ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளித்து வறுமையை ஒழிக்கும் திட்டம்!
30-Oct-2024
By ஜி சிங்
கொல்கத்தா
மேற்குவங்கத்தில் வறுமையில் சிக்கித்தவிக்கும் மகளிரைக் கண்டு மனம் நொந்தார் சந்திர சேகர் கோஷ். அவர் மனம் வருந்தியதுடன் நிற்கவில்லை என்பதுதான் இங்கே முக்கியம். அவர்களுக்கு சிறுதொழில் செய்ய கடன் வழங்க முன்வந்தார். 2001-ல் அவர்களுக்கு சிறுகடன் அளிக்கும் நிறுவனத்தை 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கவும் செய்தார்.
இன்று 16 ஆண்டுகள் கழித்து கோஷ் கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட பந்தன் வங்கியின் தலைவராக இருக்கிறார். கிழக்கு இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பின் உருவான முதல் தனியார் வங்கி. 12,500 கோடி ரூபாய்கள் கையிருப்புடன் வங்கித்தொழில் செய்ய இந்தியாவில் அனுமதி வாங்கிய முதல் சிறுகடன் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
|
பந்தன் வங்கியின் தலைவர், நிர்வாக இயக்குநரான சந்திரசேகர் கோஷ், குறைந்த காலகட்டத்தில் சிறுகடன் துறையில் பெருவெற்றி பெற்றுள்ளார்
|
இந்த வெற்றிக்கதைக்கு ஆதாரமான கோஷ் வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். “நான் திரிபுராவில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். என் தந்தை சிறு இனிப்புக்கடை நடத்திவந்தார். 15 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் ஆறுகுழந்தைகளில் மூத்தவன் நான்.”
கடையில் இருந்து வந்த வருமானம் சாப்பாட்டுக்கே போதவில்லை. பிள்ளைகளுக்குப் கல்வி அளிக்க அவரது அப்பா மிகவும் சிரமப்பட்டார்.
கோஷ் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தார். பின்னர் வங்க தேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தில் 1978ல் புள்ளியியல் படித்தார்.
அவரது அப்பா ப்ரோஜானந்த் சரஸ்வதி என்ற சாமியாருக்கு சீடராக இருந்தார். சாமியின் ஆசிரமம் பல்கலைக்கழகத்தில் இருந்தது. அங்கேயே தங்குமிடமும் சாப்பாடும் கோஷுக்குக் கிடைத்தது. கல்விக்கட்டணத்துக்காக கோஷ் டியூஷன்கள் எடுத்தார். அவரது முதல் வருமானம் 50 ரூபாய். அதைக் கொண்டு அப்பாவுக்கு ஒரு சட்டை எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார். அவரது அப்பா சட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு இதை உன் சித்தப்பாவிடம் கொடு. அவனுக்குத்தான் சட்டையே இல்லை என்றார். அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்று கோஷுக்குப் புரிந்தது.
“மகளிரின் நிலை கண்டு கண்ணீர் விட்டேன். கணவன்களால் கைவிடப்பட்டு, வீட்டில் எந்த வசதியும் இன்றி முடங்கிக் கிடந்தார்கள்,” என்கிறார் அவர். முதுகலைப் படிப்பு முடித்ததும் சர்வதேச வளர்ச்சி நிறுவனமான டாக்காவில் இயங்கிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். வங்க தேசத்தின் சிறுகிராமங்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டது அந்த அமைப்பு.
|
கொல்கத்தாவில் உள்ள பந்தன் வங்கி தலைமையகம் முன்னால் நிற்கிறார் கோஷ் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
எதிர்கால தலைமுறைகளுக்கு மகளிரின் நலன் முக்கியம் என்று உணர்ந்த கோஷ் அந்நிறுவனத்தில் பத்தாண்டுகள் வரை பணிபுரிந்தபின்னர் 1997-ல் கொல்கத்தாவுக்கு வந்தார்.
1998-ல் கிராமப்புற நலச் சங்கம் என்ற லாபநோக்கற்ற நிறுவனத்தில் மக்களுக்கு தங்கள் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சேர்ந்தார். பல கிராமங்களுக்குச் சென்றார். வங்கதேசத்தில் இருப்பதுபோலவே இங்கும் பெண்கள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தார்.
“தொழில் நடத்த பெண்களுக்கு பணம் இருந்தால் அவர்கள் சொந்தக்காலில் நிற்க முடியும். ஆனால் பெரும்பாலானோர் கல்வி அறிவு அற்றவர்கள். கந்துவட்டிக்காரர்களிடம் மாட்டிச் சிரமப்பட்டனர்.”
எனவே அவர்களுக்கு கடன்கொடுக்க சிறுகடன் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க கோஷ் முடிவு செய்தார் ஆனால் அவர் அப்போது வேலை இல்லாமல் இருந்தார். தாய், மனைவி மகன் என்றிருந்த குடும்பத்தை நடத்த சிரமப்பட்டார்.
அவரது மைத்துனர் உதவிக்கு வந்தார். அவர் 1.65 லட்சம் பணம் கொடுத்தார். வேறு ஒருவரிடம் 35000 கடன் வாங்கிப் போட்டு சிறுகடன் நிறுவனத்தை மூன்று ஊழியர்களுடன் தொடங்கினார் கோஷ்..
ஜூலை 2001-ல் கொன்னாகரில் பந்தன் சிறுகடன் நிறுவனம் உருவானது. “பந்தன் என்றால் இணைந்து செயல்படுவதாக அர்த்தம். சமூகத்தை இணைக்க விரும்பினேன்,” என்கிறார் கோஷ்.
“நான் ஹூப்ளி மாவட்டத்தில் கிராமப்பெண்களைச் சந்தித்து எங்களிடம் கடன்பெற்று தொழில் தொடங்கி தங்கள் குழந்தைகளின் கல்வித்தேவையை எதிர்கொள்ளுமாறு கூறினேன். ஆரம்பத்தில் அவர்கள் என்னை சந்தேகக்கண்ணுடன் பார்த்தனர்,” என்கிறார் அவர்.
|
கோஷ், கொல்கத்தாவில் உள்ள தலைமையகத்தில் தன் சகாக்களுடன். பந்தன் வங்கியில் 20,000 பேர் வேலை செய்கிறார்கள்
|
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி 2002-ல் பந்தனுக்கு 20 லட்சம் கடன் வழங்க முன்வந்தது.
இதைத் தொடர்ந்து பந்தனின் அடுத்த கிளையை ஹவுரா மாவட்டத்தில் பாக்னான் என்ற இடத்தில் தொடங்கினார். அடுத்த ஆண்டு பந்தன் 1,120 பெண்களுக்கு 15 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கி இருந்தது.
இருப்பினும் அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே வட்டி வசூலிக்கவேண்டி இருந்தது. ஏனெனில் வங்கிக்கடனை அடைக்கவேண்டும். சம்பளம் மற்றும் பிற செலவுகளைச் சமாளிக்கவேண்டும். அப்போது 12 பேர் வேலை பார்த்தார்கள்.
ஆனால் இப்போது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளனர்.
“நாங்கள் ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற வட்டி வீதத்தில் தொடங்கினோம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 20.5 % ஆக குறைத்துள்ளோம். கணக்கீட்டுக் கட்டணம் இல்லை. இந்த வீதம் நாட்டிலேயே சிறுகடன் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவானது,” என்கிறார் கோஷ்.
2009ல் பந்தனை வங்கி அல்லாத நிதி நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தார். இன்றுவரை பந்தன் பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கி உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கிராமவாசிகள். இதன் மூலம் 79 லட்சம் மகளிரின் வாழ்வை மாற்றி உள்ளது.
அவர்களில் ஒருவர் அபர்னா பாரியா. ஹூக்ளி மாவட்டத்தில் சம்பாஹதியைச் சேர்ந்தவர். 2005-ல் அவர் 2000 ரூ மீன் விற்பனைக்குக் கடன் வாங்கினார். அவர் பின்னர் மளிகைக்கடை வைத்தார். லாபகரமாக இருக்கிறார். குடிநீர் போத்தல்கள், டிஷ் டிவி வரை இன்று விற்கிறார் அவரிடம் ஐந்துபேர் வேலை செய்கிறார்கள். அவரது மகன் மொபைல்போன் கடை வைத்துள்ளார். அபர்னா பந்தனிடம் இப்போது 1.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இதுபோல் பல வாழ்க்கைக்கதைகள் உள்ளன. 2013-ல் வங்கி உரிமத்துக்காக பந்தன் விண்ணப்பித்தது. டிசம்பர் 23, 2014ல் பந்தன் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாக பந்தன் மாறியது.
|
பந்தன் மற்றும் அதன் நிறுவனர் - பல விருதுகள் குவிந்துள்ளன
|
ஏப்ரல் 2014-ல் ரிசர்வ் வங்கி அதற்கு வங்கி உரிமம் தர சம்மதம் தெரிவித்தது. 17 ஜூன் 2015-ல் உரிமம் வழங்கப்பட்டது.
23 ஆகஸ்ட் 2015-ல் கொல்கத்தாவில் பந்தன் வங்கியை நிதித்துறை அமைச்சர் அருண் ஜெய்ட்லி திறந்து வைத்தார். சிறுவங்கித்துறை மற்றும் பொதுவான வங்கிச் செயல்பாடு என இரு பிரிவுகள் இதில் உள்ளன.
குறைந்த பட்சம் 500 கோடி ரூபாய் முதலீடு இருக்கவேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி. பந்தன் தொடங்கியபோது அதனிடம் 2,570 கோடி முதலீடு இருந்தது.
பந்தனில் இருந்த 67 லட்சம் சிறுகடன் வாடிக்கையாளர்களின் கணக்குகள் புதிய வங்கிக்கு மாற்றப்பட்டன. அதன் மூலம் 10,000 கோடி கடன் வழங்கியிருக்கிறோம் என்கிற நிலையுடன் வங்கி செயல்படத்தொடங்கியது.
ஜிஐசி ப்ரைவேட் லிமிடட், சர்வதேச நிதிக்கழகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ஆகியவை பின்புலமாக இருந்தன. முதல் நாளே இந்த வங்கி 501 கிளைகள், 2022 வீடு தேடிப்பணி செய்யும் மையங்கள், 50 ஏடிஎம்கள் ஆகியவற்றுடன் தொடங்கியது. தற்போது பந்தன் 24 மாநிலங்களில் 670 கிளைகளுடன் உள்ளது.
15,500 கோடி கடன் வழங்கி உள்ள இந்த வங்கி, 99.5 சதவீதம் கடன்கள் திருப்பிச்செலுத்தப்படும் வீதத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
|
பந்தனின் சிறுகடன் திட்டம் 79 லட்சம் மகளிரின் வாழ்வை மாற்றி உள்ளது
|
12,500 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகையும் 84 லட்சம் வாடிக்கையாளர்களும் பந்தனிடம் உள்ளனர். 20,600 ஊழியர்கள். இதில் 90 சதவீதம் பேர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.
ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பந்தன்- கொன்னாகரில் உள்ள சிறுகடன்கள் அனைத்தும் வங்கிக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனாலும் அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குகிறது. கிராமப்புறங்களில் வளர்ச்சிப்பணிகளைச் செய்துவருகிறது. 11 மாநிலங்களில் உள்ள 470 கிளைகள் மூலம் இப்பணி நடக்கிறது.
இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட விருதுகளை பந்தன் நிறுவனமும் அதன் நிறுவனரும் வென்றுள்ளனர். பந்தன் சர்வதேச வளர்ச்சி நிறுவனமாக 2014-ல் உலக பொருளாதார மாநாட்டில் அங்கிகரிக்கப்பட்டது.
கோஷ் இப்போது பந்தன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தன் பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டுள்ளார். “வறுமையான குழந்தைகளின் முறைசாராக் கல்வியை 3 ஆம் வகுப்புவரை பயில நிதி அளிக்கிறோம்,” என்கிறார் அவர்.
மேற்குவங்கம், அசாம், பீஹார், ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற ஆரம்பப்பள்ளிகள் 1200க்கு மேல் உள்ளன. இவற்றில் கட்டணம் இல்லை. வீட்டுப்பாடமும் இல்லாத முறைசாரா பள்ளிகள் இவை. இங்கு 6-12 வயதுள்ள 39000 பிள்ளைகள் சுவாரசியமான கல்வியைக் கற்கிறார்கள்.
இதுமட்டும் அல்லாமல் மேற்குவங்கத்தில் முறை சார்ந்த ஏழு ஆரம்பப்பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் பந்தன் அகாடமி என்ற பெயரில் இயங்குகின்றன. அதில் ஒவ்வொன்றிலும் 150 பிள்ளைகள் படிக்கிறார்கள். நர்சரி முதல் மூன்றாம் வகுப்புவரை படிக்கலாம். மேலும் பல சுகாதார, குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திலும் குழந்தைகளுக்குக் கல்விபுகட்டி வறுமையை ஒழித்தல் அவரது இலக்கு. மிகக்கடினமான இலக்கு. கோஷ் கடினமான இலக்குகளையே தேர்வு செய்கிறவர்.
அதிகம் படித்தவை
-
தேநீர் கடை தந்த வெற்றி!
மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.
-
கம்பளிகளின் காதலன்!
பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
வெற்றிதந்த காபி!
இவர் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர். வெற்றிகரமாக நடந்த முதல்தொழில் தோற்றாலும் கலங்கவில்லை. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் விற்பனை செய்யும் காபி தொழிலதிபராக இன்று மாறி இருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். கட்டுரை: உஷா பிரசாத்
-
சிறிய கடையில் பெரிய கனவு
அரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை