எண்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி ஆறு கோடி வருவாய்! வெற்றியை குவித்த காதல் தம்பதி
20-Apr-2025
By சோபியா டேனிஷ்கான்
கவுகாத்தி
தேபா குமார் பர்மன், பிரணாமிகா இருவரும் 21வது வயதில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் உள்ள கவுகாத்தியில் ஒரே ஒரு அறை கொண்ட அபார்ட்மெண்ட்டில் அவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர்.
அப்போது தேபா
குமார் தொலைக்காட்சித் தொடர் செட்களுக்கான உதவியாளர் என்பதாக, தினமும் ரூ.150 கூலி பெறுபவராக வாழ்க்கையைத்
தொடங்கினார்.
பின்னர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்தார். இதனைத் தொடர்ந்து கவுகாத்தியில் ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களை கட்டமைத்தார். தங்கள் வாழ்க்கை ஒளிபெற காரணமாக அமைந்த காதல் எனும் தீப்பொறி
ஒருபோதும் அணைந்து விட தேபா குமார் அனுமதிக்கவில்லை.
தேபா குமார் பர்மான், பிரணாமிகா இருவரும் ஜே14 என்ற முதல்
ரெஸ்டாரெண்டை 1997ஆம் ஆண்டு ரூ.80,000
முதலீட்டில்
தொடங்கினர்.(புகைப்படங்கள்: சிறப்பு
ஏற்பாடு)
|
“என்னுடைய மனைவி செல்வ, செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பது தெரியும் என்பதால் அவரை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் வழிகள் குறித்து எப்போதும் சிந்திப்பேன்,” என்கிறார் தேபா குமார். இன்றைக்கு அவருக்கும், அவரது மனைவிக்கும் சொந்தமாக 21 ரெஸ்டாரெண்ட்கள் உள்ளன. அவை கவுகாத்தியின் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளன. ஜே 14,ஷில்லாங் மோமோஸ், பஞ்சாப் தந்தூர் மற்றும் ஜே 14 காஞ்சா மோரிஸ் என வெவ்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த ரெஸ்டாரெண்ட்களில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு கடையும் ஒரு சில உணவு வகைகளுக்கு சிறப்பு சேர்க்கின்றன. ஜே 14 ரெஸ்டாரெண்ட் கொல்கத்தா ரோல்ஸ், மோமோஸ் ஆகியவற்றுக்காக புகழ்பெற்றிருக்கிறது. ஷில்லாங் மோமோஸ் அதன் மோமோஸுக்காக சிறப்புப் பெற்றிருக்கிறது. பஞ்சாப் தந்தூர் ரெஸ்டாரெண்ட் பஞ்சாப் உணவுகளுக்கும், ஜே 14 காஞ்சா மோரிஸ்(பச்சை மிளகாய் என்று அர்த்தம்) ரெஸ்டாரெண்ட் பாரம்பர்யமிக்க வங்க உணவுக்கும் பெயர்பெற்றிருக்கிறது. கவுகாத்தியில் மிகவும் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான கவுகாத்தி வணிக கல்லூரிக்கு எதிரில் 1997ஆம் ஆண்டு ஜே 14 என்ற ரெஸ்டாரெண்டை இவர்கள் தொடங்கினர். “சேமிப்புப்பணம் , என்னுடைய ஸ்கூட்டர் விற்ற பணம் ஆகியவற்றைக் கொண்டு ரூ.80,000 முதலீட்டில், 250 ச.அடி வாடகை இடத்தில் இந்த ரெஸ்டாரெண்டை தொடங்கினோம்,” என்று தேபா குமார் நினைவு கூர்கிறார். “நாங்கள் பல்வேறு மோமோஸ்கள், ரோல்கள், பர்கர்கள் விற்பனை செய்கின்றோம். தள்ளுவண்டியில் உணவு விற்கத் தொடங்குவதாக ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தோம். எங்களுடைய குடும்பத்தினர் இரண்டு தரப்புமே கவுரவமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து உறவினர்கள் எல்லோரும் பேசுவார்கள் என்பதால், அந்த யோசனையை கைவிட்டோம்.”

தேபா குமார் மற்றும் பிரணாமிகா இருவரும் 21ஆம் வயதில் திருமணம் செய்து
கொண்டனர். இன்றைக்கு அவர்களுக்கு 51 வயது ஆகிறது. அவர்களுக்கு
சொந்தமாக 21 சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்கள்
இருக்கின்றன
|
தேபா குமரின் தந்தை கால்நடை மருத்துவர். அவரது தாய் குடும்பத்தலைவி. கவுகாத்தியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சிறுநகரமான பார்பெட்டா சாலையில் ஜென்பிஎம் நினைவு உயர் நிலைப்பள்ளியில் தேபா குமார் 12ஆம் வகுப்பு முடித்தார். பின்னர் கவுகாத்தி காட்டன் கல்லூரியில் பிஏ படிப்பதற்காக சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டிலேயே படிப்பை விட்டு விட்டார். “நான் அதிக இசை ஆர்வமிக்கவனாகவும், குறைவாக படிப்பவனாகவும் இருந்தேன். பாட்டுக்கள் எழுதுவதிலும், பியானோ இசைப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன். அதே போல சில மியூசிக் வீடியோக்களையும் நான் வெளியிட்டேன்,” என்கிறார் தேபா குமார். பிரணாமிகா பிஏ எல்எல்பி படிக்கும்போது தேபா குமாரை சந்தித்தார். இருவருமே பரஸ்பரம் காதலித்தனர். தேபா குமாருடன் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தபோது, அவருடைய தந்தை மாவட்ட துணை மாஜிஸ்திரேட் ஆக இருந்தார். “நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம். இந்த திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. திருமண முடிவில் இருந்து பின்வாங்க வேண்டாம் என்று பிரணாமிகாவிடம் வலியுறுத்தினேன்,” என்றார் தேபா குமார். எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். ஆரம்ப காலகட்டங்களில் குடும்பம் நடத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ரூ.350 மாத வாடகையில் ஒற்றை அறை கொண்ட அபார்ட்மெண்ட் வீட்டில் அப்போது அவர்கள் குடியிருந்தனர். “ஸ்டவ்வில் சமைத்தோம். அனைத்து விஷயங்களையும் பழகிக் கொண்டோம்,” என்ற அவர் தொடர்ந்து, “எனக்கு ஒரு தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் நாளொன்றுக்கு ரூ.150 என்ற சம்பளத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது.” “பின்னர் கவுகாத்தியில் தூர்தர்ஷனில் வேலை கிடைத்தது. மாதம் ரூ.2500 சம்பளத்தில் தள உதவியாளர் பணி. அங்கு நான் 1993-1999 வரை பணியாற்றினேன்.” பிரணாமிகா தனது கணவருடன் இணைந்து இந்த காலகட்டத்தில் தூர்தர்ஷனுக்காக ஆவணப்படங்களை தயாரித்தார். “அவரே படம் எடுப்பார் இயக்குவார், எடிட்டிங் செய்வார். செலவுகளை சேமிப்பதற்காக அவரே பின்னணி குரலும் கொடுப்பார். வடகிழக்கு மாநிலங்களை முன்னிலைப்படுத்தும் வாராந்திர ஆவணப்படங்களை 1997ஆம் ஆண்டு தயாரித்தோம்,” என்கிறார் பிரணாமிகா

தேபா குமாரின் ரெஸ்டாரெண்ட்களில் இன்றைக்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் |
அதே ஆண்டு அவர்கள் முதலாவது ஜே 17 ரெஸ்டாரெண்டை தொடங்கினர். “எனக்கு சமையல் குறித்து எந்த ஒரு பயிற்சியும் இல்லை. ஆனால், என் மனைவிதான் ஒரு தூண்போல ஆதரவு தந்தார். நாங்கள் உணவகம் தொடங்கும்போது நான்கு ஊழியர்கள் பணியில் இருந்தனர்,” என்கிறார் தேபா குமார். “ஜே 14 என்ற பெயர் வழக்கத்தில் இல்லாத பெயராக இருந்தது. இளம் வயதினருக்கான (teenager)இடம் என்று பொருள் தரும்படி சுருக்கமாக இந்த பெயரை வைத்தோம்,” என்றார். இந்த இடம் பல இளைஞர்களை தன் வசம் ஈர்த்தது. “கடையின் சுவரில் கேலிச்சித்திரங்கள் போன்ற ஓவியங்கள் வரைந்தோம். அது வேடிக்கையாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. அதில் முதலாவது கேலி சித்திரம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அமிதாப் கபார் சிங்கை பிடித்துக் கொண்டு, எத்தனை மேமோஸ் சாப்பிட்டாய் என்று சொல் என்று கேட்பதாக வரையப்பட்டிருந்தது. இந்த கேலிச்சித்திரங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தோம். என்னுடைய மிகவும் புத்திசாலியான நண்பர் ஒருவர் இதனை வரைந்து கொடுத்தார்.” முதலாவது ஆண்டில், அந்த ரெஸ்டாரெண்டில் இருந்து அவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வருவாய் கிடைத்தது. 2004ஆம் ஆண்டில் கவுகாத்தி ஜிஎஸ் சாலையில் இரண்டாவது ரெஸ்டாரெண்டை தொடங்கினர். அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து நகரில் உள்ள இன்னொரு கல்லூரியின் முன்னே அடுத்த ரெஸ்டாரெண்டை தொடங்கினர். வணிக கல்லூரி முன்பிருந்த ஜே 14 ரெஸ்டாரெண்ட் அவர்களது மைய கிச்சனாக செயல்பட்டது. அந்த ரெஸ்டாரெண்டின் சுவையை மற்ற ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு. கடைகளின் ஊழியர்கள் சைக்கிளில் இதர ரெஸ்டாரெண்ட்களுக்கு உணவு வகைகளை எடுத்துச் சென்றனர். “இன்றைக்கு எங்களிடம் 21 ரெஸ்டாரெண்ட்கள் உள்ளன. இதில் நான்கு ரெஸ்டாரெண்ட்கள் பிரான்ஞ்சைஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்த ரெஸ்டாரெண்ட்கள் பல்வேறு இளைஞர்களுக்கு சுகமான உணர்வுகளைக் கொடுக்கிறது. ஜே 14 ரெஸ்டாரெண்டில் தங்களது இணையை எவ்வாறு சந்தித்தனர் என்று சொல்லும் பலரை இன்னும் நான் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். எப்படி அவர்கள் தங்கள் இணையரை அங்கு அழைத்து வந்தனர். காதலை வெளிப்படுத்தினர் என்று என்னிடம் கூறுகின்றனர்,” என்கிறார் தேபா குமார். 1999ஆம் ஆண்டு தேபா குமார் தூர்தர்ஷனில் இருந்து விலகினார். இதர சில தொழில்களையும் அவர் செய்துபார்த்தார். 1999ஆம் ஆண்டு மரசாமான்கள் விற்கும் தொழிலில் இறங்கி இழப்பை சந்தித்தார். பின்னர் 2000ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை எடைக்குறைப்பை உறுதி செய்யும் ஒரு சர்வதேச நுண்ணூட்ட சத்து பிராண்ட் உடன் பணி செய்தார்.

கவுகாத்தி வணிக கல்லூரிக்கு எதிரே உள்ள தேபா குமாரின் முதல் ரெஸ்டாரெண்டின் பழைய புகைப்படம் |
இந்த வாய்ப்பானது, அவருக்கு பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் தருணத்தைக் கொடுத்தது. 2008ஆம் ஆண்டில் இருந்து தனது நேரம், உழைப்பு முழுமையையும் சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களைக் கட்டமைப்பதில் செலவிட்டார். “இந்திய இளைஞர்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகின்றேன். ஜே 14 ரெஸ்டாரெண்ட்டுடன் கிளவுட் கிச்சன் முறையில், அக்கறையுடன் பணம் சம்பாதிக்க விரும்பும் 10 இளைஞர்களை தேர்வு செய்ய தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்கிறார் தேபா குமார். “பணம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. திருமண உறவில் நாம் கடமைப் பட்டிருப்பது போல வணிக யோசனைக்கு கடமைப் பட்டிருந்தால் மட்டும் போதும். “ வளர்ந்துவரும் இளம் தொழில்முனைவோர்களுக்கு அவரது அறிவுரை: “தடைகளால் மனம் தளர வேண்டாம். இன்னொரு வாய்ப்பு கதவைத் தட்டும் என்பதாக அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் நம் வளர்ச்சிக்கு உதவும்.” தேபா குமார் மற்றும் பிரணாமிகாவுக்கு சோனலிகா (25) மற்றும் ஆஷ்மிகா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூத்தவர் குடும்பத் தொழிலில் இணைந்துள்ளார்.
அதிகம் படித்தவை
-
சுவை தரும் வெற்றி
கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை
-
அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்
மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!
-
சிறகு விரித்தவர்!
அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மணக்கும் வெற்றி!
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்