பாப்கார்னில் பத்து கோடி! பொரித்தெடுக்கும் நண்பர்களின் வெற்றிக்கதை!
23-Nov-2024
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
ஒரு சாதாரண சிந்தனைகூட சில சமயங்களில் பெரிய யோசனையாக வடிவம் பெறும். சிறுவயது நண்பர்களான சிராக் குப்தா, அங்குர் குப்தா இருவருக்கும் அப்படித்தான் ஒரு சாதாரணமான சிற்றுண்டி, தனிச்சுவை வாய்ந்த பொருளாக, வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லி மற்றும் இதர நகரங்களில் உள்ள பல்வேறு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4700 பி சி (4700 BC) என்ற பெயரில் வழங்கும் பாப்கார்ன் பிராண்ட்டின் வெற்றி இவர்களின் உழைப்பால் உருவானது.
சிறிய பாப்கார்ன், இந்த இருவரின் வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கும் மேலாக பெரும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. 2013-ம் ஆண்டு டெல்லியில் ஒரு சிறுகடையில் விற்கத் தொடங்கினர். இப்போது அவர்களுக்கு டெல்லி விமானநிலையத்தில் ஒரு கிளை உட்பட டெல்லி-என்.சி.ஆர்., பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களிலும் 23 கடைகள் உள்ளன. 2017-18ம் ஆண்டில் அவர்களின் ஆண்டு வருவாய் 10 கோடி ரூபாயாக இருக்கிறது.
|
சிராக் குப்தா, அமெரிக்காவில் டெல்லோய்ட்டி கன்சல்டிங் நிறுவனத்தில்(Deloitte Consulting) அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேலையில் இருந்து விலகி நண்பருடன் இணைந்து 4700 பி சி என்ற பாப்கார்ன் பிராண்ட்டை 2013-ஆம் ஆண்டு தொடங்கினார். (புகைப்படங்கள்:நவ்நிதா)
|
“எங்கள் பாப்கார்ன் பிராண்ட் அதன் தனிச்சுவைகளால் சிறப்பு வாய்ந்தது மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது,” என்கிறார் 33 வயதாகும் சிராக். “பாப்கார்ன் ஆக வெடிக்காத சோளத்தை மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கிறோம். 1-2 சதவிகிதத்தை கழிவாக, கழிவு மேலாண்மை பிரிவுக்கு அனுப்பி விடுகிறோம். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு பாப்கார்னும் நல்ல தரமானதாக இருக்க வேண்டும்.”
வசதியான வேலையை விட்டு விலகி, கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தை வைத்து, அந்தத் தொழில் வெற்றியைத் தருமா, வெற்றியைத் தராதா என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஒரு சொந்தத்தொழிலைத் தொடங்குவது என்பது சாதாரணமான ஒரு முடிவல்ல. ஆனால், இறுதியில் நல்ல பலன் கொடுத்தது.
”உணவுத் தொழிலில் பல்வேறு புதுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த இடைவெளியில்தான் நாங்கள் ஒன்றை கண்டுபிடித்தோம்,” என்று விவரிக்கிறார் சிராக். 2008-12 ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்காவில் படித்து, அங்கேயே வேலை பார்த்தார்.” அமெரிக்காவில் இருக்கும்போது, பல்வேறு வகையான சுவையுள்ள பாப்கார்ன்களை நான் சாப்பிட்டேன். ஆனால், அவை இந்தியாவில் இல்லை. இந்த இடைவெளியைத்தான் நாங்கள் நிரப்ப வேண்டும் என்று நினைத்தோம்.”
அமெரிக்காவின் டெல்லோய்ட்டி கன்சல்டிங் நிறுவனத்தின் பணி, அப்போது அவருக்கு போரடித்தது. தானே ஏதாவது சொந்தமாக தொழிலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே 2012-ல் சிராக் இந்தியா திரும்பினார். தமது பெற்றோர்களைப் பார்த்துக்கொண்டார். தமது சிறுவயது நண்பரான அங்குர் உடன் மீண்டும் தொடர்பு கொண்டார். தொழில் முனைவோர் ஆவது என்ற கனவை நனவாக்கும் செயலை இருவரும் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தனர்.
கம்ப்யூட்டர் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்த உடன், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளத்துடன், சீனியர் கன்சல்டன்ட் ஆக சிராக் பணியாற்றினார். அவரால் இந்தியாவில் நல்ல வேலையில் சேர்ந்திருக்க முடியும். ஆனால், சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையால் அதில் இறங்கினார்.
இருவரும், 2012-ம் ஆண்டு தங்களின் நிறுவனத்தின் பெயரை ஜீ மெய்ஸ் பிரைவேட் லிமிடெட் (Zea Maize Private Limited)என்ற பெயரில் பதிவு செய்தனர். “பாப்கார்ன்கள் மிகப் பழைமையான வரலாறு கொண்டவை. கி.மு.4700 காலகட்டத்தைச் சேர்ந்த பார்கார்ன் தயாரிக்கும் பாத்திரங்களுடன், பாப்கார்னின் படிமப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உண்மையை நினைவு கூறும் வகையில் கி.மு 4700 என்ற பிராண்ட் பெயர் பிறந்தது,”என்று விவரிக்கிறார் சிராக்.
இந்த யோசனையை திட்டமிட்ட உடன், அமெரிக்காவுக்கு பயணம் சென்றனர். திரும்பும்போது பாப்கார்ன் பாக்கெட்களையும் எடுத்துச் வந்தனர். “அமெரிக்காவின் நீளம், அகலம் என நாடு முழுவதும் பயணித்தோம். சிறிய இடங்களில் வசிக்கும் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிலில் தொடர்புடையவர்களைக் கூட சந்தித்துப் பேசினோம்.
“டெல்லியைதான் எங்களின் அடித்தளமாகத் தேர்வு செய்தோம். ஒரு சமையல் கலைஞரைக் கொண்டு பாப்கார்னை அமெரிக்கத் தரத்தில் செய்து பார்த்தோம். அந்த பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருந்த பொருட்களைக் கொள்முதல் செய்தோம். பரிசோதனை முயற்சியாக பல்வேறு சுவைகளில் முயற்சி செய்தோம்,” என்கிறார் தங்களது ஆரம்ப காலப்பயணம் குறித்து சிராக்.
|
சிராக்(இடது)தமது நண்பரும் தொழில் பங்குதாரருமான அங்குர் குப்தா உடன்.
|
பெரிய அளவில் பாப்கார்ன் தயாரிப்பதற்கு, அவர்களுக்கு இறக்குமதி மெஷின்கள் தேவைப்பட்டது. ஒரு தொழிற்சாலைக்காக முதலீடு செய்ய வேண்டி இருந்தது. “இந்த எல்லாவற்றுக்காகவும், எங்களுடைய சேமிப்பில் இருந்து 1.5 கோடி ரூபாய் திரட்டினோம். டெல்லியில் உள்ள வாசிராபாத்தில் 2,500 ச.அடி இடத்தை வாடகைக்கு எடுத்தோம். 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சாகேத்தில் உள்ள டி.எல்.எஃப் மாலில் ஒரு கடையைத் தொடங்கினோம்,”என்கிறார் சிராங்க்
ஒரு பொருளை சிறப்புவாய்ந்ததாக, சுவைமிகுந்ததாக ஆக்குவதில் பேக்கேஜிங் முக்கியபங்கு வகிக்கிறது. சுவைமிகுந்த பாப்கார்ன், இனிப்பு மற்றும் உப்பு சுவைகளில் கிடைக்கிறது. ஒரு பாக்கெட்டை ஒரே முறை மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போய்விடக் கூடாது. எனவே, பாப்கார்ன்பாக்கெட்டை ஜிப்பால் மூடுவது போன்ற பேக்கேஜை தயாரித்தோம்,” என்கிறார் சிராங்க்.
அங்குர், தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவின் பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார். சிராக், விற்பனை, சந்தை மற்றும் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார். பாப்கார்ன் விற்பனை தொடங்கிய உடன், லாபம் தரத் தொடங்கியது. புகழடையத் தொடங்கியது. அவர்களுக்கு 2014-ம் ஆண்டு மார்ச்சில் 80 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் கிடைத்தது.
2015-ம் ஆண்டு பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்த உடன், எல்லா விஷயங்களும் நன்றாக நடைபெறத் தொடங்கின. “பாப்கார்ன் மற்றும் சினிமா இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதுதான், அவர்களுடன் வியாபாரத்தொடர்பு வைத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது,” என்கிறார் சிராக்.
இப்போது 4700 பி சி பாப்கார்ன், பி.வி.ஆர் சினிமாஸின் அனைத்து அவுட்லெட்களிலும் கிடைக்கின்றது. 2015-ம் ஆண்டில் இந்த வர்த்தகத்தில் பி.வி.ஆர் நிறுவனம் 75 சதவிகிதப் பங்குகளுடன் 5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதையடுத்து, 4700 பி சி பாப்கார்ன் நிறுவனம், டெல்லியின் புறநகரில் உள்ள சோனிபட் பகுதியில் 25000 ச.அடி இடத்துக்கு மாறியது. உற்பத்தி பலமடங்கு அதிகரித்தது. இப்போது அவர்கள் 18 வெவ்வேறு சுவைகளில் பாப்கார்ன் தயாரிக்கின்றனர்.
இதற்கு அடுத்த வருடம் அவர்கள் மிகச்சிறந்த முறையில் வர்த்தகம் செய்தனர். அவர்களின் ஆண்டு வருவாய் இருமடங்கானது. இப்போது 2017-18ல் அவர்களின் ஆண்டு வருவாய் 10 கோடி ரூபாயாக இருக்கிறது.
|
ஒரு பிடெக் பட்டதாரியான சிராக், அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் முன்பு, பெங்களூருவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றினார்.
|
நான்கு உடன் பிறந்தவர்களுடன், இளையவராகப் பிறந்தவர் சிராக். 2005-ம் ஆண்டு டெல்லி ஐபி பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்தார். பின்னர் அமெரிக்கா செல்லும் முன்பு பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றினார்.
உணவுப் பிரியரான அவர், டெல்லியில் வாயில் எச்சில் ஊறவைக்கும் தெருவோர உணவுக்கடைகளைக் கொண்ட சாந்தினி செளக்கின் தெரு ஒன்றில் வளர்ந்தார். அங்கு அவருடைய தந்தை ஒரு சிறிய வணிகம் செய்து வந்தார். ஏன் உணவை அவர் தொழிலாகத் தேர்வு செய்தார் என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?
ஆரம்ப காலகட்டப் போராட்டங்களைப் பற்றிச் சொல்லும் சிராக், “சம்பளம் வாங்கிய நாட்களில் அது ஒவ்வொரு மாதமும் சரியாக வந்து விடும். இதற்கு எதிர்மறையாக தொழிலின் ஆரம்பகாலகட்டத்தில் மிக மெதுவான வளர்ச்சி இருந்தது. போராட்டங்கள் இருந்தன. ஆனாலும், நோக்கத்தில் கவனம் கொண்டிருக்க வேண்டும். எங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கான திட்டம் இருந்தது. ஒரு மிகப்பெரும் வெற்றி பெறுவோம் என்ற உறுதி இருந்தது.”
தொழிற்சாலை 170 ஊழியர்களுடன் கட்டமைக்கப்பட்டது, அதே போல பல்வேறு கடைகளுடன், சந்தைப்படுத்துதல் பணி மற்றும் அக்கவுண்ட் டீம் ஆகியோர் நீண்டகால கண்ணோட்டத்துடன் பணியாற்றுகின்றனர்.
“பொறுமை, நீடித்திருத்தல், சரியான பிராண்ட் முன்னெடுப்பு, அதேபோல சரியான சந்தைப்படுத்துதல் ஆகியவைதான் எந்த ஒரு பொருளுக்கும் தேவையான ஒன்று,” என்று விவரிக்கிறார் சிராக். அவர்களின் பாப்கார்ன் 89 ரூபாய் விலையில் இருந்து கிடைக்கிறது. அதன் பேக்கேஜிங், புதுமை, தொழில் நெட்வொர்க் ஆகியவற்றால் ஒரு நிலையான இடத்தை நோக்கி பிராண்ட்டின் வெற்றி செதுக்கப்பட்டிருக்கிறது.
|
4700 அவர்களின் ஆண்டு ஆண்டு வருவாய் பிராண்ட், 18 வெவ்வேறு வகையான சுவைகளில் பாப்கார்ன்களை வழங்குகிறது.
|
சந்தையின் உத்திகளைப் பற்றிப் பேசும் சிராக்; "பெருநிறுவனங்களுக்காக புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளுக்கு கிஃப்ட் பேக்குகளை தருகிறோம். மைக்ரோ சாஃப்ட், கூகுள் மற்றும் லூப்தன்சா ஆகிய நிறுவனங்கள் எங்களது வாடிக்கையாளர்கள். சிறப்பு நிகழ்வுகளின் போது, அவர்களின் ஊழியர்களுக்காக ஸ்டைலிஷ் ஆக பேக்கேஜ் செய்யப்பட்ட டின் பாக்ஸ்களைக் கொண்ட கிஃப்ட் பேக்குகளை தருகின்றனர்.”
பெப்சி அல்லது மேகி போன்ற பிராண்ட்கள் போல 4700 பி சி பாப்கார்ன்-ஐ புகழ்பெற்றதாக மாற்றுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த பிராண்ட்களை உருவாக்கிய நபர்களை விடவும், இந்த பொருட்களும், அதன் பிராண்ட்டும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இதுதான், சிராக் பெற விரும்பும் வெற்றி.
ஒவ்வொரு மாதமும் 10-13 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு பாப்கார்ன் வழங்குவதன் மூலம் அந்த நோக்கம் ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டது எனவும் சொல்லலாம்!
அதிகம் படித்தவை
-
மாம்பழ மனிதர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை
-
மலையளவாகப் பெருகிய கடுகு!
உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது. அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
அசத்துகிறார் ஆன்சல்!
மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
உழைப்பின் உயரம்
தளராத மன உறுதியும், உழைப்பும், போராட்ட குணமும் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனை மாபெரும் உயரங்களை எட்டவைத்துள்ளன. கோழித்தொழிலில் சுமார் 5500 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அவரைச் சந்திக்கிறார் பி சி வினோஜ் குமார்