Milky Mist

Wednesday, 7 June 2023

அன்று மெக்கானிக் ஷாப்களில் பொழுதை போக்கிய இளைஞர்… இன்று ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் தரும் ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்!

07-Jun-2023 By உஷா பிரசாத்
சென்னை

Posted 05 Dec 2021

இளம் வயதிலிருந்தே ஆடம்பரமான மோட்டார் பைக்குகள் ஓட்டுவதில் அன்சார் விருப்பம் கொண்டிருந்தார். தாம் பிறந்த ஊரான திருச்சி மாவட்டம் கைலாசபுரத்தில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் பெரும்பாலும் பொழுதைப் போக்குவார்.

“மெக்கானிக்தான் என் ஹீரோவாகத் தெரிந்தார். அவரது கேரேஜ்க்கு வரும் ஒவ்வொரு வேலையையும் எங்களை செய்ய வைப்பார், பதிலுக்கு பைக்குகளை நான் ஓட்டிப்பார்ப்பேன்,” என்றார் அன்சார். இவர் பைக்கிங் பிரதர்ஹுட் (Biking Brotherhood)என்ற சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  ஆண்டுக்கு ரூ.10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம் பைக் ரைடிங்கிற்கான உயர் தரமான ஜாக்கெட்கள், பூட்கள், கையுறைகள்,ரேஸிங் ஆடைகள் தயாரிக்கிறது.

இரண்டு பழைய தையல் இயந்திரங்கள், இரண்டு தையல்காரர்கள் ஆகியோரைக் கொண்டு பைக்கிங் பிரதர்ஹூட் என்ற ரேஸிங் கியர்ஸ் பிராண்ட் நிறுவனத்தை அன்சார் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

ஒரு சாதாரண வெல்டரின் மகனாக பிறந்து பைக்குகளின் காதலராக தமது சொந்த நிறுவனத்தை தொடங்கியவர் இவர்.  இது மட்டுமின்றி, பல்வேறு உயர் தரமான பைக்குகளான கேடிஎம், டிரிம்ப், ஹேயாப்ஸா மற்றும் இறுதியாக 2019ஆம் ஆண்டின் பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் என்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பைக் போன்றவற்றை சொந்தமாக கொண்டிருப்பவரின் வாழ்க்கை கதை படிக்கும் வாசகர்களை ஈர்க்கக் கூடியதாகும்.

  அன்சார்(44), குழந்தை பருவத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தவர். ஒரு வெல்டராக அவரது தந்தை மாதம் தோறும் ரூ.750 மட்டுமே சம்பாதித்தார். அன்சார், தமது குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவராவார். மூன்றாவது குழந்தை பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவதாக அன்சார் பிறந்தார்.

“என்னுடைய இளம் வயதில் நான் புதுத் துணிகளே அணிந்ததில்லை. என்னுடைய மூத்த சகோதரர்கள் போட்டு உபயோகித்த பழைய துணிகளையே நான் அணிவது வழக்கம்,” என்றார் அன்சார். அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை வேலைக்காக சவூதி அரேபியா சென்றார். சென்னையிலும் அன்சார் மெக்கானிக் ஷாப்களில் நேரம் செலவழித்தார்.

“மெக்கானிக்குகளிடம் இருந்து பைக் மற்றும்  ரேஸிங் குறித்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். 90-களில் சென்னை வட்டாரத்தில் இரவு நேர பைக் ரேஸ்களில் சுற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன்,” என்றார் அன்சார்.

அமைதியான சாலைகளில் இரவு நேரத்தில் சென்னையில் அதி வேக திறன் கொண்ட பைக்குகளை ஓட்டும் கலாசாரம் கொண்ட இளம் பந்தய  வீரர்கள் இருக்கின்றனர். போலீசார் உள்ளிட்டோர் இதை பொருட்படுத்துவதில்லை.  

  கைலாசபுரத்தில் ஒய்எம்சிஏ நடத்தி வந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை அன்சார் படித்தார். பின்னர் சென்னையில் எம்ஜிஆர் ஆதர்ஷ் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கோவையில் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணு பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார்.

சர்வதேச பிராண்ட்களை விடவும் மிகவும் குறைந்த விலையில் அன்சார் ஜாக்கெட்கள் தைத்துக் கொடுக்கிறார். அதே நேரத்தில் இந்திய சூழல்களுக்கு ஏற்ப பாதுகாப்பிலும், வசதியிலும் கவனம் செலுத்துகிறார்


1998ஆம் ஆண்டு சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மாதம் ரூ.2500 சம்பளத்தில் வேலை கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வரை அங்கு வேலை பார்த்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பரில் வேலையை விட்டு விலகிய அவர், தனது சேமிப்பு ரூ.50,000 மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகை ரூ.2.5 லட்சம் எல்லாம் சேர்த்து முதலீடாகப்போட்டு பிராண்ட் டிசர்ட்கள் விற்கும் கடையைத் தொடங்கினார்.

“கடை நன்றாக போனது. நான் நண்பர்களிடம் இருந்து வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்துவதில் அவசரம் காட்டினேன். மாதம் ரூ.8000 முதல் ரூ.10,000 வரை  லாபம் சம்பாதித்தேன். ஆகவே பணத்தை திரும்பிக் கொடுக்க ஆரம்பித்தேன்.”

“ஒரு ஆண்டுக்குள் கடனில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் புதிய சரக்குகள் இருப்பு வைப்பதற்கான பணம் இல்லை. வணிகம் வளர்ச்சியடையும் வரை அதில் கிடைக்கும் லாபத்தை அதிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்ற பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.”

ஏறக்குறைய அதே தருணத்தில், மொபைல் சிம் கார்டுகள் விற்பனை அதிகரித்திருந்தது. ஏர்டெல், ஹச் மற்றும் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து அன்சார் தனது கடையிலேயே சிம்கார்டுகள் விற்கத் தொடங்கினார்.ஒவ்வொரு போஸ்ட்பெய்டு விற்பனைக்கும் அவருக்கு ரூ.1000 கிடைத்தது. தினமும் குறைந்தது ஒரு போஸ்ட் பெய்டு சிம் கார்டை அன்சார் விற்பனை செய்தார்.

“அருகருகே இருந்த  கடைக்காரர்களும் சிம் கார்டுகள் விற்கத் தொடங்கினர். ஓர் ஆண்டுக்குள் இந்த வணிகம் பொலிவிழந்துவிட்டது,” என்று பகிர்ந்து கொள்கிறார்.

2004ஆம் ஆண்டு சதர்லேண்ட் என்ற பிபிஓ நிறுவனத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் அவர்களின் செயல்பாடுகள் தொடங்குவதற்கு உதவியாக இருந்தார். பின்னர் அவர் இன்சிஸ்(INSYS Inc) நிறுவனத்தில் வேலை பார்த்து, அதன் பின்னர் எக்சோரியண்ட்(Xoriant) என்ற புனேவை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் ரூ.30 லட்சத்தில் உதவி துணைத் தலைவராக பணியில் சேர்ந்தார். 

எக்சோரியண்ட் நிறுவனத்தில் இருந்து விலகி 8கேமைல்ஸ் நிறுவனத்தில் அன்சார் 2013ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ஐடி பணியாளர் நியமனத்தை கையாளும் துணை தலைவராக சென்னையில் பணியாற்றினார்.   பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றியபோதிலும்  பைக்குகள் மீதான விருப்பத்தை தம்முள் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.  

இளைஞராக இருந்தபோது முதன்முதலாக யமாஹா ஆர்எக்ஸ்100 பைக்கை அவர் வாங்கினார். அவரது முதலாவது சூப்பர் பைக் ஒரு கேடிஎம்(KTM ) ஆகும். இதன் விலை ரூ.2 லட்சமாகும். புனேவில் இருக்கும்போது 2011ஆம் ஆண்டில் இந்த பைக்கை  வாங்கினார். 


பைக்கிங் பிரதர்ஹூட் நிறுவனம் ஆரம்ப கட்டத்தில் பைக்கர்களின் ரைடிங் கியர்களை பழுதுபார்த்துக் கொடுத்தது. நாடு முழுவதும் இருந்து பல பைக்கர்கள் ரிப்பேருக்காக பொருட்களை அனுப்பி வைத்தனர்


“நான் ஸ்கார்பியோ ஜீப் வைத்திருந்தபோதிலும் கூட, மும்பைக்கு வேலை விஷயமாக என்னுடைய கேடிஎம்மில்தான் செல்வது வழக்கம். அதே போல சென்னைக்கும் பல முறை இதே போல வந்திருக்கின்றேன். தவிர புனேவுக்கு சென்று விட்டும் வந்திருக்கின்றேன். 1200 கி.மீ தூரத்தை 12 மணிமுதல் 13 மணி நேரத்தில் தனியாக பைக்கில் பயணித்திருக்கிறேன்,” என நினைவு கூர்ந்தார் அன்சார்.

டியூக்ஸ் ஆஃப் புனே என்ற முதலாவது சூப்பர் பைக் குழு 2012ஆம் ஆண்டு தொடங்கப்படுவதற்கு அன்சார் ஒரு கருவியாக இருந்தார். டியூக்ஸ் ஆஃப் புனேவை அன்சார் தொடங்கியபோது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரைடர்களுக்கு பாதுகாப்பு கியர் மற்றும் துணிகளுக்கு ஆல்பைன்ஸ்டார்ஸ் என்ற பெயரிலான சர்வதேச பிராண்ட் மட்டுமே இருந்தது.

   அவர்கள் தயாரிப்புகள் மிகவும் அதிக விலை கொண்டவை. ஒரு ஜாக்கெட்டின் விலை ரூ.25,000 ஆக இருந்தது. எனவே குறைந்த விலையில் ஜாக்கெட்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அன்சாருக்கு ஏற்பட்டது. பைக்கிங் பிரதர்ஹூட் என்ற நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்துக்கு இடையே, அன்சார் புனேவில் இருந்தார்.

முதலில் தன்னுடைய எண்ணத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இரண்டு பழைய தையல் எந்திரங்கள், ஒரு ஹெம்மிங்  மிஷின் ஆகியவற்றை சென்னையில் 2013ஆம் ஆண்டுக்கு மத்தியில் பாதி விலையில் ஒரு லட்சம் ரூபாயில் வாங்கினார். இரண்டு தையல் கலைஞர்களையும் வேலைக்கு நியமித்தார். அவர்களில் ஒருவர், செருப்பு தைக்கும் தொழிலாளி ஆவார். அவர் சென்னையில் பல ஆண்டுகளாக பைக்கர்களுக்கு தோல் ஜாக்கெட்களை பொருத்தமாக தயாரித்துக்கொடுத்துக் கொண்டிருந்தவர்.

ஆரம்ப கட்டத்தில் பழுதான ஜாக்கெட்களை சரி செய்யும் பணிகளை மட்டுமே எடுத்துச் செய்தனர். ஜாக்கெட் பழுது நீக்கும் முன்பு, பழுது நீக்கிய பின் என்று புகைப்படங்களை எடுத்து தமது முகநூல் பக்கத்தில் அன்சார் பகிர்ந்தார்.

நாடு முழுவதும் உள்ள ரைடர்கள் தங்களது பழுதான ஜாக்கெட்களை அஞ்சல் மூலம் சென்னைக்கு அனுப்பி சரி செய்து திரும்பப் பெற்றனர். அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தபால் கட்டணம் சராசரியாக ரூ.250 ஆக இருந்தது. பழுது நீக்குவதற்காக அன்சார் ரூ.400 முதல்  ரூ.500 வரை கட்டணம் பெற்றார்.

“நாங்கள் ஜாக்கெட்டின் ஒட்டு மொத்த மேற்பரப்புக்கும் அதாவது முழுமையான ஸ்லீவ் அல்லது காலர் அல்லது பொருத்தமான நிறத்தைக் கொண்ட ஒரு கஃப் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கின்றோம். பழுது பார்க்கப்பட்ட ஜாக்கெட் பார்ப்பதற்கு புத்தம் புதிது போலத் தோன்றும். பைக்கர் புதிதாக ஒன்று வாங்குவதைத் தவிர்த்து இந்த வகையில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்றார் அவர்.

    “இன்றைக்கு நாங்கள் இதர ரைடிங் கியர் பிராண்ட்களுடன் நம்பகமான உற்பத்தி பங்குதாரராக இருக்கின்றோம். பஜாஜ்,  டிவிஎஸ் ரேஸிங், கேடிஎம் மற்றும் யமாஹா போன்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு நாங்கள் புரடெக்டிவ் கியர்களை தயாரித்துத் தருகின்றோம்.’’

பைக்கிங் பிரதர்ஹூட் நிறுவனம் மட்டுமே இந்திய ரைடிங் கியர்கள் தயாரிப்புக்கு என சொந்தமான முழு அளவிலான உற்பத்திப் பிரிவைக் கொண்டிருப்பதாக  அன்சார் கூறுகிறார். தவிர ஐரோப்பியா, தென் அமெரிக்கா,  மத்திய ஆஃப்ரிக்கா நாடுகளுக்கும் அவர்கள் தயாரிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.


சென்னை, அண்ணா சாலையில் உள்ள பைக்கிங் பிரதர்ஹூட் நிறுவனத்தின் கடை
அன்சார் சென்னை கொரட்டூரில் உள்ள தமது சொந்த வீட்டின் தரைதளத்தில் 600 ச.அடி இடத்தில் பைக்கிங் பிரதர்ஹூட் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில்  பழுது பார்க்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒவ்வொரு வார இடைவெளியிலும் புனேவுக்கும், சென்னைக்கும் இடையே பயணித்தார்.

2014ஆம் ஆண்டு 8கேமைல்ஸ் நிறுவனத்தில் விலகி முழு நேரமாக தமது நிறுவனத்தில் கவனம் செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் 500 ச.அடியில் முதன்மையான கடையை ரூ.25 லட்சம் முதலீட்டில் தொடங்கினார். ஜாக்கெட்கள், கையுறைகள், பூட்களை அன்சார் தயாரிக்கத் தொடங்கினார். கேடிஎம் பைக்குகளுக்கு ஏற்ப வண்ணத்தில் பொருந்திபோகும் வகையில் ஆரஞ்சு வண்ண ஜாக்கெட்களை ஆரம்ப கட்டத்தில் அவர் தயாரித்தார்.

ஆனால் ஆரம்ப கட்டத்தில் மாதம் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து ஜாக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்தனர். எனவே, 2015ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிடுவது என்று திட்டமிட்டார். அவருடைய மனைவி ஆயிஷா, தீபாவளியின் போது ஆஃபர் விலையில் விற்று பாருங்கள் என்று யோசனை சொன்னார். இது அவர்கள் விற்பனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

“அனைத்து வகையான உற்பத்தி பொருட்களுக்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி என என்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்தேன். பதிவிட்ட சில நிமிடங்களுக்குள் பல்வேறு அளவுகளில்  வெள்ளமென விசாரணைகள் வரத் தொடங்கின. இரண்டு வாரங்களுக்குள் 80 சதவிகித சரக்கு இருப்பு விற்பனை செய்யப்பட்டு விட்டது. எங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.8 லட்சம் பணம் சேர்ந்தது.”

அப்போதில் இருந்து அவர்கள் ஆண்டுதோறும் வளர்ச்சி பெற்று வருகின்றனர். பைக்கிங் பிரதர்ஹூட் விற்பனை செய்யும் ஜாக்கெட்கள் விலையானது ரூ.6000 முதல் ரூ.10000 வரை இருக்கிறது.


பைக் ஓட்டும் ஆர்வலரான அன்சார், புனேவில் சூப்பர்பைக் ரைடர்ஸ் குழு உருவாவதற்கு காரணமாக இருந்தார்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் 120 முகவர்கள் வாயிலாக 60 தயாரிப்புகளை இந்த நிறுவனம் விற்று வருகிறது. ரைடிங் கியர்கள், நிறுவனத்தின் சொந்த இணையதளத்திலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இதர இ-வணிக இணையதளங்களிலும் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

தையற்கலைஞர்கள், பேட்டர்ன் மாஸ்டர்கள் ஆகியோரைக் கொண்ட  22 பேர் குழுவுடன் சென்னை கொரட்டூரில் உள்ள சொந்த கட்டடத்தில் 6000 ச.அடி இடத்தில் பைக்கிங் பிரதர்ஹூட் தமது செயல்பாட்டை நடத்திவருகிறது.

அன்சார், சென்னையில் தமது தாய், மற்றும் மனைவி ஆயிஷாவுடன் வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை இப்போது உயிரோடு இல்லை. அன்சாருடன் உடன்பிறந்தோர் அனைவரும் சவூதி அரேபியாவில் செட்டில் ஆகியிருக்கின்றனர்.    .

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • School teacher becomes successful street food vendor

    தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!

    புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Success story of ID Fresh owner P C Mustafa

    மாவில் கொட்டும் கோடிகள்

    தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • The colour of success is green

    ஏற்றம் தந்த பசுமை

    ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.    

  • How kumaravel built naturals brand

    சறுக்கல்களை சாதனைகளாக்கியவர்

    வணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Jacket makes money for Saneen

    சம்பளத்தைவிட சாதனை பெரிது!

    ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை