Milky Mist

Thursday, 29 February 2024

ஆர்கானிக் பண்ணையில் அசத்தும் அர்ச்சனா! மூன்றே ஆண்டில் ஒரு கோடியைத் தாண்டிச் செல்லும் வருவாய்! ஜீன்ஸ் விவசாயிகளின் வர்த்தக சாதனை!

29-Feb-2024 By உஷா பிரசாத்
சென்னை

Posted 23 Jun 2021

அர்ச்சனா பிறவியிலேயே ஒரு போராளி. யாராக இருந்தாலும் தன் இளம் வயதில் அதாவது 22 ஆம் வயதில் தொடங்கிய முதல் நிறுவனம் தோல்வியடைந்த நிலையில் தொழில் முனைவு என்ற கனவை கைவிட்டு விட்டுவார்கள். ஆனால், அர்ச்சனா அப்படி செய்யவில்லை. ஓர் எம்பிஏ படிப்பின் செய்முறை பயிற்சி அனுபவமாகவே அதைக் கருதினார். படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார். இரண்டாவது நிறுவனம் தொடங்குவதற்காக தன்னை தக்கவைத்துக் கொண்டார். 

இரண்டாவதாக, ஆறு ஆண்டுகள் கழித்து, அவர் மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சென்னையை  சேர்ந்த 800 பேருக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, இந்த நிறுவனம்  இயற்கை விளை பொருட்களை விநியோகம் செய்வதற்காக தொடங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் தமது கணவர் ஸ்டாலின் காளிதாஸ் உடன் சேர்ந்து மைஹார்வெஸ்ட் பண்ணையைத் தொடங்கினார்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

இந்த முறை அவர் தனது வெற்றிக்கான சூத்திரத்தை கண்டறிந்து விட்டார். மாடித்தோட்டத்தில் சிறிய அளவில் தோட்டத்தைத் தொடங்கி அனுபவம் பெற்று, பிறகு அவரும் அவரது கணவரும் 2018ஆம் ஆண்டு சென்னையி்ல் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தில்  இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். பின்னர் அந்தப் பண்ணைக்கு வேம்பு பண்ணை என்று பெயரிட்டனர்.

இயற்கை விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒன்றிணையும் சமூகக் குழுவாக அது மாறியது. முதல் ஆண்டில் (2018-19)அவர்கள் நிறுவனம் ரூ.8 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டியது. இரண்டாம் ஆண்டில் ரூ.44 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டியது. கடந்த ஆண்டு ரூ.1 கோடியாக அதிகரித்தது.

  “அடுத்த மூன்று ஆண்டுகளில், நாங்கள் 10,000 குடும்பத்தினர்களுடன் உயர்வோம்.  500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் பணியாற்றுவோம்,” என்கிறார் அர்ச்சனா   22ஆம் வயதில் முதல் தொழில்முனைவு பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, அவரது வாழ்க்கையில் முக்கியமான ஒரு முடிவை அவர் எடுத்திருந்தார்.  

அர்ச்சனா சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற உடன், அப்போது 21 வயதே ஆன நிலையில் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி  தன்னுடன் படித்தத வகுப்புத் தோழர் ஸ்டாலின் காளிதாஸை திருமணம் செய்து கொண்டார்.   “ என்னுடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது,” என்கிறார் அர்ச்சனா.

“என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், குடும்பத்துக்குள்ளேயே நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்திருந்தனர். அந்த சங்கிலியை உடைத்து, குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டேன்.”
தன்னுடைய பண்ணையில் அரச்சனா உற்பத்தியில் ஈடுபடுகிறார்


மூன்று ஆண்டுகள் கழித்து 2012ஆம் ஆண்டு ஜனவரியில் தம்பதி இருவரும், ஜியோவெர்ஜ் என்ற நிறுவனத்தை  தென் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டாலினின் சொந்த ஊரான விருதுநகரில் தொடங்கினர். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக ரூ10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அவர்களது சேமிப்பு தொகை குறைந்ததால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பின்களிடம் கடன் வாங்கினர்.

“அனைத்து முயற்சிகளும் வீணானதால் இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டோம்,” என்று பகிர்ந்து கொண்டார் அர்ச்சனா.

  “அது வரையிலான செயல்பாடுகளை பின்னோக்கி பார்த்த போது, மேலும் ஆய்வு செய்த பின்னர் மற்றும் சந்தைகள் குறித்து ஆராய்ச்சி செய்தபின்னர் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், என்று கருதினேன். அது ஒரு பெரிய படிப்பினை. அந்த யோசனைகள் தோல்வியடைந்தன என்றபோதிலும், முயற்சிகள் வீணாகவில்லை.”  

அடுத்த சில ஆண்டுகள், அர்ச்சனா பல இடங்களில் பணியாற்றினார். மதுரையில் உள்ள நேட்டிவ் லீட் ஃபவுண்டேஷனில் சேர்ந்தார். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு இரண்டாம் நிலை, மூன்று நிலை நகரங்களில் தொழிவு முனைவு பயணத்தை முன்னெடுத்தது. அந்த நிறுவனத்தின் திட்டங்களின் தலைவராக பணியாற்றினார்.  

அதே ஆண்டு அர்ச்சனா ஜக்ரிதி யாத்திரை சென்றார். இதில் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் ஒரே ரயிலில் 15 நாட்கள் பயணம் செய்து,  முன்னுதாரணமாக திகழும் 15 பேரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 12 இடங்களில் சந்தித்து உரையாடினர்.   “நான் மக்களை சந்தித்தேன், இந்த யாத்திரையின்போது நிறையப் படித்தேன். என்னுடைய சிந்தனையில் இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு சமூக நிறுவனத்தை கட்டமைக்க வேண்டும் என்று அப்போது நான் விரும்பினேன்,” என்றார் அவர்.  

2015ஆம் ஆண்டு நேட்டிவ் லீட் நிறுவனத்தில் இருந்து விலகிய அர்ச்சனா, சந்தை உத்தியாளர் என்ற தலைமைப் பொறுப்பில் சென்னையில் உள்ள நேச்சுரல்ஸ் சலூனில் 2015ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கணவர் ஸ்டாலின் சொந்த ஊரான விருதுநகரில், தன் வீட்டின் புறவாசலில் தோட்டம் அமைக்க ஆரம்பித்தார்.

  ஒன்றரை ஆண்டில், அதாவது 2016ஆம் ஆண்டு அர்ச்சனா, நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார். இயற்கை சாகுபடி என்ற ஆர்வத்தைப் பின் தொடர்ந்தார். இயற்கை விவசாயிகளையும் மற்றும் மொட்டை மாடி தோட்டம் குறித்த வல்லுநர்களையும் சந்தித்து உரையாடினார். இது குறித்த கள அறிவை விரிவாக்கிக் கொண்டார்.
துணை நிறுவனரும், கணவருமான ஸ்டாலினுடன் அர்ச்சனா


அர்ச்சனா, ஸ்டாலின் இருவரும் மைஹார்வெஸ்ட் நிறுவனத்தை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கினர். தொடக்கத்தில், நகரங்களில் உள்ள வீடுகளில் பால்கனி, மொட்டை மாடிகளில் உள்ள இடங்களில் காய்கறிகள், கீரைகளை சொந்தமாக வளர்க்க மக்களுக்கு உதவினர்.   மைஹார்வெஸ்ட் நிறுவனம், பள்ளிகளிலும் பணியாற்றுகின்றது. பள்ளிகளில் தோட்டங்களை உருவாக்குவதற்காக செய்முறை பயிற்சியை அளிக்கின்றனர். விதைகள், மண், தொட்டிகள் ஆகியவற்றை கிஃப்ட் பாக்ஸ்களாக விற்பனை செய்தனர்.

  “மொட்டை மாடித்தோட்டம் நல்லது. ஆனால், அதில் சில குறைகள் இருப்பதை உணர்ந்தோம். பெரிய பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொண்டால்தான் ரசாயனக் கலப்பு இல்லாத, ஆரோக்கியமான, இயற்கை உணவுகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்றார் அர்ச்சனா.  

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.25,000 என்ற ஆண்டு குத்தகையில் இரண்டு ஏக்கர் நிலத்தை இந்த தம்பதியினர் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினர்.   முதல் ஆண்டில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை சென்னையில் உள்ள ஐந்து இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு விற்கத் தொடங்கினர்.

  “அந்த ஒரு ஆண்டில், பல விஷயங்களை எங்களுக்குள் உணர்ந்தோம். ஒரு விவசாயியாக, விளை பொருட்களை விளைவிப்பது முதல், விற்பனை செய்வது, சேமித்து வைப்பது என ஒவ்வொன்றும் சவாலானதாக இருந்து,” என்று அவர் விவரித்தார்.

  ஆறுமாத கால விவாதம், உத்தி ஆலோசனைகளுக்குப் பின்னர் விவசாயிகள், நுகர்வோர்களை தொடர்பு படுத்தி, ஒரு சமூக பண்ணையை கட்டமைக்கத் திட்டமிட்டனர்.
அர்ச்சனாவுடன், மைஹார்வெஸ்ட் ஃபார்ம் குழுவினர்

வேம்பு பண்ணையை அவர்களது முதல் செய்முறை களமாக மாற்றினர். சென்னையை சேர்ந்த 18 குடும்பத்தினரை சந்தா முறையில் இணைத்து பண்ணையைத் தொடங்கினர்.  

மாதம் ரூ.3000 வீதம் ஒவ்வொரு குடும்பத்தினரும் மூன்று மாத சந்தா தொகையைக் கொடுத்தனர். இதன்மூலம் பண்ணையை நடத்த போதுமான முதலீடு கிடைத்தது. ஆறு வாரங்கள் கழித்து பண்ணையில் இருந்து முதல் அறுவடையை அவர்கள் விநியோகித்தனர்.   ஒவ்வொரு வாரமும் சந்தாதாரர்கள், நாட்டுக் கோழி முட்டைகள், இரண்டு அல்லது மூன்று கீரை கட்டுகள், 8 முதல் 10 வகையான காய்கறிகளை கொண்ட 10 கிலோ காய்கறிகளை பெற்றனர்.  

“ இந்த 18 குடும்பங்களை சேர்ந்தோரும், பண்ணைக்கு நேரடியாக வந்து, விதைப்பில் ஈடுபட்டனர். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்றனர்,” என்றார் அர்ச்சனா. ஆரம்பகட்டத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் தானே ஒவ்வொரு வாரமும் காய்கறிகளை விநியோகித்தார்.  

“எங்களின் இயற்கை பண்ணை உற்பத்தி பற்றிய சாதகமான பின்னூட்டங்களை அளித்த தெரிந்த நபர்கள் மற்றும் தெரியாத நபர்கள் என 18 குடும்பத்தினர் இந்த திட்டத்தில் இணைந்திருந்தனர்,“ என்றார் அவர்.   பெரும்பாலான காய்கறிகளை வேம்பு பண்ணையில் உற்பத்தி செய்கின்றனர். காரட் மற்றும் இதர சில காய்கறிகளை ஊட்டியில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து பெறுகின்றனர்.

  “ஒரே ஒரு பண்ணையில் எல்லாவற்றையும் நாம் விளைவிக்க முடியாது என்ற பாடத்தை நாங்கள் தெரிந்து கொண்டோம். மாநிலத்தில் உள்ள இதர விவசாயிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தோம். முதல் நாளில் இருந்தே, முன்கூட்டியே கட்டணம் செலுத்தி இருந்த வாடிக்கையாளர்கள் கிடைத்ததில் இருந்து, படிப்படியாக மேலும் பண்ணைகளை எங்கள் திட்டத்தில் இணைத்தோம்,” என்கிறார் அர்ச்சனா.


பல்வேறு தளங்களில் இயற்கை பண்ணை முறை பற்றிய அறிவை அர்ச்சனா பகிர்ந்து கொள்கிறார்.

“எங்களுடைய விவசாயிகள் இளம் வயதினர், ஜீன்ஸ் அணிந்தவர்கள். அவர்கள் அனைவருமே 26 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் தங்கள் நிலம் வாயிலாக புத்துணர்ச்சி பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். முதல் ஆண்டில் மெதுவாகவே எடுத்துச் சென்றோம். ஒரு திடமான முறையை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.”  

கொரோனா தொற்று பரவும் வரை, 60 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை 200 குடும்பங்களுக்கு விநியோகித்து வந்தனர்.   கொரோனா பெரும் தொற்று தோன்றியது முதல், மைஹார்வெஸ்ட் பண்ணை குழுவினர் ஒரே நாள் இரவில் போராளிகளாக மாறி விட்டனர்.  

“கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு இ-வணிக நிறுவனமும் சிரமப்பட்டதை நாங்கள் பார்த்தோம்.  ஆனால் எங்களுக்கு உள்ளூர் அளவிலான உற்பத்தி இருந்ததால் எங்களால் சமாளித்து காய்கறிகளை சப்ளை செய்ய முடிந்தது,” என்கிறார் அர்ச்சனா.

  “ஒருவாரம் கூட எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கெட்டபெயர் வாங்கியதில்லை. அவர்களிடம் நற்பெயரைப் பெற்றோம். இயற்கையான முறையில் விளைவிக்கும் பொருட்களை வாங்க விரும்பிய மேலும் பல குடும்பங்கள் கிடைத்தனர். இந்த வகையில் பெருந்தொற்று காலம் எங்களுக்கும் எங்கள் குழுவுக்கும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதினோம். நாங்கள் விரைவாக வளர்ந்தோம்.”    2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், சந்தா முறையிலான  விற்பனை முறையில் இருந்து ஆர்டர் முறையில், பணம் பெற்றுக் கொண்டு விநியோகிக்கும் முறைக்கு மாறினர்.  

“ஆரம்பத்தில்  ஆர்டர் அடிப்படையிலான முறைக்கு மாறுவதில் சந்தேகத்தில் இருந்தோம். தவிர, மீண்டும் ஆர்டர் தர முன்வருவார்களா என்றும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக மக்கள் எங்கள் பின்னால் வந்தனர்,” என்று பகிர்ந்து கொள்கிறார் அர்ச்சனா. 
ஆரோக்கியமான பசுமையான கீரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை விளைபொருட்களை மைஹார்வஸ்ட் ஃபார்ம்ஸ் விநியோகிக்கிறது  

“சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ரூ.1000த்துக்கு ஆர்டர் கொடுக்கும்போது, அத்தகைய குடும்பத்தினர் காய்கறிகளைத் தாண்டி எண்ணெய், அரிசி, சிறுதானியங்கள் அடிப்படையிலான நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் கேட்கின்றனர். எனவே, இவற்றையும் நாங்கள் விநியோகிக்க ஆரம்பித்தோம்.”  

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 200ஐ தொட்டபோது, வேம்பு பண்ணையில் விவசாயிகள், வாடிக்கையாளர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திக்கும் வகையிலான ஒரு விருந்தை அர்ச்சனா ஒருங்கிணைத்தார். அதில் 89 குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பல்வேறு மைஹார்வெஸ்ட் பண்ணைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தினருடன் வர ஆரம்பித்தனர்.   நாள் முழுவதும் பண்ணையை சுற்றி வருவதில் நேரத்தை செலவிடுகின்றனர். விவசாயிகள் எப்படி தங்களது சொந்த உரத்தை தயாரிக்கின்றனர் என்பதை பார்க்கின்றனர். எவ்வாறு பண்ணை முறை செயல்படுகிறது என்பதை குழந்தைகளுக்குக் காட்டுகின்றனர். பம்ப் செட்டில் குளிக்கின்றனர். மாட்டு வண்டியில் பயணிப்பதையும் விரும்புகின்றனர்.  

“ இப்படியான ஒரு சமூகத்தை கட்டமைப்பதைத் தான் நான் விரும்பினேன்,” என்கிறார் அர்ச்சனா. “மக்கள் இயற்கையோடு நெருங்கி இருக்க வேண்டும் என்றும், நல்ல உணவுகளுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க நாங்கள் விரும்புகின்றோம்,” முடிக்கிறார் அர்ச்சனா.  


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • successful caterer

  கேட்டரிங்கில் சிகரம் தொட்டவர்

  மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் தேப்நாத். அவர் பிறந்த சமயம் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் டெல்லிக்கு வந்து கடின உழைப்பால் கேட்டரிங் தொழிலில் வெற்றியைப் பெற்று இன்றைக்கு 200 கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

 • Snack king

  ஒரு ‘நொறுக்’ வெற்றி!

  மணீஷுக்கு பதினொரு வயதாக இருந்தபோது தந்தை செய்துவந்த தொழில் நொடித்துபோனதைக் கண்டார். அந்த நிலையில் இருந்து மீண்டு, உள்ளூரிலேயே நொறுக்குத்தீனி தயாரிப்பு தொழிலை தொடங்கி இன்றைக்கு ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக அதனை கட்டமைத்திருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

 • Food for night

  இரவுக் கடை

  கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.

 • How a national level sportsman built a Rs 300 crore turnover travels company

  பர்பிள் படை

  கூடைப்பந்து விளையாட்டில் இந்திய அணியில் இடம்பெற்றவர். ஆனால் ஒரு காயம் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாமல் போக, தனது தந்தையுடன் இணைந்து, அவரது கார் வாடகை வியாபாரத்தை ரூ.300 கோடி வருவாய் பெறும் நிறுவனமாக மாற்றினார். தேவன் லாட் சொல்லும் வெற்றி கதை.

 • Success story of a pen manufacturer in Kolkata who started from scratch

  பேனாவில் கொட்டிய கோடிகள்

  350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை

 • Call of Outsourcing

  தேடி வந்த வெற்றி

  மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை