ஓட்டை செல்போனில் கொட்டும் கோடிகள்! அசத்தும் 24 வயது இளைஞர்!
03-Apr-2025
By குர்விந்தர் சிங்
கொல்கத்தா
கணிப்பொறி புரட்சிக்கு வளர்ச்சிக்கு வித்திட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இளம் மாணவரான சதனிக் ராய்க்குத் தெரிய வந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கவில்லை. ஜாப்ஸின் வாழ்க்கை மற்றும் பணிகள், இவரை ஈர்த்தன. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவரை எப்படியாவது ஒரு தொழில் முனைபவராக ஆவது என்று தீர்மானிக்கத் தூண்டின.
கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த இளைஞர், கல்லூரியில் படிக்கும்போதே, வெறுமனே பகற் கனவு மட்டும் காணாமல், எப்படி வெற்றிகரமான தொழிலதிபர் ஆகவது என்றும் திட்டமிட்டார். தன் நிறுவனத்துக்கு உகந்த தொழில் முனைவுப் பங்குதாரர்களையும் தேடிக்கொண்டிருந்தார்.
|
சதனிக் ராய், ஹைபர்எக்ஸ்சேஞ்ச் (HyperXchange) என்ற நிறுவனத்தை, மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போதே மூன்று நபர்களுடன் சேர்ந்து தொடங்கினார். (புகைப்படங்கள்: மோனிரூல் இஸ்லாம் முல்க்)
|
இந்த இளைஞர் இதர மூன்று துணை நிறுவனர்களையும் கண்டறிந்தார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே வெற்றிகரமாக நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது மூன்று ஆண்டுக்குள் அவர் 18 கோடி ரூபாய் விற்பனை என்ற நிலையை எட்டி இருக்கிறார்.
24 வயதான இவர்தான், ஹைபர் எக்ஸ்சேஞ்சின் நான்கு நிறுவனர்களில் வயதில் குறைந்தவர். புதுப்பிக்கப்பட்ட மின்னணு கருவிகளை குறிப்பாக செல்போன்களை கையாளுகின்றனர். இந்நிறுவனம் உருவாக முக்கிய காரணம் ராய், தீபஞ்சன் பர்காயஸ்தா (Dipanjan Purkayastha) என்பவருடன் லிங்க்டின் (Linkedin) மூலம் கொண்ட நட்புதான். பர்காயஸ்தா, ஏற்கனவே நிதி சேவைத்துறையில் பெரும் பெயர் பெற்றவர். அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் 18 ஆண்டுகளாக பல்வேறு எம்.என்.சி நிறுவனங்களில் சர்வதேச தொழில்நுட்ப நபராக இருந்திருக்கிறார். ராய் குட்டிப்பையன் தான். இருப்பினும் அவரது கவனத்தை ஈர்த்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் நிறுவனம் தொடங்க பர்காயஸ்தா உதவி செய்தார். யெய்பீல் (Yibeal Tradex Private Limited) டிராடெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி பெயருடன் (யெய்பீல் என்பது Yes Its A Big Deal- என்பதன் சுருக்கம்) ஹைபர்எக்சேஞ்ச் என்ற பிராண்ட்டுடன் 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கப்பட்டது.
“ஒவ்வொரு நாளும் பலர் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகச் சொல்லி பல்வேறு கோரிக்கைகள் அனுப்புகின்றனர் என்பதால், அவர்களை நான் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பெங்களூருக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தபோது, அங்கு ஒரு ஹோட்டலில் வைத்து சென்னையில் இருந்து வந்த ராய் என்னை சந்தித்தார். அப்போதுதான் அவர் தொழில் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்,” என்று நினைவு கூறுகிறார் 44 வயதான பர்காயாஸ்தா. இவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி புரியும் டிரிஸ்திகோன் (Drishtycone) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கிறார்.
பழைய மொபைல் போன்களை சீரமைத்து விற்பனை செய்யும் யோசனையைச் செயல்படுத்தும் முன்பு, கொல்கத்தாவில் மேலும் சில முறை இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதன் பின்னரே பர்காயாஸ்தா, ராயுடன் கைகோர்ப்பது என்று முடிவு செய்தார்.
|
ஹைபர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனர்களான சதனிக் ராய், தீபஞ்சன் பர்காயாஸ்தா, திவிஜதாஸ் சார்ட்டர்ஜி மற்றும் ஆஷிஸ் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஊழியர்கள் மத்தியில் இருக்கின்றனர்.
|
இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் மூத்தவர், 54 வயதான திவிஜதாஸ் சாட்டர்ஜி (Dwijadas Chatterjee), மென்மையாகப் பேசுபவர். சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக இருக்கும் இவர், உற்பத்தி சார்ந்த தொழிலில் 25 ஆண்டுகள் அனுபவமிக்கவர். ராய் இவரிடம் தொழில் யோசனையை சொன்னபோது, அது குறித்து அவருக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரைப் புரிந்து கொண்டார்.
“ஆரம்பத்தில், அந்தத் தொழில் யோசனைக்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன்,” என்கிறார் சாட்டர்ஜி. “பர்காயாஸ்தாவை எனக்கு முன்பே தெரியும். அவர்தான் சேரும்படி என்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தக் குறுகிய காலத்துக்குள் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை.”
சாட்டர்ஜியை நிறுவனர்களில் ஒருவராகச் சேர்ப்பதற்கு முன்பு, 32 வயதான ஆஷிஸ் சக்கரவர்த்தியிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார் ராய். ஆஷிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைஸ்ட் ஆக இருந்தார். அவர் தன் வேலையை விட்டு விலகி இந்த கனவுத் திட்டத்தில் இணைந்தார்.
“நானும் ராயும் கொல்கத்தாவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். அவர் பள்ளியில் படிக்கும்போது, நான், அவருக்கு அறிவியல், கணிதப்பாடங்கள் எடுத்திருக்கிறேன்.அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. எதிர்காலத்தில் தொழில் பங்குதாரர்கள் ஆவோம் என்று,” என்கிறார் இந்த பி.டெக் (கம்ப்யூட்டர் அறிவியல்) பட்டதாரி.
முதிர்ச்சி மற்றும் இளமை எனும் அரிதான கலவையின் விளைவாக வெவ்வேறு வயதினர்களான இந்த நான்கு கொல்கத்தா மனிதர்கள் வழக்கத்துக்கு மாறாக ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை 2 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியிருக்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, ஆர்வம் என்பவற்றை இலக்காகக் கொண்டு அனைவரும் அதைப் பகிர்ந்து கொண்டு மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே சீரான முன்னேற்றத்தை நோக்கிச் சென்றனர்.
|
2016-ம் ஆண்டு, மாதத்துக்கு 50 போன்களை விற்றனர். இப்போது நாள் ஒன்றுக்கு 50 புதுப்பிக்கப்பட்ட போன்களை விற்கின்றனர். 2019-ம் ஆண்டில் ஒரு மணிநேரத்துக்குள் 50 மொபைல் போன் விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கின்றனர்.
ஒரு ஆண்டு உத்தரவாதத்துடன் சீரமைக்கப்பட்ட மொபைல்களை விற்பது நாட்டிலேயே முதன் முறை என்று இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் வழியாகவும், கடைகளின் மூலமாகவும் தங்கள் மொபைல்களை அவர்கள் சந்தைப்படுத்துகின்றனர்.
“ஏற்கனவே ஆன்லைனில் சீரமைக்கப்பட்ட பழைய மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதர நிறுவனங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பழைய மொபைல் போன் சந்தையில் சொந்த பிராண்ட்டை உருவாக்க விரும்புகிறோம்,” என்கிறார் பர்காயாஸ்தா.
“ஒருநபர், விலை உயர்ந்த செல்போனை எளிதாக வாங்க முடியும் என்பதுதான் எங்கள் பொருளின் சிறப்புத்தன்மை. அதனை நாங்கள் உருவாக்குகிறோம். ஐபோனைக் கூட அதன் ஒரிஜினல் விலையில் இருந்து 50-60 சதவிகித விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறுமனே பழைய மொபைல் வாங்குகிறோம் என்ற உணர்வுடன் இல்லாமல், புதிய மொபைல் வாங்கும்போது ஏற்படும் உணர்வைப் பெற வேண்டும் என்பதால், உத்திரவாதத்துடன் சீலிட்டு விற்பனை செய்கிறோம்.”
செல்போன் தவிர ஹைபர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், பழைய புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் மற்றும் இதர மின்னணு சாதனங்களையும் வழங்குகிறது. எனினும் அவர்களின் வியாபாரத்தில் 80 சதவிகிதம் மொபைல்போன்கள் இடம் பெற்றிருக்கிறது.
ஈகோக்ளாஸ் (EcoGlass) என்ற பிராண்ட் பெயரில் புதிய டெலிவிஷன் பெட்டிகளை விற்பனை செய்வதிலும் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இவை, வை-ஃபை, 65 இன்ஞ்ச் ஸ்கிரீன் மற்றும் தற்போதைய புதிய வசதிகளான 1 ஜி.பி., 8 ஜி.பி உட்சேமிப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், உபயோகிக்கப்பட்ட பழைய பொருட்களை வாங்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதை அடுத்தே, பழைய பொருட்களை சீரமைத்து விற்கவேண்டும் என்ற யோசனை இவர்களுக்குப் பிறந்தது. ஹைபர் எக்ஸ்சேஞ்ச் இந்தத் தொழிலுக்கு வந்தபோது, பல்வேறு சவால்களை சந்தித்தது. மக்களின் நம்பிக்கை, தரத்தை நிர்வகிப்பது, பயன்படுத்துவோருக்கு ஏற்ற வசதிகளுடன் உருவாக்குதல் போன்ற சவால்களை எதிர்கொண்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் உறுதியோடு இருக்கின்றனர். இதன் காரணமாக, 12 மாத உத்திரவாதம், 15 நாட்களில் திரும்பப் பெறுதல், உறுதியான பைபேக் சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு நேரில் சேவைகள் அளித்தல் ஆகியவற்றை அளிக்கின்றனர். ஃபிளிப்கார்ட், அமேசான், குய்கர், ஓலக்ஸ், ஷிப்க்ளூஸ் மற்றும் உதான் இணையதளங்கள் அல்லது பங்குதாரர்களின் கடைகளில் ஆர்டர் கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் அவர்கள் நிறுவனத்தின் தொழில் முறைகள் எளிதாக இருக்கின்றன.
|
ராய்(வலது) தம்முடைய துணை நிறுவனர்களான பர்காயாஸ்தா(இடது) மற்றும் சக்கரவர்த்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
|
ஹைபர்எக்ஸ்சேஞ்சின் உரிமையுடைய ‘ஹெச்எக்ஸ் ஈவேல் (HX eVal platform) தளம்’ கொள்முதல் விலை மற்றும் ரிப்பேர் செய்யும் தேவை ஆகியவற்றை மேற்கொள்ள உதவுகிறது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருட்களின் தரம் உள்ளிட்ட அளவீடுகள் மதிப்பிடுகிறது.
நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் இருக்கிறது. புனே, மும்பை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. மொத்தமாக 35 பேர் பணியாற்றுகின்றனர்.
“இப்போது நாங்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை, இந்தூர் மற்றும் சண்டிகரில் டீலர்களுடன் இணைந்து கடைகளில் விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறோம். தவிர கொல்கத்தாவில் முதல் பிராண்ட் கடையை விரைவில் தொடங்க உள்ளோம். மற்றும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை இந்திய நகரங்களிலும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை முயற்சி செய்ய உள்ளோம். இந்த நகரங்களில் ஸ்மார்ட்போனுக்கான தேவை பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது,” என்கிறார் சாட்டர்ஜி.
இந்த நிறுவனத்தின் நிறுவனர்களின் மந்திரம் என்பது, “எப்போதும் உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருபோதும் அதனை விட்டுக் கொடுக்காதீர்கள்,” என்பதாக இருக்கிறது. முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் மேலும் முன்னேறி செல்லமுடியும் என்று நம்பிக்கை கொள்கின்றனர். இது தவிர, தங்களின் ஆலோசனைக் குழுவுக்கு தொழில் துறை தலைவர்களான டெக் மகேந்திராவின் தலைமை செயல் அதிகாரி சி.பி.குணானி, சிஸ்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோவிந்த் உத்தம்சந்தானி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் செயல் இயக்குனர் தீபு முகர்ஜி ஆகியோரையும் இணைப்பது என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதத்துக்குள், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தங்களுடைய செயல்திறனில் கேமிங் கன்சோல்களையும் கொண்டு வர உள்ளனர். 2019-ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலேயே புதுப்பிக்கப்பட்ட பழைய மொபைல் விற்பனையில் ஈடுபடும் பெரிய நிறுவனம் என்ற இலக்கை அடையவும் திட்டமிட்டுள்ளனர்.
அதிகம் படித்தவை
-
ஒலிம்பிக் தமிழச்சி!
மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.
-
குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்
பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
கீழடி: உரக்கக்கூவும் உண்மை
மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பீனிக்ஸ் பறவை!
போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
என் வழி தனி வழி!
ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா. ஆனால் அவர் தனியாக லாஜிஸ்டிக் துறையில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார். இன்றைக்கு அவரது நிறுவனம் 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை...