Milky Mist

Saturday, 18 May 2024

பல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி! ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்!

18-May-2024 By குருவிந்தர் சிங்
ஜாம்ஷெட்பூர்

Posted 11 Feb 2018

நாட்டின் முதல் போட்(pod) வகை ஹோட்டலை அதாவது மிகச் சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டலை தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் என்ற வகையில் மட்டும் ரவிஷ் ரஞ்சன் என்ற மனிதரைப் பற்றிய கதை முடிவடைந்து விடவில்லை. ஒரு மனிதனின் முயற்சிகள் பல முறை தோல்வியைத் தழுவியபோதிலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து, வாழ்க்கை எனும் விளையாட்டில் வெற்றி பெற்றவர் அவர்.

ரவிஷ், 2016-ம் ஆண்டு நவம்பரில், போட் என் பியான்ட் (Pod N Beyond) என்ற ஹோட்டலை தொடங்கினார். தொடக்கத்தில் ஒரு மாதத்தில் 19 நாட்கள் மட்டும் அறைகள் புக் ஆகின. பின்னர் ஒரு ஆண்டுக்குள் 600 இரவுகளுக்கான புக்கிங்  ஆனது. 2017-ம் நிதி ஆண்டில் 5 மாதத்தில் அவரது நிறுவனம் 5 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டது. அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/18-01-18-01pod1.jpg

போட் என் பியான்ட் நிறுவனரான ரவிஷ் ரஞ்சன், நாடு முழுவதும் இது போன்று அடுத்த ஐந்து வருடங்களில் 20 கேப்சூல் ஹோட்டல்களைத் திறக்க உள்ளார். (படங்கள்: சமிர் வர்மா)


“கடைசியாக ஹோட்டல் துறையில்தான் நான் என்னுடைய அமைதியைக் கண்டேன்,” என்கிற ரவிஷ்,  பல தொழில்களை முயற்சி செய்து பார்த்திருப்பவர். “நாடு முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 கேப்சூல் ஹோட்டல்களைத் தொடங்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதன் மூலம் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும்.”

பீகாரில் உள்ள சமஸ்திபூரில் கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி, அவரது குடும்பத்தில் சகோதரர், சகோதரியை அடுத்து மூன்றாவதாக ரவிஷ் பிறந்தார். அவரது தந்தை கே.கே.ஜா, பீகார் மின்வாரியத்தில் பாரானி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணி அமர்த்தப்பட்டிருந்தார். அவரது தாய், பினா ஜா வீட்டுப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டார்.

”எங்களுடைய கல்வியில், தந்தை மிகவும் அக்கறை கொண்டிருந்தார்,” என்கிறார் ரவிஷ். பாராவ்னியில் 10-ம் வகுப்பு முடித்தபின்னர்,  டெல்லியில், டெல்லி பப்ளிக் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கச் சென்றார். 1993-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் முடித்தார்.

“பட்டப்படிப்பை முடித்த உடன் நான், ஜாம்ஷெட்பூர் திரும்பி வந்தேன். ஒரு ஐடி பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். அப்போது நான் ஒரு டீனேஜராக இருந்தேன். எனினும், நான் ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் எந்த நேரமும் இருந்தேன். ஒரு போதும் நான், வேலைக்குச் செல்ல விரும்பவில்லை,” என்றார் ரவிஷ்.

ரவிஷ் தமது தந்தையிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தவிர ஒரு வங்கியில் 12 சதவிகிதம் ஆண்டு வட்டி விகிதத்தில், 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்தத் தொகையைக் கொண்டு ஜாம்ஷெட்பூரில் 1994-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹார்ட்வேர் டெக்னாலஜி என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினார்.

“என்னுடைய பயிற்சி மையத்துக்காக ஜாம்ஷெட்பூரில் 900 ச.அடி இடத்தை வாடகைக்கு எடுத்தேன். பி.டெக் முடித்த 4 பேரை வேலைக்குச் சேர்த்தேன்,” என்று நினைவுகூறுகிறார் ரவிஷ். “ஐ.டி தொழில்நுட்பம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் இதைத் தொடங்கினேன். முதல் ஆண்டு முடிவில் 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. 1998-ல்  ஆண்டு வருவாய் 56 லட்சம் ரூபாயைத் தொட்டது. அப்போது பயிற்சி மையத்தில் 70 பேர் பணியாற்றினர். எங்களுக்கு அப்போது 4 கிளைகளும் இருந்தன.”

அதே நேரத்தில், இன்னொரு தொழிலிலும் அவர் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு, பெருநிறுவனங்களுக்கான பயிற்சி, வாடிக்கையாளர் ஆய்வு, பிராண்ட் புரமோஷன் ஆகியவற்றை முன்னெடுக்கும் ஐகேன் என்ற மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.

https://www.theweekendleader.com/admin/upload/18-01-18-01pod2.jpg

ரவிஷ் ஹோட்டலில் இப்போது 14 பேர் பணியாற்றுகின்றனர்.

எனினும், 1999-ல் அவரது தொழில் நிலைகுலைந்தது. திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டது. வெற்றி எனும் போதை தலைக்கேறியதால், ரவிஷ் தலைக்கனம் மிக்கவராக ஆகி விட்டார். இதை ஒளிவுமறைவு இன்றி நம்மிடம் ஒத்துக் கொள்கிறார்.

“நான் மிகவும் இளம் வயதிலேயே வெற்றி எனும் சுவையை அதிக அளவுக்கு பெற்று விட்டேன். அது என்னுடைய தலைக்குள் ஏறிவிட்டது. நான்கு கார்கள் வாங்கினேன். ஒரு ஆடம்பரமான வீடு வாங்கினேன். பல பணியாளர்கள் இருந்தனர். இந்த உலகத்திலேயே நான்தான் பெரிய ஆள் என்று என்னை நானே நினைத்துக் கொண்டேன். நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், நான் ஒரு பிடிவாதக்காரனாக மாறினேன். எந்த ஒருவரின் கருத்தையும் காதுகொடுத்துக் கேட்கமாட்டேன். எனினும் அதற்கெல்லாம் சேர்த்து ஒரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. ஆம், என்னுடைய தொழில், எல்லாமே ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது.”

பணரீதியாக, ரவிஷ் தவறானமுடிவுகளை எடுத்தார். அதனால், அந்தச் செலவுகள் அவருக்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தன. கடன்களை அடைப்பதற்காக நான்கு கார்களையும் விற்றார். அந்த ஒரு பின்னடைவு மட்டும் அல்ல. தோல்வி தந்த மன அழுத்தம், கண்னில் ரத்தகசிவை ஏற்படுத்தியது. பீதி மற்றும் இதர உடல்நலக்குறைவுகளும் உருவாயின.

1999-02 ஆண்டுகள் மிகவும் மோசமானதாக இருந்தன. “நான் என்னுடைய தொழிலை முற்றிலுமாக மூடிவிடவில்லை. தொழிலின் வேகத்தைக் குறைத்தேன். ஒரு விதக் கட்டுப்பாட்டுக்குள்  தொழிலை நிர்வகித்தேன்,” என்கிறார் ரவிஷ். “என்னுடைய செலவுகளைக் குறைத்தேன். எந்த வகையிலும் கூடுதலாகப் பணம் செலவு செய்யவில்லை. சில ரூபாய்களை சிக்கனம் செய்வதற்காக சாலையில் சில கி.மீ தூரம் நடந்தே சென்றேன்.”

2002-ம் ஆண்டில் இருந்து அதிர்ஷ்டம் அவர் பக்கம் மீண்டும் மாறத் தொடங்கியது. அவரது தொழில் மீண்டும் லாபத்தை நோக்கிச் சென்றது. “பலன் தரும் வகையில் பணியாற்றத் தொடங்கினேன். பிடிவாதமான மனநிலையை விட்டுக் கொடுத்தேன். லாபத்தைக் கணக்குப் பார்த்தேன். கவனமாகச் செலவழித்தேன்,” என்கிறார் ரவிஷ்.

https://www.theweekendleader.com/admin/upload/18-01-18-01pod3.jpg

ஜப்பானில்தான் போட் வகை ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன.

"டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் இதர நகரங்களில் உள்ள என்னுடைய அலுவலகங்கள் மூலம் என்னுடைய தொழிலில் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கிடைத்தது. கசப்பான பாடம் கற்றதால், மீண்டும் நன்றாக சம்பாதித்தாலும் கூட, சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தேன்.”

ரவிஷ், 2001-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சுப்ரா ரஞ்சனை திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். அவர்களுக்கு ரிஸ்ஹான் என்ற மகன் இருக்கிறார்.

“என்னுடைய தொழில் செழிக்கத் தொடங்கியது. என்னுடைய வாழ்க்கையும் வளமானது. என்னுடைய மனைவி 2007-ம் ஆண்டு கருவுற்றார். அவருக்கு நல்ல பாதுகாப்புத் தேவைப்பட்டது. எனவே, என்னுடைய மனைவியின் உடல்நலனில் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். எனவே, தொழில் மீண்டும் பின்னடைவைச் சந்தித்தது. குழந்தை பிறக்கும் வரைஅதாவது 9 மாதங்கள் வரை என்னால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியவில்லை,” என்கிறார் ரவிஷ்.

அவர்களின் பெற்றோரும் மிகவும் வயதானவர்கள். சுப்ராவை கவனித்துக் கொள்ள, தொழிலில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டார். அவரது எண்ணம் முழுவதும் அவரது மனைவி மற்றும் குழந்தையின் உடல் நிலை பற்றியதாகத்தான் இருந்தது. ரவிஸின் நேரடிக் கண்காணிப்பு இல்லாததால், தொழில் நிலைகுலைந்தது. மீண்டும் பணச்சிக்கல் ஏற்பட்டது. தினசரி செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாமல் தவித்தார்.

“அடுத்த மூன்று ஆண்டுகள், பிரச்னையில் சிக்கித் தவித்தேன். எப்படியோ அதில் இருந்து சமாளித்து வெளியே வந்தேன்,” என்கிறார் ரவிஷ்.

2011-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளராக விரும்பி, மும்பை சென்றார். “என் மனைவியும், குழந்தையும் ஜாம்ஷெட்பூரிலேயே இருந்தனர். என்னுடைய இந்த முடிவுக்கு என் மனைவி எதிர்ப்புத் தெரிவித்தார். எனினும், நான் என் வழியில் உறுதியாக இருந்தேன்,” என்று சொல்கிறார் ரவிஷ். “எனது அனைத்துத் தொழில்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தேன். மும்பை நகரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சினிமா தயாரிப்பாளர் ஆவது குறித்து கனவுகள் காண ஆரம்பித்தேன்.”

https://www.theweekendleader.com/admin/upload/18-01-18-01pod4.jpg

2 கோடி ரூபாய் முதலீட்டில், 20 புதிய அறைகள் கட்ட ரவிஷ் திட்டமிட்டுள்ளார்.

எனினும், அவர் திட்டமிட்டது போல எதுவும் நடக்கவில்லை. 2013-ல் மும்பையில் இருந்து கிளம்பினார். ஜாம்ஷெட்பூர் வந்தார்.

எந்த ஒன்றும் நீண்டகாலத்துக்கு தோல்வியாக இருப்பதில்லை. 2014-ம் ஆண்டு, புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். “ஹோட்டல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அப்போது நினைத்தேன்,”என்கிறார் 43 வயதான தொழில்முனைவு இளைஞரான ரவிஷ்.

“எந்த மாதிரியான ஹோட்டல் தொடங்குவது என்று நான் ஆராய்ச்சி செய்தேன். போட் ஹோட்டல் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். இது போன்ற மிகச்சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் முதன் முதலில் ஜப்பானில்தான் தொடங்கப்பட்டன. இது இந்தியாவுக்கு முற்றிலும் புதுமாதிரியாக இருந்தது.  பெரு நிறுவனங்களில் பணியாற்றும் என் நண்பர்கள் மூன்று பேரை கூப்பிட்டு அவர்களிடம், இது போன்று ஒரு ஹோட்டல் தொடங்கப் போகிறேன் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டேன்.”

அவருடைய நண்பர்கள், உடனடியாக ரவிஷ் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். இதையெல்லாம் சேர்த்து ரவிஷ் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தார். இப்போது 5 பங்குதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் தலா 15 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கின்றனர். இன்னொரு பங்குதாரர் 3 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார். ரவிஷ், மொத்தம் 52 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார். பயிற்சி மையமாக இருந்த ஒரு கட்டடத்தை ஹோட்டலாக மாற்றினார். 2015-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2016-ம் ஆண்டு நவம்பரில், ஏசி வசதி கொண்ட 5 மாடி ஹோட்டல் திறக்கப்பட்டது.

பல்வேறு அளவுகளைக் கொண்ட, கேப்சூல் போட்ஸ், டபுள் போட்ஸ், பங்க் போட்ஸ் - ரயில் பெர்த் போன்று அமைக்கப்பட்டவை - என்பது உள்ளிட்ட மேலும் பல அறைகளுடன் 40 பேர் தங்கும் அறைகளைக் கொண்டதாக ஹோட்டல் இருந்தது.

“மணிக்கணக்கில் அறைகளை முன்பதிவு செய்யக் கூடிய இது போன்ற மிகச்சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல் நாட்டிலேயே இதுதான் முதன் முறை,” என்கிறார் ரவிஸ். “ஒரு மணி நேரத்துக்காக 199 ரூபாய் வசூலிக்கிறோம். இலவச வைஃபை, துணிகளைத் துவைத்துத் தரும் வசதிகளையும் தருகிறோம்.”

குறைந்தபட்ச அறை வாடகை 199 ரூபாயில் இருக்கிறது. அதிகபட்ச அறை வாடகை 1,699 ரூபாயாக இருக்கிறது. “ஒவ்வொரு மாதமும் 600 இரவுகளுக்கு அறை முன்பதிவு செய்கிறோம். 2016-ம் ஆண்டு நவம்பரில் மாதம் 19 இரவுகளுக்கு மட்டுமே அறை முன்பதிவு செய்தோம்,”என்கிறார் ரவிஷ். “கோ-இபிபோ, ப்ளான் மைடிரிப் போன்ற பயண இணையதளங்களோடு இணைந்து ஆன்லைன் புக்கிங் செய்கின்றோம்.”

https://www.theweekendleader.com/admin/upload/18-01-18-01pod5.jpg

எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதற்கான குறிக்கோளுடன் கூடிய திட்டங்களை ரவிஷ் வைத்திருக்கிறார்.

14 ஊழியர்களுடன் தமது தொழிலைத் தொடங்கினார். இப்போதும் அதே அளவு ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது என்று ரவிஷ் திட்டமிட்டிருக்கிறார்.

“2 கோடி ரூபாய் முதலீட்டில், 20 புதிய அறைகளைத் திறக்கவிருக்கிறோம். வணிகரீதியாகப் பயணம் மேற்கொள்கின்றவர்கள்தான் எங்கள் இலக்கு. 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுவதும் இது போன்ற 20 ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளேன்.”

இளம் தொழில் முனைவோர்களுக்கு ரவிஷின் மந்திரம்; “ஒருபோதும், பிடிவாதக்காரர்களாக இருக்காதீர்கள். உங்களுக்கு எல்லாவசதிகளும் இருந்தபோதிலும்,  உங்கள் கால்கள் மண்ணில் இருக்கட்டும்.”

வாழ்க்கை அவருக்கு ஒரு உண்மையான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Success Story of Detox Juice maker

  இளமையில் புதுமை

  சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

 • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

  சிறகு விரித்தவர்!

  அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்

 • The success story of a hair stylist who owns a car rental business with 68 luxury cars

  வெற்றிக்கலைஞன்

  பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்

 • Man who stitched cloth bags as a child entrepreneur built a Rs 200 crore turnover company

  தலைக்கவச மனிதர்!

  நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்

 • வறுமையில் இருந்து செழிப்புக்கு

  இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்

 • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

  போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

  தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை