70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்!
08-Oct-2024
By ஜி சிங்
கொல்கத்தா
நடுத்தரக் குடும்பத்தில்பிறந்து வளர்ந்த ஒருவர் நல்ல கல்வி, பின்னர், கொழுத்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையில் இருப்பது அவர் வாழ்கையில் செட்டில் ஆகிவிட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தீபக் அகர்வால் 9 மணிமுதல் 5 மணி வரையிலான வழக்கமான ஒரு வேலையில் திருப்தி அடையவில்லை.
தினமும் ஒரே மாதிரியான,சுகமான வேலையில் இருந்து விலகி சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு நாளில் அவர் தீர்மானித்தார். அதற்கு அடுத்த நான்கு வருடங்களில், கொல்கத்தாவில் அவர் தொடங்கிய டிஜிட்டல் மீடியா நிறுவனம் 3000 வாடிக்கையாளர்களுடன் வளர்ந்து நின்றது. அவரது இந்த நிறுவனம், வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை எட்டிப் பிடிக்க உள்ளது.
|
எர்னஸ்ட்&யெங் என்ற நிறுவனத்தில் மாதம் ரூ.70,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தீபக் அகர்வால் அதிலிருந்து விலகி, ஒன் எக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தை 2012-ம் ஆண்டில் தொடங்கினார். (புகைப்படங்கள்;மோனிருல் இஸ்லாம் முல்லிக்)
|
தமது சொந்தச் சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுடன், ஒன் எக்ஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ல் தீபக் தொடங்கினார்.
அவருடைய ஆடம்பரமான அலுவலகம், கொல்கத்தாவின் லால் பஜாருக்கு அருகில் இருக்கிறது. அவருடைய நிறுவனத்தில் 23 பேர் பணியாற்றுகின்றனர். தவிர பிட்சா ஹட், கே.எஃப்.சி., ஷாப்பர் ஸ்டாப், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட அவரது வாடிக்கையாளர்களைக் கொண்ட நீண்ட பட்டியலில் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன.
கொல்கத்தாவில் 1987-ல் ஜூன் 13-ம் தேதி தீபக் பிறந்தார். இளம் சகோதரர், சகோதரி ஆகியோரைக் கொண்ட குடும்பத்தின் மூத்த மகனாக தீபக் இருக்கிறார். அவருடைய தந்தை, ஹரி கிருஷ்ண அகர்வால், கைக் கெடிகாரங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இது நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது.
“இந்த கடையில் இருந்து வரும் வருமானம் எங்களது குடும்பச் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது,” என்று தமது ஆரம்ப கால வசதியான வாழ்கையைப் பற்றிச் சொல்கிறார் தீபக். “என் தந்தைக்கு உதவி செய்வது என்று திருப்தி அடையாமல், நான் எப்போதுமே, எனக்கு நானே ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்,” என்று விரும்பினேன்.
ஏழாம் வகுப்பு வரை அவர் சந்திரபாணி நினைவு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இதன் பின்னர், நோபாணி உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்த அவர், 10-ம் வகுப்பு வரை அங்கு படித்தார். 2007-ம் ஆண்டு ஸ்ரீ ஜெயின் வித்யாலயாவில் 12-ம் வகுப்பை முடித்தார்.
“என்னுடைய பள்ளி நாட்களில், நான் ஒரு நாளிதழில் ஃப்ரிலேன்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றினேன்,” என்று தமது தொடக்க காலம் பற்றிக் கூறுகிறார். “பல்வேறு வித்தியாசமான மனிதர்களைச் சந்தித்து அவர்களைப் பேட்டி எடுப்பேன். லாலுபிரசாத் யாதவ், சீத்தாராம் யெய்ச்சூரி போன்ற அரசியல் தலைவர்களைச் சந்தித்தது இன்னும் கூட எனக்கு நினைவு இருக்கிறது. எனினும், நான் பணியாற்றியதற்கு சம்பளம் எதுவும் நான் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் பணி என்னுடைய தகவல் தொடர்புத் திறனை அதிகரித்தது.”
|
ஒன் எக்ஸ் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்தில் 23 பேர் பணியாற்றுகின்றனர்.
|
பள்ளியில் நடக்கும் விவாதங்களிலும் தீபக் பங்கேற்றார். இது அவருக்கு நல்ல பேச்சுத்திறனைக் கொடுத்தது. 2007-ம் ஆண்டில் புனித சேவியர் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. 2010-ம் ஆண்டு வணிக வியலில் பட்டம் பெற்றார்.
“பட்டப்படிப்புடன் கூடவே 2007-ம் ஆண்டு சி.ஏ மற்றும் சி.எஸ் படிப்புகளில் ஒரே நேரத்தில் சேர்ந்தேன்,”என்கிறார் தீபக்.
2010-ம் ஆண்டு மார்ச்சில் தீபக் டெல்லி சென்றார். அங்கு அவருக்கு எர்னஸ்ட் &யெங் நிறுவனத்தில் ரூ.18,500 மாத உதவித் தொகையுடன் இன்டர்ன் ஆகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
“நான் இன்டர்ன் ஆக டெல்லியில் ஒரு ஆண்டு பணியாற்றினேன். பின்னர், பணியிட மாறுதல் பெற்று 2011-ம் ஆண்டு ஜூன் மாதம்கொல்கத்தாவுக்கு வந்தேன்,”என்று விவரிக்கிறார் தீபக். “2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையை விட்டு விலகும் வரை கொல்கத்தா அலுவலகத்தில் நான் பணியாற்றினேன்.”
அப்போதுதான், அவருடைய மனதில் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற விதை அவருக்குள் விழுந்தது. “எந்த ஒன்றையும் செய்யும்படி என் குடும்பத்தினர் ஒருபோதும் என்னை நிர்பந்தம் செய்ததில்லை என்ற என் குடும்பம் பற்றிய நல்ல அம்சத்தைச் சொல்லியே ஆகவேண்டும்,” என்று தம் குடும்பம் குறித்து விவரிக்கிறார் தீபக். “என்னுடைய கல்லூரி நாட்களில், தந்தையின் கடையில் அவருக்கு உதவியாக இருப்பேன். ஆனால், ஒருபோதும் அவர், அவருடைய தொழிலில் நான் ஈடுபட வேண்டும் என்று என்னை வலியுறுத்தியதில்லை.”
எனினும், மாதம் ரூ.70,000 சம்பளம் கிடைக்கும் வேலையில் இருந்து 2012-ம் ஆண்டு அவர் விலகிய போது, அவர்கள் கவலைப்பட்டனர். “எனினும், எனக்குள் என்னுடைய குடும்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது,”என்கிறார் தீபக்.
தீபக்கின் தொழில் திட்டம் என்பது வழக்கமான ஒன்றாக இல்லை. வித்தியாசமான ஒன்றாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் தமது தொழில் திட்டம் குறித்து தமது குடும்பத்தினரிடம் மட்டுமின்றி, தமது பெண் தோழியிடம் (பின்னர் இவரே மனைவியாகவும் வந்தார்) கூட எடுத்துக் கூறுவதும் சிக்கலாக இருந்தது. “நல்ல தரும் பணியில் இருந்து விலகி, அபாயம் உள்ள தொழிலில் இறங்கி, நான் தோற்று விடுவேனோ என்றுதான் எல்லோரும் நினைத்தனர்,”என்று தீபக் நினைவு கூர்கிறார்.
|
மனைவி ஹர்ஷா உடன் தீபக் மற்றும் இதர குழு உறுப்பினர்கள்.
|
“விளம்பரம் செய்வதை டிஜிட்டல் மயமாக்கும் என்னுடைய நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன்." வாடிக்கையாளர்களிடம், அவர்களின் அடிப்படையான தொழில் சார்ந்த தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது மட்டுமின்றி, அவர்களின் தொழில் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்யவும் உதவும் என்றும் தீபக் எடுத்துக் கூறினார்.
“எனது நிறுவனம், மொத்த குறுஞ்செய்தித் தொழில் (bulk sms) சேவையை வழங்கி வருகிறது. இதில் இரண்டு வகையாக செயல்படுகிறோம். தொழில் பரிவர்த்தனை, தொழிலை முன்னெடுக்கும் விளம்பர செய்திகள் என இரண்டு வகைகளில் குறுஞ்செய்தி சேவையை வழங்கி வருகிறோம்,”என்று விவரிக்கிறார் தீபக்.
தொழில் பரிவர்த்தனை செய்தி அல்லது விளம்பர செய்தி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அனுப்பப்படுகிறது. ஒரு தயாரிப்பு அல்லது சேவையை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அனுப்பப்படுகிறது.
பரிவர்த்தனை குறுஞ்செய்தி என்பது, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு அவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையைத் தெரிவிப்பது அல்லது ஆன்லைன் பரிவரத்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளருக்கு பில் தொகையை குறுஞ்செய்தி மூலமாக அளிப்பது ஆகியவையும் அடங்கும்.
“என்னுடைய சகோதரர் அசோக் அகர்வால், ஏற்கனவே ஒரு விளம்பர நிறுவனத்தில் இருந்தார்,”எனும் தீபக், “எனவே என் சகோதரர், விளம்பர பலகைகள், பிரிண்ட் விளம்பரம் உள்ளிட்ட இதர விளம்பர முறைகளைக் கவனித்துக் கொள்வது என்றும், நான், டிஜிட்டல் விளம்பரத்தில் கவனம் செலுத்துவது என்றும் நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம்.”
தீபக் தம்முடைய வீட்டிலேயே, ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கினார். சேவை அளிக்கும் நிறுவனங்களில் இருந்து தலா ஒரு பைசா வீதம் ஒரு கோடி எஸ் எம் எஸ் களை அத்தொகையில் வாங்கினார். "எங்களுக்கான லாபம் கிடைக்கும் வகையில் ஒரு சிறு தொகையைச் சேர்த்து அந்த எஸ்.எம்.எஸ் சேவையை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது என்று திட்டமிட்டோம்,”என்கிறார் தீபக்.
“மொத்தமாக எஸ்எம்எஸ் சேவைகள் மூலம் விளம்பரம் செய்யும் முறையைப் பற்றி வாடிக்கையாளர்களைத் திருப்தியுறச் செய்வது கடினமாக இருந்தது. மரபு ரீதியான வழக்கமான விளம்பர முறைகள் மீதுதான் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்,” என்று தமது அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார் தீபக்.
|
தீபக் வேலையை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்யப்போவதாகச் சொன்ன உடன், அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அவரது பெண் தோழி ஹர்ஷாவும்(பின்னர் இவரே தீபக் மனைவி ஆனார்) கவலை அடைந்தனர்.
|
“டிஜிட்டல் விளம்பரத்தின் பலன்களை வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் சொல்வது கடினமான பணியாக இருந்தது. நான் வாடிக்கையாளர்களைத் தேடி ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்குச் சளைக்காமல் செல்வேன். பெரும்பாலும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில்தான் பயணிப்பேன். டிஜிட்டல் விளம்பரத்தின் சாத்தியங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பேன்.”
ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த விளம்பர முறை வெற்றியைத் தேடித்தரும் என்று தீபக் நம்பிக்கையோடு இருந்தார். எந்த நேரத்திலும் தம்முடைய சுய நம்பிக்கையில் இருந்து அவர் வழுவவில்லை. “2013-ம் ஆண்டின் கடைசியில் ஒரு கல்வி நிறுனத்திடம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலியுறுத்திய பின்னர், அவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் விளம்பரம் செய்ய முன் வந்தனர்,” என்கிறார் தீபக்.,
ஒரு வாடிக்கையாளர் கிடைத்த நிலையில், அவரது தொழில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சியடைத் தொடங்கியது. முதல் ஆண்டில் மட்டும், அவரது நிறுவனம் 32 லட்சம் ரூபாய்க்கு ஆண்டு வருவாய் ஈட்டியது. 500 வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். “வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களை எங்களுக்குப் பரிந்துரை செய்தனர்,”என்று இந்த வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறார். “நாங்கள் எப்போதுமே வெளிப்படையான நல்ல சேவையை வழங்கி வருகிறோம். அதுதான் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது.”
தொழில் வளர்ச்சியின் காரணமாக வீட்டில் இருந்து தமது அலுவலகத்தை லால் பஜாரில் உள்ள 600 சதுர அடி இடத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு மாற்றினார்.
2015-16-ம் ஆண்டில் 2500 வாடிக்கையாளர்களுடன் அவரது நிறுவனம் 1.4 கோடிக்கு ஆண்டு வருவாயை ஈட்டியது. இதனால், 2015-ம் ஆண்டு நவம்பரில், பெரிய இடத்தை வாடகைக்குப் பிடித்தார். லால்பஜாரில் 1,700 ச.அடி-யில் மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு அலுவகத்தை அமைத்தார்.
அதற்கு அடுத்த ஆண்டு, தீபக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2.7 கோடி ரூபாயைத் தொட்டது. பல்வேறு எம்என்சி நிறுவனங்கள் உட்பட 3,300 வலுவான வாடிக்கையாளர்கள் அவரது நிறுவனத்துக்குக் கிடைத்தனர். 2017-18-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 10 கோடிக்கும் அதிகமாக தாண்ட வேண்டும் என்று தீபக் திட்டமிட்டுள்ளார்.
|
ஒன் எக்ஸ் நிறுவனத்துக்கு மும்பை மற்றும் ஷில்லாங்கில் முகவர் நிறுவனங்கள் இருக்கின்றன.
|
“எங்கள் நிறுவனத்தின் முகவராகச் செயல்பட நாங்கள் 4 லட்சம் ரூபாய் வசூலிக்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு மும்பை, ஷில்லாங்கில் இரண்டு முகவர்கள் இருக்கின்றனர்,”என்கிறார் தீபக். அவரது மனைவி ஹர்ஷா அகர்வால், தீபக் உடன் அவரும் ஒரு இயக்குனராக இருக்கிறார். ஹெச்.ஆர் உள்ளிட்ட பணிகளை ஹர்ஷா செய்து வருகிறார். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை தீபக் கவனித்து வருகிறார்.
ஹர்ஷாவும் கொல்கத்தாவில் இருந்து வந்தவர்தான். "தீபக் அவருடைய வேலையை விடப்போவதாகச் சொன்னபோது, என்னால் அதை லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தோல்வியடைந்து விடுவாரோ என்று கூட நினைத்தேன்,” என்கிறார் ஹர்ஷா.
இப்போது தீபக், ஒவ்வொரு மாதமும் 4 கோடி எஸ்.எம்.எஸ்களை விற்பனை செய்கிறார். 2016-ம் ஆண்டின் சிலிகான் ரிவ்யூ பத்திரிகையில் நல்ல மொபைலிட்டி நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிகரமான தொழிலதிபர், இளைஞர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை மட்டும் சொல்கிறார். “உங்கள் கனவுகளைத் துரத்திச் செல்லுங்கள். தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். ஒன்றைச் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், எந்த ஒன்றும் கடினமாக இருக்காது.”
அதிகம் படித்தவை
-
தோசைப் ப்ரியர்கள்
பலருக்கு தோசை சாப்பிடப்பிடிக்கும். ஆனால் அதை கல்லில் ஊற்றி சுடுவதற்கு? தமிழரும்தோசைப் பிரியருமான ஈஸ்வர் தமது நண்பர் சுதீப் உடன் சேர்ந்து இதற்காக தோசாமேட்டிக் மிஷினை கண்டுபிடித்தார். இன்றைக்கு நாடு முழுவதும் ஈஸ்வரின் தோசாமேட்டிக் இடம் பிடித்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வெற்றி மந்திரம்
ராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
ஆயிரம் கோடி கனவு!
கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
கரும்பாய் இனிக்கும் இரும்பு!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றிக்கலைஞன்
பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்