பழைமையுடன் புதுமையும் இணைந்த சுவை! மில்க் ஷேக் பிராண்டில் 100 கோடிவிற்பனை பார்க்கும் இளைஞர்கள்!
24-Jan-2025
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
93 ஆண்டுகள் கழிந்த பழைமையின் சின்னமான இந்திய பால் பொருட்கள் பிராண்ட் கெவன்டர்ஸ், ஒரு சுவீடன் நாட்டவரால் நிர்மாணிக்கப்பட்டது.பல ஆண்டுகள் முடக்கத்துக்குப் பிறகு இப்போது இந்த பிராண்ட் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.
மூன்று ஆண்டுகள் எனும் குறுகிய காலகட்டத்துக்குள் 32 நகரங்களில் 270 சங்கிலித் தொடர் கடைகள் தொடங்கப்பட்டன. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட எட்வர்ட் கெவன்டர் (சக்சஸர்ஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Edward Keventer (Successors) Pvt. Ltd) 2018-19ம் நிதி ஆண்டு முடிவடைவதற்குள் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை எட்டியது.
|
கெவன்டர்ஸ் நிறுவனத்தை மீட்டெடுத்தவர் அகஸ்தியா டால்மியா. டெல்லியின் புகழ்பெற்ற இந்த மில்க் ஷேக் பிராண்டினை நண்பர் அமான் அரோராவுடன் இணைந்து 2013-ம் ஆண்டு தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
கெவன்டர்ஸ் நிறுவனம் 1970-ம் ஆண்டுகளில் இருந்து வணிகத்தில் ஈடுபடவில்லை. 1940-ம் ஆண்டில் சுவீடன் உரிமையாளர்களிடம் இருந்து கெவன்டர்ஸை வாங்கியவர் ராம் கிருஷ்ணா டால்மியா என்பவர். இவரது பேரன் அகஸ்தியா டால்மியா, தன் நண்பர் அமான் அரோராவுடன் இணைந்து கெவென்டர்ஸ் மில்ஷேக்கை மீண்டும் தொடங்கினார். புதுடெல்லியில் உள்ள பித்தம்புராவில் இருந்து இந்த மில்க்ஷேக் விற்பனையைத் தொடங்கினர்.
அந்த சமயத்தில் அகஸ்தியா, அமான் இருவருமே 23 வயது கொண்டவர்களாக இருந்தனர். “நாங்கள் எதிர்பார்த்தபடி கடை நன்றாகப் போகவில்லை. ஒன்பது மாதங்களில் கடையை மூடிவிட்டோம். இந்த முதல் கடை எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது,” என்கிறார் அகஸ்தியா. கெவென்டர்ஸை மீண்டும் தொடங்கியபோது ஆரம்பகட்டங்களில் சந்தித்தக் கடினமான சூழல்பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பிடத்தக்க ஒரு தொழில் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாகத் தொழில் செய்யும் அகஸ்தியா டால்மியா, தான் செய்த தவறுகளைக் கண்டறிந்தார். “நாங்கள் மில்க் ஷேக்-ஐ பாரம்பர்யம் மிக்க கண்ணாடி க்ளாஸில் தருவதற்குப் பதில், பி.வி.சி கப்பில் கொடுத்தோம். அதே போல கடை வைத்த இடமும் நல்ல இடமாக இல்லை,” என்றவர், தொடர்ந்து கூறுகையில், “எங்களுடைய முதல் கடை என்பது எங்களுக்கு ஒரு எம்.பி.ஏ படிப்பைப் போல இருந்தது. நடைமுறையில் கற்ற அனுபவமாக இது இருந்தது. அந்த அனுபவத்தை அப்போதிலிருந்து நாங்கள் மறக்கவில்லை.”
2015-ல் புதிதாக 2 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கினர். இந்த முறை அவர்கள் டெல்லியில் முக்கியமான இடத்தில் செலக்ட் சிட்டி வாக் மாலில் (Select City Walk Mall) கடையைத் தொடங்கினர்.
குழுவை வலுவாக்கும் வகையில், இந்த இருவரும், 42 வயதான சோகர்பா சீதாராம் என்ற குயிக் சர்வீஸ் ரெஸ்டாரெண்ட்டில் (Quick Service Restaurant) அனுபவம் மிக்க நபரை ஆலோசகராக ஆரம்பத்தில் நியமித்தனர். பின்னர், அவரே இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரானார்.
சோகர்பா, அமான் இருவரும் கெவென்டர்ஸின் தலா பத்து சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கின்றனர். டால்மியா குடும்பத்தினர் மீதம் உள்ள பங்குகளை வைத்திருக்கின்றனர்.
“மொத்த தொழில் முறையையும் சீரமைத்தோம். லோகோவை மாற்றினோம். க்ளாஸ் பாட்டிலில் மில்க் ஷேக் வழங்கினோம். இவையெல்லாம் எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தன,” என்கிறார் அமான். “இதனால் வியாபாரம் விரைவிலேயே சூடுபிடித்தது.”
ஆறு ஊழியர்களுடன் செயல்படும் செலக்ட் சிட்டி வாக் மால் கடைக்கு அருகில் இருக்கும் ஷாக்பூரில் ஒரு சிறிய அறையில் மூவரும், இணைந்து எதிர்காலம் குறித்து திட்டமிடுவார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில் சைபர் ஹப், டி.எல்.எஃப் ப்ரோமெனேட், டி.எல்.எஃப் மால் ஆப் இந்தியா ஆகிய இடங்களில் மூன்று கடைகளைத் தொடங்கினர்.
|
முதல் கடையின் இழப்புக்கள் இருந்தும் கெவென்டர்ஸ் பிராண்டை மறுபடி புதுப்பிப்பதற்கான ஆர்வத்தை அகஸ்தியா இழக்கவில்லை
|
|
“முதல் ஆண்டில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்தோம். முதலீட்டை திரும்பப் பெற்றோம்,” என்கிறார் அமான்.
வளமான வளர்ச்சி என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, விரைவாக தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு பிராஞ்சைஸ் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர். பிராஞ்சைஸ்கள் கொடுப்பதற்காக ஒரு செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தனர். “முதல் சில நாட்கள், நாள் ஒன்றுக்கு 200 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது,” என்று நினைவுகூறுகிறார் அமான்.
2016-ம் ஆண்டு ஏப்ரலில், அதீதமான தேவையை எதிர்கொள்ள முடியாததன் காரணமாக, பெரிய பகுதிகளுக்கு மாஸ்டர் பிராஞ்சைஸ் உரிமைகளை விற்றனர். இந்த மாஸ்டர் பிராஞ்சைஸ் உரிமை பெற்றிருப்பவர்கள், தங்கள் பகுதியில் இதர பிராஞ்சைஸ் கொடுக்கும் உரிமையைக் கொண்டிருந்தனர்.
“நாங்கள் ஒவ்வொரு மாதமும் 15 கடைகளைத் திறந்தோம். இப்போது 32 நகரங்களில் 270 கெவன்டர்ஸ் கடைகள் உள்ளன. அதில் 20 கடைகள் நிறுவனத்துக்குச் சொந்தமானது, நிறுவனமே இயக்குவது என்ற அடிப்படையில் செயல்படுகின்றன. 250 கடைகள் பிராஞ்சைஸ்களாக, பிராஞ்சைஸ்களுக்குச் சொந்தமானதாக, இயக்கப்படுவதாக இருக்கின்றன,” என்கிறார் அமான்.
|
அகஸ்தியாவின் கடினமான சூழல்களின்போதெல்லாம் அமான் உடன் நின்றார். தொழில் வளர்ச்சிக்கு உதவினார்.
|
பிராஞ்சைஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்க, ஒவ்வொரு பகுதிக்கும் மேலாளர்களை இந்த நிறுவனம் நியமித்தது. ஒவ்வொரு மேலாளரும், 10 பிராஞ்சைஸ்களை கவனித்தனர்.
பிராஞ்சைஸ் முறை எப்படிச் செயல்படுகிறது என்பதை அகஸ்தியா விவரிக்கிறார். “ஒவ்வொரு கடைக்கும் எங்களுக்கு 100 ச.அடி இடம் தேவைப்பட்டது. ஒரு முறை செலுத்தும் லைசென்ஸ் கட்டணமாக 9 லட்சம் ரூபாய் வாங்குகின்றோம். தவிர, ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட மாத ராயல்டி பெறுகிறோம்.”
பிராஞ்சைஸிகள் பொதுவாக தங்கள் கடைகளை அலங்கரிக்க 25-30 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கின்றனர். கெவென்டர்ஸ் குழுவினர், அந்த கடைகளுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வார்கள். இதர கடைகளைப் போன்ற தரத்தில் இருக்கின்றனவா என்பதும் உறுதி செய்யப்படும்.
மில்க் ஷேக் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சுவையூட்டும் பாகு வகைகள் (flavouring syrups) கொடுக்கப்படுகின்றன. எப்போதுமே தரம் கடைபிடிக்கப்படுகிறது.
பட்டர்ஸ்காட்ச், ஸ்ட்ராபெரி மற்றும் சாக்லேட் ஆகியவற்றின் ஒரிஜினல் சுவைகளை கெவென்டர்ஸ் தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. தவிர இளம் தலைமுறையை குறிவைத்து சாக்லேட் மின்ட் ஓரியோ, கிட்காட், பானாஃப்பீ போன்ற சுவைகளைக் கொண்ட பொருட்களையும் அறிமுகம் செய்திருக்கின்றனர். மில்க் ஷேக்கின் விலை 79 ரூபாயில் தொடங்கி, 270 ரூபாய் வரையில் இருக்கிறது.
|
ஒவ்வொரு கெவென்டர்ஸ் கடையும், பழைய, புதியவை இரண்டும் கலந்த ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாக இருக்கின்றன.
|
கெவென்டர்ஸ் இப்போது 100 ஊழியர்களுடன் செயல்படுகிறது. கென்யா, நேபாள் நாடுகளிலும் கால் பதித்துள்ளனர். துபாயில் துபாய் மாலில் முதல் கடையைத் திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்னர். துபாய் மால், உலகிலேயே பெரிய மால்களில் ஒன்று.
மில்க் ஷேக் தொழில் நன்றாகப் போய் கொண்டிருக்கும் நிலையில், கெவென்டர்ஸ் ஒரு புதிய பிரிவிலும் நுழைந்திருக்கிறது. சமீபத்தில் அவர்கள், ஐஸ்க்ரீமெரி (Ice Creamery) என்ற ஐஸ்க்ரீம் கடையை டெல்லியில் தொடங்கி இருக்கின்றனர்.
“ இங்கு ஐஸ்க்ரீம்கள் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை கிடைக்கும். பெல்ஜியன் ஐஸ்க்ரீம் வகையைச் சேர்ந்த ஒரிஜினல் சின், ரத்னகிரி கிங் அல்போன்சா மாம்பழ சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கோல்டன் டெம்ட்ரீஸ் என்ற ஐஸ்க்ரீமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
|
அகஸ்தியா, அமான் ஆகியோருடன் சோகர்பா(வலது புறத்தில் இருப்பவர்) புகைப்படம்: நவ்நிதா
|
“அவை கண்ணாடி கிண்ணங்களில் கொடுக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அதனை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். டெல்லி மற்றும் என்.சி.ஆரில் முக்கியமான பகுதிகளில் மேலும் சில கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் அகஸ்தியா.
1970-ல் அரசாங்கம் கெவென்டர்ஸ் அமைந்திருந்த எஸ்பி மார்க் பகுதியை வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள (diplomatic zone) மண்டலம் என்று அறிவித்தது. இதனால்தான் கென்வென்டர்ஸ் தொழிற்சாலையை அவருடைய தாத்தா, 1970-ம் ஆண்டில் மூடவேண்டியதாயிற்று.
அவரது குடும்பம் 22 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்தது. இந்த பிராண்ட்டை மறுபடியும் கொண்டு வந்ததன் மூலம் தம் குடும்பக் கவுரவத்தை அகஸ்தியா பெருமைப்படுத்தி உள்ளார். தவிர, புதிய தலைமுறைக்கு கெவென்டர்ஸின் சுவையையும் வழங்குகிறார்.
அதிகம் படித்தவை
-
அம்பிகாவின் நம்பிக்கை!
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
பள்ளிக் கனவுகள்
பள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
வெற்றிமேல் மிதப்பவர்
உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஒரு ஜூஸ் குடிக்கலாமா?
வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை