கடின உழைப்பில் உயர்ந்த கொடை வள்ளல்; கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் இளங்கோவன்
26-Apr-2025
By பி சி வினோஜ் குமார்
சென்னை
1995-ம் ஆண்டு 37-வது வயதில், இளங்கோவன் சிவன்மலை பல்வேறு தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டபடியால் அவரை 2 கோடி ரூபாய் கடனில் கொண்டு வந்து நிறுத்தியது. குழந்தைப் பருவத்தில் அனுபவித்த வறுமை நிலையை விட கொடிய நிலையை அவர் அப்போது உணர்ந்தார்.
“கடன்களை அடைப்பதற்காக, என்னுடைய மனைவியின் 120 சவரன் நகைகள், வாகனங்கள், நிலம் உள்ளிட்ட எனது சொத்துகள் முழுவதையும் நான் விற்று விட்டேன். ஆனாலும் கூட நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனில் 52 லட்சம் ரூபாய் நிலுவை இருந்தது,” என்று நினைவு கூறுகிறார் இளங்கோவன். “அந்த சமயத்தில் நான், கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றினேன். ஆனால், அந்த சிறிய வருமானம், மீதம் உள்ள கடனை வாழ்நாள் முழுதும் நான் வேலை செய்தாலும் அடைப்பதற்கு போதுமானதாக இருக்காது என்று உணர்ந்தேன்.”
|
தமிழகத்தைச் சேர்ந்தவரும், குவைத்தில் பொறியாளராகப் பணியாற்றுபவருமான இளங்கோவன் சிவன்மலை, 11 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி அளித்து இருக்கிறார். (படங்கள்; ஜான்)
|
குவைத்தில் ஏசி மெயின்டனன்ட்ஸ் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இப்போது அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில்(KNPC) எச்.வி.ஏ.சி(HVAC) (ஹீட்டிங், வென்டிலேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங்) வடிவமைப்புப் பொறியாளராக இருக்கிறார்.
குவைத்தில் பணியாற்றத் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் தமது கடனை அடைத்து விட்டார். இப்போது அவர் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அவரது வெற்றிக்கதையை அசாதாரணமான ஒன்றாக ஆக்கியது எது என்று பார்த்தால், அவர் தமது வருவாயில் 20 சதவிகிதத்தை அறக்கட்டளைப் பணிகளுக்காகக் கொடுக்கிறார்.
“நான் இதுவரைக்கும் உதவி தொகையாக 4 கோடி ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளேன்,” என்கிறார் 60 வயதான இளங்கோவன். 2009-ல் அவர் அரவணைப்பு என்ற அறக்கட்டளையை தமது தந்தை குழந்தைசாமியின் நினைவாகக் கோவையில் தொடங்கினார். ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி வசதி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதைத் தொடங்கினார். இந்த தன்னார்வலர், தமது நண்பர்கள், நலன் விரும்பிகள், மற்றும் இதர கொடையாளர்கள்மூலமும் நன்கொடைகளைப் பெறுகிறார்.
“நாங்கள், 11,551 குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் தந்தையை இழந்தவர்கள்,” என்கிறார் இளங்கோவன். “அவர்களின் ஒட்டு மொத்த கல்விக்கும் நானே செலவு செய்தேன் என்று சொல்லமாட்டேன். பள்ளிக்குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2000 ரூபாய், கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளநிலை பட்டதாரிகளுக்கு 5000 ரூபாய், பொறியியல் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் என்று உதவித் தொகை வழங்குகிறோம்.”
இந்திய ஆட்சிப்பணிகளுக்கான தேர்வுகள் எழுதும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இளங்கோவன் ஆதரவு அளிக்கிறார். “ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆட்சிப்பணித் தேர்வுகளுக்கான நேர்முகத்தேர்வுக்கு தயாராவதற்கும் உதவுகிறோம். அவர்களின் படிப்புக்காக 25 ஆயிரம் ரூபாய் தருகிறோம். 114 மாணவர்களில் 51 பேர் ஐ.ஏ.எஸ் ஆகவும், 32 பேர் ஐ.பி.எஸ் ஆகவும் தேர்ச்சி பெறுவதற்கு உதவி செய்துள்ளோம்,” என்கிறார் இளங்கோவன். தமது வாழ்நாளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.
|
இளங்கோவன், வாய்க்கும், கைக்குமாக வாழ்ந்த விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர்.
|
10 ஏக்கர் வறண்ட பூமியைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் இளங்கோவன் பிறந்தார். அந்த நிலத்தில் மழை பெய்யும் போது, தினை, மக்காச்சோளம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை பயிரிடுவார்கள். அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரே ஒரு எருமை மாட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கும் பாலை விற்பதால் கிடைக்கும் வருமானத்தில்தான் அவர்கள் குடும்பம் இயங்கி வந்தது.
“என் தந்தையின் நெஞ்சில் ஒரு காயம் இருந்தது. அதில் இருந்து அவ்வப்போது ரத்தம் வெளியேறியபடி இருக்கும். எனவே அவரால் அதிகமாக கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. என் தாய்தான் குடும்பத்தை நடத்தி வந்தார். கைத்தறி நெய்வது, எருமைமாட்டின் பாலை விற்றுக் கிடைக்கும் பணம் ஆகியவற்றைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்,” என்கிறார் இளங்கோவன். அவர் உள்ளூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தார்.பின்னர் 4 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளகோவிலில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் தொடர்ந்து படித்தார்.
அவர் குடும்பத்தில் போதுமான வருவாய் இல்லாததால், வாய்க்கும், கைக்குமாக வாழ்ந்தனர். சில நேரங்களில் இளங்கோவனும், அவருடன் உடன் பிறந்த இளைய சகோதரரும், பட்டினியோடுதான் இரவு படுக்கப் போவார்கள். அவரது தாய் ஒருமுறை அவரை, இரவு உணவுக்காக உப்புமா செய்வதற்காக கடையில் கடனுக்கு ரவை வாங்கி வரும்படி சொன்னார்.
“அப்போது எனக்கு எட்டு வயதுதான். நான் கடைக்குச் சென்றேன். ஆனால், அந்த கடையின் உரிமையாளர், நாங்கள் ஏற்கனவே அதிகத் தொகைக்கு கடன் வைத்திருந்ததால், மேலும் கடன் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே, ரவை வாங்காமல் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். எனினும் என் தாய் குறுனை அரிசியில் எங்களுக்காக கஞ்சி செய்து கொடுத்தார்,” என்று அந்த மறக்க முடியாத இரவைப் பற்றி நினைவு கூறுகிறார். பசி வேதனையில் பல முறை இரவு நேரங்களில் அடிக்கடி விழித்து எழுந்திருக்கிறார்.
“என் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக பல டம்பளர்கள் தண்ணீர் குடித்தேன். இதையெல்லாம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்த என் தாய் அதிகாலை 3.30க்கு எழுந்து, எருமை மாட்டில் இருந்து பால் கறந்து அதனை காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு எனக்குத் தந்தார்.”
|
பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நிகழ்வில், மாணவர்களுக்கு இளங்கோவன் நிதி உதவிகளை வழங்கினார்.
|
இந்த பசியும், பட்டினியுமான வாழ்க்கைதான் அவரை நன்றாகப் படிப்பதற்கான தூண்டுகோலாக அமைந்தது. எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்த உடன், பொள்ளாச்சியில் உள்ள நாச்சி முத்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். பல்வேறு குடும்ப உறுப்பினர்களின் நிதி உதவியுடன் அங்கு சேர்ந்தார். முதல் ஆண்டில் முதலிடம் பிடித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். 1976ம் ஆண்டு கோவையில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பில் அவருக்கு இடம் கிடைத்தது. பின்னர், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டமேற்படிப்பு முடித்தார்.
"விடுதியில் தங்கிப் படித்தேன். விடுமுறை தினங்களிலும், வார விடுமுறையின்போதும், நான் எனது கிராமத்துக்கு (கோவையில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கிறது) செல்வேன். வீட்டில் அப்போது மின்வசதியும் வரவில்லை. மண்ணெண்ணைய் விளக்கின் கீழ் அமர்ந்து படிப்பேன்,” என்கிறார் இளங்கோவன். பகுதி நேர வேலையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவரது மனதுக்குள் கொளுந்து விட்டு எரிந்தது. எனவே, அவர் பட்டமேற்படிப்புப் படிக்கும்போது, பியர்லெஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்ட் ஆகப் பணியாற்றினார்.
அவர் ஒரு ஆண்டு அதில் பணியாற்றினார். அப்போது அவருடைய மாமா ஒருவர், தமது ராயல் என்பீல்டு புல்லட் வண்டியை இளங்கோவனுக்குக் கொடுத்திருந்தார். அப்போது பாலிசி சந்தாவாக 97 லட்சம் ரூபாய் சேர்த்தார். அந்த நாட்களில் அது பெரிய தொகை. மாநிலத்திலேயே டாப் ஏஜென்ட் என்று இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அந்த பணியின் மூலம் அவருக்கு நல்ல கமிஷன் கிடைத்தது. ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆக வெற்றி பெற்றதன் மூலம், எதிர்காலத்தில் பல தொழில்களில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கை இளங்கோவனுக்கு ஏற்பட்டது.
“1983-ம் ஆண்டு, நான் எம்.இ முடித்தேன். அதே ஆண்டில் கோவை சான்ட்விட்ச் பாலிடெக்னிக்கில் மாதம் 512 ரூபாய் சம்பளத்தில் பேராசிரியர் வேலை கிடைத்தது,” என்கிறார் இளங்கோவன். 1985-ம் ஆண்டு அவர் தேவிகா என்ற பெண்ணை மணந்தார். அவர் பெரும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இளங்கோவனுடைய வாழ்க்கையின் உயர்வு, தாழ்வுகளில் அவரும் பங்கெடுத்தார்.
|
கல்வித்தொகை பெற்ற மாணவி பவித்ராவுடன் இளங்கோவன்.
|
மூன்று ஆண்டுகள் கழித்து, கோவையில் வெட்கிரண்டர் அசம்பிள் செய்யும் தொழிலைத் தொடங்கினார். டிவிஜ் (DIVIJ) என்ற பிராண்ட் பெயரில் அந்த கிரைண்டர்களை விற்றார். “முதல் ஆண்டில் மட்டும் நாங்கள் 4800 கிரைண்டர்கள் விற்றோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார் இளங்கோவன். இதைத் தொடர்ந்து, மேலும் பல பங்குதாரர் நிறுவனங்களைத் தொடங்கினார். காமதேனு ஹார்டுவேர், மாருதி ஜெனரல் ஸ்டோர் மற்றும் அரிஸ்டோ கார்மென்ட்ஸ் உள்ளிட்ட சில புதிய நிறுவனங்களைத் தொடங்கினார். ஆனால், அவருடைய நிறுவனங்களில் ஒன்றான ஏக்யூ அப்பேரல்ஸ் (AQ Apparels) என்ற நிறுவனம் நலிவடைந்தது. இதனால், இதர தொழில்களும் நலிவடைந்தன. இவையெலாம் சேர்த்து அவரை கடனில் தள்ளியது.
1995-ம் ஆண்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும் நோக்கத்துடன் குவைத்துக்குச் சென்றார். மிகவும் கடினமாக உழைத்தார். கூடுதலாக சம்பாதிப்பதற்காக வேலை நேரம் முடிந்ததும், டியூசன் எடுத்தார். கடனை அடைப்பதற்காக, தன் செலவுகளைக் குறைத்துக் கொண்டார்.
மிகவும் வெப்பமான சூழலில் கூட இளங்கோவன் கடினமாக உழைத்தார். “குவைத்தில் கடும் கோடைகாலத்தில் 127 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கும். வெளியே இந்த சூழலில் வேலை பார்ப்பது என்பது கடினமானது,” என்கிறார் இளங்கோவன். ஆனால், அவர் எல்லா வலிகளையும் மறந்து, தாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு உழைத்தார். ”நான் வாழ்க்கையில் போராடியபோது, பலர் எனக்கு உதவிகள் செய்தனர். இப்போது இந்தச் சமூகத்துக்கு அதைத் திருப்பிக் கொடுப்பதில் நான் சந்தோஷப்படுகிறேன்.”
|
குடும்ப ஆல்பத்தில் இருந்து; மனைவி தேவிகா, வினோதினி, சுசீந்திர குகன் ஆகிய குழந்தைகளுடன் இளங்கோவன்.
|
இளங்கோவன், அரவணைப்பு இளங்கோவன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். பயனாளிகளில் ஒரு சிலரே அவரோடு தொடர்பு வைத்துக்கொள்கின்றனர். “பணம் கிடைத்த உடன் பிரச்னை முடிந்தது என்று அவர்கள் நினைக்கின்றனர். பயனாளிகள் என்னிடம் மீண்டும் உதவி கேட்டு வராதபட்சத்தில், அவர்களுடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை,” என்கிறார் அவர். ஆனால், பவித்ரா போன்ற சிலர், இளங்கோவன் தகுந்த நேரத்தில் உதவி செய்ததற்காக தொடர்ந்து அவருக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர். “சென்னை, வேலம்மாள் கல்லூரியில் நான் மைக்ரோ பயாலஜி படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய ஒரு செமஸ்டர் கட்டணமாக 5000-6000 ரூபாயை அவர் செலுத்தினார். இது போன்ற பெரிய தேவையை நான் பெற்றபோது அவரை எப்படி என்னால் மறக்க முடியும்?” என்கிறார் பவித்ரா.
அரவணைப்பு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்களில் ஒருவராக இளங்கோவனின் மனைவி தேவிகாவும் இருக்கிறார். அவருக்கு தூண்போல உதவி செய்கிறார். இந்த தம்பதியின் மகள் வினோதினி (38) மருத்துவராக உள்ளார். அவர்களது மகன் சுசீந்திர குகன் (28) பொறியாளராக தொழில் முனைவோராக இருக்கிறார். அவர்களின் பெற்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்க்கையில் அவர்கள் செட்டில் ஆகி இருக்கின்றனர்.
அதிகம் படித்தவை
-
சணலில் ஒரு சாதனை
பிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
வெற்றிப்பயணம்
ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
மெத்தைமேல் வெற்றி!
கொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை