Milky Mist

Tuesday, 22 October 2024

கார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்!

22-Oct-2024 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 17 Aug 2017

அபய் ஹஞ்சூரா, விவேக் குப்தா இருவரும் நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள். அதுவல்ல இங்கு முக்கியம். அவர்கள் வழக்கத்தை மீறியிருக்கிறார்கள் அதன் மூலம் ஜொலிக்கிறார்கள் என்பதே.

அதிக சம்பளத்தில் கார்ப்பரேட் பணியில் இருந்தவர்கள் அதை உதறிவிட்டு லிசியஸ் என்ற இறைச்சி பிராண்டைத் தொடங்கினார்கள். 3 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகத்தில் இருந்து இரண்டே ஆண்டுகளில் 15 கோடிகள் என வளர்ந்தார்கள். 2017-18-ல் இது மேலும் இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meat1.JPG

விவேக் குப்தா(இடது), அபய் ஹஞ்சூரா இருவரும் 2015-ல் லிசியஸைத் தொடங்கினர். தரமான, பாதுகாப்பான, தூய்மையான இறைச்சிக்கு சந்தையில் தேவை இருக்கிறது என்று உணர்ந்ததே இதன் காரணம்  (படங்கள்: சிறப்பு ஏற்பாடு)


ஜம்முவைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட்டான  அபய், 31, பெங்களூருவுக்கு கல்லூரிப் படிப்புக்காக 2004-ல் வந்தார். பயோடெக்னாலஜி படிப்பு. அப்படியே தொழில் நிர்வாகமும் பயின்றார். இன்சூரன்ஸ் மற்றும் நிதித் துறையில் நல்லவேலைக்கு அமர்ந்தார்

விவேக், 36, சண்டிகாரில் பிறந்து வளர்ந்தவர். பட்டயக் கணக்காளர் படிப்பை முடித்து 2004-ல் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய வந்தார். அங்கிருந்து வெஞ்சர் கேபிடல் நிறுவனமான ஹீலியோன் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு மாறினார்.

இருவருமே நடுத்தர வர்க்கம் இருவரின் தந்தைகளும் அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். நம் சமூகத்தில் சில வேலைகள் இந்த பின்னணி கொண்டவர்களுக்கு ஏற்றதாகக் கருதப்படாது. என்னதான் அதில் வெற்றி பெற்றாலும்கூட. அதில் இறைச்சித் தொழிலும் ஒன்று.

ஆகவே இறைச்சி தொழிலைத் தெரிவு செய்தது எப்படி?

“இறைச்சியை நாங்கள் தரம் குறைந்த தொழிலாகக் கருதவில்லை. தரமான பாதுகாப்பான, தூய்மையான கறியை, அதைச் சாப்பிட விரும்புவர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் அபய்.

டிலைட்புல்  கோர்மெட் பிரைவேட் லிமிடட் என்கிற அவர்களின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லிசியஸ், ஜூலை 2015-ல் பெங்களூருவில் தன் பயணத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபரில் 1300 ஆர்டர்கள் கிடைத்தன. இன்று அது தினமும் 2000 ஆர்டர்கள் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meatduo.jpg

விவேக்கும் அபயும் பெருநிறுவனப் பணிகளில் இருந்தாலும் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினர்


அபய் இறைச்சிப் பிரியர். இது அவரது யோசனை. “நான் 2010-ல் சென்னையில் ப்யூச்சரிஸ்டிக் இன்சூரன்ஸ் ப்ரோக்கிங்கில் பணி புரிந்தேன். ஹீலியன் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்  அப்படித்தான் அதில் பணிபுரிந்த விவேக்கை சந்தித்தேன்,” என்கிறார் அவர்.

“உணவின்போது சந்தித்துப் பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். என்னைப் போல் விவேக்கும் வேலையைத் தொடர ஆர்வம் இல்லாமல் இருப்பதை அறிந்தேன். இருவருமே எதாவது புதிதாகச் செய்யவிரும்பினோம். இறைச்சித் தொழில் செய்வோம் என்ற என் யோசனையை விவேக் ஏற்றுக்கொண்டார்,” என்கிறார் அபய்.

2015-ன் ஆரம்பத்தில் அபய் சொன்னபோது விவேக் இறைச்சி பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

“இறைச்சியின் தரத்தை எப்படி அறிவது என்பதைக் கூட அபயிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் விவேக். இருவரின் குடும்பத்தாருக்கும் நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க முற்படுவது பிடிக்கவில்லை.

விவேக்குக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். “எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இந்த பயமே கடுமையாக உழைத்து வெற்றி பெறத் தூண்டியது.

”என் பெற்றோர் இறைச்சித் தொழில் என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். காஷ்மீரி பண்டிட்டுகள் பொதுவாக தொழில் செய்வது இல்லை. நானும் நல்லவேலையில் இருந்தேன். என் முடிவு அதனால் அதிர்ச்சி அளித்தது. ஆனால் மக்கள் தரமான இறைச்சியை விரும்புகிறார்கள் என்று என்னால் பார்க்க முடிந்தது.” என்கிறார் அபய்.

ஆரம்பிக்க முடிவு செய்தாலும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. “ஆரம்பத்தில் இதில் உள்ள பிரச்னைகளை அறிய முற்பட்டோம். இறைச்சியின் தரமா, சேமிப்பா, விநியோகமா எங்கு பிரச்னை உள்ளது என்று பார்த்தோம். சில நிறுவனங்கள் ஆன்லைனில் இறைச்சி விற்றபோது அவற்றின் தரம் குறைவாக இருந்தது. இறைச்சி உறைந்திருக்கும், தூய்மையாக இருக்காது,” என்கிறார் விவேக்.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meatvivekmeat.JPG

இறைச்சியின் தரம்பற்றி விவேக், அபயிடம் கேட்டுக் கற்றுக்கொண்டார் (படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்)


“எங்கள் அமெரிக்க நண்பர் ஒருவர் எப்போது இந்தியா வந்தாலும் சைவத்துக்கு மாறிவிடுவதாகக் கூறினார். எங்கள் ஆய்வின்போது இந்த பிரச்னைக்குத் தீர்வு இறைச்சியின் தரத்தை மேம்படுத்துவதுதான் என்று கண்டறிந்தோம்.”

தரமான கறி என்பது என்ன? கோழி ஆரோக்கியமாக  உள்ளதா? அதன் எடை எவ்வளவு இருக்கவேண்டும் போன்ற அடிப்படையான விஷயங்களை புரிந்துகொண்டனர்.

”கோழி ஆண்டிபயாட்டிக் அற்றதாக இருக்கவேண்டும் என்று அறிந்தோம். ஆனால் அது கிடைக்க வழி இல்லை என்ற நிலவரம் இருந்தது.”

இதையெல்லாம் தெரிந்துகொண்டபின், தரமான இறைச்சியை ஆன்லைன் மூலம் அளிக்க தயார் ஆனார்கள். லிசியஸ் பிறந்தது.

”நீண்டகால நோக்கில் முத்திரை பதிக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். லிசியஸ் எங்களைத் தாண்டியும் தொடரவேண்டும் என விரும்புகிறோம்,” என்கிறார் விவேக்.

பெங்களூருவில் ஒயிட்பீல்ட் பகுதியில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட லிசியஸ் குழுவினர் தங்கள் முதல் விற்பனையைச் செய்தனர். இச்சமயம் ஐந்து லட்சம் டாலர்கள் நிதியும் திரட்டினர். ஹீலியான் நிறுவனர் கன்வல்ஜித் சிங், இன்ஃபோசிஸின் முன்னாள் சிஎப்ஓ மோகன் தாஸ் பாய், அமேடியஸ் கேபிடல் நிறுவனர் கௌசல் அகர்வால் ஆகியோர் முதலீடு செய்தனர்.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meatvivekbox.JPG

இறைச்சியின் தரம், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் லிசியஸ் கவனம் செலுத்துகிறது.


குடியிருப்புப் பகுதிகளில் இறைச்சி சுவைக்கும் நிகழ்ச்சிகளில் நண்பர்கள் குடும்பங்களைக் கலந்துகொள்ளச் சொல்லி சந்தைப் படுத்தும் உத்திகளைச் செய்தனர். வாய்வார்த்தை மூலமாகவே 70-75 சதவீத வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர்

 இதில் என்னென்ன சவால்கள்?

“ஒவ்வொரு கறிக்கும் ஒவ்வொரு பிரச்னை. கோழிக்கறி ஓரளவுக்கு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செம்மறி ஆட்டுக்கறி விஷயத்தில் அப்படி இல்லை,” அவர் விளக்குகிறார்.

“பெங்களூருவைச் சுற்றி கிராமம் கிராமமாகச் சென்று செம்மறி ஆட்டுக்கறியின் தரம் பற்றி அறிந்தோம். பண்ணையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டோம். பொதுவாக செம்மறி ஆட்டுக்கறிக்கும் வெள்ளாட்டுக்கறிக்கும் மக்களுக்கு வித்தியாசம் புரியவில்லை, எல்லாமே மட்டன் தான் அவர்களுக்கு!”

டிசம்பர் 2015-ல் மேபீல்டு அட்வைசர்ஸிடம் இருந்து வந்த 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு  லிசியசுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. இரு நிறுவனர்களும் ஆளுக்கு 50 லட்ச ரூபாய் முதலீடு செய்தனர். இதுவரை லிசியஸ் 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு பெற்றுள்ளது.

மாதாமாதம் வளர்ச்சி. முதல் ஆண்டில் 3 கோடிக்கு விற்பனை நடந்தது. இப்போது மாதம் 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

2016-17ல் 15 கோடி வர்த்தகம் செய்த இந்நிறுவனம், 2017-18ன் இறுதியில் மாதத்துக்கு ஒரு லட்சம் ஆர்டர்கள் பெறும் என்றும் 6-7 கோடிகள் வரை மாத விற்பனை ஆகும் என்றும் நம்புகிறார்கள்.

இந்நிறுவனம் சமீபத்தில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பல நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த முதலீட்டைக் கொண்டு டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற இடங்களுக்கு அடுத்த ஆண்டு விரிவாக்கம் செய்ய இருக்கிறார்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meatvivekl.JPG

ஹென்னூரில் உள்ள நிலையத்தில் தினமும் 10 டன்கள் இறைச்சியை பதப்படுத்த முடியும்

                                           
இன்று லிசியஸ் இறைச்சியையும் கடல் உணவையும் சுமார் 50 விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குகிறது. இவற்றின் தரத்தையும் சுவையையும் பராமரிக்க சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

லிசியஸ் தயாரிப்புகள் அனைத்தும் பெங்களூரு ஹென்னூரில் உள்ள 20,000 ச.அடி பதப்படுத்தும் நிலையத்தில் பதப்படுத்தப்படுகின்றன. இங்கே தினமும் 10 டன்கள்வரை இறைச்சியையக் கையாளமுடியும். நகரம் முழுக்க 11 விநியோக மையங்கள் குளிர்சேமிப்பு வசதியுடன் உள்ளன.

குளிரூட்டப்பட்ட வேன்களில் ஹென்னூர் ஆலையிலிருந்து இறைச்சிகள் இருமுறை விநியோகமையங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. வீடுகளுக்குக் கொண்டு அளிக்கப்படும் இறைச்சி கூட வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சிறப்புப் பைகளில் அடைத்துச் செல்கின்றன.

லிசியஸ் நேரடியாக பண்ணைகளில் இருந்து வீடுகளுக்கு இறைச்சி அளிக்கும் முழு பயணப்பாதையையும் தனக்கே உரியதாக மாற்ற முயற்சி செய்கிறது. “இங்கும் நாங்கள் நேரடியாக பண்ணையாளர்களுடன் பணிபுரிகிறோம். செம்மறி ஆட்டின் எந்த இனத்தை தேர்வு செய்வது என்பதும்கூட எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.” என்கிறார் விவேக்.

பெங்களூருவில் மட்டும் கவனம் செலுத்தி தொழிலை வளர்த்துள்ளனர். 2017 பிப்ரவரியில் அவர்கள் ஹைதராபாத்தில் நுழைந்தனர். அங்கே மூன்று விநியோக மையங்கள் உள்ளன. தினமும் காலை விமானம் மூலம் இறைச்சி அனுப்பி வைக்கப்படுகிறது.

https://www.theweekendleader.com/admin/upload/01-08-17-04meatvivekworkers.JPG

லிசியஸில் 330 பேர் வேலை செய்கிறார்கள்


“விரைவில் ஹைதராபாத்திலேயே இறைச்சி பதப்படுத்தும் நிலையம் அமைத்து அங்கேயே பதப்படுத்தப்போகிறோம். 8 முதல் 10 டன்கள் வரை அங்கே பதப்படுத்தப்போகிறோம்,” என்கிறார் விவேக்.

5 பேருடன் ஆரம்பித்த லிசியஸில் இன்று 330 பேர் உள்ளனர். ஹைதராபாத்தில் 25 பேர் உட்பட. மசாலா தடவப்பட்ட இறைச்சி, ஊறுகாய்கள், சூப் போன்ற பொருட்களும் உண்டு.

மேலும் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத  பைகளைப் பயன்படுத்தவும் திட்டமிடுகிறார்கள். இவர்களது ஆர்டர்களில் 80% பழைய வாடிக்கையாளர்களிடமிருந்தே வருகிறது. ஒருமுறை வாங்கியவர்கள் மறுமுறை வாங்கத் தவறுவது இல்லை. அவர்கள் 15 கோடிகள் இலக்கை அடுத்த ஆண்டு தாண்டுவார்கள் என்பதில் ஆச்சரியமே இல்லை.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Parveen Travels is moving on after crossing Rs 400 crore turnover

    வளர்ச்சியின் சக்கரங்கள்!

    ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்

  • Four Friends joined hands to build a Rs 100 Crore Turnover Dairy business

    பணம் கறக்கும் தொழில்!

    நல்ல சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் கனவு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் திடீரென வேலையை விட்டு சொந்தமாகத் தொழில்தொடங்கினர். அது ஒரு மாட்டுப்பண்ணை. இன்று 100 கோடி வருவாய் தரும் பிராண்ட். ஜி சிங் எழுதும் கட்டுரை

  • Man who worked in salon owns Rs 11 crore turnover company

    அழகான வெற்றி

    கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை

  • An Auditor shows the way in Education

    கல்வி எனும் கைவிளக்கு

    ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தாலும் திறம்பட கல்வி கற்று, ஆடிட்டர் ஆனவர் பிஜய் குமார். இன்று ஆடிட்டர் பணியைத் துறந்து, வருங்கால சந்ததியினர் முழுமையான கல்வியை கற்கும் வகையில் சாய் சர்வதேச பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Success of a NIFT student

    அசத்துகிறார் ஆன்சல்!

    மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • Container Man

    கண்டெய்னரில் கண்ட வெற்றி!

    இரண்டு முறை தொழில் தொடங்கி தோல்வியடைந்தார் இக்பால் தங்கல்.  இருப்பினும் முயற்சியில் தளராமல் மூன்றாவது முறையாக கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் கட்டமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை