அவங்க நண்பர்கள் நாலு பேரு… இன்னிக்கு புரளும் கோடிகளோ நூறு!
11-Sep-2024
By ஜி சிங்
ராஞ்சி
ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் தங்கள் கார்ப்பரேட் வேலைகளைத் துறந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தார்கள். தங்களின் சேமிப்பையெல்லாம் போட்டு அவர்கள் வாங்கியது…. பசுமாடுகள்!
ஐந்து ஆண்டுகளில் அவர்களின் பால்பண்ணைத் தொழில் 100 கோடி ரூபாய் புரளும் தொழிலாக மாறியதுடன் மாநிலத்தின் முக்கிய பிராண்டுகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது.
|
ஓசம் பால்பண்ணையின் நிறுவனர்கள்( இடமிருந்து வலம்) அபிஷேக் ராஜ், ஹரிஷ் தக்கர், அபினவ் ஷா, ராகேஷ் சர்மா, ராஞ்சியில் உள்ள பால் நிலையத்தில்(படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
ஓசம் டெய்ரி 19 மாவட்டங்களில் 140 விநியோகஸ்தர்கள், 3000 சில்லரை விற்பனையாளர்களுடன் இயங்குகிறது. நால்வருடன் தொடங்கிய நிறுவனம் இப்போது 270 பேர் கொண்ட குழுவுடன் இயங்குகிறது.
அபினவ் ஷா(35), ஹரிஷ் தக்கர்(35), ராகேஷ் சர்மா (38), அபிஷேக் ராஜ் (36) ஆகிய நான்கு நண்பர்கள் மற்றும் பங்குதாரர்கள் 2012-ல் ஒரே மனநிலையில் இருந்தார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த கார்ப்பரேட் வேலைகள் கசந்தன. எதாவது சொந்தமாகச் செய்ய விரும்பினர்.
அவர்களில் அபினவ், அபிஷேக், ராகேஷ் ஆகிய மூவர் 2001-ல் இருந்து நண்பர்கள். ஹரிஷ் மட்டும் ராகேஷுக்கு 1997-ல் நண்பர் ஆனவர்.
2004-ல் அவர்கள் சிஏ படிப்பு முடித்தார்கள். அபினவ், அபிஷேக், ராகேஷ் மூவரும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார்கள்.
அபினவ் வேலையை ஜனவரி 2012ல் விட்டபோது ஆண்டுக்கு 32 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். 2010-ல் ராகேஷ் வேலையை விட்டபோது 14 லட்ச ரூபாய் ஆண்டு சம்பளம்.
ஹர்ஷ் தக்கர் சாதாரண குடும்பப்பின்னணியில் இருந்து வந்தவர். 1997-ல் பள்ளிப்படிப்பை விட்டதுமே விற்பனைத்துறையில் இறங்கிவிட்டார்.
"என் தந்தை ராஞ்சியில் மளிகைக் கடை நடத்தினார். எனவே விற்பனை செய்வது எனக்கு இயல்பாக வந்தது,” அவர் சொல்கிறார். 2012-ல் அவர் ராகேஷின் ஆலோசனையின் பேரில் பால்பண்ணைத் தொழிலில் இறங்க முடிவு செய்தார்.
|
தரப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட பால், தயிர், பன்னீர், லஸ்ஸி, மோர் ஆகியவை ஓசம் டெய்ரி தயாரிப்புகள்
|
அபிஷேக் தான் முதலில் யோசித்தவர். அவர் 2011ல் லக்சம்பர்க்கில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் ஆண்டுக்கு 40 லட்சரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார்.
"அங்கே பால்பண்ணைத்தொழில் நடத்தப்படும் விதம் எனக்குப் பிடித்திருந்தது. அதேபோல் ஜார்க்கண்டில் நடத்தினால் நல்ல வாய்ப்பு இருக்கும் என நினைத்தேன்.”
நால்வருமே எதாவது புதிதாக செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியபோது இந்த யோசனை உருவானது. எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒரு கோடி ரூபாய் தங்கள் சேமிப்பிலிருந்து போட்டார்கள். அனைவரும் சமமான அளவில் பணம் போட்டார்கள்.
ராஞ்சியில் இருந்து 30 கிமீ தள்ளி 20 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினர். பால்பண்ணை அமைக்க கூடுதலாக 30 லட்சம் செலவானது.
2012-ல் ராயா என்ற பிராண்டுடன் ஹெச் ஆர் புட் பிராசசிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தை உருவாக்கினர். அபினவ் கான்பூர் சென்று பால்பண்ணைகள் பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.
|
பால்பதப்படுத்தும் நிறுவனத்தில் ஊழியர்களுடன் நிறுவனர்கள்
|
ஆனால் அனுபவம் இல்லாதது இழப்பு தந்தது. “பயிற்சியை முடித்ததும் நான் பஞ்சாப்பில் உள்ள கன்னாவுக்கு ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் பசுக்கள் வாங்கச் சென்றேன்,” என்கிறார் அபினவ்.
"40 மாடுகளை 35 லட்ச ரூபாய்க்கு வாங்கினோம். அவை வந்தவுடன் தான் அவற்றுக்கு கோமாரி நோய் இருப்பது தெரிந்தது. ஒரு மாதத்தில் 26 மாடுகள் இறந்தன. எங்களுக்கு பெருத்த இழப்பு. வருத்தமாகவும் இருந்தது.”
நிறுவனத்தில் நிதியைக் கவனிப்பது ராகேஷ். “ நாங்கள் மேலும் 50 லட்ச ரூபாய் முதலீடு செய்தோம். மேலும் 100 புதிய மாடுகளை வாங்கினோம். இப்போது மொத்த முதலீடு 1.5 கோடி ஆனது.”
அவர்கள் பால்பொருட்கள் தயாரித்து விற்க உரிமம் வாங்கினர். ஆனால் ஆரம்பத்தில் தொழில் மந்தமாக இருந்தது. "ஆரம்பத்தில் ராஞ்சியில் மூன்று இடங்களில் பிராண்ட் அல்லாத முறையில் வீடுகளுக்கு பால் அளித்தோம். ஏழு பேரை வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்தோம்,” விளக்குகிறார் ஹரிஷ்.
ஆரம்ப கட்ட விற்பனை 300 லிட்டர்கள். ஆறுமாதத்தில் 1000 லிட்டர்களாக உயர்ந்தது. “பதப்படுத்தாத பசும்பால் விற்பனையில் போட்டியே இல்லை. ஆனால் கறந்த 3 மணி நேரத்தில் அதைப் பயன்படுத்தியாக வேண்டும்,” என்கிறார் ஹரிஷ். சந்தைப்படுத்தல் இவர் பொறுப்பு.
|
2012-ல் ஆண்டுக்கு 32 லட்சம் சம்பாதித்தபோது அபினவ்( இடது) தன் வேலையைத் துறந்தார். அவருக்கு இடதுபுறம் இருப்பவர் (ஹரிஷ் தக்கர்)
|
முதல் ஆண்டில் அவர்கள் பெற்ற வருவாய் ரூ 26 லட்சம்.
2013-ன் ஆரம்பத்தில் அவர்கள் தம் பால்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டனர். “அதற்கு 20 கோடி ரூபாய் முதலீடு தேவைப்பட்டதால் அது பெரிய முடிவாக இருந்தது,” நினைவுகூர்கிறார் அபிஷேக்.
"வங்கிகளை அணுகினோம். மும்பையில் இருந்து அவிஷ்கர் நிதியகத்திடம் 15 கோடி பெற்றோம். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிடம் 13.5% ஆண்டு வட்டிக்கு 7 கோடி கடனும் பெற்றோம்.”
பின்னர் அவர்கள் பால்பண்ணைத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களை வேலைக்குச் சேர்த்தனர்.
“ராம்கார் தொழில்பேட்டையில் 17 லட்சரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலத்தை 30 ஆண்டு குத்தகைக்கு 2014-ல் பெற்றோம். ஏப்ரலில் கட்டுமானம் தொடங்கியது. முடிய ஓராண்டு ஆனது.”
|
ராகேஷ் சர்மா ( வலது) அபிஷேக் ராஜ் இருவரும் தங்கள் கார்ப்பரேட் வேலைகளை உதறிவிட்டு பால்பண்ணைத் தொழிலில் குதித்தனர்
|
“அதே சமயம் நாங்கள் பீஹாரில் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் வலைச்சங்கிலியையும் உருவாக்கினோம். ஏனெனில் எங்கள் பண்ணையிலிருந்து கிடைத்த 1000 லிட்டர் போதுமானதாக இல்லை,” விளக்குகிறார் அபிஷேக்.
“பீஹாரில் ஐம்பது கிராமங்களில் நல்ல விலை கொடுத்து பால் வாங்கத் தொடங்கினோம். இப்போது அங்கே 450 கிராமங்களில் 12,000 விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம்.”
அவர்கள் தங்கள் பால்பண்ணையையும் பசுக்களையும் விற்றுவிட்டனர். அவர்களின் பதப்படுத்தும் நிலையம் ஏப்ரல் 2015ல் இருந்து செயல்படத் தொடங்கியது. ஆனால் அவர்களின் பிராண்ட் பெயர் ஓசம் என மாறியது. ஏனெனில் ரயா என்ற பெயரை மகாராஷ்டிராவில் ஒரு எண்ணெய் நிறுவனம் பதிவு செய்துவிட்டது.
ஓசம் டெய்ரி தரப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட பாலுடன் பன்னீர், தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றையும் தயாரிக்க ஆரம்பித்தது.
"50 பேர் கொண்ட பணியாளர் குழுவுடன் தொடங்கினோம். தினமும் 2600 லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் இருந்தது. 2015-ன் இறுதியில் தினமும் 15000 லிட்டராக எங்கள் திறன் உயர்ந்தது. இப்போது அது தினமும் 65000 லிட்டர்களாக உயர்ந்துள்ளது,” என்கிறார் அபிஷேக்
அவர்கள் இன்னொரு பதப்படுத்தும் நிலையம் கட்ட விரும்பினர். ஆகஸ்ட் 2016-ல் ஜாம்ஷெட்பூர் அருகே 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார்கள்.
|
2022-ல் ஓசம் நிறுவனர்கள் 500 கோடி வருவாய்க்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர்
|
இங்கே கட்டுமானத்துக்கு 6 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இங்கே தினமும் 1 லட்சம் லிட்டர்கள் பதப்படுத்தும் திறன் உள்ளது. செப்டம்பர் 17, 2017-ல் இதுவும் செயல்படத் தொடங்கி உள்ளது.
2013-ல் சிறந்த புதிய டெய்ரி விருது ஜார்க்கண்ட் மாநில அரசு ஓசம் டெய்ரிக்கு வழங்கியது. 2016ல் சிறந்த வளரும் வாய்ப்புள்ள டெய்ரிக்கான விருதை 2016ல் அசோசேம் (ASSOCHAM) வழங்கியது.
இவர்கள் தங்கள் நிறுவனத்துக்கு 2022-ல் 500 கோடி வருவாயை இலக்காக நிர்ணயித்துள்ளனர். பீஹாருக்கும் தங்கள் தொழிலை விரிவுபடுத்த உள்ளனர்.
தரத்தில் சமரசம் இல்லை; எப்போதும் வாடிக்கையாளருக்கு சிறந்த பொருளையே தருவது: இதுதான் இந்த நால்வரின் தாரக மந்திரம்!
அதிகம் படித்தவை
-
இனிக்கும் இயற்கை!
உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
விளையாட்டாக ஒரு வெற்றி!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
சம்பளத்தைவிட சாதனை பெரிது!
ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வெற்றிக்கலைஞன்
பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்
-
பெரிதினும் பெரிது கேள்!
சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை