பிஸ்கட் செய்யலாமே - மளிகைக்கடைக்காரரின் மகனின் எதிர்காலத்தை மாற்றிய யோசனை!
03-Dec-2024
By ஜி சிங்
கொல்கத்தா
வெற்றி இனிக்கும். அது கடும் உழைப்பு, தளராத மன உறுதி, கூடுதல் முயற்சி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும்போது சுவை மேலும் கூடும்.
கொல்கத்தாவில் தந்தையின் மளிகைக்கடையில் உதவிக்கு பணிபுரிந்ததில் இருந்து மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனத்தை உருவாக்கியதுவரை நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார் 64 வயதாகும் கணேஷ் பிரசாத் அகர்வால். ப்ரியா புட் ப்ராடக்ட்ஸ் லிமிடட் நிறுவன தலைவரான இவர் பெரிதாக சிந்தித்து அதை செயலின் மூலம் சாதிப்பவர்.
|
கணேஷ் பிரசாத் அகர்வால், மளிகைக்காரரின் மகன். 1986ல் தன் சொத்துக்களை விற்று இவர் ஒரு பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்
|
கிழக்கிந்தியப் பகுதியில் முப்பதே ஆண்டுகளில் 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் பிராண்டாக அகர்வாலின் நிறுவனம் உயர்ந்தது. தினமும் 100 டன்கள் பிஸ்கட் உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள் உள்ளன.
கிழக்கிந்தியாவில் பிஸ்கட் சந்தை மதிப்பு 1000 கோடி ரூபாய். அதில் 5 சதவீதத்தை இவரது நிறுவனம் வைத்துள்ளது. 36 வகை பிஸ்கட்கள், 15 ஸநாக்ஸ் பண்டங்கள் ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், பீஹார் ஆகிய மாநிலங்களில் விற்பனையில் உள்ளன.
தடங்கல்கள் வந்தபோதும் ஒரு பாறையைப் போல் உறுதியுடன் நின்று அகர்வால் வென்றுள்ளார். கொல்கத்தாவில் இருந்து 20 கிமீ தள்ளி, வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் ஜூலை 14, 1953ல் பிறந்தவர் அகர்வால். உடன்பிறந்தோர் ஐவர். இவர் இரண்டாமவர்.
“என் அப்பா சிறு மளிகைக் கடை நடத்தினார். குடும்பத்தை நடத்த அதுபோதுமானதாக இருக்கவில்லை,” என்கிற அகர்வால், இப்போது கொல்கத்தாவின் முக்கியமான சால்ட்லேக் பகுதியில் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்துள்ளார்.
“இருந்தாலும் என் தந்தை கல்வியின் முக்கியத்தை உணர்ந்திருந்தார். அவரது கடையில் நான் சில சமயம் வேலைகள் செய்வேன். அவர் எப்போதும் என்னை படிக்கவே அனுப்புவார்.”
|
ஆரம்ப காலங்களில் அகர்வால் கடைகடையாகச் சென்று பொருட்கள் விற்றார்
|
வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிட்டி கல்லூரியில் படிப்பை முடித்த அகர்வால் கடையில் தந்தைக்கு உதவி செய்தார். ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் தேவையை சமாளிக்க அது போதுமானதாக இல்லை.
”நான் எதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்பினேன்,” என்கிறார் அகர்வால்.
“நிறைய யோசனைகள் தோன்றின. ஆனால் நிதி இல்லை, தோல்வி பற்றிய அச்சம் இருந்தது. அடுத்த 14 ஆண்டுகள் மளிகைக்கடையில் என் அண்ணாவுடன் அமர்ந்தே இருந்தேன்.”
3000- 4000 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதை வெறுத்த அவர் இறுதியில் எதாவது செய்தே ஆகவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்.
“ இதைவிட என்ன பெரிய மோசமான நிலை வந்துவிடப்போகிறது என நினைத்தேன்,” அவர் சொல்கிறார்.
கடையில் வேலை பார்த்தபோது உணவுப்பொருட்கள் விற்பனை வீழ்ச்சி அடைவதில்லை என்று அவர் கண்டார். “மற்ற பொருட்கள் விற்பனை கூடலாம் குறையலாம். என்ன ஆனாலும் உணவுப்பொருட்களை மக்கள் வாங்கிக்கொண்டே இருப்பர் எனக் கண்டேன்,” என்கிறார் அவர்.
1986, செப்டம்பரில் அகர்வால் தன் முதல் பெரிய அடியை எடுத்துவைத்தார். அவர் ஒரு பிஸ்கட் தயாரிப்பகத்தைத் தொடங்கினார்.
இதற்கான முதலீட்டை தயார் செய்வது கடினமாக இருந்தது. அவரது அப்பா கொஞ்சம் நிலத்தை சகோதர்களுக்கு பிரித்துக்கொடுத்திருந்தார். அதில் தன் பகுதியை இவர் அடகுவைத்தார். வங்கியிலும் வெளியிலும் மேலும் கொஞ்சம் கடன் வாங்கினார். சுமார் 25 லட்சரூபாயை இப்படித் திரட்டித்தான் தொழிலை ஆரம்பித்தார்.
|
ப்ரியாவில் 36 வகை பிஸ்கட்டுகள், 15 ஸ்நாக்குகள் செய்யப்படுகின்றன. இப்படத்தில் விக்ரம், ஜெய் ஆகிய இரு மகன்களுடன் அகர்வால்
|
“பிஸ்கட் தொழிலுக்கு நிறைய முதலீடு தேவை. ஏனெனில் அதற்கென்று தனியாக எந்திரங்கள் தேவை. நிறைய ஆட்களும் தேவை,” என்கிறார் அகர்வால்.
“நான் எப்போதும் பெரிதாகவே யோசித்தேன். எனவே என் வீட்டில் இருந்து கொஞ்சதூரத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, 50 தொழிலாளர்களுடன் பிஸ்கட் தயாரிப்பைத் தொடங்கினேன்.”
ப்ரியா என்ற பெயர் அவருக்குப் பிடித்தது. எனவே நிறுவனத்துக்கும் அதே பெயரை வைத்தார். பிஸ்கட் ஆலை அமைக்கவே பணமெல்லாம் செலவாகிவிட்டதால் கொல்கத்தாவில் பர்ராபசாரில் சின்னதாக ஒரு வாடகை அலுவலகமே அமைக்கமுடிந்தது.
"பெரும்பாலான பணிகளை நானே செய்தேன். அலுவலகம், ஆலை என்று மாறிமாறிப் போனேன். சிலசமயம் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை வேலை செய்வேன். அவை கடினமான நாட்கள்.”
அவர் வெளியே உழைத்த சமயம் அவரது மனைவி டி.டி அகர்வால் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார். அவருக்கு விக்ரம், ஜெய் என்று இரு குழந்தைகள்.
பிஸ்கட் தொழில் எளிதானது அல்ல. பார்லே ஜி, பிரிட்டானியா போன்ற பெரிய பிராண்டுகள் இருந்தன.
|
9 ஆலைகளில் தினமும் 100 டன்கள் பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது
|
“எங்கள் இருப்பை உணரவைப்பதே பெரிய போராட்டமாக இருந்தது. தாங்கள் பழக்கப்பட்ட பெரிய நிறுவனங்களின் பொருட்களையே வாங்க மக்கள் விரும்பினர்,” என்கிறார் அகர்வால்.
தரமான சந்தைப்படுத்தலே மக்கள் மனதில் இந்த பிராண்டைப் பதியவைக்கும் என்று அவர் உணர்ந்தார். 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்றும் கடைகளுக்குச் சென்றும் ப்ரியா பொருட்களை சந்தைப்படுத்தினர்.
"ஆரம்பத்தில் குளுக்கோஸ், தேங்காய் பிஸ்கட்கள் செய்தோம். பல கிமீ தூரம் நடந்து கடைகடையாய் அலைந்து எங்கள் பிஸ்கட்களை விற்பனைக்கு எடுக்கவைப்போம்,” என்கிறார் அகர்வால்.
தரமான பொருளை குறைந்த விலையில் தருவதே அவரது தொழில் திட்டம். “நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தினரை நாங்கள் குறிவைத்தோம். எனவே அதிக விலை வைக்க இயலாது. மெல்ல எங்கள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது.” விளக்குகிறார் அகர்வால்.
1995-ல் விற்பனை 5 கோடியாக உயர்ந்தது. மேலும் ஐந்து ஆலைகள் அமைக்கப்பட்டன.
அகர்வால் தொழிலை விரிவுபடுத்த விரும்பினார். கொல்கத்தாவில் இருந்து 13 கிமீ தொலைவில் மேலும் இரண்டு ஏக்கர்கள் வாங்கினார். உருளை வறுவல், ஸ்நாக்குகள் செய்ய ஆலை அமைத்தார். இதை அமைக்க 15 கோடி முதலீடு செய்தார்.
|
அகர்வாலின் மகன்களான விக்ரம், ஜெய் இருவரும் அடுத்த இரு ஆண்டுகளில் தங்கள் சந்தைப் பங்கை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்
|
2 கோடி முதலீட்டில் 2012ல் சோயா நொறுக்குத்தீனி செய்யும் ஆலையை அமைத்தார்.
இந்த ஆண்டு ஹூக்ளியில் செராம்பூரில் இன்னொரு பிஸ்கட் ஆலை அமைத்துள்ளனர். இதற்கு முதலீடு 30 கோடி ரூபாய்.
அவரது மகன்கள் இருவரும் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். மூத்தவரான விக்ரம் அகர்வால், 34, அடுத்த இரு ஆண்டுகளில் ப்ரியா தயாரிப்புகளை அசாம், சத்திஸ்கார் மாநிலங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தையில் தங்கள் பங்கை இருமடங்காக உயர்த்த இருப்பதாகக் கூறுகிறார்.
“எங்கள் மொத்த விற்பனையில் ஏற்றுமதி 5 சதவீதம் மட்டுமே. ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்கா, கனடாவுக்கும் ஏற்றுமதியைத் தொடங்க இருக்கிறோம்,” என்கிறார் விக்ரம். மிட்டாய்கள் உற்பத்தியிலும் இந்நிறுவனம் கால்பதித்து உள்ளது. இவரது இளம் சகோதரரான ஜெய் அகர்வால், 32, சால்ட் லேக் பகுதியில் 4 நட்சத்திர விடுதி ஒன்றும் தொடங்கி இருப்பதாகக் கூறுகிறார். “எங்கள் தந்தையைப் போலவே நாங்கள் இப்போதும் கடைக்காரர்களை அணுகி விற்பனை பற்றிக் கேட்பதுண்டு. அவர்கள் சொல்லும் புகார்களைக் கேட்டு அவற்றை சரி செய்கிறோம். நாங்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டி இருக்கிறது,” என்கிறார்கள் இந்த சகோதரர்கள்.
உண்மைதான். கடும் உழைப்பில் உருவானதுதானே இந்நிறுவனம்?
அதிகம் படித்தவை
-
உயர வைத்த உழைப்பு!
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு மாதம் ரூ.1500 வேலைக்கு சென்றவர் சந்தோஷ் மஞ்சளா. சுயமாக மேற்படிப்பு முடித்து அமெரிக்கா வரை சென்று ரூ.1 கோடி ஆண்டு சம்பளம் பெற்றவர், இப்போது இந்தியா திரும்பி எடைகுறைப்புக்கு டயட் உணவு அளித்து வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தோல்விகளில் துவளாத வெற்றியாளர்
தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பேனாவில் கொட்டிய கோடிகள்
350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை
-
நினைத்ததை முடிப்பவர்
ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்