ஐந்து லட்சம் முதலீட்டில் ஐம்பது லட்சம் வருவாய்! இரண்டே ஆண்டில் அசத்தும் இளம் பெண் தொழிலதிபர்!
09-Sep-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
கரோலின் கோம்ஸின் பெற்றோர் சிறுவயதில் அவரை பள்ளியில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு கூட வெளியே செல்ல அனுமதிக்காமல் பாதுகாப்பு பேணியவர்கள். இவர் மத்திய பிரதேச மாநிலம் சரளா நகரில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் அகால மரணம் அவரது பெரும்பாலான வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.
இங்கிலாந்தில் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பு. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து, 28வது வயதில் ரவீஸ் கிளைவ் எனும் சுய அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.5 லட்சம் முதலீட்டில் ரவீஸ் கிளைவ் என்ற நிறுனத்தை கரோலின் கோம்ஸ் தொடங்கினார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
“நான் பிஇ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ்) படித்து முடிந்த சமயத்தில் என் தந்தை கேன்சரால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவர் இறக்கும்போது அவரது வயது 55. இதனால் நான் நிலைகுலைந்துபோனேன்,” என்றார் கரோலின். இதன் பின்னர் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே ஒன்றரை வருடம் மட்டும் ஒரு நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அதன் பின்னர் எம்எஸ் படிப்பதற்காக இங்கிலாந்து சென்று விட்டார். இந்தியா திரும்பிய பின்னர், குர்கானில் உள்ள ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் நிதி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். ஆனால், இந்த வேலையில் இருந்து 14 மாதங்களில் விலகிவிட்டார். அதன்பின்னர் அவர் ரீவ்ஸ் கிளைவ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தமது சேமிப்புகளைக் கொண்டு ரூ.5 லட்சம் முதலீட்டில், தலைமுடிக்கான எண்ணெய், பொடுகை அகற்றும் ஷாம்பு, தாவரங்கள், கடல் உப பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குளியல் திரவம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார். தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே (2019-20) 50 லட்சம் ரூபாய் எனும் குறிப்பிடத்தக்க ஆண்டு வருவாய் ஈட்டினார். பி.கே.பிர்லா குழும நிறுவனங்களில் ஒன்றான மைகார் சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதியான சரளா நகரில் பாதுகாப்பான வீட்டில் பிறந்து வளர்ந்தவர் கரோலின். மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து, இப்போது டெல்லி்யில் தமது வணிகத்தை நடத்துகிறார். கரோலின் தந்தை, தாய் இருவருமே சரளா நகர் உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றினர். அவரது தாய் மேரி விக்டோரியோ கோம்ஸ், ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இப்போது அந்த பள்ளியின் முதல்வராக இருக்கிறார்.
கரோலின் சரளா நகரில் அதீத பாதுகாப்புடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார் |
அவரது தந்தை சாம்ஸன், தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு வீரராவார். பின்னர் பள்ளியில் தட கள பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார். உள்ளூர் ராம்லீலா மைதானத்தில், பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். “பூங்கா மற்றும் கிளப்கள் அதிக அளவு இருந்த சரளா நகர் மிகவும் அருமையான பகுதியாக இருந்தது. நாங்கள் ஒருபோதும் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டதே இல்லை. இந்த காலனியில் எனக்கு பல நண்பர்கள் இருந்தனர். நான் எனது குழந்தை பருவத்தை மிகவும் அனுபவித்தேன்,” என்று கரோலின் நினைவு கூர்கிறார். குழந்தையாக இருக்கும்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் கெடிகாரங்களை பழுது நீக்குவதில் விருப்பம் கொண்டிருந்தார். எனவே 12ஆம் வகுப்புக்குப் பின்னர், பிலாயில் உள்ள தாய்வழி தாத்தா வீட்டில் தங்கி இருந்து சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள சிஐஎம்டி கல்லூரியில் பிஇ(எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ்) படித்தார். “வீட்டில் இருந்து கல்லூரி 20 கி.மீ தொலைவில் இருந்தது. ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவேன்,” என்றார் அவர். அவரது பெற்றோர், அவரை வெளியூர் பயணம் செல்ல அனுமதிக்கவில்லை. அவரது மூத்த சகோதரி ஒருவர், ஒரு விளையாட்டில் பங்கேற்பதற்காக நகரை விட்டு வெளியூருக்குச் சென்றபோது, திடீரென காணாமல் போனதால், குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்தனர். அவரது மகள் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பின்னரே நிம்மதியடைந்தனர். அந்த அனுபவத்தால் கரோலின் மீது கடுமையான அக்கறையும் பாதுகாப்பும் காட்டினர்.
ரீவ்ஸ் கிளைவ் நிறுவனம் பல்வேறு வகையான சுயபராமரிப்புப் பொருட்களை தயாரிக்கிறது. மேலும் சில பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர் |
2011ஆம் ஆண்டு கல்லூரி நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து மும்பை சென்றது குறித்து நினைவு கூர்கிறார். இதற்காக அவர் தனது பெற்றோரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி கேட்டார். அவரது தந்தை தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து அவருக்கு அனுமதி கொடுத்தார். “அந்த பயணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது,” என்றார் கரோலின். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு அவருக்கு நீடிக்கவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு புற்று நோயால் அவரது தந்தை உயிரிழந்து விட்டார். குடும்பத்தினர் மட்டுமின்றி, காலனியில் இருந்த ஒவ்வொருவருமே என் தந்தையின் இழப்பை உணர்ந்தனர். “என் தந்தை மரியாதைக்குரிய மனிதராக இருந்தார். காலனியின் அமிதாப் பச்சனாக அவர் விரும்பப்பட்டார்,” என்றார் கரோலின். “இன்னும் கூட என் தந்தையின் இழப்பு குறித்து பலர் என்னிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். அப்போதெல்லாம் நான் நிலைகுலைந்து போகிறேன். அந்த இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே நான் மும்பைக்கு இடம் பெயர்ந்தேன். அங்கே ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் நிர்வாகப் பொறுப்பாளராக வேலை கிடைத்தது.” ஒன்றரை ஆண்டு கழித்து , போதுமான அளவுக்கு சேமித்தார். லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பதற்காக விண்ணப்பம் செய்தார். இடம் கிடைத்தது. அவரது படிப்பின் ஒரு பகுதி செலவை அவரது உறவினர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். “என் தாய் பயந்து கொண்டிருந்தார். என்னை நினைத்து கவலைப்பட்டு உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். வெளிநாட்டில் யாரையும் தெரியாத சூழலில் எப்படி நான் தனியாக வாழ்வேன் என்று நினைத்து அவர் கவலைப்பட்டார்,” என்று நினைவு கூர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கரோலின் அந்த வெளிப்படையான சூழலை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு லண்டனில் பல நாடுகளை சேர்ந்த நண்பர்கள் கிடைத்தனர். 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். குர்கானில் உள்ள நிறுவனத்தில் நிதி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் தமது பணியில் அனுபவப்பூர்வமாக ஈடுபட்டார். அதே நேரத்தில் அவர் அடிக்கடி நோய்வாய் பட்டதால் உடல் நிலை பாதிக்கத் தொடங்கியது. இதனால், அவரது தலைமுடி அதிகமாக கொட்டத் தொடங்கியது. முடி உதிர்வைத் தடுக்க பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்த்தார்.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் கரோலின் |
“மருத்துவ சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவர் உனியாள் என்பவரை சந்தித்தேன். அவரால் நான் குணம் அடைந்தேன். ஆயுர்வேதப் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். மருத்துவர் உனியாளுடன் பல மணி நேரம் செலவழித்தேன். ஆயுர்வேதப் பொருட்கள் குறித்தும் அவர் உபயோகிக்கும்பொருட்கள் குறித்தும் அவரிடம் ஆலோசனை செய்தேன்,” என்றார் கரோலின். ஆயுர்வேத மருத்துவரிடம் இருந்து பெற்ற தகவல்கள் அவரது அறிவுக்கண்களைத் திறப்பது போல அமைந்தது. சொந்த கலவைகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யத் தொடங்கினார். “அவர் எனக்கு 30 பொருட்கள் அடங்கிய பட்டியலை கொடுத்தார். அவை எப்படி செயலாற்றுகின்றன என்று சொன்னார். கலவையின் தயாரிப்பு ரகசியங்களை அவர் எனக்கு கற்பித்தார். பல்வேறு வகையான மூலிகைகளின் நலன்கள் குறித்தும் சொன்னார். ஆகவே நான் தலைமுடிக்கான எண்ணையை 500 பாட்டில்கள் தயாரித்தேன். அதனை குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்காக கொடுத்தேன்,” என தமது தொழில்முனைவு பயணம் குறித்து நம்மிடம் அவர் நினைவு கூர்ந்தார். தான் தயாரித்த பொருட்கள் குறித்து அவர் சாதகமான பின்னூட்டங்கள் பெற்றார். அது 2018ஆம் ஆண்டு ஜனவரியில் ரீவ்ஸ் கிளைவ் ஓன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்குவதற்கான நம்பிக்கையை அவருக்கு அளித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.13 லட்சத்தை ஸ்டார்ட் அப் நிறுவன நிதியாகப் பெற்றார். கடந்த ஜூலை மாதம் இன்னொரு நிறுவனத்திடம் இருந்து ஸ்டார்ட் அப் நிதி உதவியாக ரூ.70 லட்சம் பெற்றார். “செப்டம்பர் மாதம் நாங்கள் ஐந்து பொருட்களை தயாரிக்கத் தொடங்கினோம். உப்டான் எனும் இயற்கையான முகப்பூச்சு பேக், தலைமுடி உதிர்வை தடுக்கும் பொடுகைத் தடுக்கும் ஷாம்புகள் மற்றும் பல்வேறு வகையான குளியல் திரவம் மற்றும் தலைமுடிக்கான எண்ணைய் ஆகியவற்றையும் தயாரித்தோம்,” என்றார் கரோலின். அவர் அவுட் சோர்ஸ் முறையில் பொருட்களை தயாரிக்கிறார். தமது குழுவினருடன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் மட்டும் அவர் கவனம் செலுத்துகிறார். அவருடைய அனைத்து தயாரிப்புகளும் ரூ.800 முதல் ரூ.1199 வரை கிடைக்கின்றன.
பழைய மறக்கமுடியாத நினைவுகள்; தமது பெற்றோருடன் கரோலின் |
கரோலின் இப்போது 8 பேர் கொண்ட குழுவை நிர்வகித்து வருகிறார். தமது தயாரிப்பு பொருட்களின் அளவை அதிகரிப்பது குறித்தும், விநியோக வட்டத்தை அதிகரிக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறார். “வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் பின்னூட்டங்களில் இருந்து எங்களது பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்,” என்றார் அவர். மேலும், “நாங்கள் தற்போது அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகிய இ-வணிக தளங்களிலும் விற்கத் தொடங்கி இருக்கின்றோம். பிராண்ட் பெயரை நிலை நிறுத்த விரைவில் சில்லறை வணிக கடைகளில் எங்கள் பொருட்கள் கிடைக்கும். தவிர நேரடியாக வாடிக்கையாளர்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று முடித்தார்.
அதிகம் படித்தவை
-
மாற்றி யோசித்தவர்!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
வெற்றிமேல் மிதப்பவர்
உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை
-
பணம் காய்க்கும் மரங்கள்
மரத்தில் பணம் காய்க்குமா? ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
நினைத்ததை முடிப்பவர்
ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்
-
கல்வி எனும் கைவிளக்கு
ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தாலும் திறம்பட கல்வி கற்று, ஆடிட்டர் ஆனவர் பிஜய் குமார். இன்று ஆடிட்டர் பணியைத் துறந்து, வருங்கால சந்ததியினர் முழுமையான கல்வியை கற்கும் வகையில் சாய் சர்வதேச பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.