அன்று 1500 சம்பளம்! இன்று 250 கோடி ரூபாய் ஆண்டு வருவாய்! ஒரு விவசாயியின் மகனின் வெற்றிக்கதை!
08-Dec-2024
By அன்வி மேத்தா
புனே
1990-களின் தொடக்ககாலத்தில், அங்குஷ் அசாபே, மும்பையில் ஒரு ஒப்பந்தக்காரரிடம் பணியாற்றிக் கொண்டு இருந்த போது, தமது வேலையை விட்டு விலகுவது என்று நினைத்தார். புனே சென்று சொந்தமாக ஒரு நிறுவனம்தொடங்க வேண்டும் என்றும் கருதினார். ஆனால், சொந்த நிறுவனத்தை கட்டமைப்பதற்கான முதலீடு ஒன்றும் அப்போது அவரிடம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவர், ஆண்டுக்கு 250 கோடி வருவாய் ஈட்டும் வெங்கடேஷ் பில்ட்கான் என்ற புனேயில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். கட்டுமான தொழிலில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1970-ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அங்குஷ் பிறந்தார். அந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே வசித்தனர்.
|
அங்குஷ் அசாபே, 1500 ரூபாய் சம்பளத்தில் மும்பையில் ஓர் ஒப்பந்தக்காரரிடம் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் இப்போது, ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமான வெங்கடேஷ் பில்ட்கான் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். (படங்கள்: அனிருதா ராஜன்டெகார்)
|
அங்குஷின் தந்தை ஒரு விவசாயி. அந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட இடர்ப்பாடுகள் இருந்தன. மேலும் நல்ல சந்தை வசதியும் இல்லை என்பதால், விவசாயம் என்பது லாபகரமானதாக இல்லை. எனவே, அவருக்கு மிகக் குறைந்த வருமானமே இருந்தது.
எனவே, அரசுப் பள்ளியில் படித்த அங்குஷ், சோலாப்பூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்தார். பின்னர், அவரது ஊரில் இருந்து வெளியேறி பிழைப்புக்காக வெளியூர் போக வேண்டும் என்று நினைத்தார்.
சோலாப்பூர் மாவட்டத்தில் அவ்வளவாக வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், அந்த மாவட்டத்தின் மக்கள் அடிக்கடி மும்பை, புனே, நாசிக் போன்ற இதர நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வந்தனர். “என் குடும்பத்தின் பொருளாதார நிலை, மேற்கொண்டு என்னைப் படிக்க அனுமதிக்க வில்லை. என்னுடைய குடும்பத்தின் வருமானத்துக்காகவும், என் சகோதரரின் படிப்புக்காகவும், நான் மும்பை சென்று வேலை பார்ப்பது என்று தீர்மானித்தேன்,” என்று நினைவு கூறுகிறார் அங்குஷ்.
1989-ம் ஆண்டு, மும்பையில் தம்முடைய உறவினர் ஒருவர் உதவியுடன், ஒரு ஒப்பந்தக்காரரிடம் வேலையில் சேர்ந்தார். அப்போது அவர் மிக குறைவாக 1,500 ரூபாய் மட்டும் சம்பளம் பெற்றார். ஆனால், அவருக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் அவர் நல்ல நிலைக்குச் செல்ல உதவியாக இருந்தது.
அங்குஷ், கட்டுமான தொழிலின் நுணுக்கங்களை மிக விரைவாக கற்றுக் கொண்டார். ஒரு ஒப்பந்தக்காரராக தானே, சுயமாக சில கட்டுமானத் திட்டங்களை எடுத்துச் செய்யத் தொடங்கினார். அது அவருக்குக் கூடுதல் வருமானத்தைக் கொடுத்தது.
“இந்த தொழிலில், நல்ல வேலை கிடைப்பதற்கு, என்னுடைய டிப்ளமோ படிப்பு போதுமானதாக இருக்காது எனக்குத் தெரியும். என்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு சராசரி வருமானம் தரும் வேலையிலேயே இருக்க நான் விரும்பவில்லை. நான் என் பணிகளை ஒப்படைக்கும் உரிமையாளர்களைப் போல வர வேண்டும் என்று விரும்பினேன்,” என ஆரம்ப காலகட்ட இலக்குகள் பற்றி சொல்கிறார் அங்குஷ்.
அங்குஷுக்கு சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் இருந்தது. 1993-ல் தன் இலக்கை அடைய அவர் புனே சென்றார்.
“அப்போதுதான் என்னுடைய இளைய சகோதரர் படிப்பை முடித்திருந்தார். அவர் புனேவில் வேலையில் இருந்தார். மும்பைக்கு மிக அருகில் புனே இருந்தது,” எனும் அங்குஷ், மும்பையில் இருந்து ஏன் புனே சென்றேன் என்பதை விவரிக்கிறார். “மும்பையில் என்னுடைய வேலை மற்றும் கான்ட்டிராக்ட் தொழிலில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தேன். புனே செல்வதை என் குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், என்னுடைய தீர்மானம் குறித்து எனது குடும்பத்தினரிடம் நான் சொல்லவில்லை. தவிர, மராட்டியர்களான நாங்கள் இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் போல் எங்களால் நன்றாக தொழில் செய்ய முடியாது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள்.”
|
அங்குஷின் கனவு திட்டமான வெங்கடேஷ் லேக் விஸ்டா, 12.5 ஏக்கரில் அமைந்துள்ளது. அதனை அவர் 2007-ம் ஆண்டு முடித்தார். அவரது வேலையில் இது ஒரு மைல்கல்.
|
புனே நகரின் கட்டுமான தொழிலிலின் பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்ள, ஒரு ஆண்டு மட்டும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு அவருக்குக் கடைசியாக மும்பையில் வாங்கிய சம்பளத்தை விட 70 சதவிகிதம் குறைவாக 2,800 ரூபாய்தான் கிடைத்தது.
“ஆரம்பத்தில் இருந்து தொடங்கினேன்,” என்று நினைவுகூறுகிறார் அங்குஷ். “பல மைல்தூரம் நடந்து சென்று, பல பேருந்துகள் மாறி, பணியிடங்களுக்குச் செல்வேன். அப்படி ஒரு கால கட்டம் அப்போது இருந்தது. என்னுடைய சகோதரரும், அவருடைய நண்பர்களும் எனக்கு உதவினர். அந்தக் கடினமான சூழலில் என்னை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டனர்.”
ஒரு ஆண்டு கழித்து, அங்குஷ் புனேவில் சொந்த கான்ட்டிராக்ட்களை எடுத்துச் செய்யத் தொடங்கினார். தமது குடும்பத்தின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சொந்த நிறுவனம் தொடங்குவதற்கு முதலீடாக பணம் சேர்க்கவும், சுயமாக கான்ட்டிராக்ட்களை எடுத்துச் செய்தபோதும், வேலையை விட்டு நின்று விடாமல் அதிலும் தொடர்ந்தார்.
1998-ம் ஆண்டுதான் வேலையை விட்டு விலகினார். வெங்கடேஷ் பில்ட்கான் (Venkatesh Buildcon) என்ற நிறுவனத்தை ஒரு நண்பருடன் சேர்ந்து தலா 50 சதவிகிதம் பங்குதாரர் என்ற நிறுவனமாகத் தொடங்கினார். அவர்கள் 1.5 ஏக்கர் மனை ஒன்றை வாங்கினர். ஒரு கட்டுமான நிறுவனமாக முதல் பணியைத் தொடங்கினர்.
“என்னிடம் முதலீடாக 4 லட்சம் ரூபாய் இருந்தது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மேலும் 7 லட்சம் ரூபாய் திரட்டினேன். கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் என்னுடைய முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி தொடங்கியது,” என்கிறார் அங்குஷ்.
அதில் இருந்து, திரும்பிப் பார்க்கவே இல்லை. சுபாங்கி என்ற ஒரு சிவில் இன்ஜினியரை அங்குஷ் திருமணம் செய்தார். அவரது நிறுவனம் நல்லமுறையில் செயல்படத் தொடங்கியது. இப்போது அவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
2004-ம் ஆண்டு வெங்கடேஷ் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறியது. (பங்குதாரராக இருந்தவர், இடையிலேய வெளியேறி விட்டார்.) இந்த நிறுவனத்தில் அங்குஷ் தலைமையில், அவரது சகோதரர் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களில் மூவரில் ஒருவராக மனைவியின் சகோதரர் அமித் மோத்கே ஆகியோர் உதவியாக இருக்கின்றனர்.
|
அங்குஷ் இப்போது, புனே விமான நிலையம் அருகே, 1200 பிளாட்களைக் கொண்ட ஒரு குடியிருப்பின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
|
அங்குஷின் சகோதரரான லகுராஜ் அசாபேவும் இயக்குனராக இருக்கிறார். அனைத்து கட்டுமானங்கள் தொடர்பான பணிகளையும் அவர் கவனித்துக் கொள்கிறார். நிறுவன இயக்குனர் என்ற வகையில் நிறுவனத்தின் யுக்திகள், திட்டங்கள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அங்குஷ் கவனித்துக் கொள்கிறார்.
2007-ம் ஆண்டில், 12.5 ஏக்கர் நிலத்தில், வெங்கடேஷ் லேக் விஸ்டா என்ற கனவுத் திட்டத்தை அங்குஷ் தொடங்கினார். 40 கோடி ரூபாய் முதலீட்டில், 26 மாதங்களில் இந்த திட்டம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த திட்டம் அம்பேகான் என்ற இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் புனே நகரில், கட்டுமான தொழில் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வெங்கடேஷ் பெயர் பெற்றது.
“நுணுக்கமான திட்டமிடல் வலுவாக இருந்தது, தினப்படி திட்டம்போட்டு எனது குழு பணி புரிந்தது. தின இலக்குகளைத் தீர்மானித்து முடித்தோம். இதில் எனது குழு நன்றாக செயல்பட்டது,” என்று தமது குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து அங்குஷ் விவரிக்கிறார்.
எப்போதுமே பிற கருத்துகளை வரவேற்கிறார். ஹிரன்நந்தனி, சதீஷ் மாகார் மற்றும் இதர பல கட்டுமானக் குழுக்களின் தொழில் முறைகளையும் இன்னும் அங்குஷ் ஆய்வு செய்து வருகிறார். கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு போதும் நின்று விடுவதில்லை என்பதை அவர் நம்புகிறார்.
இப்போது, புனே ஏர்போர்ட் அருகே 1200 பிளாட்கள் கொண்ட ஒரு குடியிருப்பை நவீன வசதிகளுடன், உயர் வகை சிறப்புகளுடன் வெங்கடேஷ் நிறுவனம் கட்டி வருகிறது. “என்னைப் பொறுத்தவரை, என்னுடைய ஆண்டு வருவாயை விட, எப்போதுமே நேர்மையாக இருப்பது முக்கியம்,” என்கிறார் அங்குஷ். “லேக் விஸ்டா திட்டத்தைமுடித்த பின்னர், 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தாண்டினோம். நேர்மையான முறையில் விரிவடைவதென்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.”
|
2020-ம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை மூன்று மடங்காக்க வேண்டும் என்று அங்குஷ் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.
|
2022-ம் ஆண்டுக்குள் இப்போதைய 250 கோடி ஆண்டு வருவாயை மும்மடங்காக்க வேண்டும் என்று இப்போது அங்குஷ் திட்டமிட்டுள்ளார். கட்டுமானத் தொழிலின் இதர பிரிவுகளிலும் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். குடியிருப்புத் திட்டங்களைக் தொடர்ந்து, அலுவலகங்கள், கட்டுமானங்கள் மற்றும் வசதியானவர்களின் வாழ்க்கைக்கான வீடுகள் கட்டவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்.
கட்டுமானத் தொழிலுக்கு இடையே, புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும், 500 உறுப்பினர்களைக் கொண்ட மராத்தா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும் அங்குஷ் இப்போது இருக்கிறார். இந்த சங்கம், இளைஞர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கிறது. புனேவைச் சேர்ந்த 90 பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க அவர்கள் உதவினர். இப்போது அந்தப் பெண்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
“வெற்றிபெற வேண்டும் என்ற வலுவான தீர்மானம் இருக்கும் வரை ஒரு தொழிலதிபருக்கு எப்போதுமே வளர்ச்சிதான். தோல்வி ஏற்பட்டாலும் கூட புதிய விஷயங்களை எப்போதுமே நான் முயற்சி செய்து பார்ப்பேன். எப்போதுமே கற்றுக் கொண்டும், முயற்சி செய்து கொண்டும் இருக்கிறேன்,” என்று முடிக்கிறார் அங்குஷ்.
அதிகம் படித்தவை
-
ஐஸ்க்ரீம் மனிதர்
கர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை
-
தன்னம்பிக்கையே கண்களாக...
மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
-
உணவு கொடுத்த கோடிகள்
நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தேநீர் கடை தந்த வெற்றி!
மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.
-
சம்பளத்தைவிட சாதனை பெரிது!
ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கண்ணாடியால் ஜொலிப்பவர்!
ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம். அவர் 12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.