தேநீர் கடையில் ஏழு கோடி ஆண்டு வருவாய்! அசத்தும் தமிழக இளைஞர்!
06-Nov-2025
By பிலால்கான்
சென்னை
தேநீர் எப்போதுமே உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டக்கூடியது. இது தவிர இப்போது பாதுகாப்பான புத்திசாலித்தனமான வணிகமாகவும் மாறி இருக்கிறது.
பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான
ஜோசப் ராஜேஷ், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்சகொட்டம் பாளையம் என்ற சிறிய
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
தேநீர் சங்கிலித்தொடர் நிறுவனங்களைத் தொடங்கி, வெற்றி பெற்ற, பல இளைஞர்களின் வரிசையில் அவரும் இணைந்திருக்கிறார்.
|
பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய்
நிறுவனரான ஜோசப் ராஜேஷ், சென்னையில்
உள்ள ஒரு மாலில் ரூ.50,000 முதலீட்டில்
முதலாவது தேநீர் கடையைத் தொடங்கினார்.(புகைப்படங்கள்:
சிறப்பு ஏற்பாடு)
|
2017ஆம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் 100 ச.அடி தேநீர் கடையை ரூ.50,000 முதலீட்டில் தொடங்கிய அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லியன் ஃபுட்& பீவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் ( Bigbillion Food & Beverages Private Limited)என்ற பெயரில் 78 சங்கிலித்தொடர் கடைகளை கட்டமைத்திருக்கிறார். “2020-21இல் எங்களது ஆண்டு வருவாய் ரூ.7 கோடியாக இருக்கிறது. இப்போதைய நிதி ஆண்டில் ரூ.10 கோடியைத் தொடுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட தேநீர் கடைகளை நாங்கள் திறந்துள்ளோம்,” என்றார் ஜோசப். “பல ஐடி மற்றும் வங்கி பணிகளில் இருப்பவர்கள் எங்களுடன் பிரான்ஞ்சைஸ்களாக இணைந்திருக்கின்றனர். சிலர் தங்கள் பணிகளை விட்டு விலகியும், இதர மேலும் சிலர் வேலை பார்த்துக் கொண்டே தொழிலையும் கவனித்துக் கொள்கின்றனர்.” பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்குகாக ரூ.6-7 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றார். அவருடைய நிறுவனமே உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்துக் கொடுக்கிறது. மூலப் பொருட்களையும் விநியோகிக்கிறது. பிரான்ஞ்சைஸ்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடையை நடத்துவதற்கு ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். “டீ பாய் கடைகள் சிறியவைதான். பொதுவாக அவை 100-200 ச.அடிக்குள்தான் இருக்கின்றன. இந்த கடைகளில் இரண்டு முதல் மூன்று வகை தேநீர் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்,” என்றார் ஜோசப். பிளாக் பெக்கோ கடைகள் பெரியவை. ஒரு பெரிய கடையானது 1.500 ச.அடி கொண்டது. அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
|
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில்பணியாற்றிய
ஜோசப் அந்த வேலையில் இருந்து விலகி சென்னை வந்து தொழிலைத் தொடங்கினார்
|
ஒரு கோப்பை தேநீர் விலை ரூ.10 முதல் ரூ.30 வரை இருக்கிறது. தேநீர் தவிர, சில நொறுக்குத்தீனி வகைகள், முட்டை பப்ஸ், பன்னீர் பப்ஸ், சிக்கன் பப்ஸ் மற்றும் வாழைப்பழ கேக் போன்ற உணவுப்பொருட்களையும் தங்கள் கடைகளில் அவர்கள் விற்பனை செய்கின்றனர். கிராமத்தில் 200 ச.அடி பரப்பில் ஓர் அறையும் சமையலறையும் கொண்ட வீட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஜோசப். ரூ.8000 சம்பளத்தில் கரூரில் பேருந்து கட்டும் நிறுவனத்தில் அவரது தந்தை பணியாற்றி வந்தார். அவரது தாய் குடும்பத்தலைவியாக இருந்தார். அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார்.அவர் காவல்துறையில் தலைமை காவலராகப் பணியாற்றுகிறார். “என்னுடைய தந்தையின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமம்,” என்ற அவர், “ஐந்தாம் வகுப்பு வரை நான் கான்வென்டில் படித்தேன். அங்கு ரூ.300 மாதக்கட்டணம் கட்டமுடியாத சூழலில் பின்னர் நான் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன்.” பள்ளியில் படிக்கும்போது கூட அவர், சின்ன, சின்ன வேலைகளை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தார். 10ஆம் வகுப்புக்குப் பின்னர் கைத்தறி நடத்தி வந்த ஒருவரிடம் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு மாதம் ரூ.500 சம்பளம் கிடைத்தது. “என்னுடைய சொந்த செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக இந்த வேலையில் நான் சேர்ந்தேன். என் பெற்றோருக்கு எந்த நிதி சுமையையும் நான் கொடுக்க விரும்பவில்லை,” என்றார் ஜோசப். 2006ஆம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், தமிழ்நாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், அந்த தேர்வு முழுவதையும் நிறுத்தி வைப்பதாக அரசு முடிவு செய்ததால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அவருக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் சில மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களில் பணியாற்றினார். சுற்றுலா திட்டங்கள், அழகு சாதனப்பொருட்களை சந்தைப்படுத்தினார்.
|
சில குழு உறுப்பினர்களுடன் ஜோசப்
|
“நான் மாதம் தோறும் வெறும் ரூ.5000 மட்டும் சம்பாதித்தேன். வெளிநாடுகளில் பணிக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆனால், ஏதும் வேலை கிடைக்கவில்லை,” என பட்டப்படிப்புக்குப் பின்னர் ஆரம்ப கட்ட போராட்ட வாழ்க்கையை ஜோசப் நினைவு கூர்ந்தார். 2012ஆம் ஆண்டில் ஆக்சிஸ் வங்கியில் ரிலேஷன்ஷிப் நிர்வாகியாக பணியில் சேர்ந்தார். பின்னர் ஆந்திரா வங்கியில் பணியாற்றினார். அங்கிருந்து ஸ்டேட்பேங்க் இந்தியா பணிக்குச் சென்றார். அங்கு அவர் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்தார். பகுதி மேலாளராக பதவி உயர்வும் பெற்றார். “மாதம் தோறும் ரூ.42,000 சம்பளம் வாங்கியபோதிலும் என்னுடைய பணியில் நான் சந்தோஷமாக இல்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். 2016 ஆம் ஆண்டு வேலையை விட்டு விலகினேன்,” என்றார் அவர். அதே ஆண்டு சென்னை திரும்பிய அவர், கிரான்ட் மாலில் பிளாக் பெக்கோ என்ற தேநீர் கடையை, நகரும் படிக்கட்டுக்குக் கீழே 100 ச.அடி இடத்தில் திறந்தார். “நான் ஒரு தேநீர் காதலன் என்பதால் தேநீர் கடையை தொடங்கினேன்,” என்றார் ஜோசப். ஒரே ஒரு ஊழியருடன் முதலாவது கடையை அவர் தொடங்கினார். “இந்த கடை பெரும் வெற்றி பெற்றது. தினசரி ரூ.8000த்துக்கும் அதிகமாக விற்பனை இருந்தது. முடிவாக, சிறப்பாக செயல்பட்டு நல்ல பணம் ஈட்டுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ந்தேன்.” ஆண்டு வருவாய் அதிகரித்ததால் ஊக்கமடைந்து, இரண்டாவது கடையில் ஜோசப் ரூ.20 லட்சம் முதலீடு செய்தார். ஆலந்தூரில் 900 ச.அடியில் கடையை அவர் திறந்தார். “புதிய கடையை திறக்க வங்கிக் கடன் பெற்றேன். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை பார்க் செய்வதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. எனவே நான்கு மாதங்களுக்குள் அந்த கடையை மூட நேர்ந்தது,” என்றார் அவர்.
| ஜோசப்பிடம் இருந்து பல ஐடி பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் பிரான்ஞ்சைஸ் எடுத்தனர் |
ஆனால், ஜோசப் தன் முயற்சியை விடுவதாக இல்லை. பழைய மகாபலிபுரம் சாலையில் நெவில் டவரில் இருந்த ராமானுஜம் ஐடி சிட்டியில் மூன்றாவது கடையை அவர் திறந்தார். அது திருப்புமுனையாக அமைய, கிடுகிடுவென வளர்ந்தார். “பிராண்ட் மற்றும் கடையின் அளவைப் பொறுத்து மாதம் தோறும் ரூ.40,000 முதல் ரூ.1 லட்சம் வரை எங்களது கிளைகள் வருவாய் ஈட்டின,” என்றார் ஜோசப் . பெண் தொழில்முனைவோர் தொழில் தொடங்குவதை அவர் ஊக்குவித்தார். குடும்ப தலைவிகள் பிரான்ஞ்சைஸ் தொடங்குவதற்கு கட்டணத்தில் தள்ளுபடி வழங்கினார். “இதுவரை 13 பெண்கள் எங்களிடம் பிரான்ஞ்சைஸ் எடுத்துள்ளனர். மாதத்துக்கு ரூ.5 லட்சம் வரை அவர்கள் விற்பனை செய்கின்றனர். அவர்களின் கணவர்களில் பெரும்பாலானோர் இந்த பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்திருக்கின்றனர். “ தேநீர் வணிகத்தை விரிவாக்குவது என அவர் திட்டமிட்டிருக்கிறார். 500 கடைகள் திறக்க திட்டமிட்டிருக்கிறார். “500 கடைகளின் வாயிலாக தினந்தோறும் ஒரு கோடி தேநீர் கோப்பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்,” என்று கூறும் ஜோசப்புக்கு திருமணம் ஆகிவிட்டது. 10 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
அதிகம் படித்தவை
-
தேநீர் மன்னர்கள்!
பாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை
-
வெற்றிக் கோடுகள்
நீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை
-
தேநீர் காதலர்!
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஜோசப் ராஜேஷ் ஒரு தேநீர் காதலர். வங்கியில் வேலை பார்த்து பின்னர் அதை விட்டுவிட்டு தேநீர் கடையைத் தொடங்கினார். இப்போது சங்கிலித் தொடர் தேநீர்க் கடைகளைத் தொடங்கி ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிலால் கான் எழுதும் கட்டுரை
-
மாம்பழ மனிதர்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை
-
ஆயிரம் கோடி கனவு!
கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
