இன்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் பெரிய விமான நிறுவமாக ஆனது எப்படி? வெற்றியின் பின்னணியில் இருவர்!
12-Feb-2025
By ஷெல்லி விஷ்வஜித்
புதுடெல்லி
இந்தியாவின் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோவின் (indiGo) இப்போதைய மதிப்பு 27,500 கோடி ரூபாய். ராகுல் பாட்டியா, ராகேஷ் கேங்க்வால் ஆகிய இரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தொழில் அதிபர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நிறுவனம். அவர்கள் இருவரும் இந்த விமான நிறுவனத்தை 350 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கினர்.
இன்றைக்கு இன்டிகோ நிறுவனத்தில் 200 –க்கும் அதிகமான விமானங்கள் உள்ளன. தினமும் 1300 விமான சேவைகளை இயக்குகிறது. அவர்களின் நிறுவனத்தில் 25,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உலகம் முழுவதும் 60 நகரங்களில் 126 அலுவலகங்கள் உள்ளன.
|
இன்டிகோ இந்தியாவின் பெரிய விமானநிறுவனம். ராகுல் பாட்டியா (இடது), மற்றும் ராகேஷ் கேங்வால் இருவராலும் 2004-ம் ஆண்டு 350 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு-வடிவமைப்பு டி.டபிள்யூ.எல் க்ரியேட்டிவ்ஸ்)
|
ராகுல், ராகேஷ் இருவரும் 2004-ம் ஆண்டு இன்டர் குளோப் ஏவீயேஷன் என்ற பெயரில் இன்டிகோ ஏர்லைன்ஸ் உரிமையாளர்களாக இணைந்தபோது, இந்திய விமானப்போக்குவரத்தின் நிலை படுபாதாளத்தில் இருந்தது. எனினும், ராகுல் மற்றும் ராகேஷ் இருவரும், இந்திய விமானப்போக்குவரத்துறை வரலாற்றில் பெரிய வெற்றிகரமான கதையை எழுதினர்.
தனிநபர் உரிமையாளர் நிறுவனம் அல்லது ஒரு லிமிட்டெட் கட்டமைப்புள்ள நிறுவனம் என வேறு எந்த முறையிலான தொழில் முறைகளை விடவும், பங்குதாரர் முறையிலான தொழில் முறையில் அதிக தோல்வி ஏற்படுவதாக நம்பத்தகுந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் பலர் பங்குதாரர்களாகச் சேர்கிறார்கள். ஆனால், பொதுவான நோக்கம், பொதுவான பண்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் சேருகின்றனர். ஆழ்ந்த பிணைப்பு இல்லாத பங்குதாரர் இணைப்பு என்பது நீண்டகாலம் நீடிக்காது. எனினும், இதில் பல மகத்தான விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைக்கு நமக்கு நன்றாகத்தெரிந்த குறிப்பிடத்தக்க சில பிராண்ட்கள், வெவ்வேறான சிந்தனைகள் கொண்ட இரண்டு தனிநபர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியவைதான். அவர்கள் முற்றிலும் வெவ்வேறான நபர்கள் என்றபோதிலும், தங்களுக்கு இடையேயான ஒத்த கருத்துகளைக் கொண்டு, பொதுவான கனவுகளுக்கு வடிவம் கொடுத்தனர். அவர்களின் கனவுகள் பெரும் தொழில் சாம்ராஜ்யமாக மாறின.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலென் (மைக்ரோசாஃப்ட்); பில் ஹெவ்லெட் மற்றும் தேவ் பேக்கார்ட் (ஹெச்பி) ஆகியோர் இது போன்ற பங்குதாரர்களுக்கு இரண்டு உதாரணங்கள்.
ராகுல் மற்றும் ராகேஷைப் பொறுத்தவரை ஆளுமை ரீதியாக இருவரும் தனித்தனித் திறன் மிக்கவர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் போன்றவர்கள்தான். ஆனால், தங்களுடைய தனித்தனித்திறமைகளை ஒருங்கிணைத்து ஒரு தளத்துக்குக் கொண்டு வந்தார்கள். எப்படி ஒரு கணினியை கட்டமைப்பது என்பது வோஸ்னியாக்குத்தெரியும்.(இவர்தான் ஆப்பிள் 1 ஆப்பிள் 2 கணினிகளை வடிவமைத்து கட்டமைத்த முக்கியமான நபர்). ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு எப்படி சந்தைப்படுத்துவது என்பது தெரியும்.
இன்டிகோவைப் பொறுத்தவரை, ஒரு தொலைநோக்குடன் கூடிய திறன் மிக்கவர் ராகுல். ராகேஷ் அமைதியாக ஒரு பணியைச் செய்யக் கூடியவர், செயல் வல்லமை கொண்டவர். ராகுல், வணிக ரீதியான கணிதத்தின் பின்னணி உணர்வைக் கொண்டவர். தவிர, இந்திய ஒழுங்குமுறைச் சூழல்களை அறிந்தவர். அதே நேரத்தில், ராகேஷூக்கு ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பது தெரியும். பிரச்னைக்குரிய சமயங்களில் 90-களில் அமெரிக்கன் ஏர்வேஸ் நிறுவனத்தை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் அவர்.
|
இன்டிகோ விமான நிறுவனத்தில் செலவை குறைக்கும் நடைமுறைகள், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் சமரசம் செய்துகொள்ளவில்லை.
|
பிரச்னைக்குரிய தருணங்களில் செயல்படும் திறன் மிக்கவர் ராகேஷ். நெருக்கடியான தருணங்களில்கூட எங்கு லாபம் கிடைக்கும் என்பது கூட அவருக்குத் தெரியும். சிக்கலான தருணங்களில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இயக்குவதற்கான செலவுகள் காரணமாக இழப்புகளை சந்தித்தபோது, இதனால் இன்டிகோவுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டது.
தவிர அவருக்கு பேச்சுவார்த்தை நடத்தும் திறனும் இருந்தது. ஏர்பஸ் போன்ற நிறுவனத்தில் இருந்து, இன்னும் சொந்தமாக விமானங்களை பறக்கவிடாத நிறுவனம் ஒன்றுக்கு 100 விமானங்களை சப்ளை செய்ய வைத்த திறன் அவருடையது. யுஎஸ் ஏர்வேஸ் விமான நிறுவனத்துடன் அவர் பணியாற்றிய நாட்களில், ஏர்பஸ் உடனான பழைய தொடர்புகள் அவருக்கு உதவின. அந்தத் தருணத்தில், ஏர்பஸ் நிறுவனம், இந்திய வான்வெளியில் தன் விமானங்களை இயக்குவதற்கு ஒரு நிறுவனத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது.
ராகுல் மற்றும் ராகேஷ் இருவரும் இந்திய விமானப்போக்குவரத்து துறை வரலாற்றை மாற்றி எழுதுவது என்ற கனவைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் அந்த கனவை செயல்படுத்தும் பணிகளை உன்னதமாக மேற்கொண்டனர்.
பெரும் கனவுகளைக் கொண்ட இருவரும் இணைந்தபோது, தொழில் களத்தில் நேர்மையான வழியில் இயங்குவது என்பதில் தெளிவாக இருந்தனர். நேர்மை மற்றும் வலுவான தொழில் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வெற்றிக்கதையை எழுதுவதையே அவர்கள் விரும்பினர்.
இருவரும் இணைந்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு திட்டத்தை உருவாக்கி, வடிவமைத்து, செயல்படுத்தினர். குறிப்பிடத்தக்க திட்டமிடல், செலவு குறைக்கும் முறைகளுடன் குறைவான நேரத்தில், குறைந்த கட்டணத்திலான விமான சேவையை அதே நேரத்தில் லாபத்துடன் இந்த இருவரும் கட்டமைத்தனர். இலகுரக விமானங்களையும், பல்வேறு எரிபொருள் குறைக்கும் கட்டுப்பாடு முறைகளையும் இன்டிகோ கடைபிடிக்கிறது.
அதே நேரத்தில், அவர்களின் சேவையின் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் இதனை மேற்கொண்டனர். மரியாதைக்குரிய சேவை, நேரத்தை மிச்சப்படுத்துதல், இளம் விமானிகளைக் கொண்ட குழுவுடன் இன்டிகோ செயல்படுகிறது.
இந்திய விமானப்போக்குவரத்துத் துறையில் நுழைந்த பல நிறுவனங்கள் வந்த வேகத்திலேயே, தடம் கூட இல்லாமல் காணாமல் போய்விட்டன. அவைகள் மேற்கொண்ட செயல்களுக்கு மாறாகத்தான் இன்டிகோ செயல்படுகிறது.
1992-ம் ஆண்டுக்குப் பிறகு தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் அரசு, விமானப்போக்குவரத்துத் துறையின் கதவுகளைத் திறந்து விட்டபோது, விமானச் சேவைகளைத் தொடங்கும் வகையில் ஒரு பிரளயம் போல ஏராளமான தொழில் அதிபர்கள் இந்தத் தொழிலில் குதித்தனர். ஆனால், அதில் பெரும்பாலானவர்கள் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் (விமானப் போக்குவரத்து என்பது தங்க சுரங்கம் போன்றது என்ற தவறான நம்பிக்கை கொண்டிருந்தனர்) என்ற எண்ணத்திலேயே இந்த தொழிலுக்குள் குதித்தனர்.
அவர்களின் நிறுவனங்கள் புறப்பட்ட வேகத்திலேயே தடம் புரண்டன. எனினும், பல ஏர்லைன் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. நியாயமான அல்லது தேர்ந்த அல்லது பொறுப்புடைமையுடன் இருக்கும் தொழில் அதிபர்கள் சரிவைச் சந்திக்கவில்லை. அதே நேரத்தில் நீதிக்கு மாறான, தவறான செயல்களில் இன்டிகோ ஈடுபட்டது என்பது போன்ற கதைகளை யாரும் கேட்கவில்லை.
|
உயர பறக்கிறது; இந்திய வான்வெளியில், தனிப்பெரும் தலைவராக இன்டிகோ திகழ்கிறது.
|
வெளியில் இருந்து பார்க்கும்போது, விமானப் போக்குவரத்து என்பதுஒரு கவர்ச்சியான தொழில் என்பதுபோலத் தோற்றமளிக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்பதை இந்த வெற்றிக்கதையில் நினைவில் கொள்ள வேண்டும்.
அதிகச் சப்தம் எழுப்புவர்கள்தான் நல்லவர்கள், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நாமும் அடிக்கடி சொல்கிறோம். இது ஒரு கருத்தியல் ரீதியிலான விளையாட்டு. இந்திய வான்வெளியின் அரசர் என்று எப்படி ஒவ்வொருவரும் கிங்பிஷர் (Kingfisher) நிறுவனத்தின் விஜய்மல்லையாவுக்கு முடிசூட்டினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வங்கிகள் எவ்வளவு தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு விதிகளை வளைத்தன.
கிங்பிஷர் நிறுவனம் முழுமையாகக் காலியானபோது கூட, உள்ளுக்குள் பரம ஏழையாக மாறியபின்னரும் கூட, நொறுங்கியபோதும் கூட பெரும்பாலானோர் நம்பத்தயாராக இல்லை. எல்லா வங்கிகளும் கூட ஏற்கதயாராக இல்லை.
கிங்பிஷருக்கு முரணாக, இன்டிகோ நிறுவனம் கவனமான, அமைதியான, தொழில்முறையில் தங்களுடைய பணிகளை மேற்கொண்டது. கிங்பிஷர் நிறுவனம் சரிவைச் சந்திக்கத் தொடங்கியபோது, ஜெட் அல்லது ஸ்பைஸ் நிறுவனங்களோ அல்ல, இன்டிகோ நிறுவனம்தான் அந்த வெற்றிடத்தை நிரப்பும் நிறுவனமாக இருந்ததில் ஆச்சரியமே இல்லை. கிங்பிஷர் சரிந்தது. இன்டிகோ உயர்ந்தது.
ஒத்த கருத்துடைய, புத்திசாலியான, மற்றும் நல்ல எண்ணம் கொண்ட இருவர் கைகோர்க்கும்போது, 1+1 என்ற சக்தியானது 11 ஆக மாறுகிறது.
அதிகம் படித்தவை
-
கேட்டரிங்கில் சிகரம் தொட்டவர்
மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் தேப்நாத். அவர் பிறந்த சமயம் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் டெல்லிக்கு வந்து கடின உழைப்பால் கேட்டரிங் தொழிலில் வெற்றியைப் பெற்று இன்றைக்கு 200 கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பந்தன் என்னும் பந்தம்
மிகவும் எளிய பின்னணி கொண்ட சந்திர சேகர் கோஷ், கிராமப்புற மகளிரின் நிலை கண்டு மனம் நொந்தார். அவர்களுக்கு உதவ அவர் தொடங்கிய பந்தன் என்ற சிறுகடன் நிறுவனம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை மாற்றியதுடன் இன்று வங்கியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை
-
உழைப்பால் உயர்ந்த நாயகன்
பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
-
ஐஸ்க்ரீம் மனிதர்
கர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை