Milky Mist

Saturday, 9 December 2023

விழியே விழியே... இமையே தீயும் போதும் கலங்காதிரு! - இலக்கை எட்டிய பூர்ண சுந்தரியின் சாதனைக்கதை!

09-Dec-2023 By கே. பாலசுப்ரமணி
சென்னை

Posted 20 Aug 2020

மதுரை பழங்காநத்தம் பாண்டியன் கிராமிய வங்கி கிளையில் அன்றைக்கு வழக்கம்போல பூரண சுந்தரி வேலைக்கு வருகிறார். வங்கியின் செக்யூரிட்டி முதல், மேலாளர் வரை அனைவரும் அவரை ஒருவித மரியாதையான குரலில் வரவேற்கின்றனர். அந்த வித்தியாசம் ஏன் என்று அவருக்குப் புரிந்திருக்கிறது. நேற்று வரை வங்கியில் சாதாரண கிளர்க் ஆக பணியாற்றியவர், நாளை மாவட்ட ஆட்சியராகவோ, ஒரு அரசின் துறைக்கு செயலாளராகவோ,துறையின் உயர் அதிகாரியாகவோ பணியாற்ற இருக்கிறார். அதனால்தான் அவர்களிடம் இருந்து அந்த மரியாதைகள் அவருக்குக் கிடைக்கின்றன.பூரண சுந்தரி மதுரை பழங்காநத்தம் பாண்டியன் கிராமிய வங்கி கிளையில் வங்கியில் சாதாரண கிளர்க் ஆக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286 இடம் பெற்றிருக்கிறார் (படங்கள்: நிலவன்) 


2019-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வு எழுதிய பூரண சுந்தரி(25) இந்திய அளவில் 286 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கின்றார். கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியான இவர் மதுரை மாநகரின் சிம்மக்கல் அருகே மணி நகரம் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை முருகேசன் உள்ளூர் ஏஜென்சி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக மாதம் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே பெற்று வருகிறார். அவரது தாய் ஆவுடைதேவி குடும்பதலைவி. இக்குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்தவர் பூரணசுந்தரி. இவருக்கு ஒரு சகோதரர் உண்டு.

பள்ளிக்கூடம், அப்பா, அம்மா, சகோதரர் என்ற சிறிய வட்டத்துக்குள் வசித்துவந்த பூரண சுந்தரி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஒருநாள் போர்டில் ஆசிரியர் எழுதிப்போட்ட வரிகள் அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மங்கலாக தெரிந்தன. பதற்றம் அடைந்த அவரது தந்தை பூரண சுந்தரியை மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். பூரண சுந்தரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விழித்திரை சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதால் (retinal degenerative disease) பார்வை நரம்பு சுருங்கி பார்வைத்திறன் குறைந்திருப்பதாக கூறினர். இது அரிதாக ஏற்படும் நோய். இதனால் அவரது வலது கண்ணில் முழுமையாக பார்வை பறிபோய்விட்டது. எனினும் அரவிந்த் கண் மருத்துவர்கள் இடது கண்ணின் பார்வையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்காக மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிபெறவில்லை. பின்னர் அந்த கண்ணிலும் முழுவதுமாக பார்வை தெரியாமல் போனது.

“மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அப்பா என்னை அவரது சைக்கிளில் அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் அப்பாவிடம் ஆங்கிலத்தில் எனக்கு வந்த கண் நோய் பற்றி கூறினர். அந்த சிறியவயதில் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. அப்பாவை தனியே அழைத்தும் மருத்துவர்கள் ஏதோ சொன்னார்கள். ஆனால், அப்பா என்னிடம் எதுவும் சொல்லவில்லை. டாக்டர்களைப் பார்த்தபின்னர் என்னை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ராஜாஜி பூங்காவுக்குக் கூட்டிச் சென்றார். அன்று முதல் மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் பூங்காவில் நான் எவ்வளவு நேரம் விரும்புகிறேனோ அவ்வளவு நேரம் என்னை விளையாட அனுமதித்தார். ஊஞ்சலில் உட்கார வைத்து ஊஞ்சலின் சங்கிலிகளைப் பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு பலகையை தொட்டில் போல ஆட்டி விடுவார். நான் மகிழ்ச்சியாக விளையாடுவதை பக்கத்தில் இருந்து பார்த்தபடி ரசித்துக் கொண்டிருப்பார். ஊஞ்சலில் விளையாடி முடித்த பின்னர் எப்படி சறுக்கி விளையாடனும் என்று சொல்லிக் கொடுத்தார். நீண்டநேரம் விளையாடினேன். எனக்கு கண்தெரியாது என்ற உணர்வே வராத வண்ணம் என்னை என் பெற்றோர் கவனித்துக்கொண்டனர். இன்றளவும் கவனித்து வருகின்றனர். மதுரையில் அப்பா என்னை வெளியே கூட்டிப்போனால், அந்த இடத்தை நேரில் பார்க்கும்போது என்ன உணர்வு எனக்கு ஏற்படுமோ அதனை ஏற்படுத்துவார். ஒவ்வொரு இடமாக சொல்லிக் கொண்டே வருவார். நாங்கள் போகும் வழியில் ஏடிஎம் இருந்தால் அது பற்றி சொல்லுவார். வங்கிக் கிளை இருந்தால் அதைப் பற்றி சொல்லுவார். டீக்கடை இருந்தால் அதைப்பற்றிச் சொல்வார். நியூஸ் பேப்பர் விற்கும் கடை, ரெஸ்டாரெண்ட் இப்படி போகும் வழியில் என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் எனது மனதுக்குள் படமாக பதியும். சென்னைக்கு வந்தபோதும் என் உடன் வந்த அப்பா நாங்கள் போகும் இடங்களைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு அந்தந்த இடங்களைப்பற்றி சொல்லுவார்,” என தம்முள் ஆழ்ந்தவர், பழைய நினைவுகளை மீட்டெடுத்தார்.

மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் உயர் நிலைப் பள்ளியில் ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் படித்தபோது அறிவியல் ஆசிரியர்களின் தூண்டுதலால் ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று பூரண சுந்தரி ஆசைப்பட்டிருக்கிறார்.

“ஏழாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் சந்திரபோஸ், எட்டாம் வகுப்பில் ஆசிரியர் ராஜேந்திரன் இருவரும் அறிவியல் பாடத்தை எடுக்கும் விதத்தில் ஒரு விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்ற ஒரு துடிப்பு எனக்குள் ஏற்பட்டது. புதிது புதிதாக எனக்கு சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர்களும் பொறுமையுடன் நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார்கள்.”

“பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது என்னை பேட்டி எடுக்க வந்தவர்கள் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று கூறினேன். வழக்கறிஞர் ஆவதன் மூலம் எளிய மக்களுக்காக வாதாடி அவர்களின் கோரிக்கைக்கு வெற்றி தேடிதரமுடியும் என்று நினைத்தேன். 11-ம் வகுப்பு வரையிலுமே நான் வழக்கறிஞர் ஆகப்போவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் 12-ம் வகுப்புக்கு தேர்வு எழுதுவதற்காக மதுரை மேலபொன்னகரத்தில் உள்ள பிரிட்டோ பள்ளிக்கு சென்றேன். அப்போது தேர்வு மையத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் சகாயம் வந்ததார். ஆனால், நான் இருந்த அறைக்கு அவர் வரவில்லை. அவர் அப்போது மதுரையில் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றினார். அன்றாடம் என் அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர் தினமும் செய்தி தாள்களை வாசித்துக் காட்டுவார்கள். சகாயம் குறித்த செய்திகளை அவர்கள் படித்துக் காட்டும்போது எனக்கு அந்தப் பதவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். ஆனால், என்னால் அப்போது அதை வெளிப்படையாக‍ அறியமுடியவில்லை,” என்ற அடிமனதில் துளிர்விடத் தொடங்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

மதுரை பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படிக்கும்போது தமிழ் வகுப்பின் போது பேராசிரியர் லதா மாணவிகளிடம் ‘நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட உந்துதலில் ‘கலெக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் குடிமைப்பணி தேர்வுகள் எழுத உள்ளேன்’ என்று கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நினைத்தால் எதையும் சாதிக்கலாம் நண்பனே“குடிமைப்பணி என்றால் என்ன என்று கூட அப்போது எனக்கு எதுவும் தெரியாது. எனது ஆழ்மனதுக்குள் இருந்த ஆசை அந்தக் கட்டுரையின் வழியே வெளிப்பட்டதாகவே நான் கருதினேன். இன்றைக்கு பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் லதாவின் அன்றைய கேள்விதான் எனக்குள் இருந்த ஆளுமை திறனை வெளிப்படுத்தியது என்று நினைக்கின்றேன். அவர் மட்டுமின்றி பொது ஆங்கில பாடத்துக்கான பேராசிரியர் மேரிமேன்டலின் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் டெல்லி ஜவர்கர்லால் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். அவர் எங்களுக்கு வகுப்பு எடுக்கும்போது கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பி குடிமைப்பணித் தேர்வுகளுக்காக தயாரானது குறித்தும் ஆனால், வெற்றி பெற முடியவில்லை என்றும், மாணவிகள் விடாமுயற்சியில் ஈடுபட்டால் கலெக்டர் ஆக முடியும் என்று கூறியது என் மனதில் பதிந்தது. பேராசிரியர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக கல்லூரி நூலகத்துக்கு சென்று போட்டித் தேர்வுகள் குறித்த புத்தகங்களை நிறையப்படித்தேன். எனக்காக என் தோழிகள் ஹேமா,அர்ச்சனா போன்றோர் புத்தகங்களை வாசித்துக் காட்டினர்”.

மதுரை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகள், கவிதை, கட்டுரைப்போட்டிகளிலும் பூரணா பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கின்றார். முரசொலி அறக்கட்டளையின் சார்பில் பாரதிதாசன் கவிதை ஒப்பித்தல் போட்டியில் 2014-ம் ஆண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். ஆளுமையை வளர்த்துக் கொண்டார். கல்லூரி படிப்பு முடித்தபின்னர் குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்காக சென்னைக்கு சென்றார்.

“குடிமைப்பணி தேர்வுக்குப் பயிற்சி பெறுவதற்கான சென்னைக்கு சென்றேன். சென்னையில் மனிதநேய அறக்கட்டளையில் சேர்ந்து படித்தேன். 2016-ம் ஆண்டு முதல்நிலை தேர்வு எழுதினேன். முடிந்த அளவு படித்தேன். எனக்காக என் தந்தையும், தாயும் தினமும் காலையில் நாளிதழ்களை படித்துக் காட்டுவார்கள். நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்ட புத்தகங்களை லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து ரீடிங் சாஃப்ட்வேர் வழியே படித்தேன். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் என்னால் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. நேரம் போதவில்லை.முதல் நிலை தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லையே என்ற விரக்தி எனக்கு ஏற்பட்டது. எனக்கு இந்த தேர்வு எழுதத் தகுதி இருக்கிறதா என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே என்றும் நினைத்தேன். இனிமேல் தேர்வு எழுதக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆனால், பத்து நாட்களுக்குள் என் மனது மாறிவிட்டது. ‘உன்னால்தான் முடியும், தெளிவாக முடிவு எடுத்திருக்கிறாய், பின் ஏன் பின் வாங்குகிறாய். இன்னும் முயற்சி எடுத்துப் படித்தால் வெற்றிபெற முடியும்’ என்று என் தோழிகள் எனக்கு அறிவுறுத்தினர். எனவே மீண்டும் தீவிரமாகப் படிப்பது என்று தீர்மானித்தேன்.”

ஆனால், சென்னையில் தொடர்ந்து தங்கியிருந்து படிக்க அவரது பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து விட்டு, அதன் பின்னர் அதில் இருந்தபடி மேற்கொண்டு படிக்கலாம் என்று அவர் தீர்மானித்தார். எஸ்.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஐபிபிஎஸ் நடத்திய தேர்வுகள் அனைத்தையும் எழுதினார். அப்படித்தான் ஐபிபிஎஸ் அறிவித்த ரீஜினல் ரூரல் பேங்க் போட்டித் தேர்வில் அவருக்கு வெற்றி கிடைத்தது. மதுரை பழங்காநத்தம் பாண்டியன் கிராம வங்கியில் கிளார்க் ஆக அவருக்கு வேலை கிடைத்தது. குடும்பத்துக்கு அவருடைய சம்பளம் மிகவும் உதவியாக இருந்தது. குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயார் ஆவதற்கும் அவருக்கு போதுமான பணம் கிடைத்தது.

“ஒரு வங்கி கிளை எத்தனை மனிதர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக என்னால் உணரமுடிந்தது. மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். முதியவர்கள் தங்கள் ஓய்வு காலப் பணத்தை டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்வை நடத்துகின்றனர். சிறுதொழில் செய்பவர்கள் கடன் பெற்று தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். இப்படி பலரை நேரடியாக சந்தித்துப் பேசியது பல புதிய அனுபவங்களைக் கொடுத்தது. ஒரு வங்கி அளவில் இத்தனை மக்களின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்க முடியும் என்றால் ஒரு மாவட்ட ஆட்சியராக ஒரு துறையின் உயர் அதிகாரியாக எத்தனை பேரின் நலனுக்காக சேவை செய்ய முடியும் என்று கருதினேன்.”

“இரண்டாவது முறை 2017-ம் ஆண்டில் முதல்நிலை, முதன்மை தேர்வு இரண்டிலும் வெற்றி பெற்றேன். நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்து விட்டேன். நேர்முகத்தேர்வில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோடு பதில் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். பத்து மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தேன். மூன்றாவது முறை 2018-ம் ஆண்டில் முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றேன். முதன்மை தேர்வில் சில கேள்விகளுக்கு இன்னும் சிறப்பாக பதில் அளித்திருக்கலாம் என்று நினைத்தேன். நேர்காணலுக்கும் சென்று வந்தேன். முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு இரண்டிலும் சேர்த்து 13 மதிப்பெண்கள் குறைந்து விட்டது. மீண்டும் தோல்வி அடைந்தேன். 2019-ம் ஆண்டு முதன்மை தேர்வுக்காகத் தயாரானபோது என்னைவிட என் பெற்றோர்தான் எனக்காக நிறையவே தயார்படுத்திக் கொண்டார்கள். என்னை காலையில் மூன்றரை மணிக்கெல்லாம் அம்மா எழுப்பி விடுவார். பாடங்களை எனக்குப் படித்துக் காட்டுவார். அதை கேட்டு நான் மனப்பாடம் செய்து கொள்வேன்.


தடைகளை மிதிப்படிகளாக மாற்றி வெற்றி கண்டார் பூரண சுந்தரி


"நான்காவதுமுறையாக முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு இரண்டையும் சிறப்பாக எழுதினேன். நேர்காணலில் பங்கேற்பதற்காக நன்றாக தயார் செய்து கொண்டேன். நேர்காணல் நாற்பது நிமிடங்கள் நடைபெற்றது. நேர்காணல் குழுவில் இருந்ந ஐந்துபேரும் மாறி, மாறி என்னுடைய ஆளுமைத் திறனை சோதிக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டனர். குழுவில் இருந்த ஒருவர் ‘பருவநிலை மாற்றத்துக்கு தமிழக அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது’ என்று கேட்டார். நான். ‘பருவநிலையைப் பாதுகாக்கும் வகையில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றன என்று சுட்டிக்காட்டினேன். அப்போது நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து என்னிடம் கேள்வி கேட்டனர். அதற்கு நான், “70 ஆண்டுகால இந்திய ஜனநாயக வரலாற்றில் மக்கள் நிறைய விழிப்புணர்வு பெற்றிருக்கின்றனர். நிறைய தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்’ என்று சொல்லி விட்டு ‘எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள்’ என்ற பாரதியாரின் வரிகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்” என்றார் பெருமிதத்துடன்.

“நான் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிந்ததும் மனதுக்குள் ஒரு நிறைவு ஏற்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் தோன்றிய நிறைவாகத்தான் அதைக் கருதுகின்றேன்.”

குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் கட்ட பயிற்சிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி அகாடெமியில் விரைவில் தொடங்க உள்ளது. பயிற்சிக்குப் பின்னர் குடிமைப்பணி துறை ஒதுக்கும் மாநிலத்தில் உதவி கலெக்டர் பணியில் பூர்ண சுந்தரி பணி அமர்த்தபடுவார். இரண்டாவது கட்ட பயிற்சிக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியராகவோ அல்லது ஒரு துறையின் உயர் அதிகாரியாகவோ தனிப்பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்படும்.

“கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய மூன்று துறைகளில் என் பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த மூன்றும்தான் இன்றைக்கு இந்த சமுதாயத்துக்கு தேவை. கிடைக்கும் பதவியில் எனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டம் அனுமதிக்கும் முடிவுகளை தைரியமாகவும், சுந்திரமாகவும் எடுப்பேன். தன்னம்பிக்கையை இழக்காத வண்ணம் பணியாற்றுவேன்” என்கிறார் அவர்.

“எனக்கு இசையின்மீது ஈர்ப்பு உண்டு. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு ஒரு கீ போர்டு வாங்கித்தரும்படி அப்பாவிடம் கேட்டேன். அந்த சமயத்தில் அவரிடம் பணம் இல்லை என்று நினைக்கின்றேன். நானும் அதைப் புரிந்து கொண்டு அதன்பின்னர் அவரிடம் கேட்கவில்லை.”

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களை விரும்பி கேட்பது பூரண சுந்தரிக்கு பிடிக்கும். ‘சங்கமம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் ‘மழைத்துளி, மழைத்துளி மண்ணில் சங்கமம்’ என்று தொடங்கும் பாடல் அவருக்கு பிடித்தமான ஒன்று.

“சங்கமம் படத்தில் வரும் அந்தப்பாட்டில் ‘மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு, விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு’ என்ற வரிகள் எனக்கு இன்றளவும் மிகவும் பிடிக்கும். என் தந்தை என்னிடம் இந்த வரிகளைச் சொல்வது போலவே நான் உணர்கின்றேன்,” என்று முடிக்கிறார் பெருமிதத்துடன்.
 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Winning through finding an opportunity

  குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்

  பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

 • steel man of jharkhand

  கரும்பாய் இனிக்கும் இரும்பு!

  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

 • Young Mattress seller success story

  மெத்தைமேல் வெற்றி!

  கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

 • How a national level sportsman built a Rs 300 crore turnover travels company

  பர்பிள் படை

  கூடைப்பந்து விளையாட்டில் இந்திய அணியில் இடம்பெற்றவர். ஆனால் ஒரு காயம் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாமல் போக, தனது தந்தையுடன் இணைந்து, அவரது கார் வாடகை வியாபாரத்தை ரூ.300 கோடி வருவாய் பெறும் நிறுவனமாக மாற்றினார். தேவன் லாட் சொல்லும் வெற்றி கதை.

 • Kngs of good tea

  தேநீர் மன்னர்கள்!

  பாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை

 • fresh farm produce

  பண்ணையிலிருந்து வீட்டுக்கு!

  கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத்  திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.