ஏழ்மையிலிருந்து கோடிகளுக்கு வாழ்க்கையை ‘ஓட்டிச்’ சென்றவர்!
03-Dec-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
தந்தையுடன் சேர்ந்து பிச்சை எடுத்துள்ளார். வீட்டுவேலைக்குப் போயிருக்கிறார். தள்ளுவண்டியில் பைகளும் சூட்கேஸுகளும் விற்றுள்ளார். பணக்காரர்களின் வீட்டில் காவலராக வேலை பார்த்துள்ளார். ட்ராவல் ஏஜென்சிகளுக்கு கார் ஓட்டியுள்ளார்.
ரேணுகா ஆராதியாவின் முன்கதைச் சுருக்கம் இது. இப்போது 40 கோடிக்கு வணிகம் செய்யும் பெங்களூருவில் உள்ள கார்வாடகை நிறுவனமான ப்ரவாசி கேப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.
|
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள், 40 பள்ளிப்பேருந்துகள், ஆகியவை ரேணுகா ஆராதியாவின் ப்ரவாசி கேப்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. (படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்) |
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் 250 அவருக்குச் சொந்தம். 40 பள்ளிப் பேருந்துகளும் உண்டு.
“நாங்கள் 2019-ல் 100 கோடி வர்த்தகத்தை எட்ட விரும்புகிறோம். பின்னர் பங்குகள் வெளியிடுவோம்,” என்கிறார் ஆராதியா. அவர் இப்போது 23 லட்ச ரூபாய் ஹுண்டாய் எலாண்ட்ரா காரில் பயணம் செய்கிறார். விரைவில் 84 லட்ச ரூபாய் லேண்ட் ரோவரில் வலம் வர இருக்கிறார்.
கார் வாடகைத் தொழிலில் இன்று நன்கறிந்த பெயரான ஆராதியா பத்தாம் வகுப்பில் தோற்றவர். அவர் பயணம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் துறைகளில் நான்கு நிறுவனங்களைத் தொடங்கி இயக்குநராக உள்ளார்.
எப்படி அவர் மிகச்சாதாரண நிலையில் இருந்து முன்னுக்கு வந்தார்?
அவர் அப்பா பெங்களூரு அருகே ஆனைக்கால் வட்டத்தில் கோபசந்திரா கிராமத்தில் உள்ள முத்தியாலம்மா கோவிலில் பூசாரி. ஆரத்தி காண்பித்தால் ஒரு ரூபாயோ 2 ரூபாயோ கிடைக்கும்.
கொஞ்சமாக இருந்த கோவில் நிலத்தில் கேழ்வரகு, நெல் ஆகியவற்றை விளைவிப்பார்கள். அதுவோ அவர்கள் தேவைக்கே போதாது. ஆராதியாவுக்கு ஒரு சகோதரியும் சகோதரனும் உண்டு.
கோவிலில் வேலை முடிந்ததும் ஆராதியாவின் அப்பா வீடுவீடாகச் சென்று பிச்சை பெறுவார். சிறுவனாக இருந்த ஆராதியாவும் உடன் சென்று கேழ்வரகு, சோளம், அரிசி ஆகியவற்றைப் பெற்றுவருவார். அவற்றை சந்தையில் விற்றுக் காசாக்குவார்கள்.
|
ப்ரவாசி கேப்ஸில் 150 பேருக்கும் மேல் பணிபுரிகிறார்கள் |
ஆராதியா அரசுப்பள்ளியில் படித்தார். அவரது ஆசிரியர்கள் அவருக்காக கட்டணங்களைச் செலுத்தி உதவுவார்கள். ஆராதியா பதிலுக்கு அவர்களின் வீட்டு வேலைகளைச் செய்வார்.
ஆறாம் வகுப்பு முடித்ததும் அவரை காவெரப்பா என்பவர் வீட்டில் வேலைக்கு விட்டார் அப்பா.
இரண்டு பசுமாடுகளை மேய்க்கவேண்டும். எண்பது வயதுகளில் இருந்த காவெரப்பாவைப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ஆண்டு அந்த வீட்டில் இருந்தபடியே பள்ளிக்கூடத்திலும் படித்தார்.
“அவர்கள் வீட்டுக்கு வேலைக்குப் போன அனுபவம் எனக்கு புத்தகங்களில் படித்ததை விட அதிக பாடம் தந்தது. அந்த வீடுதான் உண்மையான பள்ளிக்கூடம். மீந்துபோன காய்ந்த உணவுதான் கிடைக்கும். எப்போதும் பசியுடன் இருப்பேன்,” என்கிறார் அவர் புன்னகையுடன்.
ஆராதியாவின் அப்பா மகனின் நிலை அறிந்து, பெங்களூருவில் உள்ள சிக்பெட்டில் உள்ள மகந்தீரா மடத்தில் சேர்த்தார்.
“மடத்தில் தினமும் இருவேளை சாப்பாடு. காலை 8 மணிக்கும் மாலை 8 மணிக்கும். இடையில் எதுவும் கிடையாது. கெம்பேகவுடா சாலையில் உள்ள எஸ்பிஎம் சர்க்கிளுக்குச் சென்று நாங்கள் சிலர் அங்கு வியாபாரிகளிடம் மிஞ்சி இருக்கும் வாழைப்பழங்களை வாங்கி உண்போம்,” சொல்கிறார் அவர்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் அவர் தோற்றுவிட்டதால் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
“அப்போது என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்தது. என் அக்கா, அண்ணாவுக்கு திருமணம் ஆகிவிட்டது, அவர்கள் உதவி செய்யும் நிலையில் இல்லை,” தொடர்கிறார் அவர்.
ஆராதியாவுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. வேலைக்குப் போக முடிவெடுத்தார். பெங்களூருவுக்கு அம்மாவுடன் வந்தார். அங்கே சின்னச் சின்ன வேலைகள் செய்யத்தொடங்கினார்.
|
40 பள்ளிப்பேருந்துகளும் ப்ரவாசியிடம் உண்டு. |
கடைசல் எந்திரக் கடைகள், ப்ளாஸ்டிக் குடம் செய்யும் ஆலை, ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றில் வேலைபார்த்தார். அட்லாப்ஸ் ஸ்டூடியோவில் மூன்றாண்டுகள் துப்புரவுப்பணியாளர். பின்னர் ஷ்யாம் சுந்தர் ட்ரேடிங் கோ- வில் பைகள், சூட்கேஸ்கள் ஆகியவற்றை பேக் செய்து தள்ளுவண்டியில் வைத்து பல கடைகளுக்குக் கொண்டுசேர்க்கும் வேலை.
விரைவிலேயே அவர் சொந்த தொழிலாக சூட்கேஸுகளை மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி தெருத்தெருவாக விற்பதைத் தொடங்கினார்.
இதில் 30,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அது அவர் கஷ்டப்பட்டு சேமித்த பணம். மேலும் கடன்.
அவருடைய அண்ணன் ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில் சூபர்வைசராக இருந்தார். அவர் கொரமங்களா பகுதியில் ஒரு செக்யூரிட்டி வேலை வாங்கிக் கொடுத்தார். மூன்று ஆண்டுகள் இந்த வேலை. மாதம் 600 ரூபாய் சம்பளம்.
இருபது வயதிலேயே அவருக்குத் திருமணம் ஆனது. மனைவி பெயர் புஷ்பா. அவரும் பத்தாம் வகுப்பில் தோற்றவர். உறவுக்காரப் பெண்.
கூடுதல் வருமானத்துக்காக தோட்டவேலை செய்ததுடன் தென்னைமரங்கள் ஏறவும் செய்தார்.
“தேங்காய் பறிக்க ஒரு மரத்துக்கு 15 ரூபாய். ஒரு நாளைக்கு 20 மரங்கள் ஏறுவேன். என் மனைவி ஒரு துணி ஆலையில் 275 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தார். இந்த கூடுதல் சம்பளம் உதவியாக இருந்தது,” என்கிறார் ஆராதியா.
23 வயதில் ஆராதியாவுக்கு ஒரு மகன் பிறந்தான். தான் வணங்கும் ராகவேந்திர சுவாமியின் நினைவாக அவனுக்குப் பெயர் சூட்டினார்.
ஆராதியாவின் நண்பர்கள் சிலர் ஓட்டுநர்களாக இருந்தார்கள். அவர்கள் மாதம் 2000 ரூபாய் சம்பாதித்தனர். ஆகவே அவரும் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு வேலைக்குப் போனார். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.
“என் முதல் வேலை சிலமணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. அம்பாசடர் காரை ஒரு சுவரில் மோதிவிட்டேன். திட்டுவாங்க பயந்து அப்படியே காரை விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன்,’’ நினைவுகூர்கிறார் அவர்.
“இதை நினைத்து வருந்திய நான் நேரடியாக கோயிலுக்குப்போனேன். படிகளில் தலையை மோதி ஏன் கடவுளே எனக்கு மட்டும் இரக்கம் காட்டவில்லையே என அழுதேன். செக்யூரிட்டி வேலைக்கே திரும்பச் சென்றேன்.”
|
ஆராதியா புதிய தொழில்களில் ஈடுபடுகிறார். அவர் இப்போது நான்கு புது தொழில்முயற்சிகளில் இயக்குநராக உள்ளார். |
இருப்பினும் கணேஷ் டிராவல்ஸ் உரிமையாளர் சதிஷ் ஷெட்டி என்பவரிடம் பணிபுரிய வாய்ப்பு விரைவில் வந்தது.
“ஷெட்டி எனக்கு நம்பிக்கை ஊட்டினார். அவர் எதன் மீதாவது வண்டியை மோதிவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவந்துவிடுமாறு அறிவுரை சொன்னார்,” என்கிற ஆராதியாவின் வருமானம் அதன் பின்னர் 5000 ரூபாயாக உயர்ந்தது.
ஆராதியாவுக்கு நல்ல பெயர் இருந்ததால் அவரை போட்டிக்கம்பெனி ஒன்று வேலைக்குச் சேர்த்துக்கொண்டது. மெட்டாடர் வாகனம் ஓட்டவேண்டும். அத்துடன் இறந்தவர்களின் உடலை ஏற்றிச்செல்லும் வாகனமும் ஓட்டவேண்டும்.
“பிண வண்டி ஓட்டினால் நல்லதில்லை என்று நண்பர்களும் உறவினர்களும் கூறினர். நான் தூயமனத்துடன் என் வேலையை நேர்மையாகச் செய்தேன். இறந்தவர்களுக்கும் பணிபுரியும் வாய்ப்பைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொன்னேன்,” உணர்ச்சி பொங்க கூறுகிறார்.
நான்காண்டுகள் கழித்து ஆராதியா மஞ்சுநாதா ட்ராவல்ஸில் சேர்ந்தார். “ இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸில் இருந்து ஒரு குழு வந்தது. அவர்கள் வருவார்கள் என்று இரு மாதங்கள் முன்பே தெரிந்திருந்த படியால் அவர்களுடன் பேச ப்ரெஞ்ச் கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தால் நம் தொழில் சிறக்கும் என்று அறிந்துகொண்டேன்.”
|
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தினால் வெற்றி உறுதியாகும் என்பதை தொடக்கத்திலேயே ஆராதியா அறிந்தார் |
ஆராதியா தன் சொந்த வாகனத்தை 2000-த்தில் வாங்கினார். மனைவியின் பிஎப் பணம், தன் சேமிப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு டாடா இண்டிகா 3.2 லட்சத்தில் வாங்கினார். சொந்தமாக ஓட்டத்தொடங்கினார்.
சுற்றுலா பயணிகளிடம் பேசியும் செய்தித்தாள் படித்தும் ஆராதியா ஆங்கிலம் கற்றுக்கொண்டார். தொழில் நிர்வாகம், மார்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு, தொழில்முனைதல் பற்றிய பயிலரங்குகளிலும் கலந்துகொண்டார்.
“இந்த உலகம் ஒரு பல்கலைக்கழகம். மனிதர்களே புத்தகங்கள் என்று நம்புகிறேன். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்க வேண்டும்,” என்கிறார் அவர்.
2006-ல் அவர் ஐந்து கார்கள் வைத்திருந்தார். அதை சிட்டி டாக்ஸி நிறுவனத்திடம் விட்டார். அவருடைய ஓட்டுநர்களில் ஒருவரான வெங்கடேஷ் பெருமாள், இந்தியன் சிட்டி டாக்ஸி என்ற நிறுவனம் விற்பனைக்கு வருவதைச் சொல்லி, அதை வாங்க வைத்தார்.
ஆராதியா அதை 6.75 லட்சத்துக்கு வாங்கினார். அதற்காக தன் கார்கள் அனைத்தையும் விற்றார். கடன் வாங்கினார். அந்நிறுவனத்தின் வசம் 35 கார்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அவரது மருமகன் கண்ட்ரோல் அறையைப் பார்த்துக்கொள்ள, அவர் நிர்வாகத்தைக் கவனித்தார்.
தன் நிறுவனத்துக்கு ப்ரவாசி கேப்ஸ் என்று அவர் பெயரிட்டார். ஆரம்பத்தில் அவர் சிரமப்பட வேண்டியிருந்தது.
|
தங்கள் சொந்த காரை வாங்க, ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை அவர் உருவாக்கினார் |
அவருடைய முதல் வாடிக்கையாளர் அமேசான் இந்தியா நிறுவனம். அதன் தொழிலாளர்கள் பயணச்சேவைக்காக 35 கார்களை ஒப்பந்தம் செய்தார்.
சென்னையில் அமேசான் நிறுவனம் அமைத்தபோது அவருக்கே வாய்ப்பு அளித்தது. சென்னை அலுவலகத்துக்காக 300 வாகனங்களை அவர் ஒதுக்கினார். அனைத்தும் கடன் வாங்கிய பணத்தில்.
சிலமாதங்கள் கழித்து வால்மார்ட், அகாமாய், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய வாடிக்கையாளர்களையும் அவர் பெற்றார். 2012-ல் ஏழு பள்ளிப்பேருந்துகளையும் இயக்கத்தொடங்கினார். இப்போது அது 40 ஆக வளர்ந்துள்ளது.
ஓலாவும் ஊபரும் இங்கே நுழைந்தபோது அவர் தயாராகவே இருந்ததால் அவற்றின் தாக்குதலை சமாளித்தார். “ஓலாவும் ஊபரும் வந்தபோது சின்ன டாக்ஸி நிறுவனங்கள் மூடப்பட்டதைப் பார்த்தேன். நானும் 100 அல்லது 200 டாக்சிகளுடன் நடத்தியிருந்தால் மூடியிருக்க வேண்டியதுதான்,” என்கிறார் அவர்.
ஆராதியாவிடம் 700 டாக்ஸிகள் ஓடின. அவற்றில் 200 மட்டுமே அவரை விட்டு விலகின. அவர் தாக்குப் பிடித்தார்.
தொழிலில் நீடித்து நிற்க, சிறந்த வழி உரிமையாளர்களே ஓட்டுநராக இருக்கும் திட்டத்தை உருவாக்குவது என்று அவர் உணர்ந்தார்.
இத்திட்டப்படி, 50,000 ரூபாய் முன்பணம் கொடுத்தால், ஓட்டுநருக்கு புது கார் கிடைக்கும். “இந்த கார் 36 மாதங்கள் கழித்து ஓட்டுநர் பெயருக்கு மாற்றப்படும். அதுவரை அவர் சம்பாதிப்பதை அவர் வைத்துக்கொள்ளலாம். நாங்கள் காரின் இஎம்ஐ தொகை மட்டும் கழித்துக்கொள்வோம்.
“இத்திட்டப்படி எங்களிடம் 300 கார்கள் உள்ளன,” என்கிறார் அவர்.
ஆராதியா ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர். அவரைப் பொறுத்தவரை தொழிலில் ஆன்மீகமும் இணைந்தே செல்பவை.
“தன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும். குடும்பத்துக்கும் தொழிலாளர்களுக்கும் உதவி செய்யவேண்டும்,” என்கிற அவர், “என் மனைவியின் உதவி இல்லாமல் இன்று நான் இந்த இடத்தை நான் எட்டியிருக்க முடியாது,” என்றும் சொல்கிறார்.
|
ஆராதியாவும் அவரது மனைவியும் முதல் காருடன் (படம்: சிறப்பு ஏற்பாடு) |
ஆராதியாவின் மகன் ப்ரவாசி கேப்ஸில் இயக்குநர். அவருக்கு 19 வயதில் திருமணம் ஆனது. மருமகளுக்கு 18 வயது. திருமணத்துக்குப் பின்னர் இருவரும் வணிகவியலில் பட்டப்படிப்பு முடித்தனர்.
“என் மருமகள் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரை படிக்க அனுமதிப்பேன் என்று உறுதி அளித்த பின்னரே என் மகனை மணக்க சம்மதித்தார். என் மகனும் அவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தனர். நானே சென்று மருமகளை கல்லூரியில் விட்டு அழைத்து வருவேன். அவர்களுக்குத் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆயிற்று. ஒன்றரை வயதில் எனக்கொரு பேரன் உள்ளான்,” என்கிறார் அவர்.
மருமகளையும் இத்தொழிலில் இறங்க பயிற்சி அளித்துள்ளார். ஆராதியாவின் செயலாளராக அவர் விரைவில் சேர உள்ளார்.
“டிரைவராக நான் இருந்தகாலத்தில் எனக்கும் ஒரு காலம் வரும். அப்போது ட்ரிப் ஷீட் கொடுக்கும் நிலையில் இருந்து அதை வாங்கும் நிலையில் நான் இருப்பேன் என்று அடிக்கடி நினைப்பேன்,” சொல்கிறார் அவர்.
எதையும் கனவு கண்டு, திட்டமிட்டு அதற்காக உழைத்தால் நீங்கள் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை ஆராதியாவின் வாழ்க்கை உணர்த்துகிறது.
அதிகம் படித்தவை
-
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு அவருக்கு 16 வயதில் திருமணம். தினக்கூலி 5 ரூபாய்க்கு வேலை பார்த்தார். வளர்ந்ததோ அனாதை இல்லத்தில். இன்று அந்த பெண் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அஜுலி துல்சியான் இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார்
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.
-
எடை, தடை, அதை உடை!
தீக்ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
மெத்தைமேல் வெற்றி!
கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
சறுக்கல்களை சாதனைகளாக்கியவர்
வணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை