15 லட்சம் முதலீட்டில் 141 கோடி ஆண்டுவருவாய்! அவுட்சோர்ஸிங் தொழிலில் அசத்தும் சுஷாந்த் குப்தா!
11-Sep-2024
By சோபியா டேனிஷ்கான்
புனே
பெரும்பாலும் எதிர்பாராத சமயங்களில்தான் வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும். சுஷாந்த்
குப்தாவை பொறுத்தவரை, அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பரின் போன் அழைப்பு மூலம் அந்த அதிர்ஷ்டம்
அவரை தேடி வந்தது. இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக ஆய்வு தொடர்பான பணிகளை அவுட்சோர்ஸ் முறையில்
செய்து கொடுக்க வேண்டும் என்றும்,
அதற்காக உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
“நான் ஒரு
வல்லுநர் குறித்து அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அந்த நண்பர்
மீண்டும் இரண்டு மாதம் கழித்து, எந்த ஒரு
ஒப்பந்தத்தையும் தம்மால் இறுதி செய்ய முடியவில்லை என்றும், என்னால் அந்தப் பணியை செய்ய முடியுமா? என்றும்
கேட்டார்,” என்ற சுஷாந்த் குப்தா(53), புனேவை
அடிப்படையாக கொண்ட எஸ்ஜி அனலைட்டிக்ஸ்(SG Analytics Private
Limited) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தனி ஒரு ஆளாக
தம்முடைய மகளின் படுக்கை
அறையில் 2007ஆம் ஆண்டு நிறுவினார்
.
சுஷாந்த் குப்தா எஸ்ஜி அனலைட்டிக்ஸ்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை 2007ம் ஆண்டு
தமது மகளின் படுக்கை அறையில் தொடங்கினார். (புகைப்படங்கள்; சிறப்பு
ஏற்பாடு)
|
அவர் அப்போதுதான் குடும்பத்தை நாக்பூரில் இருந்து புனேவுக்கு கொண்டு வந்திருந்தார். முந்தைய வணிகத்தில் இருந்து பிரிந்து, தனக்கு கிடைத்த பங்குகளை வி்ற்பனை செய்திருந்தார். வாழ்க்கையை எளிமையாக வாழத்தொடங்கியபோது அவருக்கு வந்த தொலை பேசி அழைப்பு அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. “அந்த நாட்களில் எந்த ஒரு பொறுப்பும் இன்றி சும்மா இருந்தேன். பெரும்பாலும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தபடி இருந்தேன்,” என்றார் டெல்லி ஐஐடியில் இருந்து எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற சுஷாந்த். ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட எஸ்ஜி அனலைட்டிக்ஸ் இன்றைக்கு இந்தியாவில் முன்னணியில் உள்ள டேட்டா அனலைட்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக தகுதி பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தில் 900 பேர் வேலை பார்க்கின்றனர். ஆண்டு வருவாய் ரூ.141 கோடியாக இருக்கிறது. யுபிஎஸ், கிரெடிட் சுய்ஸீ, மார்கன் ஸ்டேன்லி போன்ற ஃபார்சூன் 500 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றுடன் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். எஸ்ஜி அனலைட்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியபோது சுஷாந்தின் இரண்டு மகள்கள் முறையே 12 மற்றும் 7 வயது பூர்த்தியானவர்களாக இருந்தனர். தமது மகள்களின் படுக்கை அறையில் இருந்துதான் முதல் எட்டு மாதங்கள் பணியாற்றினர். நிறுவனம் வளர்ச்சியடைந்தபோது ஊழியர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்தது. “அது ஒரு சிறிய அறை. எட்டுமாதத்துக்குள் நிறுவனத்தில் பலர் பணிக்கு சேர்ந்தனர். 11 கம்ப்யூட்டர்களை அந்த அறையில் வைத்திருந்தோம். வேறு இடத்தில் நிறுவனத்தை இடம் மாற்ற வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்,” என்று சுஷாந்த், எஸ்ஜி அனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலகட்டங்களை நினைவு கூர்ந்தார்.
எஸ்ஜி அனலைட்டிக்ஸ் நிறுவனத்துக்கு தற்போது 900 ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு புனே, ஐதராபாத், நியூயார்க், சியாட்டில், ஆஸ்டின், லண்டன், ஜூரிச் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன |
“அது ஒரு குடும்ப சூழல் போன்று இருந்தது. என் மனைவி அடிக்கடி எங்களுக்கு இடைவேளை நேரங்களில் பிஸ்கெட், தேநீர் கொடுப்பார். வேலை, பயணம், தூக்கம் என அந்த சமயத்தில் வாழ்க்கை சூழல் இருந்தது. அதை தவிர வேறு ஒன்றும் இல்லை.என் வாழ்க்கையில் என் மனைவி சிமி சாதகமான ஊக்கமளிப்பவராக திகழ்ந்தார்.’’ சுஷாந்த் பொறியியல் படிப்பு தவிர பிரான்ஸில் உள்ள இன்சீட் கல்வி(INSEAD) நிறுவனத்தில் நிதிப் பிரிவில் எம்பிஏ படித்தவர். அவரது கல்வி பயிற்சியானது விரைவிலேயே அனலிடிக்ஸ் திறனை வளர்த்தெடுத்துக்கொள்ள உதவியது. “நான் கற்றுக்கொண்டு புதியவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் மட்டுமின்றி, விற்பனை, செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் அனைத்தையும் கையாண்டேன், என்றார் சுஷாந்த். “சூரிச்சில் இருக்கும் அகமது ஹக்கி என்ற என்னுடைய நண்பர் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக சேர்ந்தார். ஏறக்குறைய எல்லா வாரமும் நான் சூரிச் சென்று வந்தேன்.” “எனக்கு முதுகு வலி இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனுடன் போராடி வந்தேன். புனேவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்பது பெரிய வேலையாக இருந்தது. புனேவில் இருந்து நேரடியாக சர்வதேச விமானங்கள் இல்லை.” “எனவே, நான் மும்பைக்கு பயணித்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்பேன். பயணத்தின்போதே அழைப்புகளை எடுத்துப் பேசுவேன். பிரச்னைகளை சரி செய்வது, விற்பனைகளை மேற்கொள்வதையும் செய்து வந்தேன்.” அது போன்ற நாட்களில் சுஷாந்தின் மனைவியான பர்மிந்தர் என்ற சிமி, அவருடைய பெரும் தூணாக இருந்து ஆதரவு தந்தார். தாம் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகத் தகுதி பெறுவதற்கு அவர் ஆதரவுதான் பெரும் காரணம் என சுஷாந்த் குறிப்பிடுகிறார். இன்றைக்கு, புனேவில் உள்ள காரடியில் (சிறப்புப்பொருளாதார மண்டம்) ஐடி பார்க்கில் இஓஎன் வளாகத்தில் எஸ்ஜி அனலைட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 25,000 ச.அடியில் பரந்து விரிந்த அலுவலகம் இருக்கிறது. அவர்களுக்கு ஐதராபாத் மட்டுமின்றி நியூயார்க், சியாட்டில், ஆஸ்டின், லண்டன், சூரிச் ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையை அடைவதற்கு முன்பு சுஷாந்தின் வாழ்க்கையானது பல ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தது. அவர் தோல்வி கூட அடைந்திருக்கிறார். 1989ஆம் ஆண்டு ஐஐடியில் பட்டம் முடித்த பின்னர், நார்வே ஸ்க்லம்பெர்கரில் சீமென்ஸ் நிறுவனத்தில் லாக்கிங் (logging engineer)பொறியாளராக அவருக்கு முதன்முதலாக வேலை கிடைத்தது. பின்னர் அதில் இருந்து விலகி வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். 1997ஆம் ஆண்டு, ஆண்டுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் சம்பாதித்தார். 1999ஆம் ஆண்டில் தமது சேமிப்பில் 30,000 அமெரிக்க டாலர்களைக் கொண்டு லண்டனில் சிட்டிகே பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார்.
சுஷாந்த் மற்றும் அவரது மனைவி சிமி. சுஷாந்தின் தொழில் முனைவு பயணம் முழுவதும் அவர் ஒரு தூணைப்போல ஆதரவு தருகிறார் |
“இந்த நிறுவனம் மொபைல் போனில் நகர வழிகாட்டி வசதியை அளித்தது. ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது கூகுள் வரைபடம் செய்யும் பணியை அடிப்படையாகக் கொண்டு அப்போது இது உருவாக்கப்பட்டது. சந்தையில் அப்போது மிகவும் முன்கூட்டியே தொடங்கப்பட்ட ஒன்றாக அந்த நிறுவனம் இருந்தது,” என்றார் சுஷாந்த். “அப்போது எங்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது போனில் இணைய இணைப்பு ஆகியவை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டோம். “பின்னர் லண்டனில் உள்ள ஒரு குடும்ப அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன்.அவர்களின் நிதி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டேன்.” பின்னர் அவர் ஓர் ஐடி சேவைகள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஐரோப்பிய நாடுகளில் அப்போதுதான் அந்த நிறுவனம் நிலைபெறத் தொடங்கியது. நிறுவனத்தின் சிறு பங்குதாரராக சுஷாந்த் இருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவராகவும் இருந்தார். 2002-04 வரை இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். போதுமான சேமிப்புடன் 2004ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி வந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அது போதுமானதாக இருந்தது. “அந்த வருடங்களில் நான் சில சொத்துகளை வாங்கினேன். பின்னர் அவற்றை விற்பனை செய்தேன். ஆனால், எப்போதுமே நாங்கள் வசதியாக இருந்தோம்,” என்றார் அவர். “எஸ்ஜி அனலைட்டிக்ஸ் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் லாபகரமாக சென்றது. என்னால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் எடுக்க முடிந்தது. வாழ்க்கை மேலும் வசதியானதாக மாறியது.” 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுக்கும் இடையே பல்வேறு விஷயங்களை அவர் செய்தார். ஆரம்பத்தில் நாக்பூரில் இருந்து சில முயற்சிகளில் ஈடுபட்டார். அங்குதான் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை நிலம் இருந்தது. அதில் அவர் இயற்கை விவசாயத்தில் இறங்கினார், மேலும் எலுமிச்சை புல், பால்மரோசா மற்றும் சிட்ரோனெல்லா ஆகியவற்றை பயிரிடத் தொடங்கினார். வணிக ரீதியாக அவை நன்றாகப் போகவில்லை என்பதால் ஆறுமாதங்களில் அதில் இருந்து விலகினார். பின்னர் கிராம நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் ஆவிஷ்கார் கேப்பிட்டல்ஸ் நிறுவனத்தின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவரது நிறுவனத்தில் அவர்கள் முதலீடு செய்தனர்.
சுஷாந்த் நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறார். தேநீர் குடிப்பதற்கும் பன் உண்பதற்கும் இன்னும் பக்கத்தில் உள்ள தேநீர் கடைக்கு செல்வதைத்தான் அவர் விரும்புகிறார் |
“நான் வேலையில் இல்லாதபோது, என்னுடைய சேமிப்பை வைத்து என்னால் வாழ்க்கையை நிர்வகிக்க முடிந்தது. நிதி நிலை எவ்வளவு நெருக்கடியாக இருந்தது என்பது குறித்து என் மனைவிக்கும் மகள்களுக்கும் தெரியாது.” “அதனால் நான் பதற்றம் அடையவில்லை. முடிவில் எல்லாம் சரியாகி விடும் என்று எனக்குத் தெரியும்,” என்றார் சுஷாந்த். இந்த காலகட்டத்தில் ஓப்பன் சோர்ஸ் பயிற்சி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். பின்னர் அந்த பங்குகளை விற்பனை செய்து விட்டார். இப்போதைக்கு தேவைப்படுவதை விடவும் அதிக பணம் இருப்பதாக சுஷாந்த் நம்புகிறார். ஆனால், பணம் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். அது ஒரே இடத்தில் குவிந்து இருக்கக் கூடாது என்றும் சொல்கிறார். “இப்போது பணம் செலவழித்து நல்ல வாழ்க்கை வாழ்கின்றோம். பெரிய பிளாட் வீட்டுக்கு நாங்கள் இடம் பெயர்ந்தோம். என்னுடைய மனைவியின் விருப்பத்தின் பேரில் வீட்டைப் புதுப்பித்தேன். எனினும், தேநீர் குடிப்பதற்கும் பன் சாப்பிடுவதற்கும் பக்கத்தில் உள்ள கடைக்குச் செல்வதைத்தான் விரும்புகிறோம்,” என்றார். சுஷாந்த் நிறுவனம், பல சமூக பொறுப்புடைமை பணிகளையும் கூட மேற்கொண்டுள்ளது. ரோட்டரி கிளப் வாயிலாக கொரோனா பெருந்தொற்றின் போது பாதிக்கப்பட்ட 12,000 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. வாரணாசியில் பெண் தொழில்முனைவோருக்கு நிதி உதவி அளிக்கும் சம்பார்க் நிறுவனத்தில் சுஷாந்த் உறுப்பினராகவும் இருக்கிறார்.
அதிகம் படித்தவை
-
உயரப் பறத்தல்
விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை
-
சிறிய அறை, பெரியலாபம்
பல தொழில்களை செய்து பார்த்து நஷ்டம் அடைந்தவர் ரவிஷ். ஜப்பான் நாட்டில் உள்ளது போன்ற போட் அல்லது கேப்சூல் எனப்படும் மிகச் சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல்களை திறந்தார். இன்றைக்கு விரைவாக அறைகள் புக் ஆகின்றன. அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!
அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்
-
வெற்றிதந்த காபி!
இவர் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர். வெற்றிகரமாக நடந்த முதல்தொழில் தோற்றாலும் கலங்கவில்லை. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் விற்பனை செய்யும் காபி தொழிலதிபராக இன்று மாறி இருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். கட்டுரை: உஷா பிரசாத்
-
கண்டெய்னரில் கண்ட வெற்றி!
இரண்டு முறை தொழில் தொடங்கி தோல்வியடைந்தார் இக்பால் தங்கல். இருப்பினும் முயற்சியில் தளராமல் மூன்றாவது முறையாக கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் கட்டமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பத்து ரூபாய் பழரசம்!
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.