வெறும் முப்பதாயிரம் ரூபாயுடன் தொடங்கி உச்சம் தொட்ட இளைஞர்! பிரம்மாண்ட நிகழ்வுகளின் பிரம்மா!
02-Apr-2025
By சோபியா டேனிஷ்கான்
மும்பை
கல்லூரியில் படிக்கும்போது விக்ரம் மேத்தா குண்டாக இருப்பார். அவரைக் கிண்டல் செய்வார்கள். எனவே உடல் எடையை தீவிரமாக முயற்சி செய்து குறைத்து அந்த சவாலை எதிர்கொண்டார். இதே தீவிரத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளை மேலாண்மை செய்யும் நிறுவனத்தை எம்பயர் ஈவன்ட்ஸ் என்ற பெயரில் தொடங்கி தமது புத்திக்கூர்மையையும் நிரூபித்தார். அவர் கையில் இருந்தது ஒரு பழைய மடிகணினி, ரூ.30,000 பணம் மட்டும்தான். அவர் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை.
முதல்
ஆண்டில் ரூ.10 லட்சம் வருவாயில் தொடங்கி இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் வரை என அவரது நிறுவனம் விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளது. வெறுமனே ஆண்டு வருவாய் என்ற அளவில்
மட்டுமின்றி அவர்கள் நடத்தும் நிகழ்வுகளின் அளவும் ஆடம்பரமும்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
எம்பயர் ஈவன்ட்ஸ் நிறுவனர் விக்ரம் மேத்தா(புகைப்படங்கள்:சிறப்பு ஏற்பாடு |
“நாங்கள் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், துபாய், கோவா, ஜெயப்பூர், மிசோரி, பெங்களூரு, கேரளா மற்றும் சென்னையிலும் திருமணங்களை நடத்தினோம்,” என்கிறார் விக்ரம். 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓர்லேண்டோவில் உள்ள டிஸ்னிலேண்ட்டில் அவர் ஒருங்கிணைத்த திருமணம் இதில் உச்சமாகும். “ஹோட்டல்கள் ஒப்பந்தம் செய்வதற்காக இரண்டு முறை அங்கு பயணம் மேற்கொண்டேன். பல்வேறு விழாக்களுக்கு பல்வேறு இடங்களை முடிவு செய்தோம். விழாவுக்குப் பிந்தைய விருந்துக்கு சின்ட்ரல்லா கேசிலை பதிவு செய்தோம்,” என்றார் அவர். இந்த தொழில் சித்தாசால் என்டர்பிரைஸைஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் அலுவலகம் பாந்த்ராவில் உள்ளது. ஆண்டுக்கு 17-18 சுற்றுலா தலங்களில் திருமணங்களை திட்டமிட்டு நடத்தித்தருகிறார்கள். ஒரு திருமணத்துக்கான சராசரி செலவு ரூ.4 கோடி. ஐந்து முழு நேர ஊழியர்கள் தவிர விழாக்காலங்களுக்கு ஏற்ப 17-18 ஊழியர்களை நியமிக்கின்றனர். எங்கு திருமணம் நடைபெறுகிறதோ அந்த இடத்தில் ஃபிரீலேன்சர்களையும் நியமிக்கின்றனர். மும்பையில் பிறந்து வளர்ந்த விக்ரம்(37), 2003-ஆம் ஆண்டு ஆண்ட்ரூஸ் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார். பின்னர் மித்திபாய் கல்லூரியில் பி.காம் படித்தார். அங்கு பிரபல நட்சத்திரங்களின் குழந்தைகளான கரீனா கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் அவருக்கு சீனியர்களாக இருந்தனர். “பள்ளியில் நான் மிகவும் வித்தியாசமான நபராக இருந்தேன். வகுப்பில் உள்ள அனைத்து பையன்களை விடவும் நான் குண்டாக இருந்தேன். சிறந்த தொடர்பு கொள்ளும் திறனால் நான் அறியப்பட்டேன்,” என்று தமது குழந்தைப் பருவ வாழ்க்கையை நினைவு கூர்கிறார் விக்ரம்.
![]() |
அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட்டில் நடந்த ஒரு பிரமாண்டமான திருமணம் |
பள்ளியில் அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். ஆனால், கல்லூரியில் சூழல் வேறு. தோற்றத்தைப் பொறுத்து நண்பர்கள் அமைந்தார்கள். விக்ரம் குண்டாக இருந்ததால் அவர் ஒதுக்கப்பட்டார். எனவே விக்ரம் தீவிரமாக முயற்சி செய்து தன் உடல் எடையைக் குறைத்த பின்னரே அவருக்கு நல்ல நண்பர்கள் குழாம் அமைந்தது. ஆனாலும்கல்லூரியில் அவருக்கு அதிக நண்பர்கள் இல்லை. தமது பள்ளி நண்பர்களுடன் அவர் தொடர்ந்து தொடர்ப கொண்டிருந்தார். பி.காம் முடித்த பின்னர், எம்.காம் படிப்பில் அவர் சேர்ந்தார். அதே சமயம் பகுதி நேர நிகழ்வுகளில் பணியாற்றத் தொடங்கினார். “துண்டறிக்கைகளை கொடுக்கும் என்னுடைய முதல் வேலைக்கு 700 ரூபாய் கிடைத்தது. அதன் பின்னர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வந்தன. அதில் திரை நட்சத்திரம் சோனம் கபூர் கலந்துகொண்ட ஓர் நிகழ்வுக்கான டிக்கெட்களை விற்பனை செய்தேன். நான்தான் அதிக அளவு டிக்கெட்களை விற்பனை செய்தேன்,” என நிகழ்வு மேலாண்மை களத்தில் தமது ஆரம்ப நாட்கள் குறித்து விக்ரம் பகிர்ந்து கொண்டார். அந்த விழாவை நடத்தியவர்கள் விக்ரமின் செயல்பாடுகளை அறிந்து அவரை தங்களது நிறுவனத்தில் பங்குதாரராக சேரும்படி அழைத்தனர். ஆனால், அவர்களின் அழைப்பு அவரை ஈர்க்கும் வகையில் இல்லை. அதற்கு பதில் அவரே சொந்தமாக ரெட்ஓஎம் எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை தமது 23-வது வயதில் தொடங்கினார். விக்ரம் உடன் சாப்னா லாலா என்பவர் பங்குதாரராக இணைந்தார். இருவரும் சர்வதேச டிஜே-க்களுடன் இணைந்து பார் கிளப்களில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். 2009-ஆம் ஆண்டில் ரெட் ஓஎம் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ஒரு கோடி ரூபாயைத் தொட்டது. ஷாருக் கானின் டான் திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியை இவர்கள்தான் ஒருங்கிணைத்தனர். தவிர ஹிர்த்திக் ரோஷன், சஞ்சய் தத் ஆகியோரின் நிகழ்வுகளையும் அவர்கள் நடத்தினர். விருது வழங்கும் விழாக்களையும் அவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால், 2013-ல் நிகழ்வுகளின் போக்கு மாறத்தொடங்கியது.
![]() |
விக்ரம் தமது எம்பயர் நிகழ்வுக் குழுவுடன் |
“டிஜே கலாசாரத்திலான பழைய பாணி மேலும் நீடிக்கவில்லை. நான் நன்றாக சம்பாதித்த போதிலும் சாதாரண நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். எனவே ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்று பகிர்கிறார் விக்ரம். ரெட்ஓஎம் நிறுவனத்தில் இருந்து அவர் விலகினார்.(இதர பங்குதாரர்களால் இன்னும் அந்த நிறுவனம் நடத்தப்படுகிறது). பெர்செப்ட் என்ற, கோவாவில் சன்பர்ன் திருவிழாவை நடத்தும் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் சிஇஓ-வாகச் சேர்ந்தார். மகாராஷ்டிராவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தில் மூத்த அதிகாரியாக இருந்த அவரது தந்தை இந்த சூழலில்,பிறருக்காக பணியாற்றுவதை விடவும் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கலாமே என்று ஆலோசனை கூறினார். அந்த தருணத்தில், பாங்காக் நகரில் நடந்த நண்பரின் சகோதரி ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க விக்ரம் சென்றார். டிஜே மற்றும் அலங்காரம் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கு சரியான கலைஞர்களைத் தேர்வு செய்வதற்கு அவர் உதவினார். அந்தத் திருமணத்தில் பல பணக்கார குடும்பத்தினர் பங்கேற்றனர். வெறும் இரண்டு பேரை மட்டும் உதவிக்கு வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த நிகழ்வையும் அவர் வெற்றிகரமாக நடத்தினார். விரைவிலேயே, மேலும் பலவாய்ப்புகள் அவரது கதவைத் தட்டின. “வெறும் இரண்டு பேர் கொண்ட குழுவை மட்டும் கொண்டு நாங்கள் உதய்பூர் சென்றோம். அங்கு புகழ்பெற்ற ஜக்மந்திர் அரண்மனையில் விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அந்த வாய்ப்பு அலிபாக்கில் நடந்த இன்னொரு திருமணத்துக்கு இட்டுச் சென்றது,” என்றார் விக்ரம். பின்னர் இறுதியில் எம்பயர் ஈவன்ட்ஸ் நிறுவனத்தை 2014-ஆம் ஆண்டு தொடங்கினார். தொழில் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒவ்வொரு நிகழ்வும் பெரும் அளவிலான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை கொண்டிருந்தது. “ஒரு திருமணத்தில் பல்வேறு விஷயங்கள் தவறாக போகக் கூடும். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் இன்னொரு திட்டமிடலை தயாராக வைத்திருப்பதை உறுதி செய்தோம். அதனால் எல்லாமே சரியாகச் சென்றது. ஆனால், அரங்கத்தை விட்டு வெளியிடங்களில் நடக்கும் திருமணங்களில் பெரும் இடையூறாக இருப்பது வானிலைதான்,” என்று பகிர்கிறார் விக்ரம். இலங்கையில் தாம் ஒருங்கிணைத்த ஒரு திருமணம் குறித்து அவர் நினைவு கூர்கிறார். திருமணம் நடைபெற இருந்த இடத்தில் திடீரென ஒரு ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. அது எங்களுக்கு ஒரு எதிர்பாராத தருணமாக இருந்தது. திருமண கேக், சாம்பய்ன் கிளாஸ்கள் என எல்லாமே காற்றில் பறந்தன. “அது பயங்கரமாக இருந்தது. ஆனால், ஹோட்டலுக்குள் இருந்த பால்ரூம்-க்கு சென்றோம். அங்கே எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொரு கேக் தயாராக வைத்திருந்தோம். மேலும் வெளியே அமைக்கப்பட்டிருந்த திருமண மாடம் போன்ற ஒரு மாதிரி மாடத்தையும் உள்ளே ஏற்கனவே அமைத்திருந்தோம். பின்னர் புதுமணத்தம்பதிக்காக அந்த மாடத்தை தயார் செய்தோம்,” என்று விக்ரம் நினைவு கூர்ந்தார். உதயப்பூரில் நடந்த ஒரு திருமணத்தில், படகில் பெற்றோரை அருகில் காணாமல் தவித்த ஒரு குழந்தையை பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்து வந்தனர். ஒரு திருமண நிகழ்வின்போது கோவாவில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது 50 ஓட்டுநர்களிடம் விக்ரம் இனிமையாகப் பேசி, விருந்தினர்களை அழைத்துவருவதை உறுதி செய்தார்.
புதுமண தம்பதி தமது திருமண நாளில் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதே விக்ரமின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது |
“குடிப்பழக்கம் உள்ள உறவினர்கள், உடல் நல பிரச்னைகள் உடைய சில விருந்தினர்கள் என்பது போன்ற விஷயங்கள் திருமணங்களில் நடக்கும். எனவே பல்வேறு சவால்களும் இருக்கும். திருமண நிகழ்வில் தொடர்புடைய உடனடி உறவினர்களால் பெரும் சவால்கள் ஏற்படும். ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களை விரும்புவார்கள். ஆனால், புதுமணத் தம்பதி மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதில்தான் நான் கவனம் செலுத்துவேன். எல்லாவற்றையும் விட இது அவர்களுக்கு ஒரு பெரிய தினம்,” என்று விக்ரம் சொல்கிறார். அவர் மேலும் கூறுகையில், “திருமணநிகழ்வுகளில் மணப்பெண் அழைப்பு என்பது மிகவும் நெஞ்சுருகச்செய்யும் நிகழ்வாகும். எனவே ஒவ்வொரு திருமணத்திலும் அது தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வேன்.” விக்ரமின் நிறுவனம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே சிறந்த திருமண திட்டமிடல் நிறுவனங்கள் வரிசையில், எம்பயர் நிறுவனத்துக்கு எல்லே(ELLE) இதழ் இரண்டாவது இடம் அளித்திருக்கிறது.
அதிகம் படித்தவை
-
அம்பிகாவின் நம்பிக்கை!
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
இரவுக் கடை
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.
-
தலைக்கவச மனிதர்!
நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்
-
சேலையில் வீடு கட்டுபவர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில் வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
வறுமையில் இருந்து செழிப்புக்கு
இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்
-
ஆராய்ச்சி தந்த வெற்றி
அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.