நல்லி குடும்பத்தில் இருந்து வந்து சொல்லி அடித்த பெண்மணி!
21-Nov-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
லாவண்யா நல்லியின் கொள்ளுத்தாத்தா நல்லி சின்னசாமி செட்டி 1800களின் இறுதியில் சென்னையில் பட்டுச் சேலைகள் விற்கத் தொடங்கினார். 70 கிமீ தொலைவில் இருந்த சொந்த ஊரான காஞ்சியில் இருந்து மிதிவண்டியில் பட்டுச்சேலைகளைக் கொண்டுவந்து அப்போதைய மெட்ராஸான சென்னையில் விற்றார்.
சென்னை தி.நகரில் 1928ல் சின்ன கடையைத் தொடங்கினார். 90 ஆண்டுகள் கழித்து இன்று நல்லி சில்க்ஸ் என்பது பட்டுச் சேலைகளின் மிகப்பெரிய பிராண்டாக விளங்குகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 32 கடைகள் உள்ளன. 2012ல் தங்க நகை விற்பனையிலும் அவர்கள் கால்பதித்துள்ளனர்.
|
நல்லியின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த லாவண்யா நல்லி, நல்லி நெக்ஸ்ட் கடைகளை இளம் வாடிக்கையாளர்களுக்காகத் திறந்து குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 2005லிருந்து பங்களித்து வருகிறார். (படங்கள்: ஹெச்கே ராஜசேகர்)
|
நல்லி குடும்பத்திலிருந்து தங்கள் குடும்பத் தொழிலில் இணைந்த முதல் பெண் லாவண்யா, 33, தன் திறனை குறைந்த காலகட்டத்தில் நிரூபித்துள்ளார். 650 கோடிகள் வர்த்தகம் செய்யும் நல்லியின் வாரிசுகளில் ஒருவரான இவர் புதிய கடைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
“நானும் தொழில்துறையில் சேர்வதுகுறித்து என் அப்பா முதலில் தயங்கினார். நான் உறுதியாக இருந்ததால் அனுமதித்தார்,” என்கிற லாவண்யா 2007-ல் நல்லி நெக்ஸ்ட் என்ற உப பிராண்டைத் தொடங்கினார். அது சமகாலப் பெண்களுக்காக உருவானது.
கடைக்கு வரும் இளம் வாடிக்கையாளர்களிடம் உரையாடியதில் நல்லி நெக்ஸ்டுக்கான திட்டம் உருவானது. நல்லி என்றாலே திருமணப் புடவைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதற்கான இடம் இளையோருக்குத் தேவையானவை இருக்காது என்ற எண்ணம் பொதுவாக இருப்பதை அவர் அறிந்தார்.
அவர்களின் டிசைனர் சாரிகள் கவனிக்கப்படவே இல்லை.
“வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டுப்புடவைகள் பகுதிக்குச் சென்றுவிடுவார்கள். மற்றவற்றைக் கவனிக்கமாட்டார்கள்,” என்கிறார் லாவண்யா. அவர் வாடிக்கையாளர்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்.
“நான் தொழிலிலும், கடைகளில் வேலை செய்கிறவர்களைக் கவனிப்பதிலும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.” என்கிறார் அவர். இதைத் தொடர்ந்து அவர் சென்னையின் தங்கள் முன்னணி கடையில் உள்ளே வருகிறவர்களில் எத்தனை பேர் பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள் என்பதை வாட்ச்மேனிடம் கணக்கெடுக்கச் சொன்னார். எவ்வளவு பேர் நல்லி பைகளைக் கொண்டு செல்கிறார்கள் என்பதை வைத்து அந்த கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
"பெற்றோருடன் வரும் இளம் பெண்கள் எதையும் தங்களுக்காக வாங்கவில்லை என்பதைக் கண்டறிந்தோம்,” என்கிறார் லாவண்யா.
நல்லி நெக்ஸ்ட் கடைகளைத் திறந்ததன் மூலம் இதில் மாற்றம் ஏற்பட்டது. "சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சின்னதாக ஒரு கடையைத் திறந்து பரிசோதனை செய்தோம். நல்ல விற்பனை. எனவே பெங்களூரு, மும்பையில் இரு கடைகளைத் திறந்தோம்,” சொல்கிறார் அவர்.
|
லாவண்யா ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்துள்ளார்
|
லாவண்யா பல்வேறு கைவினைஞர்களை ஒருங்கிணைத்து புதிய ஆடைகளைப் பெற்றார். கிரிப்ஸ், ஷிபான், ஆயத்த ஆடைகள் என பலவகைகள்.
கணினி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற லாவண்யா 2005-ல் இருந்து 2009 வரை நல்லியில் முதலில் பணிபுரிந்தார். இந்த காலகட்டத்தில் நல்லியின் வருவாய் 44 மில்லியன் டாலர்களில் இருந்து 100 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. கடைகளின் எண்ணிக்கையும் 14லிலிருந்து 21 ஆக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து லாவண்யா 2009-ல் ஹார்வர்டு சென்று எம்பிஏ படித்தார். அதன் பின்னர் சிகாகோவில் மெக்கின்ஸ்கியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
ஹார்வர்டில் அவர் கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவரான அபய் கோத்தாரியைச் சந்தித்தார். 2011-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டு சிகாகோவில் வசித்தனர். லாவண்யா மெக்கின்ஸ்கியில் வேலை பார்த்தார். அபய் பூஸ் அண்ட் கம்பெனியில் பணிபுரிந்தார்.
தம்பதிகள் வேலையின் பொருட்டு பயணம் செய்ய வேண்டி இருந்தது. திங்கள் முதல் வெள்ளிவரை சந்திக்கவே இயலாது. மூன்று ஆண்டுகள் இது தொடர்ந்தது. ஒருவருடன் இணைந்து நேரம் செலவழிப்பதற்காக வேலையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருவரும் பயணங்களில் ஈடுபட்டனர். பின்னர் இந்தியா வந்தனர்.
2014-ல் இந்தியா வந்ததும் லாவண்யா பேஷன் இணையதளமான மைந்த்ரா டாட்காமில் துணைத்தலைவராக வேலைக்குச் சேர்ந்தார்.
|
நல்லி குழுமத்துக்குத் திரும்புவதற்கு முன்பாக லாவண்யா Myntra.com-இல் வருவாய் மற்றும் ஷாப்பிங் அனுபவப் பிரிவின் துணைத்தலைவராக வேலை பார்த்தார்.
|
“திரும்பி வந்தபின்னர் பெங்களூருவில் ப்ளிப்கார்ட்டில் வேலை பார்த்த ஒரு நண்பரைச் சந்தித்தேன். எனக்கு வாடிக்கையாளர்கள் பிரிவு, சில்லரை விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருந்ததால் ப்ளிப்கார்ட் கையகப்படுத்த இருந்த மைந்த்ராவில் வேலைக்குச் சேருமாறு அவர் கூறினார்,” லாவண்யா சொல்கிறார்.
2015-ல் மைந்த்ராவை விட்டு விலகினார் லாவண்யா. மீண்டும் நல்லிக்கே திரும்பி துணை சேர்மனாக இ காமர்சை கவனித்தார். “பொறியியல் படித்த பின் குடும்பத் தொழிலில் முதல்முறை வேலைக்குச் சேர்ந்தபோது வரவேற்காத என் அப்பா, இம்முறை வரவேற்பு அளித்தார்.”
இரண்டாம் உலகப்போரின்போது சென்னை தாக்கப்படும் என வதந்தி நிலவியது. வியாபாரிகள் அதனால் நகரை விட்டு நகர்ந்தனர் ஆனால் நல்லி குழுமத்தினர் நகரவில்லை என தொழிலின்மீது தன் குடும்பத்தினரின் பற்றை லாவண்யா நினைவுகூர்கிறார்.
“அப்போது சின்னசாமியின் மகன் நாராயணசாமி செட்டி கடையைத் திறப்பதில் உறுதியாக இருந்தார்.
“நகரில் நல்லி மட்டுமே திறந்து இருந்தது. கைக்குட்டை வாங்கக்கூட மக்கள் இங்குதான் வரவேண்டி இருந்தது. நல்லியின் புகழ் ஓங்கியது. தரமான துணிகளுக்காக அறியப்பட்டது,” விளக்குகிறார் லாவண்யா.
|
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளைக் கொண்டு நல்லி நெக்ஸ்ட் இளம் தலைமுறையை ஈர்க்கிறது.
|
மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த குப்புசாமி செட்டி அவர்களின் தலைமையில் நல்லி பெரும் வளர்ச்சியை அடைந்தது. 1956-ல் இவர் பொறுப்பேற்றார். பின்னர் லாவண்யாவின் தந்தை ராமநாதன் நல்லி இணைந்தார். நல்லி சில்க்ஸ் மும்பை, டெல்லியில் கிளை பரப்பியது.
"தொழில் வளர்ந்தது. என் தந்தையும் பல வாய்ப்புகளைக் கண்டறிந்தார். எண்பதுகளின் இறுதியில் அவர் ஹார்வர்டு பல்கலையில் எம்பிஏவும் படித்தார். அவரது அனுபவமும் தொழில் வளர்ச்சிக்கு உதவியது,” என்கிறார் அவர்.
பொறியியல் படிக்கையில் லாவண்யா சில வன்பொருள் நிறுவங்கள், நல்லி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்றுள்ளார். பி இ படித்த பின்னர் 21 வயதில், நல்லி குழுமத்தில் 2005-ல் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
பெங்களூரில் இப்போது வசிக்கும் லாவண்யா நல்லியின் வளர்ச்சியில் மட்டுமல்ல கவனம் செலுத்துவது. ஏழு மாத மகன் ருத்ராவின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறார். அவரது கணவர் அபய் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்.
|
பெங்களூருவில் தங்கள் புதிய கடையில் லாவண்யா வாடிக்கையாளர்களுடன்
|
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்லியின் வளர்ச்சியை இருமடங்காக்குவதே லாவண்யாவின் உடனடி இலக்கு. அதேசமயம் இக்குழுமத்தின் அடிப்படை விழுமியங்களில் சமரசம் செய்யாமல் இருப்பதும் ஆகும். உதாரணத்துக்கு எவ்விதத்திலும் கழிவு (discount) அளிப்பதில்லை என்கிற குழுமத்தின் கொள்கை.
“1940ல் என் கொள்ளுத்தாத்தா கழிவு அளித்து பொருட்களை விற்கும் முறையைப் பின்பற்றவேண்டாம் என முடிவு எடுத்தார். அந்த முடிவு சிறப்பாகச் செயல்பட உதவியது.
“என்ன மாற்றங்களை நான் கொண்டுவந்தாலும் தலைமுறைகளாக நாங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் மாறாது,” உறுதியளிக்கிறார் அவர்.
அதிகம் படித்தவை
-
மண்ணின் மகள்
பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கொடுத்துச் சிவந்த கரங்கள்
இளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
வெற்றிமேல் மிதப்பவர்
உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வெற்றியாளரின் பயணம்
தன் பதினாறு வயதில் கையில் 25 ரூபாயுடன் கே.ஆர். ராஜா கோவைக்கு வந்து சேர்ந்தார். சாலையோரத்தில் படுத்து உறங்கினார். இன்று அவருக்கு மூன்று பிரியாணிக்கடைகளும் 10 கோடிரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதியும் உள்ளன. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை