பழைய பர்னிச்சர்களில் பதினான்கு கோடி! மூன்றரை லட்சம் முதலீட்டில் முன்னுக்கு வந்த டெல்லி சகோதரர்கள்!
08-Dec-2024
By உஷா பிரசாத்
புதுடெல்லி
கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிக சம்பளம் பெறும் பெருநிறுவன பணிகளை விட்டு விலகி சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்கினர். டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றுவோர் உபயோகப்படுத்திய மரச்சாமான்களை வாங்கி விற்கிறது எம்பசி சரக்குகள் கம்பெனி என்ற இந்த நிறுவனம்.
அத்துடன் பழைய மரச்சாமான்களை காட்சிப்படுத்த ஒரு முகநூல் பக்கம் தொடங்கினர். தங்களது வீட்டின் முன்புறம் இருந்த இடத்தை திறந்தவெளி கிடங்காக பயன்படுத்தினர். தொடர்ந்து இன்றைக்கு இரு சகோதரர்களும் இந்த நிறுவனத்தை ரூ.14 கோடி ஆண்டு வருவாய் தரும் வகையில் உயர்த்தியுள்ளனர்.
|
“கோச்லேன் (CouchLane ) என்ற பிராண்ட் பெயரில் 2019ஆம் ஆண்டு ஆடம்பர மரச்சாமான்களை விற்க தொடங்கினோம்,” என்ற கவுரவ், ரூ.3.5 லட்சம் சொந்த சேமிப்பைக் கொண்டு முதலீடு செய்து 2015ஆம் ஆண்டு தொடங்கி கீழ் மட்டத்தில் இருந்து வளர்ந்த தங்களது பயணத்தை நினைவு கூர்ந்தார். ஒரு போலந்து தூதரிடம் இருந்து மரச்சாமான்கள் மற்றும் பிற பொருட்களை வாங்க இந்த தொகை முன்பணமாக (அல்லது வைப்பு தொகை) பயன்பட்டது. “பணி நிமித்தமாக அந்த தூதர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி விட்டார். குழந்தை, செல்லபிராணி ஆகியவற்றுடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பெரிய பண்ணையில் சத்தர்பூரில் அவரது மனைவி இருந்தார். தன் வீட்டில் இருந்த பெரிய பியானோ உட்பட அனைத்தையும் அவர் விற்க விரும்பினார்,” என்றார் கவுரவ். இந்த சகோதரர்கள் மொத்தமாக அனைத்துப் பொருட்களையும் ஒன்றரை மாதத்தில் விற்று விட்டனர். மரச்சாமான்களை மட்டும் ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். ஒட்டு மொத்த பொருட்களின் விற்பனைக்கும் சேர்த்து 20 சதவிகித தொகையை அவர்களின் லாபமாக எடுத்துக் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் அது நல்ல டீல் ஆக இருந்தது. இந்த விற்பனையில் தூதரின் மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய பியானோவை விற்பனை செய்வதற்கும் நல்ல நபர் ஒருவர் கிடைத்தார். “தெற்கு டெல்லியில் இசைப் பள்ளி நடத்தி வரும் அந்த நபருக்கு மிகக் குறைந்த விலையில் அந்த பியானோ கிடைத்தது. இன்றைக்கு அவருக்கு மிக மதிப்பு மிகுந்த பொருள்களில் ஒன்று,” என்றார் அங்குர்.
பெரிய நிறுவனங்களில் கவுரவ் மூத்த பதவிகளை வகித்திருக்கிறார் |
அவர்களின் முகநூல் பக்கத்தின் வாயிலாக பெரும் அளவில் விசாரணைகள் வரத் தொடங்கின. அவர்களின் தொழில் வளரத் தொடங்கியதால், டெல்லியில் தூதரக மட்டத்தில் தங்களது தொடர்பை விரிவுபடுத்தினர். மரச்சாமான்களை வைப்பதற்காக குருகிராமில் டிஎல்எஃப் பகுதி-3 யில் உள்ள தங்களது வீட்டுக்கு அருகே ரூ.15,000 வாடகையில் 300 ச.அடி கொண்ட சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்தனர். ஒன்றரை ஆண்டு கழித்து அதே பகுதியில் ரூ.40 ஆயிரம் மாத வாடகையில் 1,800 ச.அடி கொண்ட அடித்தளத்தில் இருந்த ஒரு இடத்துக்கு மாறினர். 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் நிறுவனமானது கோச்லேன் ஹோம் டெக்கர் எல்எல்பி நிறுவனமாக மாறியது. நிறுவனத்தில் இரு சகோதரர்களும் சமவிகித பங்குகளை வைத்திருந்தனர். எம்பசி சரக்குகள் நிறுவனம், கோச்லேன் ஹோம் டெக்கர் என்ற பெயரின் கீழ் ஒரு பிராண்ட் ஆக மாறியது. கிடங்குடன் கூடிய கடையானது குருகிராமில் 13,000 ச.அடியை கொண்டிருந்தது. 3000 ச.அடி கொண்ட வாடகை இடத்தில் மெஹ்ராலி-குருகிராம் சாலையில் கோச்லேன் டிசைன் ஸ்டுடியோ அமைந்துள்ளது. “எம்பசி சரக்குகள் கம்பெனி மற்றும் கோச்லேன் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக 10,000 த்துக்கும் மேற்பட்ட வீடுகளை மரசாமான்களால் அலங்கரித்திருக்கின்றோம். இதுவரை ஒவ்வொரு ஆண்டும் இரு மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளோம்,” என்றார் கவுரவ். தொடர்ந்து பேசிய அவர், “இந்த வணிகம் சமூக வலைதளத்தின் வாயிலாக கட்டமைக்கப்பட்டது. முகநூலில் எங்களை 40,0000 த்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.” கவுரவ் 42, மற்றும் அங்குர் 35, இருவரும் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்களாவர். அவர்களுடைய தந்தை தெற்கு டெல்லியில் நேரு பிளேசில் டிசிஎம் சில்லறை விற்பனை கடை வைத்திருந்தார்.
டெல்லியில் உள்ள தூதரக வட்டாரங்களில் அங்குர் தொடர்புகள் வைத்திருந்தார். இதன் விளைவாக தரமான மரசாமான்கள் மிகவும் குறைந்த விலைக்கு அவருக்கு கிடைத்தன |
இருவரும் எம்பிஏ படித்துள்ளனர். கவுரவ் டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மையத்தில் இருந்து எம்பிஏ பெற்றார். டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் மேலாண்மை இந்திய மையத்தில்(IIPM) இருந்து அங்குர் எம்பிஏ பெற்றார். கவுரவ் தனது 20 ஆண்டுகால பெருநிறுவன பணியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் மார்க்கெட்டிங் தலைவராக இருந்திருக்கிறார். மிந்த்ரா ஜாபாங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். அங்கிருந்தபோதுதான் கோச்லேன் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக பணியில் இருந்து விலகினார். கான்டினென்டல், த லலித் மற்றும் பார்க் ஹோட்டல்கள் ஆகிய முன்னணி ஹோட்டல்களில் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவுகளை அங்குர் கையாண்டிருக்கிறார். விருந்தோம்பல் துறையில் இருந்ததால் பல்வேறு தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகளை அவருக்குத் தெரியவந்தது. 2014ஆம் ஆண்டு கடைசியில் கக்கர்கள் இருவரும், அங்குரின் புதிய வீட்டுக்கு மரச்சாமான்கள் வாங்க சென்ற போது, அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பொருத்தமான மரசாமான்கள் கிடைக்கவில்லை. அவர்கள் விரும்பிய ஒன்று அவர்களின் வரம்புக்குள் இல்லை. அதே நேரத்தில் டெல்லியில் உள்ள ஒரு மூத்த தூதரக அதிகாரி தன்னுடைய சொந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டார். வீட்டில் இருந்த மரச்சாமான்களை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் அவற்றை விற்க திட்டமிட்டார். அங்குர் இது பற்றி கேள்விப்பட்டார். அந்த மரச்சாமான்களை பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது. அந்த தூதரக அதிகாரி சொன்ன விலையில் மறுபேச்சு இன்றி அந்த மரச்சாமான்களை வாங்கினார். அது ஒரு அற்புதமான கொடுக்கல், வாங்கலாக இருந்தது. அந்த மரச்சாமான்களை பார்த்த உறவினர்கள், நண்பர்கள் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றனர். இது போன்ற மரச்சாமான்களை வாங்க தூதரக அதிகாரிகள் உடனான தொடர்புகள் கிடைக்குமா என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் போலந்து தூதர் மனைவியிடம் இருந்து மரச்சாமான்களை அவர்கள் வாங்கினர். “எங்களைப் போல பலரும் இந்த மரச்சாமான்கள் மீது ரசனை கொண்டிருந்ததால் , அதில் பெரும் சந்தை வாய்ப்பு இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். அதிக விலை கொடுத்து மரச்சாமான்கள் வாங்குவதை யார்தான் விரும்புவார்கள். ஆனால், அதே நேரத்தில் தரமான பொருளாக இருந்தால், பழைய பொருளாக இருந்தாலும் வாங்க தயங்க மாட்டார்கள்,” என்றார் அங்குர். விரைவிலேயே அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு, எம்பசி சரக்குகள் கம்பெனியைத் தொடங்கினார். அங்குர் தூதரகங்களுக்கு அடிக்கடி போகத்தொடங்கினார். அங்கு ராஜதந்திரிகளை சந்தித்து, தங்களுடைய புதிய நிறுவனம் குறித்து விளக்கினார். கவுரவுக்கு வெற்றிகரமான ஒரு பெருநிறுவன வேலை கையில் இருந்தது. நிறுவனத்தை வளர்த்தெடுப்பதற்கு பின்னணியில் இருந்து வலுவாக செயல்பட்டார். .
நொய்டாவில் விரைவில் கூடுதலாக ஒரு கிடங்கு தொடங்க இந்த சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர் |
அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. விற்பனைக்காக மேலும் நல்ல பொருட்களைப் பெறத் தொடங்கினர். அதே நேரத்தில் மரச்சாமான்களை வாங்குவோரும் அதிகரிக்கத் தொடங்கினர். பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு மரச்சாமான்களை வழங்குவதற்காக அர்பன் லேடர், பெப்பர் ப்ரை போன்ற ஆன்லைன் மரச்சாமான்கள் விற்பனை நிறுவனங்களுடன் கவுரவ், அங்குர் இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அதிக அளவு இருக்கும் இருப்புகளை வாங்கி விற்கின்றனர். அளவு காரணமாக திரும்பி வந்த மரச்சாமான்கள், எடுத்துச் செல்லும் போது லேசான சேதம் அடைந்தவை அல்லது டிசைன் போன்ற அம்சங்களால் குறைவாக விற்பனையாகும் மரச்சாமான்கள் ஆகியவற்றையும் அவர்கள் வாங்குகின்றனர். அர்பன் லேடர் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட புதிய பொருட்கள் 40 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துகின்றனர். “அதிக எண்ணிக்கையில் நாங்கள் பொருட்கள் வாங்குவதால், குறைந்த விலையில் பொருட்களை பெற முடிகிறது. அதனை அதிக தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்கு தரமுடிகிறது. இது என்சிஆர் நகர மக்களிடம் அதிக ஆதரவை பெற்றுள்ளது,” என்று கவுரவ் விவரிக்கிறார். இதற்கிடையே, 2018ஆம் ஆண்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட கிடங்குக்கு மேலேயே 2000 ச. அடியில் மரச்சாமான்களை காட்சிப்படுத்தும் பகுதியை உருவாக்கி உள்ளனர். விரைவில் , சகோதரர்கள் இருவரும் சர்வதேச பிராண்டுகளுக்கு மரச்சாமான்களை அனுப்பும் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து மரச்சாமான்கள் வாங்க உள்ளனர். ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை உலகம் முழுவதும் காட்சிப்படுத்த மாதிரி பொருட்களை உருவாக்குவது வழக்கம். 100 பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தும் போது அதில் 20 மட்டுமே ஏற்றுமதியாகும் மீதம் உள்ள பொருட்களால் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த உபயோகமும் இருப்பதில்லை. “இந்த பொருட்கள் அனைத்தும் சர்வதேச உணர்வுகள் மற்றும் அவர்களின் ரசனைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவை. மர வகையின் தரத்தில் கூட முதன்மையான தரமான பொருட்களை பயன்படுத்தி ஏற்றுமதிக்காக தயாரிக்கின்றனர்'' “இந்த பொருட்களை எங்கள் விற்பனையில் இணைத்திருக்கின்றோம். சர்வதேச மரச்சாமான்கள் மீது ஆர்வம் கொண்ட புதிய நபர்கள், இதனை வாங்குகின்றனர். இதற்கு முன்பு இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் இவை.” எம்பசி சரக்குகள் கம்பெனி இன்றைக்கு, தங்களுடைய விற்பனையில் அர்பன் லேடர் மற்றும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில ஏற்றுமதியாளர்கள் மற்றும் தூதர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கலவையான மரச்சாமான்களை சேர்த்திருக்கிறது. கவுரவ் மனைவி யோகிதா, கேஒய்டிஇ (KYTE )என்று அழைக்கப்படும் சொந்த கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்களுக்கு 12 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். அங்குரின் மனைவி ஸ்வாதி எச்ஆர் ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 6 வயது மகள் உள்ளார். இருவரின் மனைவிகளும், தங்கள் கணவர்களுக்கு ஆதரவு தருகின்றனர். சமூக வலைதளங்களில் கோச்லேன் பொருட்கள் மற்றும் எம்பசி சரக்குகள் நிறுவனத்தின் பொருட்களுக்கு சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அர்பன் லேடர் போன்ற ஆன்லைன் மரச்சாமான்கள் விற்கும்
கடைகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரிடம் உள்ள அதிகப்படியான மரச்சாமான்கள், எம்பசி சரக்குகள் நிறுவனத்துக்கு கிடைக்கின்றன. |
கக்கர் சகோதரர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடுத்த கட்டத்துக்கு தொழிலை எடுத்துச் செல்லும் குறுகிய கால நோக்கத்தின் அடிப்படையில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். “2021-22 முடிவுக்குள் நொய்டாவில் 12,000 ச.அடியிலான இன்னொரு கிடங்கு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் இன்னொரு மெட்ரோ நகருக்கு தொழிலை விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் கவுரவ். இதற்கிடையே ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள இந்தியர்களிடம் இருந்தும் கோச்லேன் நிறுவனத்துக்கு விசாரணைகள் வருகின்றன. அவர்களின் வீடுகளுக்கு மரஅலங்காரங்கள் செய்வதற்கும் விசாரணைகள் வருகின்றன. இன்னும் சில மாதங்களில் கோச்லேன் இணையதளம் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவின் எல்லைக்கு வெளியேயும் தங்கள் தொழில் விரிவடையும் நம்பிக்கையுடன் கவுரவ், அங்குர் இருவரும் காணப்படுகின்றனர்.
அதிகம் படித்தவை
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்
-
அழகான வெற்றி
கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.
-
தன்னம்பிக்கையின் தூதுவர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
உயரப் பறத்தல்
விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை