அன்று 1500 ரூபாய் சம்பளத்தில் ஆபீஸ் பாய்! இன்று ஆண்டு சம்பளம் ஒரு கோடி! டயட் உணவு தொழிலதிபரின் வெற்றிக்கதை!
21-Nov-2024
By உஷா பிரசாத்
ஹைதராபாத்
பத்தாம் வகுப்பு படித்த பின்னர் பள்ளியில் இருந்து இடை நின்ற இளைஞர் சந்தோஷ் மஞ்சளா. பின்னர் டிராக்டர் ஷோரூம் ஒன்றில் ஆபீஸ் பாயாகவும், ஸ்டோர் கீப்பராகவும் ரூ.1500 மாத சம்பளத்தில் வேலை பார்த்தார். அதன் பின்னர் சுயமாக படித்து, நல்ல வேலையை தேடிச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். அதன்படி படித்து அமெரிக்காவுக்கு சென்ற அவர், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்தார்.
இப்போது ஐதராபாத் திரும்பி வந்திருக்கும் சந்தோஷ், சப்கா வெல்னஸ் ஆன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். உடல் பருமன் கொண்டவர்களை சந்தாதாரர்களாக கொண்ட இந்த நிறுவனத்தில் எடைகுறைப்புக்கான டயட் உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சப்கா வெல்னஸ் ஆன் பிரைவேட் லிமிடெட்
நிறுவனத்தின் நிறுவனரான சந்தோஷ் மஞ்சளா, மிகவும்
சாதாரண நிலையில் இருந்து கஷ்டப்பட்டு
வளர்ந்து வந்தவர்.(புகைப்படங்கள்: சிறப்பு
ஏற்பாடு)
|
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி எனும் சிறுநகரில் அவரது பயணம் தொடங்கியது. அவரது தந்தையின் தொழில் பெரும் இழப்பை சந்தித்ததால் அவரது குடும்பம் தீவிர நிதிசிக்கலில் இருந்தது. அதனால், அவர் பள்ளி படிப்பில் இருந்து இடையிலேயே நின்று விட்டார். அப்போதிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய அவர், கடின உழைப்பு காரணமாக இப்போதைய நிலையை அடைந்திருக்கிறார். “வெல்னஸ் ஆன் கிச்சன் கச்சிபௌலியில் இருக்கிறது. தினமும் 300 ஆர்டர்களை நிர்வகிக்கும் வகையில் திறன் கொண்டதாக இருக்கிறது. காலை, மதிய, இரவு உணவுகள் இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றன,” என்றார் சந்தோஷ்(35). “மதிய உணவு , இரவு உணவு இரண்டும் சேர்த்து ரூ.10,000, காலை உணவும் சேர்த்து ரூ.12,000 என்ற கட்டணம் நிர்ணயத்துள்ளோம்.” ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நிறுவனத்தில் இதுவரை 37 சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். மே மாதம் ரூ.20,000 ரூபாயில் இருந்து செப்டம்பர் மாதத்தில் சராசரியாக ரூ.2.5 லட்சம் வருவாயைத் தொட்டிருக்கின்றனர். சந்தோஷ் தனது சேமிப்புகளில் இருந்து ரூ.75 லட்சம் முதலீடு செய்துள்ளார். தனது இரண்டு வெளிநாட்டு வாழ் இந்திய நண்பர்களிடம் இருந்தும் இருந்து கூடுதலாக ரூ.75 லட்சம் பெற்று வணிகத்தில் முதலீடு செய்துள்ளார். பெத்தப்பள்ளியில் சிட்பண்ட் மற்றும் தனியார் நிதி தொழிலில் ஈடுபட்டிருந்த அவரது தந்தை ராஜேந்திர மஞ்சளாவுக்கு தொழிலில் ரூ.80 லட்சம் இழப்பு ஏற்பட்டதால் இழப்பை ஈடுகட்ட அவர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் விற்று விட நேர்ந்தது. இதனால் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சந்தோஷ் கடின வாழ்க்கையை எதிர்கொள்ள நேர்ந்தது. “ செல்வந்தராக இருந்தபோது அப்பா மிகவும் வலுவான மனிதராக இருந்தார். ஆனால், அவர் சரிவைச் சந்தித்தபோது மன ரீதியாக தொந்தரவுக்கு உள்ளானார்,” என்றார் சந்தோஷ். இதன் காரணமாக அவரால் 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. .
சந்தோஷ் அண்மையில் வெல்னஸ்ஆன் என்ற
நிறுவனத்தைத் தொடங்கி, நிறுவனத்தின்
சந்தாதாரர்களுக்கு டயட் உணவு வகைகளை வழங்குகிறார்
|
பின்னர், அவருடைய தந்தை, வீட்டிலேயே சிறிய கடை ஒன்றை தொடங்கினார். அதில் கூடவே எஸ்டிடி பூத் ஒன்றும் வைத்திருந்தனர். அவருடைய தந்தையின் இளைய சகோதரர் சுரேஷ் மஞ்சளா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இன்ஜினியரிங் இரண்டு மாத பயிற்சி முடிக்க சந்தோஷூக்கு உதவினார். பின்னர் 2003ஆம் ஆண்டு அவர் சந்தோஷுக்காக ரூ.50,000 முதலீடு செய்து இன்டர்நெட் மையம்(சைஃபர் கஃபே) தொடங்கினார். ஆனால், அது நன்றாகப் போகாததால், அந்த மையத்தை ஆறுமாதத்திலேயே மூடிவிட்டனர். வேறு எந்த ஒரு வழியும் அப்போது தென்படவில்லை. மனோஜ் மோட்டார் என்ற டிராக்டர் ஷோரூமில் ஆபீஸ் பாய் மற்றும் ஸ்டோர் கீப்பராக மாதம் ரூ.1500 சம்பளத்தில் சந்தோஷ் வேலைக்கு சேர்ந்தார். டிராக்டர் ஷோரூம் மூடப்பட்ட பின்னர், ஏர் டெல் நிறுவனத்தில் அலுவலக வரவேற்பு உதவியாளராகப் பணியில் சேர்ந்து அங்கு ஆறுமாதம் வரை பணியாற்றினார். பின்னர் வரபிரசாத் என்ற கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக ரூ.2,500 மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். சந்தோஷ் விரைவாக வேலையைக் கற்றுக் கொண்டதால், அவருக்கு வரபிரசாத் ஆறுமாதத்தில் ரூ.500 சம்பளம் அதிகரித்துக் கொடுத்தார். சந்தோஷ் கல்வியைத் தொடர வேண்டும் என்று வரபிரசாத் கேட்டுக் கொண்டார். அதன் படி சந்தோஷ் , திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். 2007ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் அவரது சம்பளம் ரூ.5000 ஆக உயர்ந்தது. மேலும் கம்ப்யூட்டர் ரிப்பேர், சர்வீஸ் மூலம் கூடுதலாக பணம் சம்பாதித்தார். அவர் பிகாம் பட்டம் பெற்றதால் இதை விட நல்ல வேலை கிடைக்கலாம் என அவரை ஐதராபாத் செல்லும்படி வரபிரசாத் ஊக்குவித்தார். ஐதராபாத்தில் பல நேர்காணல்களுக்கு சந்தோஷ் சென்றார். ஆனால், எந்த ஒரு வேலைக்கும் அவர் தேர்வாகவில்லை. அவரது தகவல் தொடர்பு திறன் மிகவும் மோசமாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை. ஒரு பெண் மனித வள மேம்பாட்டு அதிகாரி, உரையாடும் திறனை மேம்படுத்துவதற்கு சில அறிவுரைகளை அவருக்கு வழங்கினார். “அவர் எனக்கு அறிவுறுத்தியதன்படி சில ஆவணப்படங்கள் பார்த்தேன் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை வாசித்தேன்,” என்றார் சந்தோஷ். அவர் பெத்தபள்ளி திரும்பி வந்தார். ஓர் ஆண்டு வரை ஆங்கிலத்தில் உரையாடும் திறமையை மேம்படுத்தினார். அவரது தந்தை சந்தா செலுத்தி ஆங்கில செய்தித்தாளை வாங்கிப் படிக்க வைத்தார். .
கச்சிபௌலியில் உள்ள வெல்னஸ்ஆன் கிச்சனில்
தமது குழுவினருடன் சந்தோஷ்.
|
. 2008ஆம் ஆண்டு சந்தோஷ் ஐதராபாத் திரும்பி வந்தார். ஒரு பிபிஓ நிறுவனத்தில் ரூ.8500 சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்வேர்டு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சேவையை வழங்கினார். விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்த அவர், தமது குடும்பத்துக்கு ரூ.5000 அனுப்பி வைத்தார். அங்கு 18 மாதங்கள் பணியாற்றிய பின்னர் அந்த வேலையில் இருந்து விலகினார். 2010ஆம் ஆண்டு செக்கந்திரபாத்தில் உள்ள விவேகானந்தா பட்டமேற்படிப்பு கல்லூரியில் எம்பிஏ(நிதி) படிப்பில் சேர்ந்தார். படித்துக் கொண்டே பல இடங்களில் பகுதி நேரமாக தொடர்ந்து வேலை பார்த்து வந்தார். “கேட்டரிங் நிறுவனம் முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல வேலைகளில் பகுதி நேரமாக ஈடுபட்டேன்,” என்றார் அவர். 2012ஆம் ஆண்டு எம்பிஏ முடித்த அவர், ரூ.10,000 மாத சம்பளத்தில் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தில் அசோஷியேட் பயிற்சியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டே ஆரக்கிள் அப்ளிகேஷன் என்ற குறுகிய கால படிப்பில் சேர்ந்தார். அது அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 2013ஆம் ஆண்டு அவர் ஆப்லேப்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆக பணியில் சேர்ந்தார். சில மாதங்களில் அவர் பதவி உயர்வு பெற்றார். அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8.5 லட்சமாக உயர்ந்தது. பின்னர் அவர் 2014ஆம் ஆண்டு டிரினிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் சான் டியாகோவில் ஆன்சைட் வேலை கிடைத்தது. அவரது அமெரிக்க பணியின் வாயிலாக அவருக்கு ஆண்டுக்கு 85,000 அமெரிக்க டாலர் சம்பளம் கிடைத்தது. அமெரிக்காவுக்கு வந்த மூன்று மாதத்தில் அவர் பணியாற்றி வந்த வாடிக்கையாளரை இன்னொரு நிறுவனம் கையகப்படுத்தியது. இதனால் அவர் அந்த வேலைவாய்ப்பை இழக்க நேரிட்டது.
2017ஆம் ஆண்டு சந்தோஷ் வெயிட் வாட்சர்ஸ்(Weight Watchers) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் கிடைத்தது. |
டிரினிட்டி நிறுவனம் சந்தோஷை இந்தியா திரும்பி வரும்படி கூறியது. ஆனால், அவர் அமெரிக்காவிலேயே இருந்தார். வாடிக்கையாளர்களுக்காக ஒரு மணி நேரத்துக்கு 100 அமெரிக்க டாலர் பெற்றுக் கொண்டு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிந்தார். அமெரிக்கா முழுவதும் அவர் பயணித்தார். ஏழு மாநிலங்களில் அவர் பணியாற்றினார். “என்னால் சொந்த ஊரில் இருந்த கடன்களை தீர்க்க முடிந்தது. "என் உடன் பிறந்தோரான சதீஷ் மற்றும் செளமியா ஆகியோருக்கு படிப்பு செலவுகளுக்கு பணம் கொடுத்தேன். என்னுடைய திருமணத்துக்காகப் பணம் சேமித்தேன். செளமியா திருமணத்துக்காக ரூ.10 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியில் செலுத்தினேன்,” என நினைவு கூர்கிறார் சந்தோஷ். அவருடைய திருமணத்துக்காக 2016ஆம் ஆண்டில் சந்தோஷ் குறுகிய காலம் இந்தியா வந்து திரும்பினார். அமெரிக்கா திரும்பிய அவருக்கு வெயிட் வாட்ச்சர்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு வேலைவாய்ப்பை வழங்கியது. முன் எப்போதையும் விட இந்திய ரூபாயில் ரூ.1 கோடி சம்பளம் பெறும் வணிக ஆய்வாளர் (Business Analyst)வேலையை அந்த நிறுவனம் அவருக்கு வழங்கியது. அங்கு அவர் ஒரு ஆண்டு பணியாற்றினார். சந்தோஷூக்கு திடீரென அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தீவிரமான மயக்கம் ஏற்பட்டதையும் உணரத் தொடங்கினார். எனவே அவர் வேலை பார்த்த வெயிட் வாட்ச்சர்ஸ் நிறுவனம் கொடுத்த எடை இழப்பு திட்டத்தில் சேர்ந்தார். அமெரிக்க உணவு முறையிலான டயட் உணவு திட்டத்தை அவரது பயிற்சியாளர் அவருக்கு வழங்கினார். அதை அவர் இந்திய உணவு முறைக்கு மாற்றி அமைத்தார். அவரது உடல் நல பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்தார். மிகவும் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்ந்தார். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று மாத விடுமுறையில் இந்தியா திரும்பினார். ஆனால், அதே ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் உடனடியாக திட்டமிட்டபடி அமெரிக்கா திரும்ப முடியவில்லை. எனவே, வீட்டில் இருந்தே அவர் பணியாற்றத் தொடங்கினார். எனவே சொந்தமாக ஒரு தொழில் தொடங்குவது குறித்து திட்டம் வகுப்பதில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரலில் தமது நிறுவனத்தைத் தொடங்கினார். “எதிர்பாராதவிதமாக, இங்கிருந்தபடியே அமெரிக்க சம்பளத்தை நான் பெற்று வந்தேன். அதே நேரத்தில் என்னுடைய மனைவி இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். எனவே எனக்கு 90 நாட்கள் மகப்பேறு விடுப்பும் கிடைத்து,” என்றார் அவர். .
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐதராபாத்தில் வெல்னஸ்ஆன் நிறுவனத்தின் மூன்று கிளைகளைத் திறப்பது என்று சந்தோஷ் திட்டமிட்டுள்ளார் |
“என்னுடைய தொழில் செயல் திட்டத்தில் கூடுதலாக கவனம் செலுத்த இது உதவியது. இந்தியாவில் இருந்து பணியாற்றுவது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாய்ப்பாகவே இருந்தது.” இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வெயிட் வாட்ச்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார். வெல்னஸ்ஆன் குழுவில் 12 கிச்சன் பணியாளர்கள் மற்றும் பெருநிறுவன அலுவலகத்தின் ஆறு பணியாளர்கள் அடங்கியுள்ளனர். வெல்னெஸ் நொறுக்குத்தீனிகளை அண்மையில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது இப்போது இணையதளத்திலும், அமேசான், பிளிப்கார்ட் தளங்களிலும் கிடைக்கிறது. “இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐதராபாத்தில் மேலும் மூன்று கிளைகளைத் திறப்பது என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்றார். “மக்கள் ஆரோக்கியமான உணவுமுறையையுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் குறிக்கோள்,” என்றார்.
அதிகம் படித்தவை
-
வெற்றிப் படிக்கட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
எந்திரன்!
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை
-
கணினியில் கனிந்த வெற்றி
கொல்கத்தாவில் அபிஷேக் ருங்டா என்னும் இளைஞர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஐடி தொழிலை வெறும் 3000 ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் என்கிற அந்த நிறுவனம் இன்று 55 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பண்ணையிலிருந்து வீட்டுக்கு!
கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத் திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.