5600 ரூ முதலீடு; 150 கோடி ஆண்டு வருவாய்! கேன்சரை வென்ற இளம்பெண்ணின் சாதனை!
08-Oct-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
கனவு பெரிதாகும்போது வெற்றியும் பெரிதாகிறது. கனிகா டெக்ரிவாலின் நிஜவாழ்க்கை கதையானது இந்த கருத்தை மையப்படுத்தி தெளிவாக விளக்குகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு 24 வயதான கனிகா அப்போதுதான் கேன்சரில் இருந்து உயிர்பிழைத்து வந்திருந்தார், அந்த சமயத்திலும் இந்திய பொது விமானப்போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு சொந்தமாக ஒரு விமானம் கூட கிடையாது.
ஓலா, ஊபர் போல விமானப்போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவோரை இணையம் வாயிலாக
ஒன்றிணைத்து விமான பயணப்பதிவு தொழிலை கட்டமைப்பதுதான் அவரது திட்டமாக இருந்தது.
2012ஆம் ஆண்டு கனிகா டெக்ரிவால்
ஜெட்செட்கோ (Jetsetgo)எனும் விமானப்பயண இணைய ஒருங்கிணைப்பை தொடங்கினார். (புகைப்படங்கள்:
சிறப்பு ஏற்பாடு) |
“விமான பயணங்களை முன்பதிவு செய்வதற்கான ஒரு செயலியை உருவாக்க நான் ரூ.5600 மட்டுமே முதலீடு செய்தேன். முதல் இரண்டு ஆண்டுகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து முன் தொகை பெற்று, முகவர்களிடம் இருந்து கடன் பெற்றும் இந்த தொழிலை நடத்தினேன்,” என்கிறார் டெல்லியில் தொடங்கப்பட்ட ஜெட்செட்கோ ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் கனிகா. “வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற விமானங்களை வாங்குவதற்கு அறிவுரை கூறும் ஆலோசனையையும் நான் வழங்கினேன்.” 2014ஆம் ஆண்டு சுதீர் பெர்லா என்ற ஆக்ஸ்போர்டு நிர்வாகவியல் பட்டப்படிப்பு முடித்த பட்டய கணக்காளர் நிறுவனத்தின் துணை நிறுவனராக இணைந்தார். இன்றைக்கு ஜெட்செட்கோ ரூ.150 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக200 ஊழியர்களுடன் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத்தில் அலுவலகங்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடந்த இந்த நிறுவனம் சொந்தமாக 8 விமானங்களை வாங்கியிருக்கிறது. “2020-21ஆம் ஆண்டு ஒரு லட்சம் விமானப்பயணிகள், 6000 விமானங்களை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். பெருநிறுவனங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியோர்தான் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். 6 இருக்கைகள் கொண்ட விமானம் முதல் 18 இருக்கைகள் கொண்ட விமானம் வரை பல்வேறு வகை விமான பயண சேவைகளை வழங்குகின்றோம்,” என்றார் கனிகா. “டெல்லி-மும்பை, மும்பை-பெங்களூரு மற்றும் ஐதராபாத்-டெல்லி ஆகிய நகரங்களுக்கு இடையே அதிகம் பேர் பயணிக்கின்றனர். எங்கள் விமான பயணப்பதிவுகளில் 5 சதவிகிதம் அவசர மருத்துவ சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரத்தில் ஒட்டு மொத்தமாக பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும் இந்த நிறுவனம் வளர்ச்சியின் பாதையை நோக்கி இருந்தது. “கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நாங்கள் எங்கள் ஊழியர்கள் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை அல்லது சம்பளத்தை குறைக்கவில்லை. எங்களுடைய லாபத்தில் இருந்து ஊழியர்களுக்கு நாம் பகிர்ந்து கொடுக்காதபோது, அவர்கள் சம்பளத்தை குறைப்பதற்கு நமக்கு உரிமையில்லை,” என்று காரணங்களைச் சொல்கிறார்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட
கனிகா, அதில் இருந்து விரைவாக மீண்டு வந்து ஜெட்செட்கோவை தொடங்கினார்
|
தம் ஊழியர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்கிறது. இந்த நேர்காணலின் போது சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொண்ட கனிகா, அந்த நேரத்தில் விமானத்தில் இருந்து கீழே விழுந்து விட்ட அவரது ஊழியர் குறித்து கவலையுடன் விசாரித்தார். அந்த ஊழியருக்கு தேவையான மருத்துவ உதவிகளைக் கிடைக்க செய்த பிறகே நேர்காணலில் இயல்புநிலைக்குத் திரும்பினார். செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் (electrical Vertical Take-Off) விமானசேவையுடன் வளர்ந்து வரும் நகர்ப்புற விமான இயக்கத்தில் ஜெட்செட்கோ எல்லோருக்கும் முன்பாக அடியெடுத்து வைத்துவிட்டது. அதன் பயன்கள் அதற்குக் கிடைத்துள்ளன. “ இது ஒரு நகரத்துக்கு உள்ளேயே இரண்டு இடங்களுக்கிடையேயான பயண சேவையாக இருக்கும். மும்பையில் அண்மையில் இதுபோன்ற சேவையைத் தொடங்கினோம். இதன் கட்டணமானது ஊபர் சேவையைப் போல தூரத்தைப் பொறுத்து மிகவும் மலிவாக ரூ.1000 முதல் ரூ.2500 வரை மட்டுமே.” “இந்த சேவைக்கு ஒரு ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கான சாத்தியங்கள் குறித்து நாங்கள் பரிசோதனையில் ஈடுபட்டோம்.விமான டாக்சிகள் எதிர்காலத்தில் வழக்கமான ஒன்றாக மாறும் என நம்புகின்றோம். அதனால்தான் இதனை முன்னெடுக்கின்றோம்.” கனிகா இந்த நிலையை அடைவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அவர் போபாலில் ஒரு மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர். இந்த குடும்பத்தினர் நாடு முழுவதும் மாருதி முகமை எடுத்து நடத்தி வந்தனர். குடும்பத்தின் தொழில் பங்கு பிரிக்கப்பட்டபோது, கனிகாவின் தந்தை அனில் தெக்ரிவால் ரியஸ் எஸ்டேட் தொழிலைத் தொடங்கினார். அவரது தாய் சுனிதா ஒரு குடும்பத் தலைவியாக இருந்தார். கனிகாவுக்கு கனிஷ்க் என்ற இளம் சகோதரர் உள்ளார்.
கடந்த ஆண்டு ஜெட்செட்கோ நிறுவனம் 8 விமானங்களை வாங்கியது |
கனிகா, ஊட்டி லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஹாஸ்டலுடன் இணைந்த அந்தப் பள்ளியில் வகுப்பில் அவர்தான் மிகவும் சிறிய குழந்தையாக இருந்தார். அப்போது அவருக்கு ஏழு வயதுதான். “ நான் டபுள் பிரமோஷன் பெற்றவள் என்பதால் வகுப்பிலேயே நான்தான் வயது குறைந்தவளாக இருந்தேன். எப்போதும் தனிமையை உணர்ந்தேன். வீட்டில் என் தேவைகளைக் கவனிக்க வேலையாள் உண்டு. ஆனால் இங்கோ என் வேலையை நான் தான் செய்துகொள்ளவேண்டும்,” என்கிறார் கனிகா. அவருடைய சொந்த ஊரில் இருந்து 1700 கி.மீ தொலைவில் தமிழ்நாட்டில் மலைவாழ் இடமான ஊட்டியில் அவரது ஹாஸ்டலோடு இணைந்த பள்ளி இருந்தது. “ஹாஸ்டலில் தங்கி படிப்பதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், எனது பெற்றோர் எனது நன்மைக்காகத்தான் செய்கின்றனர் என்று எனக்கு தெரிந்தது.” 10ஆம் வகுப்பு முடித்தவுடன், போபால் திரும்பிய அவர், 2005ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பள்ளியில் வணிக பிரிவில் 12ஆம் வகுப்பு முடித்தார். பின்னர், மும்பை சென்ற அவர் பிடி சோமானி மையத்தில்(2005-08) விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் டிசைனில் இளநிலை பட்டம் பெற்றார். “ஹாஸ்டல் வாழ்க்கை என்னை உறுதியானவள் ஆக்கி இருந்ததால் மும்பை வாழ்க்கை எளிதாக இருந்தது. என் தந்தை எனக்கு கொஞ்சமாகத்தான் பாக்கெட் மணி கொடுப்பார். அதிகம் கொடுத்தால் கெட்டுப்போய்விடுவேன் என்ற பயம் அவருக்கு,” என்று கூறியபடி சிரிக்கிறார். “நான் ஒரு சுயமான நபராக மும்பையில் இருந்தேன். எப்போதும் டிரைவருடன் காரில் செல்வதுதான் வழக்கம். இங்குதான் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக எப்படி பேருந்தில் ஏறுவது என்று கற்றுக் கொண்டேன். பெருநகரத்தில் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான உணர்வுடன் கூடிய நபராக மாறினேன்.” பகுதி நேர வேலையிலும் அவர் ஈடுபட்டார்.”17வது வயதில்,ஒரு டிஸ்னி நிகழ்வில் ஈடுபட்டேன். அதற்காக எனக்கு ரூ.300 கிடைத்தது. அந்த சமயத்தில் என்னுடைய பாக்கெட் மணியைவிட இது பெரிய தொகை,” என்றார் அவர். “அந்த பணத்தை என்னுடைய தாயிடம் கொடுத்தேன். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், எனக்கு டிஸ்னி குட்டீஸ்(Disney goodies) கொடுத்தனர். அதனை நான் மிகவும் விரும்பினேன். பணத்தை விட இது எனக்கு மிகவும் முதன்மையானதாக இருந்தது.”
பைலட்கள், பணிப்பெண்கள் உட்பட 200 பேர் ஜெட்செட்கோ ஊழியர்களாக உள்ளனர் |
கல்லூரியில் இருக்கும்போது, இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் பிரிவின் வடிவமைப்பு துறையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் அந்த நிறுவனத்தின் விமானப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். விமானத்துறையில் பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பு அங்குதான் அவருக்குக் கிடைத்தது. “நான் அந்த நிறுவனத்துக்காக ஒரு ஹெலிகாப்டர் மற்றும் மூன்று விமானங்களை வாங்கினேன். அந்த விற்பனை ஒப்பந்தங்களில் ஒவ்வொரு செயல்பாட்டையும் நான் பார்வையிட்டேன். சரியான விமானம் வாங்குவதை இறுதி செய்வது அல்லது அந்த ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்ப விஷயங்களை கண்டறிவது அல்லது விலை குறித்து பேசி இறுதி செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டேன்,” என தனக்கு விமான தொழிலில் முதல் பார்வையைக் கொடுத்த அந்த நிறுவனத்துடனான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். 2008ஆம் ஆண்டு அவர் பட்டப்படிப்பை முடித்தபோது, அவரது பெற்றோர் அவரிடம், பட்ட மேற்படிப்பு படிக்கலாம் அல்லது திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். “ அவர்கள் அப்படிச் சொன்னதும் உடனே இங்கிலாந்தின் கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு எம்பிஏ படிப்பில் சேர்ந்தேன்,” என்று நினைவு கூர்கிறார். இங்கிலாந்தில் அவர் தொடர்ந்து விமான தொழிலில் தொடர்பு கொண்டிருந்தார். ஏரோஸ்பேஸ் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. அதே நேரத்தில் அவர் எம்பிஏ படிப்பையும் முடித்தார். “ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் எப்படிப் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். அங்கு தேவைக்கு அதிகமாக தெரிந்து கொண்டதாக நான் உணர்ந்தேன். அதிக நேரம் பணியாற்றினேன். விமானத்துறையில் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். இந்த நிறுவனத்துக்கு நான் கடமைப் பட்டிருக்கின்றேன். இங்குதான் ஜெட்செட்கோ என்ற நிறுவன யோசனை பிறந்தது.”
ஏர்-டாக்சிக்களுக்கான பெரிய சந்தை என்பது மிக நீண்ட தூரத்தில் இல்லை என்று கனிகா நம்புகிறார் |
“அங்கே வெறுமனே தேர்வு எழுதுவதற்காக மட்டும் கல்லூரிக்குப் போனேன். உங்கள் எதிர்காலத்துக்கு நீங்களே பொறுப்பாளி என்பதை உணர்ந்திருந்த ஆசிரியர்கள் அங்கு இருந்தனர். ஆச்சர்யகரமாக எப்போதுமே நான் நல்ல மதிப்பெண் பெற்று வந்தேன்.” 2011ம் ஆண்டு இங்கிலாந்தில் எம்பிஏ முடித்தபின்னர் அங்கே அவர் தங்கியிருந்தார். அப்போதுதான் தனக்கு கேன்சர் என்ற அதிர்ச்சி அவரைத் தாக்கியது. அப்போது அவருடைய வயது 23தான். “ இதைத் தொடர்ந்து பெற்றோருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே நான் வீட்டுக்கு வந்தேன்,” என்றார். “அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். எனக்காக அவர்கள் பணிவிடைகள் செய்தனர். அவர்களின் கவனிப்பு காரணமாகத்தான் நான் உயிர்பிழைத்தேன்.” “அதனுடன் போராட வேண்டும் என்று என்னுடைய மனதை நான் தயார் செய்து கொண்டேன். விதைப்பை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழில்முறை சைக்கிள் ஓட்டும் வீரரான லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்க் எழுதிய உந்துதல் ஏற்படுத்தும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். “ “அவருடைய வார்த்தைகள் எனக்கு உண்மையில் மிகவும் உந்துதலாக இருந்தன. நான் அதில் ஆழ்ந்து விட்டேன். எனக்கு 12 கீமோதெரப்பி சிகிச்சைகள் நடைபெற்றது. ஒரு ஆண்டு ரேடியேஷன் சிகிச்சைக்குப் பிறகு நான் குணமாகிவிட்டேன்.” கேன்சரில் இருந்து குணம் பெற்ற பின்னர் அவர் ஜெட்செட்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். “நிறுவனத்தின் கட்டமைப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதால், எதிர்காலத்தில் விமானங்களை குத்தகைக்கு எடுப்போம். அதே போல விமானங்களையும் வாங்குவோம்,” என்றார் அவர். மிக விரைவிலேயே நகரங்களில் ஏர்-டாக்சி பயணம் அதிகரிக்கும் என்ற கணிப்பு கூறப்படுகிறது. அதற்காக தயார்செய்துகொள்ளும் முன்னெடுப்பில் இருக்கிறார் கனிகா.
அதிகம் படித்தவை
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
வெற்றிதந்த காபி!
இவர் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர். வெற்றிகரமாக நடந்த முதல்தொழில் தோற்றாலும் கலங்கவில்லை. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் விற்பனை செய்யும் காபி தொழிலதிபராக இன்று மாறி இருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். கட்டுரை: உஷா பிரசாத்
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
-
பணம் சமைக்கும் குக்கர்!
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
கறி விற்கும் கார்ப்பரேட்!
பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்த இரு நண்பர்கள் அதைவிட்டுவிட்டு தரமான இறைச்சியை ஆன்லைனில் விற்பனை செய்ய இறங்கினார்கள். லிசியஸ் என்ற அந்த பிராண்ட் இரண்டே ஆண்டுகளில் 15 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார் உஷா பிரசாத்
-
சிறிய அறை, பெரியலாபம்
பல தொழில்களை செய்து பார்த்து நஷ்டம் அடைந்தவர் ரவிஷ். ஜப்பான் நாட்டில் உள்ளது போன்ற போட் அல்லது கேப்சூல் எனப்படும் மிகச் சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல்களை திறந்தார். இன்றைக்கு விரைவாக அறைகள் புக் ஆகின்றன. அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை