.theweekendleader.com/admin/upload/mar1-17-flowerbouquet.jpg

உலகின் பெரிய பொக்கே மலர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் திகழ்கிறது. 155 நாடுகளில் சேவை அளித்து வருகிறது. 


பொக்கே மலர் விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிய உடன், விற்பனையின் எண்ணிக்கை அதிகரித்தது. “ஆர்வம் என்ற முதல் நிலைதான் உங்களை, எந்த ஒரு தெரியாத ஒன்றிலும் முன்னெடுத்துச் சென்று, நிச்சயமாக உங்களைத் தலைவராக உருவாக்கும்,” என்று சொல்கிறார். “நம்முடைய ஆர்வத்தை பின்பற்றினால், சரியான வழியில் இருந்து ஒருபோதும் தடம் புரளமாட்டோம்.”

2009-ல் 30 கோடி ரூபாயாக இருந்த ஃஎப்என்பி-யின் வருவாய், 2012-ம் ஆண்டில் 145 கோடி ரூபாயைத் தொட்டு, 13 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 200 கோடி ரூபாயைத் தொட்டது. 

பெருநகரங்களில் உள்ள அவரது கடைகள் அனைத்தும் கிளைகளாக, விரிவாக்கம் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. தனது யுக்தியை விவரிக்கும் குத்குத்யா, “புதிய சந்தைகளை ஆராய்ந்து, அதில் நம் பொருட்களை அறிமுகப்படுத்தும் போது, ஏற்கனவே இருக்கும் சந்தையில் வலுவான நிலையை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும்”

எப்என்பிவெவ்வேறு தளங்களில் செயல்படுகிறது; ஃபெர்ன்ஸ் என் பெடல் ரீட்டெய்ல் மற்றும் இ-காமர்ஸ், எப்என்பி திருமண விழா, எப்என்பி ப்ளோரல் டச்-இந்தியா&துபாய், எப்என்பி கார்டன்ஸ்( திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இடவசதி), தி பிளாக் ஷிப் ஸ்டோர், திருமண வடிவமைப்பு ஹப் மற்றும் பரிசு பொருட்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/mar1-17-vikaasphone.jpg

விகாஸ் சொல்லும் தகவலின் படி, ஆன்லைன், நேரடி ஷோரூம் விற்பனை என எப்என்பி -க்கு 40 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.


அவரது பிராண்ட்குறித்து சொல்கையில், “ஆன்லைன் மூலமும், கடைகளில் வாங்குபவர்களையும் சேர்த்து எங்களுக்கு 40 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்,”என்கிறார். ரஷ்யா, ஹாலந்து நாடுகளில் இருந்து மலர்களை இறக்குமதி செய்கிறார். உலகின்மிகப்பெரிய பொக்கே மலர்கள் விற்பனை செய்யும் நிறுவனமாக 155 நாடுகளில் அவரது நிறுவனம் சேவை அளிக்கிறது.

குத்குத்யாவின்நிறுவனத்தில் அவரது மனைவி மீட்டா, டைரக்டர் மற்றும்  கிரியேட்டிவ் ஹெட் ஆக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர்களுக்கு உத்யத், மான்னாட் என்ற பள்ளி செல்லும் இரண்டு இளம் வயது குழந்தைகள் உள்ளனர்.

எப்என்பி க்கு அடுத்தடுத்து  கிடைத்துவரும் மதிப்பு மிக்க விருதுகள், நிறுவனத்தை உயர்ந்த பிராண்ட் ஆக எடுத்துச் செல்ல உதவுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வடிமைப்பு விருது கிடைத்தது. சர்வதேச முகமைகள் மற்றும் ரீட்டெய்ல்ஸ் கண்காட்சியின் போது பிசினெஸ் லீடர்ஷிப் விருதும் கிடைத்திருக்கிறது.

“பொக்கே மலர்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமையுடன் எடுத்துச்செல்கிறோம் என்பதற்காக மட்டுமின்றி, இதன் மூலம் அவர்களுக்கு அன்பானவர்களின் சிறந்த தருணங்களையும் உருவாக்குகிறோம்,” என்று சொல்கிறார்.

இந்த அடிப்படையில் அவர் தொடங்கியதுதான், அவரை முதலிடத்தில் வைத்திருக்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • Girl from Mountain

    மலைக்க வைக்கும் வளர்ச்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Dream come true

    நனவான தொழில் கனவு

    பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Bareilly’s  king of oil

    மலையளவாகப் பெருகிய கடுகு!

    உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது.  அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு  மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Tailoring the Primeminister

    தையல் கலைஞர்களின் உச்சம்

    குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • How did daily wager son become crorepati

    கனவுகளைக் கட்டுதல்

    தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்