நள்ளிரவில் வீடு தேடி வரும் உணவு! கொல்கத்தாவில் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்களின் புது யோசனை!
08-Oct-2024
By ஜி சிங்
கொல்கத்தா
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று இளம் பட்டதாரிகள், பின்னிரவு நேர பசியை, ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றி இருக்கின்றனர். சாண்டா டெலிவர்ஸ் (Santa Delivers) என்ற நிறுனத்தைத் தொடங்கிய ஒன்றரை ஆண்டுக்குள்அவர்களின் ஆண்டு வருவாய் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஆதர்ஷ் சவுத்ரி, ஹர்ஷ் காந்தோய், புல்கித் கெஜ்ரிவால் ஆகிய மூவரின் வயதும் இருபதுகளில் இருக்கிறது. நாள் முழுவதும் திறந்திருக்கும் ரெஸ்டாரெண்ட்கள் மூடப்படும் நேரத்தில், நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், பின்னிரவு உணவு டெலிவரி செய்யும் ஃபுட் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இவர்கள் தொடங்கி இருக்கின்றனர்.
|
ஆதர்ஷ் சவுத்ரி, ஹர்ஷ் காந்தாய், புல்கித் கெஜ்ரிவால் மூவரும் கொல்கத்தாவில் சிறுவயது முதலே நண்பர்கள். மூவரும் சம அளவு பங்கு முதலீடு செய்து சாண்டா டெலிவர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் முலிக்)
|
“கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா, பின்னிரவில்தான் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைக்கொடுப்பார். இந்தப் பெயரே எங்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது,” என்கிறார் இதன் நிறுவனர்களில் ஒருவரான ஹர்ஷ்.
இவர்கள் மூவரும் சிறுவயதில் இருந்தே சால்ட் லேக் சிட்டி பகுதியில் வளர்ந்தவர்கள். டி.பி.எஸ் மெகாசிட்டி பள்ளியில் படித்த மூவரும், கல்லூரியில் வணிகத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தனர்.
ஆதர்ஷ், ஹர்ஷ் இருவரும், முறையே 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தனர். புல்கித் மட்டும், கொல்கத்தாவின் பவானிப்பூர் கல்வி சொசைட்டி கல்லூரியில் 2014-ல் பட்டம் பெற்றார்.
ஆதர்ஷ் 2014-ம் ஆண்டு ஹைதராபாத் சென்ற போதுதான், இரவு நேர உணவு சேவை குறித்த ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற யோசனை உதித்தது.
“2013-ம் ஆண்டு, நான் பொது நுழைவுத் தேர்வு (கேட்) சரியாக எழுதவில்லை. எனவே, அடுத்த ஆண்டு ஹைதராபாத் சென்று அங்கு தங்கி மீண்டும் தேர்வு எழுதுவதற்குத் தயாரானேன். நான் அங்கு தங்கி இருந்தபோது, இரவு நேரத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், உணவு டெலிவரியில் ஈடுபட்டது. இதே போன்ற சேவையை கொல்கத்தாவில் தொடங்கலாமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் ஆதர்ஷ்.
அவர் கொல்கத்தா திரும்பி வந்தபோது, அந்த யோசனை குறித்து ஹர்ஷ் உடன் ஆலோசனை செய்தார். அவரும் அந்த யோசனையை விரும்பினார், இது போன்ற சேவை அப்போது கொல்கத்தாவில் இல்லாததால் உடனே தொடங்கலாம் என்றும் கூறினார்.
|
சாண்டா, மாதம் தோறும் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு வகைகளை விற்பனை செய்கிறது.
|
அடுத்ததாக அவர்களுக்கு முதலீடு குறித்து யோசனை வந்தது. அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப முதலீடாகக் கொடுத்தனர். அந்தப் பணத்தை வைத்து அவர்கள் உணவு டெலிவரிக்காக ஒரு பழைய இரு சக்கர வாகனத்தை வாங்கினர். அதே போல தங்கள் முயற்சியை விளம்பரப்படுத்த துண்டு பிரசுரங்கள் அச்சடித்தனர்.
முதலில் ஒரு சிறிய பகுதியில் தங்கள் யோசனையை செயல்படுத்த வேண்டும் என்று விரும்பினர். “ஆரம்பத்தில், எப்படி வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு ரெஸ்டாரண்டில் அவுட் சோர்சிங் முறையில் உணவுப் பொருட்களை வாங்க முயற்சி செய்தோம்,” என்கிறார் ஹர்ஷ்
கொல்கத்தா நகரத்துக்குள் அது போன்ற உணவு டெலிவரி முறை முற்றிலும் புதிது. எனவே, ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள், அவர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டவில்லை.
“இரவு என்பது உறங்குவதற்குதான். உணவு ஆர்டர் செய்வதற்கான நேரம் அல்ல என்று எங்களைப் பாரத்து அவர்கள் சிரித்தனர். நாங்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், ஒரு ரெஸ்டாரெண்ட் சார்பில் எங்களுக்கு கைகொடுத்தனர்,” என்கிறார் ஹர்ஷ். சால்ட் சிட்டியில் கவுதம்’ஸ் என்ற உணவகம் முன்வந்தது.
ஒரு வழியாக 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சாண்டா டெலிவரியைத் தொடங்கியது.
சாண்டா டெலிவர்ஸ் தொடங்கிய தினத்தன்று எதிர்பாராதவிதமாக எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை. யாருக்குமே அப்படி ஒரு டெலிவரி இருப்பது தெரியவில்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு, இருவரும், சால்ட் லேக் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற கருணாமோயீ என்ற இடத்தில் உள்ள ஒரு நாளிதழ் ஏஜென்டிடம் சென்றனர். 10,000 நோட்டீஸ்களை நாளிதழ்களில் வைத்து விநியோகிப்பதற்காக அவர்களிடம் கொடுத்தனர்.
“நாளிதழ்களில் முறையாக நோட்டீஸ்கள் வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மூன்று மணி நேரம் அங்கேயே நின்றோம்,” என்கிறார் ஆதர்ஷ். “அதன்பின்னர், வீடு வீடாகச் சென்று எங்களுடைய துண்டுபிரசுரத்தைக் கொடுத்தோம். ஏற்கனவே நாங்கள் முகநூல் பக்கமும் உருவாக்கி இருந்தோம்.”
சாண்டா டெலிவர்ஸ் தொடங்கிய இரண்டு நாட்கள் கழித்துத்தான் முதல் ஆர்டர் கிடைத்தது.
|
வாயில் எச்சில் ஊறச்செய்யும் 85 வகையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்காக சாண்டா டெலிவரி செய்கிறது.
|
மூன்று நாட்களுக்குள், சாண்டா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 ஆர்டர்களை டெலிவரி செய்தது.
சாண்டா டெலிவர்ஸ் நிறுவனம் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தினமும் சாராசரியாக 5-10 ஆர்டர்களைப் பெற்றது. “இதே நேரத்தில், கவுதம் உணவகத்துடனான ஒப்பந்தம் செய்து ஒரு மாதம் ஆனபின்னர் நாங்கள் எங்களுடைய சொந்த கிச்சனை தொடங்க திட்டமிட்டோம்,” என்கிறார் ஆதர்ஷ்
இதற்கு பணமேதும் இல்லை. மீண்டும் அவர்களது பெற்றோர் உதவ முன்வந்தனர். ஒவ்வொருவரும் 3 லட்சம் ரூபாய் போட்டு ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்தனர். அதை கிச்சன் இடமாக உபயோகித்தனர். தவிர இரண்டு செஃப்கள், 2 உதவியாளர்கள், ஒரு டெலிவரி மேன் ஆகியோர்களையும் நியமித்தனர்.
மூன்று மாதங்கள் தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரண்டு பேருக்கும் ஒரு சிக்கலான பிரச்னை ஏற்பட்டது. இரண்டு பேருக்கும், மும்பையில் உள்ள புகழ்வாய்ந்த நர்ஸீ மோன்ஜி இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்தது.
“படிப்புக்கும், தொழிலுக்கும் இடையே எதைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது,”என்கிறார் ஹர்ஷ். ”கடின உழைப்பில் வியர்வை சிந்தி, சாண்டா டெலிவர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினோம். எனவே, அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், படிப்பும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.”
குடும்பத்தினருடன் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்த இருவரும் மும்பை சென்று படிக்க முடிவு செய்தனர். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு சிறுவயது நண்பரான புல்கித் கெஜ்ரிவாலை மூன்றாவது பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டனர். அவரும், இந்த நிறுவனத்தில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
எந்தவிதச் சிக்கலும் இன்றி நிர்வாகம் மாறியது. “ஒரே பள்ளியில் நாங்கள் படித்தோம். ஒரே பள்ளிப் பேருந்திலும் நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்,” என்கிறார் புல்கித்.
மூன்று பேரும் சம அளவு பங்குகளை முதலீடு செய்து பங்குதாரர்களாக ஆஹார் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இதன் கீழ் சாண்டா டெலிவர்ஸ் என்ற பிராண்ட் பெயரைப் பதிவு செய்தனர்.
அப்போது, சாண்டா டெலிவர்ஸ் ஆர்டர்கள் மாதம் தோறும் 300-350 என்ற அளவுக்குச் சென்றது. “பெரும்பாலான ஆர்டர்கள் மாணவர்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து கிடைத்தது,” என்கின்றனர் அவர்கள்.
அவர்களுக்கு ஒரு பெரிய உண்மையான ஊக்கம் என்பது 2015-ம் ஆண்டுதான் வந்தது. மூன்று பேரும் ஃபுட் பான்டா, ஜூமோட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய ஃபுட் ஆர்டர் இணையதளங்களை அணுகிப் பேசியபோது அவர்களின் நிறுவனம் அங்கெல்லாம் பட்டியலிடப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஃபோன் அழைப்புகள் மூலமும் இப்போது சாண்டா டெலிவர்ஸ்-க்கு மாதம் தோறும் 1,800 ஆர்டர்கள் கிடைக்கின்றன.
ஹர்ஷ் மற்றும் ஆதர்ஷ் இருவரும் இப்போது மும்பை மற்றும் கொல்கத்தா இடையே தங்களது நேரத்தை திறமையாகக் கையாளுகின்றனர். புல்கித், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை, மாலை 5 முதல் அதிகாலை 3 மணி வரையிலான தினசரி வணிகத்தைக் கவனித்துக் கொள்கிறார்.
சாண்டா டெலிவர்ஸ் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில், சராசரியாக மாத விற்பனை 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது.
|
சாண்டா டெலிவர்ஸ், 5 டெலிவரி ஆட்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவால் இயங்குகிறது.
|
சாண்டா டெலிவர்ஸ் இப்போது 5 டெலிவரி ஆட்கள் உட்பட 15 ஊழியர்களைக் கொண்டுள்ளது. வடக்குக் கொல்கத்தாவின் சால்ட் லேக், லேக் டவுன் மற்றும் ராஜார்ஹாட் ஆகியவற்றை மையப்பகுதிகளாகக் கொண்ட, 15 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் சேவை வழங்குகின்றனர்.
ஃபிரெஞ்ச் பிரைஸ் முதல் சிக்கன் ஸ்கீவெர்ஸ் வரையும் மற்றும் மலாய் கோப்டாஸ் முதல் சிக்கன் லாலி பாப் வரையிலான நாவில் சுவையூறும் 85 வகையான உணவு வகைகள் அவர்களின் மெனுவில் இருக்கின்றன.
ஃபுட் டெலிவரி தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது பேக்கேஜிங் முறை. சாண்டா டெலிவர்ஸில் உணவுப் பொருட்கள் பிரட் மற்றும் பானங்கள் இரட்டை தடிமன் கொண்ட அலுமினியப் பேப்பரில் சுற்றி உயர்தர பிளாஸ்டிக் டப்பாக்களில் பேக்கிங் செய்யப்படுகின்றன. ”சுட சுட ஆவி பறக்கும் உணவு பொருட்களை நாங்கள் டெலிவரி செய்கிறோம்,” என்கின்றனர் அவர்கள்.
ஹர்ஷ் மற்றும் ஆதர்ஷ் இருவரும் தங்களின் எம்பிஏ படிப்பை முடித்துத் திரும்பிய பின்னர், முழுநேரமும் தங்கள் தொழிலில் ஈடுபட உள்ளனர். அடுத்த ஆண்டில் இருந்து மூன்று பேரும் தெற்கு கொல்கத்தா பகுதிகளில் தங்கள் தொழிலில் விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
திருப்திகரமான வாடிக்கையாளர் கட்டமைப்பை ஒருங்கிணைப்பதும் இன்னொரு முக்கியமான ஒன்றாகும். “வாடிக்கையாளர்களின் குறைகளை களைய முயற்சிகள் எடுக்கின்றோம். பரவலான பின்னூட்டங்களைப் பெறுகிறோம். தரத்தைப் பரிசோதித்து உறுதி செய்வதிலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் உறுதி பூண்டிருக்கிறோம்,” என்கிறார் புல்கித்.
கொல்கத்தா முழுவதுக்குமான குறிக்கோளை எட்டிய பிறகு, ஆதர்ஷ், ஹர்ஷ் மற்றும் புல்கித் ஆகியோர் மேலும் வளரும் பசியுடன் உள்ளனர். “கொல்கத்தாவுக்குப் பின், நாடு முழுவதும் விரிவாகச் செயல்படும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டு நிதி பெறுவதற்காக முயற்சிகளை எடுப்போம்,” என்கிறார்கள் அவர்கள். வாழ்த்துகள்!
அதிகம் படித்தவை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
புதுமையின் காதலன்!
அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
தேடி வந்த வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
தன்னம்பிக்கையே கண்களாக...
மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
-
மில்லியன் டாலர் கனவு
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை