நொறுக்குத் தீனியில் பத்துகோடி வருவாய்! நாக்பூர் இளைஞரின் சுவையான வெற்றிக்கதை!
21-Nov-2024
By சோபியா டேனிஷ்கான்
நாக்பூர்
சுதர்ஷன் குங்கரின் வணிகம் இழப்பை சந்தித்து, அவரது குடும்பம் கடினமான சூழலில் சிக்கியபோது அவரது மகன் மணீஷ் குங்கருக்கு 11 வயதுதான்.
“எங்கள்
குடும்பம் எளிய வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தது. ஆடம்பரமாக
வாழவில்லை. எனவே இந்த பின்னடைவு எங்களது
அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கவில்லை. ஆனால், எந்த ஒரு
பெரிய செலவும், பெரும் கவலைக்கு காரணமாக இருந்தது,” என்று நினைவுகூர்கிறார்
மணீஷ் (40), நாக்பூரை சேர்ந்த ராயல் ஸ்டார்
ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். பப்ஸ்,
நொறுக்குத் தீனிகள், பாஸ்தா, வறுக்க தயாராக உள்ள நொறுக்குத் தீனிகள்
உள்ளிட்ட பல்வேறு வகையான ஸ்நாக்ஸ்களை வழங்கும் நிறுவனம் இது.
2007ஆம் ஆண்டு ரூ.6 லட்சம்
முதலீட்டில் ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் நிறுவனத்தை மணீஷ் குங்கர் தொடங்கினார்
|
அடிமட்டத்தில் இருந்து அவரது குடும்பத்தை மணீஷ் எப்படி மீட்டமைத்தார் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். நாக்பூரில் ஒரு கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்தவுடன், 26வது வயதில் ரூ.6 லட்சம் முதலீட்டில் மக்காசோளத்தில் குச்சிகுச்சியாக தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி தயாரிப்பு வர்த்தகத்தைத் தொடங்கி, இன்றைக்கு அதனை ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் பிராண்ட் ஆக கட்டமைத்திருக்கிறார். “நான் எம்பிஏ படித்த கல்வி நிறுவனம் புகழ்பெற்ற கல்லூரியாக இருக்கவில்லை. எனவே, எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. கூடப்பிறந்த இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆனநிலையில் ஒரே மகனான நான், பெற்றோரை தனிமையில் தவிக்க விட்டு விட்டு, வேலைக்காக இன்னொரு நகருக்கு இடம் பெயர்ந்து செல்ல விரும்பவில்லை,” என்றார் மணீஷ். மணீஷ் தனது படிப்பு முழுவதையும் நாக்பூரிலேயே மேற்கொண்டார். முதலில் பிகாம் முடித்தார். பின்னர் எம்காம் முடித்த அவர், 2006ஆம் ஆண்டு எம்பிஏ முடித்தார். வேலைக்குச் செல்லக்கூடாது என்று தீர்மானித்த பின்னர், வணிக வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்று ஆராயத் தொடங்கினார். கடலை மிட்டாய் உற்பத்தி பிரிவை அமைப்பது குறித்து தெரிந்து கொள்வதற்கான யோசனையுடன் தமிழ்நாட்டின் கோவை நகருக்கு 2007ஆம் ஆண்டு வந்தார். கோவையில் அப்போது மக்காசோள குச்சிகள் கொண்ட நொறுக்குத் தீனி மொத்த வியாபாரம் செய்யப்படுவதைப் பார்த்த அவர், அதே போன்ற வணிகத்தை நாக்பூரில் தொடங்குவது என்று முடிவு செய்தார். “என் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கடனாகப் பெற்றேன். பின்னர் வங்கியில் ரூ.4.5 லட்சம் கடன் வாங்கினேன். மக்காசோள குச்சிகள் தயாரிப்பதற்கான தொழிற்பிரிவை 1000 ச.அடியில் அமைத்தேன்,” என்றார் மணீஷ். தொடக்கத்தில் உள்ளூர் சந்தையை குறிவைத்தே செயல்பட்டார்.
மணீஷ் மனைவி வர்ஷா, அவரது வணிகத்தில் இன்றைக்கு முக்கியமான பங்கு வகிக்கிறார் |
கேபி ஃபுட்ஸ் எனும் தனிநபர் உரிமை நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட அவரது நிறுவனம் முதலாண்டில் ரூ.11 லட்சம் ஆண்டு வருவாயைக் கொண்டிருந்தது. மெதுவாக அவர் தயாரிப்பு பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். புதிய சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தார். குறைவான பணத்தை கொண்டு பல இடங்களுக்கு சுற்றி வந்தார். “நான் எப்போதும் உள்ளூர் பேருந்துகளில்தான் பயணிப்பது வழக்கம், மலிவான கட்டணம் கொண்ட விடுதிகளில்தான் தங்குவேன். ஆரம்ப காலகட்டங்களில் பணத்தை சேமிப்பதற்காக இது போன்று செயல்பட்டேன்,” என்றார் அவர். “தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள நகரங்களுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். பெரும்பாலான பயணங்களின் போது வெறும் ரூ.5000 வைத்துக் கொண்டு பயணம், உணவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் சமாளித்திருக்கின்றேன்.” ஆரம்பத்தில் அவர் தொழிலைத் தொடங்கியபோது, மூன்று ஊழியர்கள்தான் இருந்தனர். பணிச்சுமை அதிகரித்தபோது, உற்பத்தியை அதிகரித்தார். “இரவில் நான் தொழிற்சாலையிலேயே தங்குவது வழக்கம்,” என்றார். “அங்கு சில ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். இரண்டு ஷிப்ட்களிலும் கண்காணிப்பாளர் நியமிக்கவில்லை. எனவே, நான் இரவில் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து பணிகளை மேற்பார்வை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.’’ 2008-ஆம் ஆண்டு ஒரு வாடகை இடத்தில் மக்காச்சோளத்தை பிரித்தெடுப்பதற்கான இன்னொரு பிரிவை உருவாக்கினார். ஆனால், பொருளின் தரம் நன்றாக இல்லை. இதன் காரணமாக பெரும் இழப்பை சந்தித்ததால் 15 நாட்களுக்குள் கருவிகளை விற்று விட்டார். அடுத்த ஆண்டில் தன்னுடன் படித்த வர்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை சந்தோஷம் என்ற திரும்புமுனையை நோக்கி்ச் சென்றது. “அவர் உண்மையிலேயே என்னுடைய அதிர்ஷ்ட தேவதை,” என்கிறார். “நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் எம்பிஏ படித்தோம். ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்ட ஆண்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” எம்பிஏ முடித்தவுடன் வர்ஷா ஐசிஐசிஐ வங்கியில் பணியில் சேர்ந்திருந்தார். “திருமணத்துக்குப் பின்னர் அவர் அந்த வேலையை விட்டு விட்டார். இப்போது அவர் ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிறுவனத்தின் இ-வணிக பிரிவை கவனித்துக் கொள்கிறார்,” என்றார். கடினமான சூழல்களில் எல்லாம் அவர் மணீஷ் உடன் இருந்திருக்கிறார். “என்னால் வங்கி தவணைகளைத் திருப்பிச் செலுத்த இயலாதபோது அதனை திருப்பி செலுத்துவதற்கு கூட அவர் எனக்கு உதவி செய்தார். எனக்கு மிகவும் தேவைப்பட்ட சமயங்களில் அவர் என்னோடு இருப்பதற்காகவும், எப்போதுமே அவருக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன்.”
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புதிய உற்பத்திப் பிரிவை மணீஷ் தொடங்கினார் |
2009ஆம் ஆண்டு ஏப்ரலில் தனக்கு திருமணம் நடந்த அதே ஆண்டு அதே மாதத்தில் வறுக்க தயார் நிலையில் இருக்கும் ஸ்நாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்தார். இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2011ஆம் ஆண்டு தன்னுடைய உற்பத்திப் பிரிவை தானியங்கி முறைக்கு மாற்றினார். “தொழிலாளர் பிரச்னை இருந்தது. எனவே, தானியங்கி முறை தேவையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியைத் தொடங்கினோம்,” என்றார் மணீஷ். இப்போது, அவர்கள், ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு உள்ளூர் சந்தையில் அதிக கவனம் செலுத்துகின்றனர். “எங்களது மொத்த உற்பத்தியில் ஏற்றுமதி என்பது இன்றைக்கு வெறும் 5 சதவிகிதம் மட்டும்தான் உள்ளது,” என்றார். 2013-14ஆம் ஆண்டில் வணிகம் விரிவாக்கம் பெற்றது. பிரியான்ஸி இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கப்பட்டது. (மகள் பிரியான்ஸி பிறந்தவுடன் நிறுவனத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது. இப்போது அவருக்கு 11 வயது ஆகிறது.) ஒரு புதிய பிரிவை உருவாக்கி, மக்காசோள பப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தனர். இன்றைக்கு அவர்களுடைய புகழ்பெற்ற நொறுக்குத் தீனி வகைகளில் ஒன்றாக அது திகழ்கிறது. 2017ஆம் ஆண்டு வறுக்கத் தயார் நிலை 3டி நொற்றுக்குத்தீனிகள், பாஸ்தா போன்றவற்றை அவர்கள் தயாரிக்கத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு புதிய 12,000 ச.அடி கொண்ட தொழிலகத்தைக் கட்டத் தொடங்கினார் மணீஷ். இந்த திட்டத்தின் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் முடிவடைந்தது. “முதல் கட்ட கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து புத்தம் புதிதாக வெளியே வந்தோம். வணிகத்தை முன்னெடுக்க முயற்சி செய்தோம். அப்போதுதான் நாங்கள் வேக வைப்பதற்கு தயாராக உள்ள பாஸ்தாவை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினோம்,” என்றார். ரூ.5 முதல் ரூ.35 வரையிலும் பல்வேறு வகைகளில் அவர்களின் நொறுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பல அங்காடிகளில் அவர்களது உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களுடைய நொறுக்குத்தீனி பாக்கெட்களில் பிராண்ட் பெயர் அவ்வளவாக வெளியே தெரியாத வகையில் அச்சிடப்பட்டுள்ளது.
நாக்பூரில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் ஊழியர்களுடன் மணீஷ் மற்றும் வர்ஷா |
பப் நொறுக்குத் தீனிகள், பாகார் பப்கள், ராகி பப்கள் போன்ற உணவுப்பொருட்களின் வகைகள் எப்போதுமே அவர்களுடைய உணவு பாக்கெட்களில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் என்ற பெயரானது எப்போதுமே சிறிய எழுத்து வடிவத்தில், அவ்வளவாக கண்ணில் படாதவாறு இருக்கும். “உணவுப் பொருள்தான் இங்கே கதாநாயகன்,” என இதில் உள்ள லாஜிக்கை விவரிக்கிறார் மணீஷ். “அரிசி, ராகி மற்றும் கம்பு போன்ற ஆரோக்கியமான உபப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இவை. ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உருவாக்குவதுதான் இப்போதைக்கு என்னுடைய முதன்மையான தேர்வாக இருக்கிறது.” ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டுமின்றி, பெரும் அளவிலான மக்களுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை தயாரிக்கவே அவர் விரும்புகிறார். “இதர பிராண்ட்கள் எங்கள் விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் வி்ற்பனை செய்யப்படுகின்றன. எனவே ஒரு சிறிய பாக்கெட் நொறுக்குத் தீனியானது, ரூ.10 என்ற விலையில், எல்லோரும் வாங்குவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.” தொழிலை விரிவாக்குவதற்கான தீவிரமான திட்டங்களைக் கொண்டிருக்கிறார். துணிகர முதலீட்டாளர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என்கிறார். நிறுவன மதிப்பு இப்போது ரூ.40 கோடி என்றும் சொல்கிறார்.
அதிகம் படித்தவை
-
ஒலிம்பிக் தமிழச்சி!
மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.
-
சணலில் ஒரு சாதனை
பிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.
-
குப்பையிலிருந்து கோடிகள்
அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்