ஐந்தே ஆண்டுகளில் அறுபது கோடி ரூபாய்! வேகமாக வளரும் ட்ரங்கன் மங்கி!
30-Oct-2024
By சோபியா டேனிஷ்கான்
ஹைதராபாத்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்று வந்தார். வேலையை விட்டு விலக வேண்டும் என்று தீர்மானித்தபோது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பணியமர்த்தப்படிருந்தார். ஒரே ஆண்டில் அவர் பதவி உயர்வு நிலையை அடைந்தார். நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணியாற்ற வாய்ப்பும் வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய சாம்ராட் ரெட்டி, பதவி உயர்வு கிடைத்த தருணத்தில், அதில் இருந்து விலகினார். தாம் பார்த்து வந்த வேலைக்கு தொடர்பில்லா தொழிலில் இறங்கியதுடன், அதற்கு விநோதமான பெயரை சூட்டி எல்லோருடைய புருவங்களையும் உயர வைத்தார். ட்ரங்கன் மங்கி(Drunken Monkey) என்ற இந்திய குழைவு பானங்கள்(Smoothies) சங்கிலித் தொடர் நிறுவனத்தினை நிறுவி, தனித்தன்மை வாய்ந்த தொழிலதிபர் என்பதை நிரூபித்துள்ளார்.
நாடு முழுவதும் காஃபி, தேநீர் சங்கிலித்தொடர் கடைகள் காளான்கள் போல முளைத்த சமயத்தில் குழைவுபானங்கள் சங்கிலித்தொடர் கடைகளைத் தொடங்க வேண்டும்
என்று சாம்ராட் திட்டமிட்டார்.
சர்வதேச காஃபி ஹவுஸ் நிறுவனமான ஸ்டார்பக்ஸ்
எனும் தொழில் நிறுவனத்தால் ஈர்க்கப்பட்டு இப்படி தீர்மானித்தார்.
2016ஆம் ஆண்டு ட்ரங்கன் மங்கியின்
முதல் கடையை சாம்ராட் ரெட்டி தொடங்கினார். இப்போது
அது 110 குழைவுபானங்கள் சங்கிலித் தொடர்
கடைகளாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
2016ஆம் ஆண்டு ஐதராபாத்தில் ஒரே ஒரு கடையாக ட்ரங்கன் மங்கி தொடங்கப்பட்டது. அதன் வித்தியாசமான வணிகப்பெயரால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரான்ஞ்சைஸ் முறையை கைகொண்டு இயல்பாகவே உயர்ந்தது, அதிவேகமாக வளர்ந்துள்ளது.இந்த நிறுவனத்துக்கு இப்போது 110 கடைகள் உள்ளன. 2020-21ஆம் ஆண்டின் அதன் ஆண்டு வர்த்தகம் ரூ.60 கோடியாகும். நிறுவனமே நடத்தும் இரண்டு கடைகளைத் தவிர மீதம் எல்லாமே பிரான்ஞ்சைஸ் முறையில் நடத்தப்படுகின்றன.தென்னிந்தியாவில்தான் இந்த நிறுவனம் அதிக கடைகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூருவில் அதிக கடைகள் உள்ளன. டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் சில கடைகளும், கொல்கத்தாவில் ஒரு கடையும் உள்ளது. சாம்ராட் (36), இந்த வெற்றியுடன் ஓய்ந்துவிடவில்லை. அடுத்த 10 மாதங்களில் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக கடைகளைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கின்றார். “அடுத்த 10 மாதங்களில் 250 கடைகள் என்ற இலக்கைத் தொட வேண்டும் என்று நினைக்கின்றேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதர நாடுகளிலும்கூட வணிகத்தை விரிவுபடுத்த உள்ளேன்,” என்றார் அவர். “ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையிலும் குழைவுபானங்கள் ஒரு அங்கமாக ஆக விரும்புகின்றேன். குழைவுபானங்கள் என்பது பாட்டிலில் அடைக்கப்பட்ட பழங்களைப் போன்றதுதான்,” என்று சொல்லும் அவர், மக்கள் இவற்றின் ரசனையுடன் ஒன்றிணையும்போது இதற்கான சந்தை அதிகரிக்கும் என்று நம்புகிறார்.
200 வகைகள் கொண்ட குழைவுபானங்களை ட்ரங்கன் மங்கி வழங்குகிறது |
“அப்போது நான் முடிவெடுக்காவிட்டால் ஒருபோதும் அதில் இருந்து வெளியே வரமுடியாது என்று எனக்குத் தெரியும். எனவேதான் அதில் இருந்து விலகினேன்,” என்றபடி சாம்ராட் சிரிக்கிறார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பட்டம் பெற்று வெளியே வந்திருந்தார். இளம் வயதில் இப்படியொரு முடிவை எடுத்திருந்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர், கிளாஸ்கோ ஸ்ட்ராத்க்லைடு பல்கலைக்கழக(University of Strathclyde)த்தில் 2008-09ஆம் ஆண்டில் சந்தையியலில் எம்பிஏ படித்தார். சாகச காதலன், கிரிக்கெட் ஆர்வலர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் இவர், படிப்பில் முதலிடங்களைப் பிடிக்கும் இதர நபர்களைப் போல அல்லாமல் சூழலைப் புரிந்து கொண்டு திறமையான முடிவு எடுப்பதில் பெருமை கொள்கிறார். “நான் பணியில் சேர்ந்து வேலை பார்க்கத் தொடங்கியபோது, பெரும்பாலான முதலிடம் பிடித்த மாணவர்கள் கடின உழைப்பு மேற்கொள்பவர்களாக இருந்தனர். ஆனால், சூழலைப் புரிந்து செயல்படுபவர்களாக இல்லை. சமூக திறன்கள் இல்லாமல் இருந்தனர்,” என்று குறிப்பிடுகிறார் சாம்ராட். இவரிடம் பிரான்ஞ்சைஸ் கடைகளின் வாயிலாக இன்றைக்கு 1000-த்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். “இன்றைக்கு, மதிப்பெண்கள் அடிப்படையில் மனிதர்களை நான் மதிப்பிட மாட்டேன். அவர்களுடைய திறன்களைக் கொண்டே பார்க்கின்றேன்.” சாம்ராட், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பிறந்தவராவார். அவருடைய தந்தை சுதாகர் ரெட்டி உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றினார். அவருடைய தாய் சிவ லட்சுமி ரெட்டி வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். அதிகம் சம்பளம் தரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணியில் இருந்து விலகத் தீர்மானித்தபோது, அவரின் பெற்றோர் என்ன கூறினர்? “அவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிவில்லை,” என்றார் அவர். “குழந்தைப் பருவத்தில் இருந்தே, என் பெற்றோர் என்னிடம் என்ன விரும்புகிறார்களோ அதனை ஒருபோதும் நான் செய்ததில்லை. எப்போதுமே அவர்கள் நான் பாதுகாப்பான நிரந்தரமான வேலையில் இருக்கவேண்டும் என்று மட்டுமே விரும்பினர். என்னுடைய கனவுகளைத் துரத்தி செல்வதற்கு அவர்கள் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.” .”
சாம்ராட் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் விளையாட்டு, சாகச காதலரும் ஆவார் |
ஐதராபாத்தில் பெற்றோர் வசித்து வந்தனர். சாம்ராட் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பாலான நாட்களை சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் செலவிட்டார். அங்கு அவர் தனது பல உறவினர்கள் மத்தியில் வளர்ந்தார். இந்த சூழ்நிலைதான் அவரது ஆளுமையை பெரிய அளவில் வடிவமைத்தது. “பெரிய குடும்பத்தில் வளரும்போது நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள, ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள அந்த குடும்பம் உதவியது,” என்று சென்னையில் தாம் வளர்ந்த காலகட்டங்களை எதிரொலித்தார் சாம்ராட். “தவிர, எங்கள் யாரையும் செல்லமாக வளர்க்கவில்லை. எனவே சிறுவயதில் எவ்வளவு அழுதாலும் எதுவும் கிடைக்காது. எனவே நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தோம். இளம் வயதில் அதிகமாக கிரிக்கெட் விளையாடுவதுடன், கூடைப்பந்தும் விளையாடுவேன். பாடப்புத்தகங்கள் அதிகம் கற்றுத்தருவதை விடவும், விளையாட்டு எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. இதனால், ஒரு எதிர்ப்பு அல்லது தோல்வியை எதிர்கொள்ள நான் தயங்கியதில்லை.” அதே போல சாம்ராட் கல்வியிலும் சிறந்து விளங்கினார். 2002ஆம் ஆண்டு சென்னை யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேஷன் உயர் நிலைப்பள்ளியில் 96 சதவிகித மதிப்பெண்ணுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். சென்னை, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பட்டம்பெற்றார். 2006ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சோதனை சூழல் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அங்கு அவர் ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பணியாற்றினார். பிறகு வேலையில் இருந்து விலகி, இங்கிலாந்தில் எம்பிஏ படிப்பில சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். ஒரு நண்பருடன் சேர்ந்து ரூ.5 லட்சம் முதலீட்டில் ஹெஸ்டியா ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் என்ற 3டி மும்பரிமான அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார். முதல் ஆண்டில் அந்த நிறுவனம் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. 2010-15ஆம் ஆண்டுகளுக்கு இடையே, அவருடைய நண்பரான தொழில் பங்குதாரர் ஹெஸ்டியாவை கவனித்துக் கொண்டார்.இச்சமயம் சாம்ராட் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டார். ஒரு உறவினருக்கு சொந்தமான ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் பொதுமேலாளர்(செயலாக்கம்) ஆகப் பணியாற்றினார். பின்னர், சில காலம் கேமரூனில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றினார். அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாநிலத்தில் ஒரு எண்ணெய்க் கிணறு நிறுவனத்திலும் (2014-15) பணியாற்றினார். .
ட்ரங்கன் மங்கி கடைகள், ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ளன |
“பல்வேறு தொழில்களில் செயல்பாடுகளை நிர்வகிக்கும் திறன் எனக்கு உண்டு. மிகவும் விரைவாக கற்றுக் கொள்வேன். கற்றுக் கொள்ளுதல் எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன். ஒவ்வொரு நாளும் வரும்போது அதனை எதிர்கொள்ள வேண்டும், ” என்கிறார் சாம்ராட். 2015ஆம் ஆண்டு இரண்டு மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் உள்ள நண்பர்களை சந்தித்து திரும்பினார். “பெர்த், மெல்போர்ன், சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் வசித்து வந்த நண்பர்களை சந்தித்தேன். நான் ஏதேனும் புதிதாக தொடங்க விரும்பினேன். குழைவுபானங்கள் குறித்த யோசனை பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.” 2015ஆம் ஆண்டு அவர்கள் ஹெஸ்டியா நிறுவனத்தை மூடினர். அப்போது அந்த நிறுவனம் ரூ.5 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியது. அடுத்த ஆண்டு ரூ.1 கோடியை ட்ரங்கன் மங்கி நிறுவனத்தில் முதலீடு செய்தார். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்தார். பிரமிக்க வைக்கும் வகையிலான குழைவுபானங்கள் வெளியாயின. “200 வகையான பானங்களுடன் ஐந்து ஊழியர்களை கொண்டு 700 ச.அடி இடத்தில் ஐதராபாத்தில் ட்ரங்கன் மங்கியின் முதலாவது கடையை 2016ம் ஆண்டு திறந்தோம். எங்களுடைய குழைவுபானங்கள் 100 சதவிகிதம் இயற்கையானவை. அதில் எந்தவித செயற்கை பொருட்களும் இல்லை,” என்கிறார் சாம்ராட். இவற்றின் விலை ரூ.90 முதல் ரூ.250 வரை இருக்கிறது. உலர் பழங்கள் மற்றும் தர்பூசணி வகை குழைவுபானங்கள் நன்றாக விற்பனையாகின்றன.”அண்மையில் நாங்கள் குழைவு பான கிண்ணங்களை அறிமுகம் செய்தோம். அவற்றை உணவு போல சாப்பிடலாம்,” என்றார் சாம்ராட். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சாம்ராட்டுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி, வேளாண்மை அறிவியலில் முனைவர் பட்டம்பெற்றிருக்கிறார். அவர் வீட்டை கவனித்துக் கொள்கிறார். அவருக்கு வணிகத்தில் ஈடுபடும் திட்டம் இல்லை
அதிகம் படித்தவை
-
தேடி வந்த வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
ஆடைகள் தொழிலில் ஆஹாவென வெற்றி!
அவர் ஐஏஎஸ் ஆகியிருக்கவேண்டியவர். அத்தேர்வில் தோற்றதால் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அது 80 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். திருப்பூர் தொழில் அதிபர் ராஜா சண்முகத்தின் வெற்றிக்கதையை எழுதுகிறார் பி.சி.வினோஜ் குமார்
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்
-
உழைப்பின் வெற்றி!
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
மாம்பழ மனிதர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை