நாலாயிரம் ரூபாயில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம்! வேலையைத் துறந்து தொழில் தொடங்கி அசத்தும் இளம்பெண்!
08-Oct-2024
By குருவிந்தர் சிங்
பெங்களூரு
ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்; வெற்றி மீது வைத்த ஆசை இவை தான் ஆஸ்தா ஜா-வின் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற குழந்தைப் பருவத்து கனவை நனவாக்கின.
பாட்னாவை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணான அவர், பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் மேலாண்மை நிறுவனத்தை தொடங்குவதற்காக நல்ல சம்பளம் பெற்ற வேலையில் இருந்து விலகினார். பெங்களூரு நகரம் அவருக்கு அந்நியமான ஒன்று. பெங்களூருவில் நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பதற்கு மட்டுமே அவர் வந்தார். விடுதியில் தங்கிப் படித்தார்.
ஆஸ்தா ஜா, நிறுவனர், கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனம்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை என்ற நிறுவனத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கினார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனம் ரூ.50 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது.
ஆஸ்தா பாட்னாவில் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு சிறிய டூர்ஸ் மற்றும் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சிறுவயதில் இருந்தே தாம் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆஸ்தா கொண்டிருந்தார்.
“ஆரம்பத்தில் நான் ஒரு மருத்துவராக விரும்பினேன். என்னுடைய குடும்பத்தில் பல மருத்துவர்கள் உள்ளனர் என்பதால் பின்னர் நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். எங்கள் குடும்பத்தில் மிகச் சிலரே பொறியாளர்கள் என்பதால் நானும் பொறியாளர் ஆக வேண்டும் என்று விரும்பினேன்,” என்று அடக்கத்துடன் சிரிக்கிறார்.
2011ஆம் ஆண்டு சிஓஎம்இடிகே (COMEDK -கர்நாடகா மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தும் அமைப்பு) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதால் பிஇஎஸ்ஐடி (PESIT)கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பதற்கு அவர் பெங்களூரு வந்தார். “நான் ஐஐடி-யில் சேர விரும்பினேன். ஆனால், அதற்கான நுழைவுத்தேர்வில் நான் வெற்றி பெறவில்லை. எனவே, நான் சிஓஎம்இடிகே எழுதி தேர்ச்சி பெற்றதால், பிஇஎஸ்ஐடி கல்லூரியில் இடம் கிடைத்தது,” என்றார் ஆஸ்தா. ஆரம்ப கட்டத்தில் புதிய நகரான பெங்களூரில் பொருந்திப் போவதற்கு மிகுந்த சிரமங்களை சந்தித்தார்.
“ உள்ளூர் மொழி தெரியாமல் அது ஒரு தடையாக இருந்ததை எதிர்கொண்டேன். தவிர தென் இந்திய உணவு வகைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்வதும் சிக்கலாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக நண்பர்கள் என்னுடன் மிகவும் நன்றாகப் பழகினர். விடுதியில் எனக்கு நல்ல நேரம் கிடைத்தது,” என்று தமது விடுதி வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். அங்குதான் அவர் தமது ஒருங்கிணைக்கும் திறனை கூர்மைப்படுத்திக் கொண்டார்.
ஆஸ்தா, தமது சகோதரர் மற்றும் துணை நிறுவனர் சாத்வீக் உடன் |
நிகழ்வுகளை நிர்வகிப்பதில் சிறந்து விளங்கியதை கல்லூரி காலத்தில் அவர் உணர்ந்தார். “உண்மையில், நான் சிறிய கலாசார நிகழ்வுகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்தேன். என்னுடைய ஒருங்கிணைக்கும் திறனை இதர ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். எனவே, நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பகுதி நேர வேலையில் ஈடுபட வேண்டும் என்றும் எனது சொந்த செலவுகளுக்காக பணம் ஈட்ட வேண்டும் என்றும் நான் விரும்பினேன்,” என்றார் ஆஸ்தா.
ஆனால் பகுதி நேர வேலைகளில் சேர்ந்து ஈடுபடுவதற்கு கல்லூரி நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை. நிகழ்வு மேலாண்மையில் சொந்தத் தொழிலைத்தொடங்குவதற்கு அவர் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருந்தார். பொறியியல் படிப்பை முடித்த பின்னர், ரூ.35,000 மாத சம்பளத்தில் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிஸ்க் பொறியாளராக ஏஐஜி காப்பீடு நிறுவனத்தில் ஆஸ்தா வேலைக்குச் சேர்ந்தார்.
நல்ல வேலை கிடைத்ததும், அத்தோடு ஆஸ்தா ஓய்ந்துவிடவில்லை. நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் கள அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு பகுதி நேர வேலையைத் தேடினார். “ நான் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்ததால், அந்த துறையில் அனுபவத்தை பெறுவதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது,” என்றார் அவர். “அந்த நாட்களில் தினமும் 18-19 மணி நேரம் வரை நான் வார விடுமுறை கூட இல்லாமல் பணியாற்றினேன்.” ஆறுமாதங்கள் கழித்து, அந்த வேலையில் இருந்து விலகினார். நல்ல சம்பளம் பெறும் வேலையை விட்டு விட்டு, ஒரு ஆபத்தான முயற்சியில் இறங்கும் அவருடைய முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி விட்டு, 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார்.
“என் பெற்றோர்கள் ஆதரவாக இருந்தனர். ஆனால், இதர குடும்ப உறுப்பினர்கள் நல்ல எதிர்காலம் கொண்ட வேலையை விட்டு விலகி நான் ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவதாகக் கருதினர். எனினும், இதனை பெரிய நிறுவனமாக மாற்றி, வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தேன்,” என்று தமது உறுதியான தருணங்கள் குறித்து நினைவு கூர்ந்தார் ஆஸ்தா. பாட்னாவில் இருக்கும் அவரது சகோதரர் சாத்வீக்(27) தமது சகோதரிக்கு கை கொடுத்த முன்வந்தார். அவருக்கும் அதில் ஆர்வம் இருந்தது.
“நிகழ்வு
மேலாண்மை தொழிலில் ஈடுபடுவதாக அவரிடம் சொன்னேன். ஒரு வாரத்துக்குள் அவர் பெங்களூரு
வந்து என்னுடன்
இணைந்தார்,” என்றார் ஆஸ்தா. தமது
தொழில் வலுவடையும் வரை ஏஐஜியில் பணியைத் தொடர்வது என்று அப்போது அவர் தீர்மானித்தார்.
பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் சிறிய விருந்து நிகழ்வுகளுடன் தொடங்கி, கடந்த ஆண்டு முதல், திருமண நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்துவது என்று ஆஸ்தா தீர்மானித்திருக்கிறார் |
சகோதரரும், சகோதரியும் இணைந்து நிறுவனத்தை நடத்தினர். ஆஸ்தா தலைமை செயல் அதிகாரியாகவும், சாத்வீக் துணை நிறுவனராகவும் செயல்பாடுகளுக்கான தலைவராகவும் இருக்கின்றனர். இப்போது இந்த நிறுவனம் பிராப்பரைட்டர்ஷிப் ஆக இருக்கிறது. விரைவில் பங்குதாரர் நிறுவனமாக பதிவு செய்யப்பட உள்ளது.
“மிகவும் சிறிய அளவிலான பிறந்த நாள் விருந்து நிகழ்வுகள், புதிய நிறுவனங்களின் நிகழ்வுகள் ஆகியவற்றுடன்தான் நாங்கள் தொடங்கினோம். ஆரம்பகட்டத்தில் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவில்லை. நாங்கள் ஒருங்கிணைத்த முதல் நிகழ்வு ஒரு பிறந்தாள் விருந்து நிகழ்வு. அதன் பட்ஜெட் செலவு ரூ.4000. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை நன்றாக உபயோகிக்கின்றோம். முக்கியமாக எங்களுடைய சேவையைப் பெற்ற வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எங்களுடைய தொழில் வளரத் தொடங்கியது,” என்றார் ஆஸ்தா.
அவர்கள் பெரிய நிகழ்வுகளை நடத்தத் தொடங்கிய பின்னர், 2017-ஆம் ஆண்டின் முடிவில் தாம் பாரத்து வந்த வேலையில் இருந்து ஆஸ்தா விலகிவிட்டார். “நிறுவனம் தொடங்கிய ஆறுமாதங்கள் கழித்து முதல் திருமண நிகழ்வு ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடப்பதற்கு எங்களுடைய சொந்தப் பணத்தில் இருந்தும் கூட செலவழித்து கடினமாக உழைத்தோம். வாடிக்கையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,” என்று தங்களது தொழிலின் முதல் திருப்புமுனை நிகழ்வை நினைவு கூர்ந்தார் சாத்வீக்
இந்த நிகழ்வுக்குப் பின்னர், விரைவிலேயே விசாரணைகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதன் பின்னர் உடன்பிறப்புகளான இருவரும் திரும்பிப் பார்ப்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. முதல் ஆண்டின் முடிவில் வெற்றிகரமாக 15 திருமணங்களை ஒருங்கிணைத்திருந்தனர். “திருமண நிகழ்வுகள் தவிர நாங்கள் ஒவ்வொரு மாதமும் 15 பிறந்தநாள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வந்தோம். நாங்கள் எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் மறுப்புத் தெரிவிப்பதில்லை,” என்றார் அவர். எனினும், அவர்கள் கடந்த ஆண்டு முதல் பிறந்தநாள் விருந்துகளை ஒருங்கிணைப்பதை நிறுத்தி விட்டனர். திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினர்.
“திருமண நிகழ்வுகளுக்கான அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். விருந்தினர்களுக்கு டிக்கெட்கள் முன்பதிவு செய்வது, மண்டபங்களை முன்பதிவு செய்தல், துணிகள் வாங்குவதற்கு ஆலோசனைகள் வழங்குதல், உணவு மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். கோவா, உதய்பூர், கொல்கத்தா, புனே, சென்னை, டெல்லி மற்றும் இதர இந்திய நகரங்களிலும் நாங்கள் பயணம் செய்து 18 திருமண நிகழ்வுகளை நடத்தி உள்ளோம்,” என்றார் ஆஸ்தா.
இந்த நிறுவனம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் எண்ணற்ற பிறந்த நாள் விருந்து நிகழ்வுகள், பெருநிறுவன நிகழ்வுகள் மற்றும் இதர நிகழ்வுகளையும் நடத்தி இருக்கின்றது. அவர்களின் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டைப் பொறுத்ததாகும். தங்களின் சேவைக்கு ஏற்ப அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றனர். கமிஷனுக்காக அவர்கள் பணியாற்றுவதில்லை.
கிராஃப்ட்ஸ்டார் மேலாண்மை நிறுவனம் உருவாக்கிய ஒரு திருமண மேடை |
“இரண்டு நாள் திருமண நிகழ்வுகளுக்கு தங்கும் இடம், விருந்து உபசாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் 100-150 பேர் பங்கு பெறும் நிகழ்வுகளுக்கு, நாங்கள் சராசரியாக ரூ.1,50,000 வசூலிக்கின்றோம்,” என்று பகிர்ந்து கொண்டார் ஆஸ்தா. ஆஸ்தாவும் அவரது சகோதரரும் இப்போது பெங்களூருவிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கு டெல்லி, பெங்களூரு, சென்னை, உதய்பூர், மும்பை மற்றும் கோவாவில் அலுவலகங்கள் உள்ளன. சாத்வீக்குக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆஸ்தாவுக்கும் திருணம் நிச்சயம் ஆகிவிட்டது. “இது தவிர நாங்கள் ஒரு திருமணங்கள் தொடர்பான பத்திரிகை ஒன்றும் நடத்தி வருகின்றோம். மணமகளுக்கு நகைகள் வாடகைக்குக் கொடுப்பது போன்ற சேவைகளையும் செய்கின்றோம். நான் பெங்களூருவில் இருபாலருக்கான சலூன் ஒன்றையும் நடத்தி வருகின்றேன்,” என்றார் ஆஸ்தா. வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவர் தரும் ஆலோசனை: உங்களே நீங்களே நம்புங்கள். கடினமாக உழையுங்கள். பலர் பொதுவாக பல மோசமான விஷயங்களை சொல்லக்கூடும். உங்களை குறை சொல்பவர்களே ஒரு கட்டத்தில் நீங்கள் எதிர்கால சந்ததியினருக்கான உதாரணமாக இருக்கின்றீர்கள் என்று உங்களை பாராட்டுவதற்கான நேரம் ஒன்று வரும். பெரிதாக கனவு காணுங்கள். அதனை செயல்படுத்துங்கள்.
அதிகம் படித்தவை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மாற்று யோசனை தந்த வெற்றி
ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
காபி தரும் உற்சாகம்
வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா
-
பூக்களின் சக்தி
தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை